Friday, 16 October 2015

தொட்டிக்குளியலும் குட்டித் தூக்கமும்இந்தா ஒரு படம் இருக்குல. அந்த படத்த பாத்த உடனே மனசுக்குள்ள அப்படி ஒரு சந்தோசம். “ஹே..... நாங்க குளிக்கப் போறோம்னு டவ்வல தலைக்கு மேல கறக்கிகிட்டே ஓடுன காலம் எல்லாம் மடமடன்னு நினைவுகளா நான் முந்தி நீ முந்தின்னு மனசுக்குள்ள முட்ட ஆரம்பிச்சிடுச்சு. இப்ப எத முதல்ல எடுத்து விட, எத ரெண்டாவதா எடுத்து விடன்னு ஒரே கொழப்பம். அதனால நான் பாட்டுக்கு நினைவுகள சில்லற மாதிரி சிதறி விடுறேன், நீங்க அப்படியே பாலோ பண்ணிக்கோங்க...

நாம இப்ப இருபத்தியஞ்சு வருஷம் முன்னால போகப்போறோம். ரைட்டு விடுங்க, ஒரு மூணு வருசத்த கழிச்சுட்டு இருபத்திரண்டு வருசத்துக்கு முன்னால போவோம். அப்ப தான் எனக்கு கொஞ்சம் வெவெரம் தெரிஞ்ச வயசா இருக்கும்.

அப்ப எங்க வீட்டை சுத்தி எங்களுக்குன்னு ஏழு ஏக்கர் உண்டு. சித்தப்பாவோடதும் சேர்த்து பதினாலு ஏக்கர். அதனால வயல், தென்னந்தோப்பு, வாழைத்தோப்பு, காய்கறி தோப்புன்னு தனித்தனியா பிரிச்சு ஒவ்வொரு வகை மரமும் நட்டு வச்சிருப்பாங்க. வயல் வரப்புலயும் பாத்தி வரப்புலயும் மாமரங்கள் நிக்கும். அப்படியே தோப்புக்கு ஓரமா போனா வருசையா கொல்லாமரங்கள். நடுநடுவுல சக்க மரங்கள். இதெல்லாத்துக்கும் தண்ணி அடிக்க ஒரு பம்பு செட்டு.

இந்த பம்பு செட்டு தான் எங்களுக்கு ஆட்ட பூமி. அதுவும் கிணறு பக்கத்துல மோட்டார் ரூம். மோட்டார போட்டா முதல்ல தண்ணி ஒரு சின்னத் தொட்டியில வந்து பாயும். அது நிரம்பி அடுத்து இருக்குற பெரிய தொட்டியில பாயும். தோப்புக்கு தண்ணியடிக்க அந்த சின்னத் தொட்டியே போதும். இந்த பெரிய தொட்டி எதுக்குனா மாடுகள குளிப்பாட்ட. கிட்டத்தட்ட அஞ்சு மாடுகள ஒரே நேரம் தொட்டிக்குள்ள இறக்கி, தொட்டி நிறைய தண்ணி நிரப்பி மாடுகள நீந்த விட்டு குளிப்பாட்டுவாங்க. நானும் தம்பியும் மாடுங்க மேல உக்காந்து வேடிக்கைப் பாத்துட்டு இருப்போம். பின்ன, தண்ணிக்குள்ள விழுந்தா கால் எட்டாது, தத்தக்கா பித்தக்கா கோவிந்தா தான்.

அப்பா மாடுகள எல்லாம் குளிப்பாட்டி முடிச்சதுக்கு பொறவு அரை தொட்டி தண்ணி போட்டு நாங்க ஆட்டத்த ஆரம்பிப்போம். தம்பிக்கு தண்ணினா பயம். ஒரு கை எடுத்து மூக்க பொத்திகிட்டே தான் முங்குவான். நான் அப்படி இல்ல, தம் கட்டி, அத்தபார்ன்னு முங்கி எழும்பிடுவேன்.

கொஞ்ச வருஷம் போனா, லீவு விட்டா போதும், ஊர்ல இருந்து மாமா பிள்ளைங்க, சித்தி பிள்ளைங்க, பெரியம்மா பிள்ளைங்க எல்லாரும் வந்து குவிஞ்சிருவாங்க. விடிஞ்சாலே போதும், பொடிசுங்க அத்தன பேரும் ஆளுக்கொரு துணியையும் டவலையும் எடுத்துகிட்டு குளிக்கப் போறோம்னு கிளம்பிடுவோம். பெரியவங்க எல்லாம் வீட்ல உள்ள சட்டிப் பானையெல்லாம் தூக்கிட்டு எங்க கூடயே கிளம்பிடுவாங்க. எதுக்கு? சமைக்கத் தான்.

பத்து பனிரெண்டு கிலோ கோழி, முட்டை, அஞ்சாறு கிலோ ஆட்டிறைச்சின்னு அன்னிக்கி சமையல் தூள் பறக்கும். தோப்புல கிடக்குற தென்னம்மட்ட, சில்லாட்ட, கதம்பல் எல்லாத்தையும் நாங்க பொறுக்கிட்டு வந்து குடுப்போம். அவ்வளவு தான் வேலை முடிஞ்சுது, நாங்க நேரா போய் தண்ணிக்குள்ள பாய்ஞ்சிடுவோம். அதுக்கப்புறமா, மெனுவை பொருத்து பிரியாணியோ, உளுந்தஞ்சோறோ ரெடி ஆகும். பெரும்பாலும் மீன் சமைச்சா அன்னிக்கி உளுந்தஞ்சோறு தான். இதுல அப்பா, மாமாக்கள்ன்னு பெரியாளுங்க எல்லாம் ஒரு துண்டையோ, பாயையோ பெட்ஷீட்டையோ புல்லுல விரிச்சி உறங்கிருவாங்க.

கண் எல்லாம் ரெத்த சிவப்பா, கை விரல்கள் எல்லாம் சுருக்கம் விழுந்து, பல் எல்லாம் கடகடன்னு தந்தியடிச்சாலும் தண்ணிய விட்டு ஒரு பயலும் புள்ளையும் வெளில வர மாட்டோமே. காலைல பத்து மணிக்கு தண்ணிக்குள்ள இறங்கினோம்னா மதியம் ரெண்டு மணிக்கு தான கரையேறுவோம். அதுவும் கடும் பசில சமையல் மணம் நாசிய தாக்கினா தான் உண்டு.

நான் எட்டாவது படிக்குறப்ப பம்பு செட்டு ரொம்ப தூரமா இருக்குன்னு அப்பா வீட்டு பின்னாலயே ஒரு தொட்டி கட்டினாங்க. அப்பவே நான் போட்ட கண்டிசன் ஒண்ணு தான், தொட்டி ரொம்ப பெருசா இருக்கணும், கிட்டத்தட்ட நீச்சல் குளம் மாதிரி, அப்படியே பக்கத்துல பாத் டப் மாதிரி ஒரு சின்ன தொட்டியும் வேணும்னு கேட்டேன். கிட்டத்தட்ட பதினஞ்சு பேர் தாராளமா உள்ள நின்னு குளிக்கலாம். அப்படி ஒரு தொட்டிய அப்பா கட்டினாங்க.

நானெல்லாம் சும்மாவே எங்கயாவது ப்ரண்ட்ஸ் கேங்கோட தான் திரிவேன், வீட்டு பின்னால தொட்டி வந்ததுக்கு அப்புறம் லீவ் நாள்னா எல்லாரும் அசம்பிள் ஆகுற இடம் அங்க தான். மொறுமொறுன்னு அம்மா தர்ற மிக்சர கொறிச்சுகிட்டே, தொட்டி மேல ஏறி உக்காந்துகிட்டு தண்ணிக்குள்ள ரெண்டு காலையும் விட்டு ஆட்டிகிட்டே கதை பேசுறது ஒரு சுகம். பாத்தாததுக்கு பக்கத்துலயே கொய்யா மரம். பசங்க எல்லாரும் கொரங்கு மாதிரி கொய்யா மரத்துல தான் ஏறிக்கிடப்பாங்க.

திடீர்னு யாராவது சவுண்ட் விடுவாங்க, “குளிப்பமா”ன்னு. அவ்வளவு தான் தொட்டில உக்காந்துட்டு இருக்குற அத்தனை பேரும் அத்தபார்ன்னு தண்ணிக்குள்ள பாய்ஞ்சிருவோம். அம்மாவுக்கு தான் கூடுதல் வேலை. பின்ன, நடுங்க நடுங்க குளிச்சிட்டு வர்ற எங்களுக்கு தலைத் துவட்ட டவல் குடுக்குறதுல இருந்து, சுட சுட காப்பியும் பஜ்ஜியும் குடுக்கணுமே.

காலேஜ் படிக்குறப்பவும் அதே கதை தான். குரூப் ஸ்டடின்னு எல்லாரையும் வீட்ல கூப்ட்டு வச்சுட்டு, நேரா வீட்டு பின்புறம் ஓடிருவோம்.

இப்படி ப்ரெண்ட்ஸ், ரிலேடிவ்ஸ் தவிர்த்து, இந்த தண்ணி தொட்டி என்னோட இன்னொரு உலகம். வாரத்துல அஞ்சு நாளும் அது தன்னந்தனியா என்னோட கட்டுப்பாட்டுல தான் இருக்கும். ஸ்கூல்/ காலேஜ் விட்டு வந்ததும் நேரே அங்க தான் போவேன். எனக்காக அந்த சின்னத் தொட்டி காத்துகிட்டு இருக்கும். அப்படியே மோட்டார போட்டு, தண்ணி நிரப்பி அதுல கால் நீட்டிப் படுத்தேன்னா அப்படி ஒரு உறக்கம் போடுவேன்.

யாராவது என்னைத் தேடி வந்தாங்கனா அந்த தண்ணித் தொட்டிக்குள்ள உறங்கிட்டு இருப்பா போய் பாருங்கன்னு தான் அம்மா சொல்லி விடுவா. முதல்ல பாக்குறவங்க எல்லாம் அதெப்படி தண்ணி மேல மிதந்துகிட்டே தூங்குறான்னு ஆச்சர்யமா பாத்துருக்காங்க. அப்புறம் அவங்களுக்கே பழகிப் போச்சு, புள்ளைய வீட்டுக்குள்ள காணோம்னா இங்க தான் தண்ணித் தொட்டிக்குள்ள ஊறிக் கிடப்பான்னு..

4 comments:

 1. நானும் இப்படிக் குளித்திருக்கிறேன்... அந்த சந்தோஷத்தை திரும்பிப் பார்க்க வைத்த பகிர்வு...

  ReplyDelete
 2. வணக்கம்
  நிகழ்வை படித்தபோது சின்ன வயது ஞாபகம் அருமையாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 3. ஆஹா நம்ம ஊர்ல இப்படி தோப்பும் தொறவும் இருக்கறத பாத்துருக்கமே....பம்பு செட்டு குளியல்..ஆஹா...சூப்பர்...ரொம்ப எஞ்சாய் பண்ணி வாசித்தோம்....

  கீதா: சே ஐ மிஸ் இட்! மிஸ்ட் இட்...இல்லைனா உங்க கூட நானும் ஆட்டம் போட்டுருப்பேனே.....இங்க சென்னைல காங்க்ரீட் கட்டடங்களப் பார்த்துட்டு...உங்களுக்கு திருப்பதிசாரம்னு ஊர் தெரியுமா? அங்கதான் நான் வளர்ந்தது...ஆறு, கால்வாய், வயல், அப்படினு....வயப்பரபு வழியாதான் நாகர்கோவிலுக்கு நடை...அப்ப. லீவுல பஸ்ஸ்குக்கு பைசா தரமாட்டாங்க..

  கார்த்திக்குக்கு திருப்பதிசாரம் தெரியுமாம் நான் சொன்னதும் கரெக்ட்டா புடிச்சுட்டாரு..வெள்ளமடம் பக்கத்துல? அந்த வழியா வர ரோட்டுல வந்துருக்கனே அப்படினு....

  உங்கள் இருவரையும் சந்திக்கணும்னு ரொம்ப தோணுது....எல்லாம் ..போற்றி பாடடி பெண்ணே...நம்ம பொறந்த கால் பட்ட மண்ணே அப்படின்றதால...தான்..

  ReplyDelete