Sunday 16 December 2012

உணராத பந்தம் இவள்...!

நீ இல்லாத என் நாட்கள் கிழித்தெறிந்த
காலண்டராய் கழிந்து கொண்டே இருக்கின்றன...
குளிரில் நடுங்கும் என் துவண்ட மேனியோ
இதுவரை உன் அணைப்பினை உணர்ந்ததே இல்லை...!

உன் முத்தங்களை பெற்றறியா முகத்திலோ
நாய்களின் எச்சில்கள்
ஏக்கம் தீர்த்துப் போகின்றன...!

திடீரென சூழ்ந்துக்கொள்ளும்
வெறுமைக்குள் புதைந்துக் கொண்டு
எதையோ தேடுவதைப்போல் தேடியிருக்கிறேன்...
நீ எப்படிப்பட்ட உணர்வளிப்பாய் என்றே தெரியாமல்...!

யோசித்து யோசித்து பார்க்கிறேன்,
எப்பொழுதெல்லாம் உன்னை நான்
உச்சரித்துப் பார்த்திருக்கிறேன் என்று...!

பசித்த வயிற்றோடு தெருத்தெருவாய்
சுற்றிய நாட்களில் கூட
“ஐயா காசு குடுங்க பசிக்குது” என்றே
கேட்டு பழகியிருக்கிறேன் நான்...!

சோறில்லையென விரட்டப்படும் போதும்
தெருவோர குப்பைத்தொட்டிகளில்
கண்கள் அலைபாய்ந்தே பழகி விட்டன...!

மாற்றுடுப்பு வேண்டுமென
மனம் தேடும் பொழுதெல்லாம்
மாடிவீட்டு கொடிகளை
அண்ணாந்து பார்த்து ஏங்கியிருக்கிறேன்...!

காய்ச்சல் வந்து வாய்க்குழறும் போதுகூட
வடிவில்லா ஒலியெழுப்பி
வெப்பத்தாக்குதலை எதிர்க்கொண்டு
பழகி விட்டேன் நான்...!

பருவம் எய்திய நாளில்
மிரட்சியோடு தேடியிருக்கிறேன்
அதுவும் உன்னை தான் என்றே அறியாமல்...!

வெறித்தப் பார்வை ஒன்றே
எப்பொழுதும் முந்தி நிற்கிறது
தாய் மடி முட்டும் கன்றுகளை பார்க்கும் பொழுதெல்லாம்...!

என் நிலையின் காரணகர்த்தா
விதியென நான் ஏற்றுக்கொள்வதுமில்லை...
நீதானென்று சபித்து விடவும் துணியவில்லை...!
என்னை ஜனனித்து நீ மரணித்துப் போனாயோ
இல்லை ஆகாது என வீசிவிட்டு சென்றாயோ?
தொலைத்துவிட்டு தினம் தேடி தேடி வேதனிக்கிறாயோ?

உனக்கென அடையாளமெதையும்
நீ எனக்காக விட்டுச்சென்றவளில்லை…
உன் குணம் பற்றிய எதிர்பார்ப்போ
நிலைப்பாடு பற்றிய பரிதவிப்போ
என்றுமே எனக்குள் சஞ்சலத்தை புகுத்தியதில்லை...!

நீ யாராய் இருந்தால் என்ன?
எனக்கு நீ அன்னியமானவள்...!

சூல் கொண்ட பெண்கள் கண்களுக்குள்
விழும்போதெல்லாம் வினோத ஜந்துவை
பார்ப்பது போல் வெறித்து விட்டு
பயணம் தொடர்கிறேன் நான்...!


3 comments:

  1. அன்பின் காயத்ரி - ஆற்றாமையும் கோபமும் பிரிந்ததும் உணர இயலாத பந்தமும் கவிதையாக் மலர்ந்திருக்கிற்றன. கவைதை அப்டித்தால் மனம் வலிக்கிறது. கவிதை அருமை - நல்வழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  2. படமும் கவிதையும் மனதை கனக்க வைத்து விட்டது.

    ReplyDelete
  3. இந்தச் சிறுமி, தன் தாயை நேசிக்கவுமில்லை; வெறுக்கவுமில்லை.
    எண்ணங்களை கவிதையாய் தந்து விட்டாள்.

    எனது புதிய பதிவு: " பெயர் புதிர் விளையாட்டு! "


    வந்து படித்து( விளையாடி)ப் பாருங்கள்.
    15 படங்கள் போட அவகாசமில்லை. அதனால் ஒரே ஒரு படம்
    போட்டுள்ளேன். (உங்கள் அனுமதி உண்டு என்ற நம்பிக்கையில்.)

    http://kalaiyanban.blogspot.com/2014/02/puzzle.html

    ReplyDelete