Tuesday 18 June 2019

துர்காமாதா: எனது வாசிப்பு அனுபவங்கள் – அரவிந்த்

இது நாகர்கோவிலைச் சேர்ந்த உதவிப்பேராசிரியையாய் பணியாற்றும் ஜீவாவின் முதல் புதினமா? நம்ப முடியவில்லை (என்ன ஆழமான கருத்துச்செறிவுமிக்க விவாதங்கள்)!

இவரது “தற்கொலைக்கடிதம்” கதைத்தொகுப்பிலும், வலைப்பதிவுகளிலும் முகநூலிலும் சிரிப்பு நடையில் தனது சொந்த அனுபவங்களையும் சீரியசான நடையில் பெண்களின் துன்பங்களையும் இன்னபிற சமூகச்சிக்கல்களையும் தீர்வுகளோடு அலசுவதை நாம் படித்திருக்கிறோம்.

தோழர்களுடனான விவாதங்களுக்குப்பின் மேலும் எவ்வளவு ஆழமாக சமூகச்சிக்கல்களை புரிந்திருக்கிறார் என்பதற்கு இப்புதினமே சான்று.

வட இந்தியர்களை நம் பொழப்பிற்கு வேட்டு வைப்பவர்கள், நம் வேலைகளையெல்லாம் பறிப்பவர்கள், பாலியல் குற்றமிழைப்பவர்கள் என்ற பிரச்சாரங்கள் வைக்கப்படும் இந்த காலக்கட்டத்திற்கு மிகப்பொருத்தமான புத்தகம் இது.

வட இந்திய ஏழைகள் யார்? எந்தெந்த சூழ்நிலைகளில் வேலைக்கு இங்கே வருகிறார்கள்? அரசியலும் அதிகாரவர்க்கமும் கொண்ட முதலாளித்துவ சமூகம் அவர்களை எந்தெந்த இழிநிலைகளுக்கு தள்ளுகிறது? கணத்திற்கு கணம் பெருகிவரும் பாலியல் குற்றங்களை எப்படி தடுப்பது போன்ற பல கேள்விகளுக்கு விடையே இப்புத்தகம்.

"உத்திரப்பிரதேசம் குலாபி கேங்க்" இயக்கம் போன்ற ஜார்க்கன்டில் ஒரு போராளி இயக்கத்தில் உன்னத லட்சியத்தோடு போராடுபவள் குறும்பும் குதூகலமும் தைரியமும் நிறைந்த கதாநாயகி துர்கா. அதிகாரவர்க்கச்சுரண்டலை எதிர்த்து யாரைக்காக்க முனைகிறார்களோ அம்மக்களே இவர்களை நம்பாமல் ஏன் எங்கே போகிறார்கள் என்ற கேள்வியோடு ரியாசோடு தனக்கிருந்த காதலையும் தியாகம் செய்து தமிழகம் நோக்கி காண்ட்டிராக்டர்களோடு புறப்படுகிறாள் நாயகி.

இங்கு வந்தப்பிறகு அவள் சந்திக்கும் தொழிலாளர்கள், எதிர்ப்பார்ப்புகளோடு வந்தவர்களை மனசாட்சிக்கு புறம்பானவேலைகளை நோக்கி தள்ளப்படும் நிலைமைகள், பணமும் அதிகாரமும் அவர்களை பந்தாடும் விதங்கள், தோழர்களோடு விரிவாக விவாதித்து அவள் கண்டடையும் தீர்வுகள், இதற்கிடையில் அவளே ஒரு மாபெரும் அரசியல் சூதாட்டவழக்கில் சிக்கி என்ன ஆகிறாள் என்பதே கதைச்சுருக்கம்.

சமூகநீதியை வலியுறுத்தும் உயரிய போராளி இயக்கங்களையும் மீறி நுகர்வுவெறியை தூண்டிலாகக் கொண்டு முதலாளித்துவம் எப்படி மக்களை பணத்தை நோக்கி பைத்தியமாக ஓடவைத்து எந்த எல்லைக்கும் சென்று எப்பாவத்தையும் செய்யவைக்கிறது என்று தோழர்களால் மிகத்தீவிரமாக விவாதிக்கப்படும் பக்கங்கள் இன்றைய சமூகம் முழுமையும் படிக்கவேண்டிய பொக்கிஷங்கள்.

இரண்டு வயதுக் குழந்தைகளுக்கே தொடுகைகளின் வகைகளை (good touch, bad touch) கற்றுக்கொடுப்பதன் அறிவீனத்தை எடுத்துக்காட்டி இவ்வகை விஷயங்கள் எப்படி நம் பண்பாட்டிலேயே விளையாட்டுச் சீண்டல்களாக மனதில் பதிய வைக்கப்பட்டுகின்றது என்று நிஷா எடுத்துரைக்கும் காட்சி படைப்பின் உச்சம்.

துர்காவைக் காக்க ரியாஸ் உட்பட நண்பர்கள் செய்யும் தந்திரங்கள் பக்கங்களின் வேகத்தைப் பெருக்கி வாசகர்களை ஒரே மூச்சில் வாசித்து முடிக்க வைக்கிறது.

புதினம் மிக விரைவாக முடிந்துவிட்ட உணர்வால் அடுத்த புத்தகங்களில் எங்கள் எதிர்ப்பார்ப்புகளை இங்கே பதிவுசெய்கிறோம்.

1. பாலியல் குற்றங்கள் பெருகிவிட்ட புள்ளிவிவரங்களை வைக்கும் ஆசிரியரின் பிரதிபலிப்பாக தெரியும் சுடரொளியின் கூற்றுகள் "சமூக ஊடகங்களின் பெருக்கத்தாலேயே இயல்பாக இருப்பவை பெரிதுபடுத்தப்படுகின்றன" என்ற சிலரின் கூற்றுகளுக்கு பதிலளிப்பதாக அடுத்த படைப்பு இருக்கவேன்டும்.

2. பாலியல் குற்றங்களை செய்யும் ஆண்களை கன்டுகொள்ளாமல் பெண்களே மீண்டும் மீண்டும் குற்றம் சுமத்தப்படுகிறார்கள் என்று கூறும் நாம் இதே நுகர்வு கலாச்சாரத்திற்கு அடிமையாகி சுரன்டலின் பிரதிதிகளாய் செயல்படும் சில மேல்தட்டுவர்க்கப் பெண்களையும் எப்படி தூய சிந்தனையுள்ளவர்களாக மாற்றுவது என்பதையும் எடுத்துக்காட்டுவதாக உங்களின் அடுத்தடுத்த படைப்புகள் இருக்கவேண்டும்.

3. கல்வியை விளையாட்டோடும் உடற்பயிற்சியோடும் சுவாரசியமாக தரவேண்டும் என்று பள்ளிகளுக்கு சொல்லும் நாம், செயலிகளும் ரோபோக்களும் பயிற்றுவிக்கப்போகும் வரும் யுகத்தில் எப்படி இச்சிந்தனைகளை செயலாக்கப்போகிறோம் என்பதை பேசும் படைப்புகளை எதிர்ப்பார்க்கிறோம்.

4. தனிநபர் தரவுகளைக்கொண்டு தனிநபர் விருப்பங்களை வடிவமைக்கும் வல்லமையுள்ள இன்றைய முதலாளித்துவ கருவிகளை நம் உயர்ந்த பாலியல் குற்றமற்ற சீரியசிந்னைகள் கொன்ட மாந்தர்களை உருவாக்க எப்படி உபயோகிக்கப்போகிறோம் என்று எடுத்துக்காட்டும் உயரிய படைப்புகளை எதிர்ப்பார்கிறோம்.

இத்தகைய ஆழ்ந்த சின்தனைகளையும் எக்கச்செக்க எதிர்ப்பார்ப்புகளையும் தூண்டிய உங்கள் துர்காமாதாவிற்கு எங்கள் வாழ்த்துக்களும் வந்தனங்களும்.

நீங்கள் மென்மேலும் பற்பல படைப்புகளை உருவாக்கி சமூகத்தைச் செப்பனிட்டு வெற்றிபெற எங்கள் உளம்கனிந்த வாழ்த்துக்கள்.
நன்றியுடன் அரவிந்த் 
 
 
நாவலை பெற: 

விலை: ரூ: 150 மற்றும் கூரியர்செலவு மட்டும்
தொடர்புக்கு: பொன்னுலகம் புத்தக நிலையம், திருப்பூர்.
அலைபேசி எண்கள்: 70104 84465, 88707 33434
வங்கி கணக்கு: PONNULAGM PUTHTHAGA NILAIYAM, Karur Vysya Bank, Thiruppur, P N Road Branch, A/C -No-1235115000041544, IFSC KVBL0001235
 

No comments:

Post a Comment