Wednesday, 28 October 2015

அம்மாவின் நாள் இதுதிங்கட்கிழமை. 26/10/2015. அஞ்சு வருஷம் ஆச்சு. ஒரு கஷ்டம் வந்தா நாள் போக போக அதெல்லாம் பழகிடும் மறந்துடும்னு சொல்லுவாங்க. ஆனா எனக்கு ஆரம்ப நாட்கள்ல பெருசா கஷ்டம் தெரியல. எனக்குள்ளயே ஒரு கட்டுப்பாட்ட போட்டுட்டு இறுக்கமா இருந்துட்டு இருந்துருக்கேன். ஆனா, இந்தா அஞ்சு வருஷம் ஆச்சு, இப்ப அதிகமா அவ நியாபகம் வருது. ஒரு சின்னக் குழந்தை போல அவ மடியிலயே சுருண்டுட முடியாதான்னு மனசு ஏங்குது. அதிகமான பாரம் மனச அழுத்துற மாதிரி ஒரு உணர்வு.

அந்த நாள் எனக்கு ஏனோ சரியா நியாபகம் வரவே மாட்டேங்குது. ஒரு வேளை மறக்க நினச்சு மறக்க நினச்சு மறந்துடிச்சோ என்னவோ. காலங்காத்தாலயே இட்லி வேணாம்னு அடம்பிடிச்சவள மிக்சர் தரேன், சிப்ஸ் தரேன்னு கொஞ்சி, ஏமாத்தி ஊட்டி விட்டுட்டு, வாசல்ல விளையாடிட்டு இருந்த ப்ரெண்ட்ஸ் கிட்ட என் பொண்ணைப் பாத்துக்கோங்கடா இந்தா வந்துடுறேன்னு சொல்லிட்டு போனவ தான். இன்னிக்கி வரைக்கும் அவள காணோம்.

சாவு பத்தி நான் எப்பவுமே பயந்தது இல்ல. ஆனா ஒரு மரணம் இத்தன வலிய குடுக்கும்னா, இத்தன கண்ணீரை குடுக்கும்னா, அப்படி ஒரு மரணத்த நான் வெறுக்குறேன்...

என்னன்னு சொல்ல?. எப்படியாவது இதுல இருந்து மீண்டு வரணும்னு தான் கொஞ்ச நாளாவே போராடிட்டு இருக்கேன். அதனால தான் ஞாயிற்றுக் கிழமை ராத்திரி அப்பா வந்து அம்மாவ பாக்க நாளைக்கு போறோம், நீ வரியான்னு கேட்டப்ப முதல்ல முடியாதுப்பா, நான் காலேஜ் போகணும்னு சொல்லிட்டேன். “சரி அப்படினா, உன்னை காலேஜ்ல விட்டுட்டு நாங்கப் போறோம்”னு அப்பாவும் சொல்லிட்டார்.

காலைல எட்டு மணிக்கு எழும்பினேன். மடமடன்னு பல் தேய்ச்சு குளிச்சு எட்டரைக்கு கிளம்பினேன். கிளம்பி வெளில வந்தா மாமா மாமி ரெண்டு குடும்பம், அப்புறம் அப்பா, தம்பி பாட்டி எல்லாரும் ரெடியா இருக்காங்க. பெரிய மாமா தான் “ஏன் அம்மாவ பாக்க வர மாட்டேங்குற? அம்மாவ போய் பாத்துட்டு அப்புறமா காலேஜ் போயேன்”னு சொன்னார். அப்பாவும் “மாமா சொல்றாங்கல, வாயேன்”ன்னு கூப்பிட, எனக்கும் மனசுக்குள்ள சின்னதா ஒரு ஆசை.

“சரி”ன்னு சொல்லிட்டு கார்ல போய் உக்காந்தேன். நான் முன் சீட்ல, தம்பி கார் ஓட்ட, அப்பாவும் பாட்டியும் பின்னால உக்காந்துகிட்டாங்க. ஊருக்குள்ள போனதுமே அம்மாவோட வாசம் அடிக்குற மாதிரி ஒரு பீல். அதென்ன மாயமோ, உதட்டுல தானே ஒரு புன்னகை வந்து உக்காந்துடுது. அதுவும் இந்த தடவ அம்மாவ சுத்தி குட்டியா ஒரு காம்பவுண்ட் கட்டி வச்சிருக்கிறதா தம்பி சொல்லியிருந்தான். வழக்கமா போற பாதைல போகாம ஒரு தெரு வழியா அம்மாவ பாக்கப் போனோம்.

போன உடனே அந்த காம்பவுண்ட் தான் கண்ணுல பட்டுச்சு. அம்மாவ என்னமோ ஜெயில்ல போட்ட மாதிரி. அப்புறமா, இதுவும் நல்லா தான் இருக்குன்னு மனச தேத்திகிட்டேன். அம்மாவ தடவிக் குடுக்குறப்ப அப்படியே கட்டிப் புடிச்சு “ஓ”ன்னு கதறணும் போல இருந்துச்சு. பொல்லாத வறட்டு திமிர வச்சுட்டு “நான் தைரியமானவ”னு எத்தன நாள் தான் மத்தவங்க முன்னாடி நடிச்சிட்டு இருக்குறது? அடக்கி அடக்கி வைக்க வைக்க தான், இந்தா இப்பவும் ஒரு விம்மலும் அழுகையும் கூடவே இருந்துட்டு இருக்கு.

அன்னிக்கும் அப்படித் தான், மாமா, மாமி, அப்பா, தம்பி எல்லார் முன்னாலயும் அழ வேணாம்னு அம்மாவ புடிச்சுட்டு அப்படியே அவ காலடியில உக்காந்துட்டேன். முந்தின நாளே தம்பி அங்க வந்து தரைல கிடந்த சருகு எல்லாம் கூட்டிப் பெருக்கியிருப்பான் போல. இடம் சுத்தமா கிடந்துச்சு. அதோட, அம்மாவ சுத்தி மண் எல்லாம் கொத்தி, புரட்டி போட்டுருந்துச்சு.

அப்பா மாமா எல்லாரும் சேர்ந்து, கொண்டு வந்த காய்கறி, பழம் எல்லாம் ஒரு வாழை இலைல அடுக்க ஆரம்பிச்சாங்க. மாமிங்க ரெண்டு பேரும் அவங்களுக்கு ஹெல்ப் பண்ணிட்டு இருந்தாங்க. தம்பி மண் வெட்டி எடுத்து மண்ணை நிரப்பாக்கிகிட்டு இருந்தான். எல்லாமே ஒரு பத்து நிமிசத்துல பரபரன்னு நடந்து முடிஞ்சிடுச்சு. நான் அதுக்குள்ள ஒரு குட்டித் தூக்கமும் நிம்மதியா போட்ருந்தேன். அமைதியா இன்னொரு பத்து நிமிஷம் எல்லாரும் கண்ணை மூடிட்டே நியாபகங்கள்ல மூழ்க, தம்பி “அக்கா, அந்த தக்காளி விதைய எடுத்துட்டு வாயேன்”ன்னு கூப்ட்டான்.

மாமா, “இன்னொரு நாள் விதைக்கலாம்ல”ன்னு கேக்க, அவன் “இன்னிக்கே பண்ணிடலாம் மாமா”ன்னு சொல்லிட்டே என் கைல இருந்து தக்காளி விதைகள ஒரு பக்கமும், மிளகா விதைகள இன்னொரு பக்கமும் விதைச்சு, கொண்டு போயிருந்த தண்ணி எடுத்து விட்டான். கொண்டு போன பழங்கள் சிலத தம்பி அங்கயே வச்சுட்டான். எப்படியும் அணில், காக்கா, குருவின்னு வந்து சாப்பிடும்னு.

அப்புறமா என்னைப் பாத்து, “நீ காலேஜ் போறியா”ன்னு கேட்டான். “ஆமா, அப்படிப் போனா சாயங்காலம் வரைக்கும் நேரம் போய்டும்ல”ன்னு நான் சொன்னதும், “ஹோம்ல பிள்ளைங்களுக்கு சாப்பாடு வைக்குறோம், வாயேன்”ன்னு கூப்ட்டான். அட, அந்த பிள்ளைங்கள நான் மறந்தே போயிட்டேன். “சரி, அப்படினா இன்னிக்கி காலேஜ் கட் அடிச்சுட்டு பிள்ளைங்கள பாக்கப் போய்டுவோம்”னு முடிவு பண்ணி, “வரேன்”னு சொன்னேன்.

என்னை காலேஜ்ல விட்டுட்டு, அப்படியே டவுன் போய் கொஞ்சம் வீட்டுக்கு பர்சேஸ் பண்ணிட்டு அப்புறமா ஹோம் போகலாம்னு தான் அப்பாவும் தம்பியும் முதல்ல ப்ளான் வச்சிருக்காங்க. ஆனா நான் வரேன்னு சொன்னதும் அப்படியே நேரே ஹோமுக்கு போய்ட்டோம். அப்படி போறப்ப மணி கிட்டத்தட்ட பத்தே கால் ஆகியிருந்துச்சு. பசங்க எல்லாரும் ஸ்கூல் கட்டடிச்சுட்டு உக்காந்துட்டு இருக்காங்க.

“ஏய், என்ன எல்லாரும் இங்க இருக்கீங்க? ஸ்கூல் போகலயா? மதியம் தான சாப்பாடு”ன்னு தம்பி ரொம்ப உற்சாகமா பசங்க கிட்ட எல்லாம் பேசிட்டு இருந்தான். பாக்கவே அவ்வளவு சந்தோசமா இருந்துச்சு. பிள்ளைங்க நாலஞ்சு பேரு “அக்கா, எப்படிக்கா இப்ப இவ்வளவு அழகா இருக்கீங்க”ன்னு என்னையே சுத்திடுச்சுங்க. ஹஹா, நிஜமா ரொம்ப சந்தோசமா இருந்துச்சு. ஒருத்தி “உங்க முடி எப்படி இவ்வளவு அழகா இருக்கு”ன்னு கேக்குறா. மருதாணி பூசி வெள்ளை முடிய மறைச்ச கதைய அவ கிட்ட எப்படி சொல்ல?

சாப்பாடு எல்லாம் பின்னால ரெடி ஆகிட்டு இருந்துச்சு. பசங்க படிக்குறது எல்லாம் பக்கத்துலயே கவர்ன்மென்ட் ஸ்கூல் தான். அதனால சாப்பாட்டு நேரம் வந்தா போதும். இதுங்க என்னன்னா காலைலயே தம்பி வரான்னு தெரிஞ்சு கட் அடிச்சுட்டு இருக்குதுங்க.

திடீர்னு ஒருத்தன் தம்பிக் கிட்ட போய் “எங்கள புலி பாக்க கூட்டிட்டுப் போங்களேன்”னான். தம்பிக்கு என்ன தோணிச்சோ தெரியல, சரி போலாமான்னு சொல்லிட்டே மாமா வந்த குட்டி வேன்ல எல்லாரையும் ஏற சொன்னான். மாமாவையும் மாமியையும் எங்க கார் குடுத்து வீட்டுக்குப் போக சொல்லிட்டான். அப்பா பசங்க கூட வேன்ல ஏறிட்டாங்க.

எனக்கும் எல்லார் கூடவும் போக ஆசை. அப்பாவும் தம்பியும் என்னையே பாத்துட்டு இருக்க, “சரி, நானும் வரேன், ஆனா வேற ஏதாவது படம் பாக்கலாம்”ன்னு சொல்லிட்டே வேன்ல ஏறினேன். போன வாரம் தான் நந்து, நான் முருகேஷ் மூணு பேரும் “ருத்ரமாதேவி” பாக்கப் போயிருந்தோம். ஏண்டா வந்தோம்னு திக்குதிக்குன்னு நான் முழிச்சுட்டு இருந்தாலும் முருகேசும் நந்துவும் நல்லா என்ஜாய் பண்ணினாங்க. அதப் பத்தி கண்டிப்பா இன்னொரு போஸ்ட்ல எழுதுறேன்.

அங்க போனதும் “ருத்ரமாதேவி” போஸ்டர் பாத்துட்டு ஒருத்தன் புலி வேண்டாம், இதுக்கு போவோம்னு அடம்புடிக்க ஆரம்பிச்சான். பொம்பள புள்ளைங்களும் அனுஷ்காவ பாத்ததும் இங்க தான் போகணும்னு ஒரே அடம். என்னடா இது இப்படி வந்து மாட்டிகிட்டோமேன்னு நான் திருதிருன்னு முழிக்கேன். தம்பி தான் ஒருவழியா எல்லாரையும் சமாதானப்படுத்தி, ருத்மாதேவி பாக்கலாம்னு முடிவு பண்ணினான். வேற வழி, நானும் அவங்க கூடவே போய் உக்காந்தேன்.

படம் ஓட ஓட, அந்த புள்ளைங்களோட ஆர்பாட்டம், கைத்தட்டல், டான்ஸ் எல்லாமே மனசுக்கு அவ்வளவு உற்சாகத்த குடுத்துச்சு. படம் எல்லாம் டிவிலயே பாத்துப் பழக்கப்பட்டவங்க, இப்படி தியேட்டர்ல வந்து பாத்ததும் அவங்களுக்கு சந்தோசம் தாங்க முடியல. ஒருத்தி அவ தான் ருத்ரமா தேவின்னு இண்டர்வல் நேரத்துல நடிச்சு வேற காட்டினா. தம்பி எல்லாருக்கும் ஐஸ்க்ரீம் வாங்கிக் குடுத்தான். எந்தப் படத்த செம மொக்கப்படம்னு நான் தலைல அடிச்சு நொந்துகிட்டேனோ அந்தப் படம் இந்த தடவ நல்லாயிருந்த மாதிரி தோணிச்சு. ஒரு வேளை படத்த பாத்துட்டு இருக்காம இந்த புள்ளைங்கள பாத்துட்டு இருந்ததால அப்படி இருந்துருக்கலாம்.

ஒருவழியா படம் முடிஞ்சு கீழ வந்ததும் நாம ஹோட்டல்ல சாப்பிடப் போவோம்னு ஒருத்தன் சொல்ல, “டேய், அதான் வீட்ல பிரியாணி செய்றாங்கல, அங்க போய்டலாம்”னு தம்பி லைட்டா தலைல தட்டினான். “போங்கண்ணே. நான் ஹோட்டலுக்கு போனதே இல்ல”ன்னு அவன் சிணுங்கிக்கிட்டே சொன்னதும் மனசுக்கு கொஞ்சம் கஷ்டமா போச்சு. மூணு வருசத்துக்கு முன்னாடியெல்லாம் பசங்கள அவுட்டிங் கூட்டிட்டு போயிருக்கேன். அப்ப எல்லாம் நாதன் சாரும் லதா அம்மாவும் (ஹோம் நடத்துறவங்க) சாப்பாடு ரெடி பண்ணியே தந்து விட்ருவாங்க. அதனால ஹோட்டல்ல எல்லாம் பெரும்பாலும் சாப்பிட்டது இல்ல. அப்படியே எப்பவாவது சாப்பிட்டாலும் அது ரோட்டோரமா இருக்குற சின்ன ஹோட்டலா தான் இருக்கும்.

தம்பிக்கும் அவன் அப்படி சொன்னதும் மனசு கஷ்டமா தான் இருந்துருக்கும். வீட்ல ரெடி ஆகிடுச்சுலடா, இன்னொரு நாள் கூட்டிட்டு வரேன்னு சொன்னதும் அறைகுற மனசா எல்லாம் தலையாட்டினாங்க. கடைசியில புள்ளைங்க ஏமாந்து போனது போல ஆகிடுச்சேன்னு சின்ன வருத்தம் மனசுக்குள்ள.

அங்க இருந்து கிளம்பி வீட்டுக்கு வந்தப்ப மணி ரெண்டரை ஆகிடுச்சு. பிரியாணி எல்லாம் ஆறிப் போய் நாதன் சாரும் லதா அம்மாவும் எங்களுக்காக காத்துக்கிட்டு இருந்தாங்க. அப்புறமா எல்லாரும் உக்காந்து சாப்ட்டுட்டு வீட்டுக்கு வந்தப்ப மனசு நிறைஞ்சு போய் இருந்துச்சு.

என்ன தான் நான் அன்னிக்கி ரொம்ப ரொம்ப சந்தோசமா இருந்தாலும் எதையோ மிஸ் பண்ணின பீல் வீட்டுக்கு வந்ததும் சட்டுன்னு ஒட்டிகிச்சு. கார்த்திக் அடிக்கடி சொல்லுவார், “உனக்கு என்னமோ ஆகிடுச்சு, சோகத்த தூக்கி கொண்டாட ஆரம்பிச்சுட்ட”ன்னு. அது உண்மையா தான் இருக்குமோன்னு எனக்குள்ள நானே இப்ப அடிக்கடி கேள்வி எழுப்பிக்குறேன். ஏதோ ஒரு மவுனம், ஏதோ ஒரு தேடல் தொண்டைக்குள்ள விக்கிகிட்டேயிருக்கு.

வாழ்க்கைல எல்லா விதமான உணர்வுகளையும் அனுபவிச்சிருக்கேன். அழுக வந்தா கூட “ஓ”ன்னு அழுது கார்த்திக் உயிர எடுத்துட்டு நான் அந்தப் பக்கமா ஜாலியா சுத்திட்டு இருப்பேன். ஆனா சோகமா மட்டும் இருந்ததே இல்ல. அதனால தான் இப்ப மொத்தமா எல்லாத்துக்கும் சேர்த்து அனுபவிக்கிறேனோ என்னவோ?

என்ன ஒண்ணு, ஆறுதல் சொல்றவங்கள பாத்தா மட்டும் பத்தடி தள்ளியே நின்னுக்குறேன். அட, என் சோகம், நான் கொண்டாடுறேன், யாரும் தடுக்க வேணாமே.... எவ்வளவோ பாத்துட்டோம், இதையும் தான் பாத்துடுவோமே ஒரு கை....


.

7 comments:

 1. சிந்திக்க வைக்கும் சிறந்த பதிவு
  தொடருங்கள்
  www.ypvnpubs.com

  ReplyDelete
  Replies
  1. இது ஜஸ்ட் என்னோட சொந்த அனுபவம் மட்டும் தான். இதுல என்ன விசயத்த சிந்திக்க வச்சேன்னு தெரியலயே

   Delete
 2. super. உங்களுடைய பிற பதிவுகளை படித்தேன் தெளிவான உணர்ச்சிகள், blog vision, pictures are super.

  continue...

  ReplyDelete
  Replies
  1. பெயர் தெரியாம வந்து கமன்ட் போட்டாலும் உங்க பாராட்டுக்கு என்னோட நன்றி

   Delete
 3. அன்னையின் நினைவு தினத்தில் உங்களின் உணர்வுகளை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி!

  ReplyDelete
 4. அம்மாவின் தினத்தன்றைய உங்கள் அனுபவ உணர்வுகளை ரொம்ப அழகா போகிற போக்குல சொல்லி அசத்திட்டீங்க சகோ???? அடட! எங்க ரெண்டு பேருக்கும் மக வயசு நீங்க...சகோ நல்லா இல்லையே...சரி காயுன்னே சொல்லிக்கலாமா!!??

  ReplyDelete