Thursday, 3 September 2015

அந்த நாள் நியாபகம் வந்ததே நெஞ்சிலேநான் கே.ஜி படிச்சிட்டு இருந்த நேரம். “ஆலமரமே ஆலமரமே பச்சை கண்ணாடி”ன்னு ஒரு பாட்டு, நாலு மிஸ் கோரசா பாடுவாங்க, பிள்ளைங்க ஆலமரம், வேப்பமரம், தென்னை மரம்ன்னு ஒவ்வொரு மரமா வேஷம் போட்டுட்டு நிக்கணும். பாட்டோட வேகம் போக போக, சிட்டுக்குருவிக்கு இடம் குடுக்காத மரம் எல்லாம் அடிக்குற புயல்ல ஒவ்வொண்ணா சாஞ்சுடும். இதுல எனக்கு சிட்டுக் குருவி வேஷம். கிட்டத்தட்ட ஹீரோயின் நாம தான். சந்தோசமா ரிகர்சல் எல்லாம் பண்ணி, ஸ்கூல் டே-யும் வந்தாச்சு.டான்ஸ்க்குனே அம்மா ப்ரில் வச்ச ஒரு இளநீல ட்ரெஸ் எடுத்து தந்துருந்தா. தலைல வைக்க கிரீடம் ஒரு வாரத்துக்கு முன்னாலயே தம்பியும், நானும், அம்மாவுமா கார்ட் போர்ட்ட வெட்டி, அதுல ஏகப்பட்ட ஜிகினா எல்லாம் தூவி, ரெடி பண்ணி வச்சிருந்தோம்.

வீட்ல இருந்தே வேஷம் போட்டுட்டு கிளம்பி ஸ்கூல் போனா, மிஸ் ஓடி வந்து, வா, வா, கொஞ்சம் மேக் அப் போடுவோம்னு கூப்ட்டு வச்சு, கன்னத்துல ரோஸ் பவுடர் பூசி விட்டாங்க. நமக்கு சும்மாவே நம்மள யாராவது தொட்டா பிடிக்காது, அவ்வ்வ்வ்க்க்க்க்ன்னு மூஞ்ச வச்சிகிட்டு எப்படியோ ரோஸ் பவுடர போட விட்டுட்டேன். அடுத்து ரெண்டு அட்டைய தூக்கிட்டு வந்து சிட்டுகுருவிக்கு சிறகு வைப்போம்னு (நான் கேட்டேனா) சொல்லி, கைய தூக்கி கட்டி விட ட்ரை பண்ண, நான் கூச்சத்துல நெளிய ஆரம்பிச்சுட்டேன்.

நமக்கு தான் அழுது பழக்கம் இல்லையே, ச்சீ சீ எனக்கு இது பிடிக்கல மிஸ், குடுங்க, நானே கட்டிக்குறேன்னு சிறகை பறிச்சு எடுக்க, அவங்க விடாப்பிடியா நான் தான் கட்டி விடுவேன்னு அடம்பிடிக்க, அந்த இடமே களேபர பூமியாகிடுச்சு. என் கைல குடுக்கணும்னா குடுங்க, இல்லனா நான் ஸ்டேஜ்க்கு போக மாட்டேன்னு ஒத்தக்கால தரைல தூக்கி அடிச்சு அடம்பிடிக்க ஆரம்பிச்சுட்டேன்.

சரி, எந்தாலயும் போன்னு சொல்லி தண்ணி தொளிச்சு விட்டுட்டாங்க. ஒரு பக்கம் சிறக கைல கட்டியும், இன்னொரு பக்க சிறக தரைல இழுத்துட்டும் போய் ஒரு வழியா அந்த நாடகம் முடிவுக்கு வந்துச்சு. அதுல இருந்து என்னை ஸ்டேஜ் ஏத்தியிருப்பாங்கன்னு நினைக்குறீங்க? நோ சான்ஸ்... நமக்கும் இந்த கூட்டத்துல மேக் அப் போடுறது, ட்ரெஸ் மாத்துறது எல்லாமே அலர்ஜியோ அலர்ஜிங்குறதால அவங்க கூப்பிடாதது பரம சந்தோசமா இருந்துச்சு.

கல்ச்சரல்ஸ்னா தானே இந்த பிரச்சனை எல்லாம், வா, போட்டிகள்ல கலந்துக்கன்னு அங்க கொண்டு போய் நிறுத்துவாங்க. நமக்கு தான் மனப்பாடம் பண்றதுனா வரவே வராத கலையாச்சே, பேச்சுப் போட்டியில எல்லாருக்கும் முன்னால கொண்டு போய் நிறுத்தினதும், படிச்சு வச்சது எல்லாம் மறந்து போய் பேந்த பேந்த முழிச்சுட்டு நிப்பேன். வ, வ, வ-ன்னு வணக்கத்தையே முப்பது தடவ சொல்லுவேன். அவ்வளவு தான் மேட்டர் க்ளோஸ். இனி இந்த பக்கம் எட்டிப் பாப்பேனா?

ஆனா ஒண்ணு, பாட்டு போட்டியில கண்ண மூடிட்டு “ஆயர்பாடி மாளிகையில்” இல்லனா “கற்பூர நாயகியே கனகவல்லி”ன்னு பாடி முடிச்சு, பெருசா கைத்தட்டு எல்லாம் வாங்கியிருக்கேன். பஸ்ட் ப்ரைஸ் எல்லாம் குடுப்பாங்க, நம்புங்க. அதே மாதிரி தான் கட்டுரை எழுதுறதும். விஷயம் என்னன்னு கேட்டுட்டு நானா கொஞ்சம் எக்ஸ்ட்ரா பில்ட் அப் எல்லாம் போட்டு எழுதி வச்சிடுவேன். அநேகமா மூணாவது பரிசு நமக்கு தான்.

இப்படியான ஒரு நாள்ல தான் நான் அப்ப பிப்த் படிச்சுட்டு இருந்தேன். குமரி கலைக் கழகம் (பேரு சரிதானான்னு தெரியல) சார்புல மாவட்ட அளவுல போட்டிகள் நடக்குறதாவும், அதுல கலந்துக்குறவங்கள ஸ்கூல் செலக்ட் பண்ணி அனுப்பும்னும் சொன்னாங்க. எப்படியும் நாம எதுலயும் செலக்ட் ஆகப் போறது இல்ல, வெட்டியா எதுக்கு ஸ்க்ரீனிங்ல கலந்துக்கன்னு நான் எதுவுமே ப்ரிபேர் பண்ணல. ஆனா மிஸ் எல்லாரும் எழுதுங்கன்னு ஒரு பேப்பர கைல தந்து எழுத வச்சிட்டாங்க. இந்திய சுதந்திர இந்தியா-ன்னு தலைப்பு. வளர்ச்சி எல்லாம் இருக்கட்டும், முதல்ல புள்ளைங்கள மனப்பாடம் பண்ண வைக்காம, சுதந்திரமா சிந்திக்க வைங்கன்னு கடுப்புல எழுதி வச்சிருந்தேன்.

அடுத்தநாள் பாத்தா, நான் ஸ்க்ரீனிங் பாஸ் ஆகிட்டேனாம். மிஸ் வந்து இன்னும் ஒரு வாரம் தான் இருக்கு. நல்லா ப்ரிபேர் பண்ணிட்டு போய் எழுது. ஆல் தி பெஸ்ட்ன்னு சொல்லிட்டாங்க.

அய்யயோ முதல் தடவையா ஸ்கூல் விட்டு வெளில போட்டிகள்னு கலந்துக்கப் போறோம், நோட்ஸ் எல்லாம் எடுக்கணுமேன்னு அம்மா கிட்ட வந்து பண்ணின அலம்பல்ல என்னைக் கொண்டு போய் பக்கத்து ஊர்ல ஒருத்தர் கிட்ட விட்டுட்டாங்க. அவர் தான் முடிசூடும் பெருமாள். அவர் தான் அந்த கட்டுரைய ரெடி பண்ணி, என்னை மனப்பாடம் பண்ண வைக்காம, கதையா சொல்லி புரிய வச்சு, முதல் பரிசு வாங்க காரணமா இருந்தவரு. அதுக்கப்புறம் தான், பேச்சுப் போட்டி, கட்டுரை போட்டி, கவிதைப் போட்டி, கதை போட்டி-ன்னு எதா இருந்தாலும் தைரியமா இறங்கி ஒரு கை பாக்க ஆரம்பிச்சேன்.

முடிசூடும் பெருமாள் ஒரு சுதந்திர போராட்ட தியாகி. ஊர்ல அவரோட நிலத்துலயே ஒரு பொது லைப்ரரி கட்டி அவருக்குன்னு வர்ற பென்சன் பணத்துல நிறைய புக்ஸ் வாங்கிப் போடுவார். கல்யாணமே ஆகாம ரொம்ப வருஷம் வாழ்ந்துட்டு, அப்புறமா அவங்கம்மா கட்டாயப்படுத்தினதுக்காக கல்யாணம் பண்ணிகிட்டவர்.

தினமும் பேப்பர் படிக்க, ஊர்ல உள்ள ஆம்பளைங்க எல்லாம் அங்க தான் கூடுவாங்க. நமக்கு சிறுவர் மலர், காமிக்ஸ் புக்ஸ் எல்லாம் படிக்க கிடைக்கும். பிள்ளைங்கள வட்டமா உக்கார வச்சு கதைகள் சொல்லுவார். என்ன தான் ஸ்கூல்ல ராமாயணமும், மகாபாரதமும் கத்துக் குடுத்துருந்தாலும், கண்ணகியையும் கோவலனையும் அறிமுகப்படுத்தினது முடுசூடும் பெருமாள் தான். கூடவே மாதவியோட நடனத்த கண்ண உருட்டி அபிநயமா விவரிப்பார். எல்லாரும் கண்ணகிய கற்புக்கரசின்னு சொன்னா, இவர் மாதவிய உதாரணமா சொல்லுவார். அபிமன்யூவும் பிரகலாதனும் நம்ம ஹீரோவாகி போயிருந்தாங்க.

சுதந்திர தினமும் குடியரசு தினமும் வந்தா போதும், காலைல நாலு மணிக்கே ஊர்ல உள்ள புள்ளைங்கள எல்லாம் அவரே வீடு வீடாப் போய் தட்டி எழுப்பி, லைப்ரரில கூட வச்சு, இந்தியாவோட அருமை பெருமைகள விளக்கி சொல்லி, தேசத் தலைவர்கள எல்லாம் அறிமுகம் செய்து வைப்பார். அப்புறம் பக்தியும் வீரமுமா தேசிய கொடிய ஏத்தி வச்சு, ஒரு சல்யூட் வைப்பார் பாருங்க, அப்படியே சிலிர்க்கும். இந்த தேசியக் கொடிக்குள்ள செம்பருத்தி பூக்கள பிச்சு கட்டி வைக்குறது என் வேலை.

அவர் என்னை எப்பவும் வாய் நிறைய மருமகளே-ன்னு தான் கூப்பிடுவார். ஊருக்குள்ள எங்கயாவது போட்டி நடந்தா என் பெயர அவரே குடுத்துட்டு, கலந்துக்கோ கலந்துக்கோன்னு பின்னால வந்து கெஞ்சுவார். அவரு தொல்லை தாங்காமலே பல போட்டிகள்ல கலந்துகிட்டு ப்ரைஸ் எல்லாம் வாங்கியிருக்கேன்.

ஒரு நாள் திடீர்னு அவர் பையன் வந்து, உன்னை ஏன் எங்க அப்பா மருமகளேன்னு கூப்பிடுறார் தெரியுமா, உன்னை எனக்கு கட்டிக் குடுக்கத் தான். என்னிக்கி இருந்தாலும் நீ தான் எனக்கு பொண்டாட்டின்னு சொல்லிட்டான். அவ்வளவு தான், ஆத்தா மலையேறி, அவன் உச்சி முடிய புடிச்சு உலுக்கி, “போலே உன் சோலிய பாத்துட்டு”ன்னு எட்டி ஒரு மிதி மிதிச்சதோட அங்க போறதையே நிறுத்திட்டேன்.

அவன் கிடக்குறான் லூசுப் பய, நீ வீட்டுக்கு வா, நிறைய கதை சொல்றேன்னு அவர் பின்னால அலைஞ்சும் நான் திரும்பியே பாக்கல. அப்ப தான் எதிர்பாக்காம திடீர்னு ஒரு நாள் ஹார்ட் அட்டாக்ல செத்தும் போய்ட்டார்.

எனக்கு ஸ்டேஜ் ஏறுற தைரியமும், எந்த டாபிக் குடுத்தாலும் சட்டுன்னு பேச, எழுத முடியும்ங்குற நம்பிக்கையும் குடுத்தது முடிசூடும் பெருமாள் மாமா தான். இன்னிக்கி அவர் கட்டிக் குடுத்த லைப்ரரிய அவர் பையன் இடிச்சுட்டு அந்த இடத்துல பலசரக்கு கடை கட்டி வாடகைக்கு விட்டுட்டான். போன தடவ ஊருக்கு போனப்ப பொண்டாட்டி சீதனமா கொண்டு வந்த டாட்டா இண்டிகா-ல ஊர சுத்திட்டு இருந்தான்.


.

3 comments:

 1. நினைவுகள் ,எழுத்துச் சித்திரமாய்...
  அருமை

  ReplyDelete
 2. நல்ல பகிர்வு...
  அருமை.

  ReplyDelete
 3. வணக்கம்...

  வரும் அக்டோபர் மாதம் 11ஆம் தேதி ஞாயிறு அன்று வலைப்பதிவர்கள் சந்திப்பு மாநாடு புதுக்கோட்டையில் நடக்க உள்ளது... விழாவிற்கு வரும் அனைவருக்கும் இலவசமாக “தமிழ்-வலைப்பதிவர் கையேடு-2015” எனும் நூல் தரப்பட உள்ளது... தங்களின் தளத்தையும் அதில் இணைக்கும் விவரங்கள் http://dindiguldhanabalan.blogspot.com/2015/08/Tamil-Writers-Festival-2015-1.html எனும் பதிவில் உள்ளது... நன்றி...

  புதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக...
  அன்புடன் திண்டுக்கல் தனபாலன்

  ReplyDelete