Thursday 8 November 2012

கனவுக்கு உயிர் கொடு...!

கரம் பற்றி அக்னி வலம் வந்து
என் வாழ்க்கை உள்வட்டதுள்
புகுந்து விட வரமொன்று கேட்பவனே...!

உன்னிடத்தில் நான் கேட்க
வரமொன்றும் வசமில்லை, மாறாக
வாழ்க்கையொன்று உள்ளது...!

எப்படி பட்ட வாழ்க்கை என
என்னோடு பயணித்து அறிந்து கொள்ள
வருகிறாயா?

வா....!

அதோ பச்சையம் இழந்து விட்ட
புதராய் மண்டிய நிலமொன்றை
ஆடுகள் மேய்கின்றனவே...!
அதை தாண்டிய எச்சில் காடுகள்
மிச்சமாய் நம்மை வரவேற்கின்றன...!

அங்கே…

பொறாமை சூழ்ந்த கண்கள் இல்லை...
புறம் பேசும் உதடுகள் இல்லை...
பொய்மை உரசும் செவிகள் இல்லை...
வஞ்சனை நினைக்கும் இதயமில்லை...

ஆதலால்...

மனித சஞ்சாரமற்ற அந்த அத்துவான
கானகதுள் புதிதாய் நம் சந்ததியொன்றை
ஆணிவேராய் பதியம் செய்வோம்...!

ஆம்...!

சுயம் ஒன்றை தொலைத்து விடா
சுயம்பு லிங்கங்களாய் அவர்கள்...!

மரித்து விட்ட மனிதம் அறியா
மகத்துவ மானிடராய் அவர்கள்...!

மோகன்ஜாதாரோ எல்லோரா மிஞ்சிய
நாகரீக பகலவனாய் அவர்கள்...!

அவர்களோடு...

சிந்துவெளி நாகரீகத்தின் ஆற்றுப் படுகையின் மேல்
மதங்களில்லா புது உலகை ஸ்ரிஸ்டிப்போம்...!

நான், எனது, மட்டுமில்லாது நாம் நமது என்ற
வார்த்தை பிரவாகங்கள் தாண்டிய
புத்தம்புது சிந்தனையை விதைப்போம்...!

பகிர்ந்தளிக்கும் விதியினை பிரபஞ்சம் தாண்டி
பரப்பி விட செய்வோம்...!

அடக்குமுறைகளும் ஆளுமைகளும்
பயணித்தறியா புதிய பாதையொன்றில்
தேசம் கடந்து நேசம் பரப்ப செய்வோம்...!

இவையெல்லாம்...

நடந்தேற இயலா கனவுகளாய் மரித்தே போகுமென
கூச்சலிடும் மானிடர் மத்தியில்

நான்...

நாளைய விடியலை காண்கிறேன்
உந்தன் துணையோடு...!


1 comment: