Friday 10 August 2012

ஒற்றை புள்ளியாய்...!

ஒற்றையடி பாதையொன்றில்
தனித்தே நான் வேடிக்கை பார்க்கிறேன்...!

வழி மீது செல்வோரும்
என் தடம் மீது செல்வோரும்
வழிக் கேட்டு வருவோருமாய்...!

கண்களில் வேடிக்கை சிறுமியின்
குறும்பு பார்வையோடும்
தனிமை பயத்தோடும்
சேர்ந்தே கலக்கிறேன் அவர்களிடத்தில்...!

அவரவர்க்கு அவரவர் வேலைகள்...
நடுநடுவே சிறு புன்னகை,
சில வார்த்தைகள், மவுன கையசைப்பு...
முடிந்து விடுகிறது
அவர்களுடனான சந்திப்பு...!

எதிர்பார்ப்புகள் ஏதுமில்லா
அந்த விடியலும் அதன் அஸ்தமனமும்
கடத்திக் கொண்டே சென்றன
என் நிதர்சன நாட்களை...!
நீ என்னில் அறிமுகம் ஆகும் வரை...!

உறவுகள் பிரிந்து தடம் மாறி
தவிக்கின்ற தத்தையாய்
நீ என் பக்கம் வர...
ஏனோ என்னை துடுப்பென
பற்றிக் கொண்டாய் நீயும்...!

என் தனிமைச் சிறைக்குள் சட்டென
ஒரு சோலைவனம் தோன்ற
பட்டாம்பூச்சியாய் சிறகடித்தது எம்மனசு...!

உன் தனிமையும் என் தனிமையும்
உணர்வுகள் வழிப் பேசி
அடைக்கலம் தேடிய உன்னில்
அடைக்கலமாகிப் போனேன் நான்...!

இடம்மாறும் காட்சியொன்றாய்
உறவுகள் ஒவ்வொன்றாய் தேடி வர
அவர்கள் வேண்டும் ஏக்கமும்
என்னை விலக இயலா தவிப்பும்...

உன் தவிப்பும் மருட்சியும்
அறியாதவளா நான்?
உன் கரம் பற்றிய பிடியொன்றை
இதோ விட்டு விட்டேன் - சென்று விடு
விதி நொந்து சிரிக்கிறேன் நான்...!

நின்ற இடத்திலிருந்து நான்
பார்த்துக்கொண்டிருக்க,
கண்திரையை நீர் மறைக்க,
காலடி தடங்கள் பதிய பதிய
ஒற்றைப் புள்ளியாய்
உருமாறிக் கொண்டிருக்கிறாய் நீ...!

No comments:

Post a Comment