Wednesday, 27 November 2013

நிலவு வழித் தூது...!


ஏ நிலவு பெண்ணே...!

நீயே இந்த வழக்கின் உரையாடலை தீர்த்து வையடி…!

கார் என்றானாம், மாலை தொடுவானமென்றானாம்...
செங்காந்தள் நிரமவள், கற்பின் கனலென்று மகுடம் சூட்டி…
இருள் சூழ்ந்த மாலை நேரத்தில்
மதி மயங்கி கள்ளுண்ட மந்தியானானாம்...!

அத்தனை வர்ணனை
தூது செல்ல உன்னிடத்தில் கொட்டிய
என்னவன், என்முன் வார்த்தைகளின்
பஞ்சம் வர விக்கித்து நின்றதேனோடி...!

உனக்கு தெரியுமா?
வாய் சொல்லில் வீரனடி அவன்…
அவன் அதரம் உதிர்க்கும்
அத்தனை அனர்த்தங்களும்
அர்த்தமாய் தான் போய் விடுகிறது
அவன் கண்கள் ஊடுருவி நோக்கும்
மொத்த பாவையருக்கும்…!

கற்பனை உலகில் அவன் அங்கே
சஞ்சாரம் செய்து கொண்டிருக்க
பாவை என் மனமோ சஞ்சலத்தில் தவிக்குதடி...!

உன் மேகக் காதலனோ கொண்டலாய்
உன்னிடம் நேசம் பொழிந்திட்டான்…!
இங்கொருவனை பார்…
கொண்ட மையல் முழுவதையும்
தையல் உன்னிடம் கொட்டி விட்டு
வார்த்தைகள் தேடிக் கொண்டிருக்கிறான் என்னிடத்தில்...!

அவனிடத்தில் சென்று இதை கூறு
உன் அன்பிற்கினியவள் பசலை பீடிக்க
வெற்றிலை கொடியின்
இடையணைப்பில் கூட
மூச்சுத் திணறுகிறாளென்று...!
ஆம்பல் பூத்த தடாகத்து புல்வெளியில்
கரையிட்ட மச்சமாய் துள்ளித் தவிக்கிறாளென்று...!

அரை நாழிகை பொழுது கூட தலைவன்
பிரிந்து விட்ட காரணத்தால்
அரை நூற்றாண்டாய் வேடிக்கை காட்டுகிறது…!

விரைந்து செல்லடி மஞ்சு கொஞ்சும் வான்மதியே...!
இன்னும் ஒரு நொடி நீ தயங்கி நின்றால்
தலைவனின் பிரிவுணர்ந்த அன்றில் பறவையாய்…
என் தேகக்கூட்டில் உயிர் மட்டும்
மின்மினியாய் கண்சிமிட்டும்…!

நானோ...!

அவன் நினைவு தரும் மயக்கத்தில்
பிச்சியாய் உன்னோடு பிதற்றிக் கொண்டே
இப்படியே கல்லாய் சமைய வேண்டியது தான்…
அவனிருக்கும் திசை நோக்கி...!

- இது ஒரு மறுபதிவு 

14 comments:

 1. படமும் கவிதையும் அழகு..

  ReplyDelete
 2. என்னவொரு அன்பு...! அருமை...

  ReplyDelete
  Replies
  1. தேங்க்ஸ் அண்ணா உங்க பாராட்டுக்கு

   Delete
 3. Visit : http://blogintamil.blogspot.in/2013/11/blog-post_27.html

  ReplyDelete
  Replies
  1. நான் போய் பார்த்தேன் அண்ணா...

   இப்போ என்னால எல்லா திரட்டிகள்லயும் இணைக்க முடியுது. ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் அண்ணா

   Delete
 4. படம் அழகு! கவிதையும் சிறப்பு! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. ம்ம்ம்ம் தேங்க்ஸ் அண்ணா, ஆனா ஒரு வேளை இந்த படம் செலக்ட் பண்ணினதால கவிதையோட சிறப்பு பலர் கண்ணுக்கும் தெரியாம போச்சோன்னு ஒரு சந்தேகம் எனக்கு

   Delete
 5. Wow very Nyc photo with kavithai superb

  ReplyDelete
 6. தமிழ் தாண்டவம் ஆடுது உன் மனத்திடலில். அரங்கேற்றிக் கொண்டே இரு இந்த "உன்னில் உணர்ந்த" தளத்தில். அட... என்ற உணர்வு மேலெழுந்தது இதை படிக்கையில்.

  ReplyDelete
 7. இது உன்னுடைய மாஸ்டர் பீஸ்ல ஒண்ணு. வாழ்த்துகள்

  ReplyDelete