Thursday, 21 May 2015

இது நம்ம வீட்டுக் கல்யாணம்எப்படியோ, ஒரு வாரமா இருந்த கல்யாண வீட்டு பரபரப்பு இன்னிக்கி தான் கொஞ்சம் கம்மி ஆகியிருக்கு.

அது சரி, யாருக்கு கல்யாணம்னு எல்லாம் கேக்காதீங்க. என் தங்கச்சிக்கு தான் கல்யாணம்.

சொந்த தங்கச்சி இல்ல, என் அப்பாவோட சித்தப்பா பையனோட பொண்ணு. கிட்டத்தட்ட எங்க ரெண்டு பேருக்கும் ஒரே மாதிரி பெயர், ஒரே மாதிரி முட்டைக் கண்ணு, ஒரே மாதிரி சோடாப் புட்டி கண்ணாடி... அதனாலயே அவ கல்யாணம்னா எனக்கு ஸ்பெசலா தோணிச்சு.

கல்யாணம் எல்லாம் பிக்ஸ் ஆகி கிட்டத்தட்ட ஒரு வருஷம் ஆன நிலைல ஒரு வாரம் முன்னாடியே வீடு களைகட்ட ஆரம்பிச்சிடுச்சு. சொந்தக்காரங்க ஒவ்வொருத்தரா முறைச் சோறு பொங்கி போட்டு போட்டு, அத நாங்க சாப்பிட போய் போய் ரொம்ப டயர்ட் ஆகிடுச்சு. எங்க பங்குக்கு நாங்களும் முறைச் சோறு பொங்கிப் போட்டோம்...

அப்படி இப்படின்னு ஒரு வழியா நேத்து முகூர்த்த நாள். அக்கா, சீக்கிரமே வந்துடுன்னு சொல்லி விட்ருந்தா. நானாவது சீக்கிரம் போறதாவது. புள்ள ஆள் தெரியாம சொல்லி விட்ருக்குன்னு நினைச்சுகிட்டே காலைல ஒன்பது மணிக்கு தான் மெதுவா கிளம்ப ஆரம்பிச்சேன்.

வேற விசேஷங்கள்னா பரவால, டக்குன்னு கிளம்பிடலாம், கல்யாண வீட்டுக்கு அப்படியா கிளம்ப முடியுது?

பட்டுச் சேலை பாக்கணும், அதுக்கு மேட்சிங்கா நகை, அதுவும் வளையல், கம்மல், மாட்டி, நெத்திசுட்டின்னு... ஷப்பா..... அப்படியும் அரைமணி நேரத்துல கிளம்பி, ஒரு மணி நேரம் ட்ராவல் பண்ணி, ஒரு வழியா கிளம்பி மண்டபத்துக்குள்ள நுழையுரப்ப மணி பத்தரை.

நானும் அப்பாவும் போய் இறங்குற நேரம் தான் மாப்பிளை காரும் உள்ள என்ட்டர் ஆகுது. உடனே ஒரு பரபரப்பு.

சரி, நாம எதுக்கு இந்நேரம் கூட்டத்துக்கு உள்ளே நுழையணும்ன்னு அப்பாவோட ஒரு ஓரமா நின்னுகிட்டேன். சித்தப்பா அப்பாவ பாத்ததும், அண்ணாச்சி, நல்ல வேளை வந்துட்டீங்க, வாங்க வாங்க மாப்ளைய வரவேற்கப் போவோம்னு கைபுடிச்சு இழுத்துட்டு போய்ட்டாங்க. நான் தேமேன்னு நின்னுட்டு இருக்கேன் தன்னந்தனியா...

ஆரத்தி எடுக்க யார் வராங்கன்னு பாத்தா, அட, நம்ம புள்ளைங்க. எல்லாம் என் மாமா பசங்களும் பொண்ணுங்களும் தான். கூடவே அப்பா வழி சொந்தங்கள்.

என்னதான் நாங்க சொந்தக் காரங்களா இருந்தாலும், என் தங்கச்சி அப்பா வழி சொந்தம், என் மாமா பசங்க அம்மா வழி சொந்தம். ரெண்டு குடும்பங்களுக்கு அவ்வளவா நெருக்கம் எல்லாம் இல்லாததால யாரையும் யாருக்கும் தெரியாம இருந்துச்சு. ஆனா எப்ப நான் மாமா குடும்பத்தோட ஐக்கியமானேனோ அப்பவே அவளும் எங்க கூட்டத்துல ஒருத்தியாகிட்டா...

ஆரத்தி எடுத்தவ, தட்டுல காசு போட்டதும், எடுத்து பாத்துட்டு ஐநூறு ரூபா தானா, இன்னும் தாங்கன்னு சண்டைக்கு போய்ட்டா. அப்புறம் மாப்ளை எப்படியோ பாக்கெட்டை தடவி இன்னொரு ஐநூறு ரூபா குடுத்ததும் தான் வழியே விட்டா. பசங்க அதுக்குள்ள பன்னீர் தெளிக்க, என் தம்பி (அவ வீட்டுக்கு ஒரே பொண்ணு) மாப்பிளைக்கு மாலை போட்டு, சந்தனப் பொட்டு வச்சு கைப்பிடிச்சு உள்ளக் கூட்டிட்டு போனான்.

நான் என்னப் பண்றதுன்னு தெரியாம நின்னுட்டு இருந்தேன். அப்பா தான் வந்து வா உள்ளப் போகலாம்னு கூட்டிட்டுப் போனார். எனக்கு கொஞ்சம் எல்லாமே அன்னியமா தான் தெரிஞ்சுது. காரணம் இது என் சொந்த ஊர். சொந்த ஊருக்குள்ள ஒரு விருந்தாளி மாதிரி வர்றது ஒரு கொடுமை இல்லையா? என் அம்மா இதே ஊர்ல தான் இருக்கா. அவள கூட என்னால பாக்க முடியாதுனா அது எத்தனைப் பெரிய வலி. சரி, சரி, என் புலம்பல அப்புறமா வச்சுக்கலாம், வாங்க நாம கல்யாணத்த கவனிப்போம்.

நான் உள்ளப் போனதும் தான் கவனிச்சேன், புள்ளைங்க எல்லாம் கல்யாணத்துக்குன்னே சேலை எடுத்துருக்காங்க. அடப் பாவிகளா, என்னைய விட்டுட்டு ஆளாளுக்கு என்னமா ஸ்டைலு... எல்லாரும் ஒரே மாதிரி புடவை, ப்ளவுஸ் பாத்தா, செம அட்டகாசம். ஒவ்வொருத்தியும் அவ்வளவு அழகா இருக்காங்க. மாமா பசங்க அத்தனை பேரும் பட்டு வேட்டி கட்டி, மல்லுவேட்டி மைனர் மாதிரி சிங்குச்சா சிங்குச்சா கலர்ல சட்டை போட்ருக்காங்க.

ஓய், இன்னா, என்னை விட்டுட்டு நீங்க எல்லாம் இப்படின்னு கேட்டா, நாங்க கேட்டோம், நீ தான வேணாம்னு சொன்னன்னு அவங்க திருப்பி தாக்க, ஆனாலும் பொறாமையா இருக்கு பக்கிங்களான்னு நான் சைலென்ட் ஆகிட்டேன். பின்ன, கெத்தா, நான் எல்லாம் உங்க கூட கூட்டு சேர்ந்து வர மாட்டேன்னு நான் தான ஒரு வாரம் முன்னால சொன்னேன்.சரி, அத விடுங்க, அந்தா அங்கப் பாருங்க, மாப்பிள்ளை உக்காந்துட்டு இருக்கார். வாங்க, அவர ஒரு ரவுண்டு போய் பாப்போம்...

என் தங்கச்சில ஒருத்தி, மாப்பிளை பக்கத்துல போய், மாப்பிளை சார், எங்க கண்ணையே உங்ககிட்ட ஒப்படைக்குறோம், தயவு செய்து அவள இனி இந்தியாவுக்குள்ள விட்ராதீங்க, அவ அலம்பல் தாங்கலன்னு சொல்றா. அவரு சிரிச்சுகிட்டே, சொல்லிட்டீங்கல யூ.எஸ் லயே அவள பூட்டி வச்சிடுறேன்னு சொல்றார்.
அதுக்குள்ள மாமன் கல்யாணத்துக்கு நேரமாக, வரிசையா அவளோட மாமாக்கள எல்லாம் உக்கார வச்சாங்க. மொத்தம் நாலு பேரு. நாலு பேரையும் ஒவ்வொருத்தரா மணமேடைக்கு ஏத்தி, என்னமோ மந்திரம் எல்லாம் சொல்லி, கைல மஞ்சள் கிழங்க கட்டி விட்டு, அப்புறமா, தங்கச்சிய வர சொல்லி, எல்லார் கிட்டயும் ஆசிர்வாதம் வாங்க சொன்னாங்க. அந்த புள்ள சும்மாவே அழகு, மேக் அப் எல்லாம் போட்டு செம்ம அழகா இருந்தா (கிர்ர்ர்ர்)....

இதுல நீங்க ஒரு விஷயம் கவனிக்கணும். நான் எப்பவுமே அழகு பத்தி பெருசா அக்கறை எடுத்துக்க மாட்டேன். யாரையும் டக்குன்னு அழகுன்னு சொல்லவும் மாட்டேன். ஆனா ஏனோ அன்னிக்கி எனக்கு எல்லாருமே அழகா தெரிஞ்சாங்க. என்னைத் சுத்தி எல்லாமே அழகா தெரிஞ்சுது. ஏன், என்னைக் கூட எவ்வளவு அழகா இருக்கேன்னு பெரியவங்க நெட்டி முறிச்சாங்க.

சரி, சர்ர்ர்ரீரீரீ.... விசயத்துக்கு வர்றேன், மாமாக்கள் எல்லாம் ஆசிர்வாதம் பண்ணின கையோட, ஆளுக்கொரு தங்க வளையலையும் மாட்டி விட பொண்ணு வீட்டு ஆம்பளைங்க எல்லாம் அனந்தரம் பண்ண வரிசைல வர ஆரம்பிச்சாங்க. அது ஒரு நீண்ட வரிசை. ஊர்ல உள்ள அத்தன பேரும் மேடையேறி பொண்ணுக்கு நாமம் விட்டு, மங்கல தண்ணி தெளிச்சு ஆசீர்வாதம் பண்ணினாங்க. அதெல்லாம் முடிஞ்சு, மாப்பிளை வீட்டுக்காரங்க முகூர்த்தப் பட்டு எடுத்துகிட்டு ரூமுக்குள்ள போனாங்க.

நான் அப்படியே வெளில நோட்டம் விட்டேன். பாட்டு கச்சேரி ஏற்பாடு பண்ணியிருந்தாங்க. ஆரம்பமே குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டுக் கேக்குதா குக்கூ குக்கூன்னு ஒரு பொண்ணு கூவிட்டு இருந்துச்சு. யாருடா இதுன்னு மூஞ்சியப் பாத்தேன்... ப்பாஆஆ... யாருடா, இது பேய் மாதிரின்னு எனக்கு நானே கேட்டுகிட்டேன்... அவ்வ்வ்வ் அது ஏற்கனவே வெள்ளையா இருந்துச்சு, அதுல நாலு இஞ்சுக்கு பாண்ட்ஸ் பவுடரப் போட்டு உரமேற்றியிருக்கும் போல. கூடவே அந்த செக்க செவேல்ன்னு லிப்ஸ்ஸ்டிக்...சரி, ரொம்ப பயந்துட வேணாம்... நான் வேற டாபிக் போய்டுறேன்...

மாப்பிளை யூ.எஸ்ல வேலைப் பாக்குறதால அவரோட பிரெண்ட்ஸ் சில பேர் வெள்ளைவெளேர்ன்னு சுத்திக்கிட்டு இருந்தாங்க. எனக்கு அவங்க காஸ்ட்யூம் பாத்து ஒரே ஆச்சர்யம். அவங்களும் அப்படியே வேட்டி, புடவைன்னு அசத்தினது தான் காரணம். ஆனா வேட்டி கீழ விழுந்துருமோ விழுந்துருமோன்னு திகிலோட திரிஞ்சாங்க போல. அடிக்கடி பிடிச்சுகிட்டே நடந்தாங்க. ஒரே ஒரு பொண்ணு, அதுவும் சான்சே இல்ல, ரொம்ப அழகு.

ஒரு வழியா முகூர்த்த பட்டு கட்டிக்கிட்டு பொண்ணு வர, மந்திரங்கள் ஒழிக்க, கெட்டிமேளம் கெட்டி மேளம் முழங்க தாலி கழுத்துல ஏறிடுச்சு. நான் அப்பா பக்கத்துல உக்காந்து பூ போட்டேன். சித்தப்பா கைப் பிடிச்சு குடுக்க, அப்படியே பொண்ணும் மாப்பிளையும் மேடைய வலம் வந்தாங்க. ஒவ்வொரு தடவ பக்கத்துல வரும்போதும் எல்லாரும் பூ போட்டு ஓ...ஹோன்னு கூச்சல்.

அப்புறம், மாப்பிளை வீட்டு சொந்தங்கள் எல்லாம் அனந்தரம் செய்ய, அப்படியே குடும்பம் குடும்பமா மேடையேறி, கிப்ட் குடுத்து, போட்டோ வீடியோன்னு எடுக்க ஆரம்பிச்சுட்டாங்க.

ஒருபக்கம் அதெல்லாம் நடந்துட்டு இருக்க, இன்னொரு பக்கம் ஆர்கெஸ்ட்ரா அடிச்சு தூள் பண்ண ஆரம்பிக்க, கூட்டம் கட்டுப்படுத்தவே முடியல. அந்த களேபரத்துலயும் மாமா பையன் ஒருத்தன், அங்க ஸ்டேஜ்ல இருந்த ஒரு சிகப்பு கலர் பூவ போய் எடுத்துட்டு, நேரா பொண்ணுகிட்ட போய் நீ ரொம்ப அழகா இருக்க, அயாம் லவ் வித் யூன்னு கலாய்க்குறான். அடப்பாவி, தாலி ஏறுறதுக்கு முன்னாடி சொல்லியிருக்க கூடாதா, இப்ப வந்து சொல்லுறியேன்னு அவளும் கேக்க, சோகமா மூஞ்சிய வச்சுட்டு நேரே என் கிட்ட வந்து, நீ என்னை கட்டிக்குறியான்னு கேக்குறான். ஹஹா... பக்கத்துல இருந்த அப்பா விழுந்து விழுந்து சிரிச்சுட்டாங்க. ரொம்ப செல்லம் அவன் எங்களுக்கு. ரொம்ப ரொம்ப அழகா வேற இருப்பான். அவன் கேட்டு மறுக்க முடியுமா. இப்பவே வேணா கல்யாணம் பண்ணிப்போம்டான்னு சொன்னேன்.

உடனே, ஆர்கஸ்ட்ரா மைக்க வாங்கி, “பொய் சொல்லக் கூடாது காதலி, பொய் சொன்னாலும் நீயே என் காதலி”ன்னு பாட்டுப் பாட ஆரம்பிச்சுட்டான். அவன் கூட அப்படியே எழும்பி போய் ஒரு டான்ஸ் ஆடலாமான்னு தோணிச்சு, அதுக்குள்ள இன்னொருத்தி ஓடிப் போய் அவன் கூட ஜோடியா ஆட ஆரம்பிச்சுட்டா.

அடுத்தடுத்து ஒவ்வொரு பாட்டா ஆர்கஸ்ட்ரால உள்ளவங்க பாட ஆரம்பிக்க, மொத்த புள்ளைங்களும் ஆளுக்கு ஒரு டான்ஸ்ன்னு ஆடத் தொடங்கிட்டாங்க. செம கலாட்டா. அதுவும் அந்த பாரின் ஆட்கள எல்லாம் வேற ஜோடியா சேர்த்துகிட்டாங்க. அப்பப்ப அவங்க கூட செல்பி எடுத்துட்டு, டான்ஸ் மூவ்மென்ட் சொல்லிக் குடுத்துட்டுன்னு இருந்த நேரம், மேடைல ஒரே கூட்டம்.

எங்க ஊர் பசங்க எல்லாம் ஒரு ஓரமா நின்னு இதுங்க பண்ற அட்டூளியத்த எல்லாம் பாத்துட்டே நிக்குரானுங்க. இதுல சில பேர் நான் பாக்குறேன்னு தெரிஞ்சதும் சிரிச்சாங்க. ஒரு காலத்துல நான் அவங்க கூட தான் ஊர் சுத்துவேன். இப்ப ரொம்ப ரொம்ப அடக்கமா ஹாய்ன்னு இங்க இருந்தே கைக் காட்டி சிரிச்சுட்டு அப்பா பக்கத்துலயே உக்காந்துகிட்டேன்.

ஒரு விஷயம் சொல்ல மறந்துட்டேன், என்னை இங்க இம்ப்ரஸ் பண்ணின விஷயம் என்னன்னா, முகூர்த்தம் முடிஞ்சதுமே சித்தப்பா அப்பா கிட்ட பரபரப்பா ஓடி வந்தாங்க. அண்ணே, சாப்பாடு எல்லாம் வண்டியில ஏத்திக்கிட்டு இருக்காங்க. கொஞ்சம் பொறுப்பா பாத்து அனுப்பி வைக்கணும், நான் இங்க மாட்டிகிட்டேன்னு சொன்னதும், அப்பா நான் போய் பாக்குறேன்னு போயிட்டு வந்தாங்க. சாப்பாடு எல்லாம் பந்தி ஆரம்பிக்குறதுக்கு முன்னாடியே பக்கத்துல இருக்குற ரெண்டு ஹோம்கள்ல பசங்களுக்கு சாப்பிட குடுத்து விட்டாங்க. நல்ல விஷயம் தானே. சித்தப்பா அதுக்கு முந்தின நாளும் சாப்பாடுக் குடுத்தாங்கன்னு அப்புறமா தெரிஞ்சிகிட்டேன்.

அடுத்து பிடிக்காத விஷயம், அரசியல்வாதிகள் கூட்டம். இன்ன கட்சின்னு இல்லாம எல்லா கட்சியில இருந்தும் ஆட்கள் வந்துட்டு இருந்தாங்க. அட, எல்லாரும் கழுவி ஊத்துற ஆளும் கட்சி மாநில பொறுப்பாளர் கூட கும்பலா வந்து போட்டோ எல்லாம் எடுத்துட்டு போனார்.

அப்பாவோட உக்காந்துட்டு இருக்கேன், டக்குன்னு ஒருத்தர் பக்கத்துல வந்து உக்காந்த பீல். யாருடா இது, எங்கயோ பாத்தது மாதிரி இருக்கேன்னு அப்பா கிட்ட கேட்டா அவர் தான் எதிர்க்கட்சி ஆளாம். தன்னந்தனியா வந்து உக்காந்து, வாங்கன்னு கூட சொல்ல யாரும் இல்லாம அவர் பாட்டுக்கு உக்காந்துட்டு இருக்கார். எனக்கு எழும்பி போகவா வேணாமான்னு ஒரே சந்தேகம். கொஞ்ச நேரம் கழிச்சு தான் ஒவ்வொரு வயசானவங்க வந்து, வாங்கன்னு கூப்ட்டுட்டு அவங்களும் அவங்க பாட்டுக்கு போய்ட்டாங்க. எப்படியோ அப்புறம் போய் மணமக்கள வாழ்த்திட்டு வந்தார். ஒரு காலத்துல ஓஹோன்னு வாழ்ந்த ஆளு, மந்திரியா கூட இருந்துருக்கார்ன்னு நினைக்குறேன். கழுத்துல தேசியக் கொடி மாதிரி துண்டு போட்ருந்தார். சின்ன வயசுல அவர அத்தனை கம்பீரமா அவர பாத்துருக்கேன். இப்ப கட்சியே இல்ல, இவர யாரு மதிக்கப் போறா?

நகர சபை சேர்மன்ல இருந்து மாநில தலைவர் வரைக்கும் வந்த நேரம் எல்லாம், ஒரு மாதிரி ஒரு பந்தா நிலவுன மாதிரி தோணிச்சு எனக்கு. அது மட்டும் தான் எனக்கு பிடிக்கவே இல்ல...

மறுபடியும் நாம கொண்டாட்டத்துக்குள்ள வந்துருவோம்...

அதென்னவோ, நேத்து முழுக்க முழுக்க ரொம்ப கொண்டாட்டமான நாளா இருந்துச்சு. எல்லா புள்ளைங்களும் இத்தனை அழகான்னு அசர வச்சுட்டு இருந்தாங்க. பசங்க, புள்ளைங்க கலாட்டால நான் எப்பவுமே என்னை ஈடுபடுத்திக்க மாட்டேன். ஆனா நேத்து அவங்க கூட போய் நானும் கலாட்டா பண்ணனும்னு ஆசைப் பட்டேன். ஆனா பாருங்க, இந்த ஈகோ இல்ல ஈகோ, அது வந்து என்னை தடுத்திடுச்சு...

அப்புறமா சாப்பிட போகலாம்னு முடிவுப் பண்ணி எழுந்தப்ப, பொண்ணும் மாப்பிளையும் சாப்பிட வந்துட்டாங்க. மாப்பிளை பொண்ணுக்கு ஊட்டி விடுங்கன்னு அங்க வந்தும் கலாட்டா. நோ, அதெல்லாம் முடியாது, என் பிரெண்ட்ஸ் எல்லாம் பாத்துட்டு இருக்காங்கன்னு மாப்பிளை வெக்கப் பட, அப்படினா என் டார்லிங்குக்கு நான் ஊட்டி விடுறேன்னு என் மாமா பையன் முன்னாடிப் போய் நிக்குறான். என் தங்கச்சி ஒருத்தி, அப்படினா அத்தானுக்கு நான் ஊட்டி விடுறேன்னு சொல்றா. எல்லாரும் பேசாம போய் சாப்பிடுங்கன்னு கூட்டத்துல ஒரு ஆள் அதட்டுன பிறகு தான் அடக்க ஒடுக்கமா எல்லாம் ஓடிப் போய் சாப்பிட உக்காந்தாங்க.

அப்பவும் விடாம, மாப்பிளையோட பிரெண்ட்ஸ் கிட்ட போய், இத சாப்பிடுங்க, இது நல்லாயிருக்கும், இத சாப்பிடாதீங்க, காரமா இருக்கும்னு பொண்ணுங்க எல்லாம் அக்கறையா சொல்லிக் குடுத்துட்டு இருந்தாங்க. ஹஹா இந்தியன் கேர்ள்ஸ் ஆர் வெரி ப்யூட்டிபுல்ன்னு ஒருத்தர் ஈஈ-ன்னு சிரிச்சுட்டு இருந்தார். ரியலி ஐ லைக் திஸ் மேரேஜ், டோன்ட் வொர்ரி, வி வில் டேக் கேர் ஆப் யுவர் சிஸ்டர்ன்னு ஒருத்தர் வாக்குறுதி குடுத்தார்.

ரொம்ப அலைச்சல் வேற இருந்ததால சாப்பிட்டதும் நான் டயர்ட்ல வீட்டுக்கு வந்துட்டேன். மறுவீடு காணப் போனவங்க, மாப்பிளை வீட்ல இருந்து கிளம்ப ராத்திரி பதினோரு மணி ஆகிடுச்சாம். பாவம் தான் பொண்ணும் மாப்பிளையும்...

இந்தா இன்னிக்கி அவங்களுக்கு விருந்து. நல்லா மூக்கு முட்ட சாப்ட்டுட்டு வந்ததால, அத பத்தி எழுத சோம்பலா இருக்கு...

இவ்வளவு நீளமா எழுதினா யார் படிப்பான்னு நீங்க கேக்குறதும் புரியுது, அதனால இத்தோட விட்டுட்டேன். பொழச்சுப் போங்க....

.

4 comments:

 1. ரியலி ஐ லைக் திஸ்... வாழ்த்துகள்...

  ReplyDelete
 2. வணக்கம்

  அருமையாக செதுக்கியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 3. Seems like you had a good time, GD! :-)

  ReplyDelete
 4. THANKS ..GREAT DESCRIPTION OF TN WEDDING & TRADITIONS!!

  ReplyDelete