Tuesday, 26 November 2013

கொஞ்ச நேரம் தூங்கிக் கொள்வோம்.....


எப்பொழுதும் நான் சந்திக்கும் வலிகளிவைதாயினும்
வீரியம் குறையாது, கொஞ்சமும் தளராது
தாக்குதல் ஆரம்பித்து விட்டிருந்தது.

பழகிவிட்டதென ஒதுக்கிவிடவும் வாய்ப்பளிக்காமல்
இம்முறை உன்னை விடவே போவதில்லை,
பாரென ஆக்ரோசமாய் படரத் துவங்கியது.

பற்றுதல் வேண்டி கைகள் உன்னைத் தேட,
எதிர்பார்த்த கண்கள் கண்ணீர் குளம் தேக்கியது.
ஆ...வென கதறிதுடிக்கும் ஒவ்வொரு துடிப்புக்குள்ளும்
வந்து விடு வந்து விடென உயிருன்னை வேண்டியது.

தொலைதூரத்தில் உறங்கியதாலோ என்னவோ
உனக்கென் தேடல் மொழி கேட்கவேயில்லை.

இப்பொழுது யோசிக்கவும் இடங்கொடாமல் அது என்
நரம்பு மண்டலத்தை என்னை ஆளத் துவங்கியது.
மலைப்பாம்பின் சுருட்டல்களுக்குள்
மாட்டிக்கொண்ட மான்குட்டியாய்
அது என்னை கையகப்படுத்தியிருந்தது.

அப்படியே என்னை விழுங்கி விட்டிருந்தால் வேதனை தெரியாது.
இதுவோ, சற்று நேரத்தில் கொஞ்சம் விட்டுபிடிக்க துவங்கியது.
வலி தீர்க்க அமுதம் தேடும் மனநிலையில்லை...

ஒரு துளி விஷம் கிடைத்தால்,
அது என்னை பரமானந்தத்தில் ஆழ்த்தி விட்டிருக்கும்.

ஆத்மா தேடி தவித்த அந்த பொழுதில் தான்
திடீரென நீ வந்தாய்...
கண்திறந்து பாரென் செல்லமே என
கன்னம் தட்டி தவித்திருந்தாய்...
நெற்றியிலே மென்முத்தமிட்டு
அஞ்சாதே, நானிருக்கிறேனென்றாய்...

மார்போடு அணைத்தென்னை உன்னோடு கட்டிக்கொண்டதில்
என்னில் குருதி வேட்டையாடியவன் பின்தங்கியவனானான்...
ஐவிரல் பற்றி நீ என்னை சூடேற்றி கொண்டதில்
இந்த கோழிகுஞ்சு கொஞ்சம் கதகதப்பில் மீண்டது.

புன்னகையொன்று பூக்கிறது உன் பரிதவிப்புக் கண்டு...
இது ஆறுதல் கட்டம்...
எனக்காய் தவிக்கும் உன்னுள் முழுதாய் கரைகிறேன்...
போர்த்திய போர்வைக்குள் இப்பொழுது நம் இருவரின்
மூச்சுக் காற்றுகளும் நலமென சங்கமித்துக் கொள்கின்றன.

கண்கள் சொருகுகிறது... தூங்குகிறேன்...
நீயும் தூங்கு...
நாளை இந்நேரம் மீண்டும்
உன் தேவை எனக்காக மட்டுமேயிருக்கலாம்.....

10 comments:

 1. ஒரு துளி விஷம் கிடைத்தால்,

  அது என்னை பரமானந்தத்தில் ஆழ்த்தி விட்டிருக்கும்.  ஆத்மா தேடி தவித்த அந்த பொழுதில் தான்

  திடீரென நீ வந்தாய்...
  நன்றாக உள்ளது

  ReplyDelete
  Replies
  1. ஹ்ம்ம்ம் தேங்க்ஸ் :)

   Delete
 2. Replies
  1. தேங்க்ஸ் அண்ணா, வாழ்த்துக்கு

   Delete
 3. இதை படிக்கும் போது சோகம் இழையோட ஒரு அழுகுரல் கேட்கிறது. உடல்நிலை சரியில்லாத பொழுதுகளில் அன்புக்குரியவர்களின் அருகாமை எத்தனை அவசியமானது என்பதை ஒரு சிறு குழந்தை உணர்த்துவது போல் உள்ளது. இறுதியில் அக்குழந்தைக்கு நிம்மதியான தூக்கம் கிடைத்ததில் ஒரு நிம்மதி. தூங்கட்டும், யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம்

  ReplyDelete
  Replies
  1. தேங்க்ஸ் மேடம்... ம்ம்ம்ம் ஆமா, நிம்மதியான தூக்கம் ஒரு வரம்

   Delete
 4. அருமை, வாழ்த்துக்கள்..

  ReplyDelete
  Replies
  1. தேங்க்ஸ் அக்கா.... உங்க வாழ்த்துக்கு

   Delete
 5. எந்த விஷயத்தையும் ஆழமாக சிந்தித்து எழுத முடிகிறது உங்களுக்கு ஏன் சமூகம் சார்ந்த விஷயங்களைப்பற்றி எழுதக்கூடாது என்னை நானே சில நேரம் கேட்கும் கேள்வியை இன்று உங்களையும் கேட்டு விட்டேன். ஹஹ கேட்க அனுமதி உண்டோ ?

  ReplyDelete
  Replies
  1. ஹஹா இதை தான் எனக்கு நெருக்கமானவர்களும் சொல்கிறார்கள். ஒரு வேளை சமூகத்தை நான் இன்னும் சரியாக கவனிக்கலையோ என்னவோ? ஆனா கண்டிப்பா எழுதுறேன்


   கேட்க அனுமதி உண்டான்னு எல்லாம் கேக்காதீங்க, உங்கள மாதிரி எல்லோரும் கேட்டா தான் நான் கொஞ்சமாவது யோசிக்க ஆரம்பிப்பேன்

   Delete