Saturday, 13 April 2013

காதல் காதல்...

மவுனம் காதலின் மொழியாகும்...
புன்னகை என்றும் வசமாகும்...
காத்திருக்கும் கணம் சுகமாகும்...
உணரும் வலியும் பறந்தோடும்...

காதல் காரணம் அறிவதில்லை...
அறிய முயன்றால் காதலில்லை...
காற்றுக்கு தனியாய் வாசமில்லை...
காதலில் தனித்தனி சுவாசமில்லை...

காதல் நம்மில் வந்து விட்டால்
புவியில் எதுவும் அழகாகும்...
ஒவ்வொரு நொடியும் யுகமாகும்
தூக்கம் கூட சுமையாகும்...

எத்தனை நாட்கள் காத்திருந்தேன்...
உன் மவுனம் கரைய தவமிருந்தேன்...
நீ சிரிக்கும் அந்த சிரிப்பொலியில்
என் காதலின் அர்த்தங்கள் காண வந்தேன்...

நீ வாயென சுட்டும் விரல் நுனியில்
என் வானவில் வர்ணங்கள் உயிர்த்தெழுமே...
உன்னை அணைத்துக்கொள்ளும் அத்தருணம்
என்றும் எனக்குள் உறைந்திடுமே...

வாழ்வின் மொத்தம்... இனி நீயும் நானும்
உயிர் கோர்த்துக் கொள்வோம் ஒன்றாக...
சிறு கலகம் பூண்டு... ஊடல் கொண்டு
வாழ்வை ருசிப்போம் இனி நாமும்...!

கவிதைகளைக் காணோம்...!

மழலையின் தேன் ஊறும் உதடுகள்
புன்னகை சிந்தியதால்
இறுக்கி பிடித்த துயரங்கள் காணோம்...!

தேனுண்டு மயங்கி கிடக்கும்
பூக்களின் இதழ்களுக்கிடையில்
வண்டுகளின் ரீங்காரத்தை காணோம்...!

தூறலில் நனைந்து கரைந்து போனதால்,
சில்லிடும் வான்மகள் கண்டு
வில்லாய் வளைந்த வானவில் காணோம்...!

கண்சிமிட்டும் விண்மீன்கள் கண்டு
பவுர்ணமியும் ஒளிந்துக் கொண்டதால்
இரவு நேர வெண்ணிலவை காணோம்...!

ஜன்னலோர பயணத்தில் ஓர் நாள்
அவன் என்னை கடந்து செல்ல முயல்கையில்,
சாலையோர மரங்கள் காணோம்...!

அவன் என் கன்னங்களை சிவக்க வைத்து
கரம் பற்றி, காதலை யாசித்து நின்றதால்,
பாழாய்ப்போன என் நாணம் காணோம்...!

பின் என் கவிதைகளே அவனாகி,
அவனும் காணாமல் போனதால்
என் கவிதைகளையும் காணோம்...!

நினைவுகள் பலவிதம்...

நேத்து ஒரு நாய் குட்டி
மழைல நனைஞ்சுகிட்டு இருந்துச்சே,
அதுக்கு யாரு குடை பிடிச்சிருப்பா?

டிவில ஆன்னு வாய
தொறந்து வச்சிருந்த மைனா குஞ்சுக்கு
இன்னிக்கும் அதோட அம்மா
சாப்பாடு குடுத்துருப்பாங்களா?

இந்த ரபீக் வாப்பாவுக்கு சளி பிடிச்சிடுச்சாம்,
ஹச் ஹச்னு தும்மிட்டே இருக்காரு,
மூக்கு பொடிய எடுத்து போட்டு விட்டுருவமா?

எப்படியும் குடிசை இடிஞ்சி விழுந்துரும்னு
குப்பம்மா பாட்டி அழுதாங்களே,
நாம போய் அத விழாம பிடிக்க முடியுமா?

ஒரு நாளாவது சிங்கம் மேல ஏறி
படுத்து தூங்கணும்னு ரொம்ப நாளா ஆசை,
சிங்கம் நம்மள கடிச்சி தின்னுருமோ?

அனித்தாவோட தங்கச்சி பாப்பா சூப்பரா இருக்கா,
நம்ம வீட்ல கேட்டா அவள மாதிரியே
ஒரு தங்கச்சி பாப்பா வாங்கி தருவாங்களா?

என்னோட ரப்பர எடுத்து வச்சுட்டு
தரமாட்டேன்னு சொன்ன ரித்திஸ்க்கு
இந்த டோரா பொம்மைய குடுக்கலாமா? வேணாமா?

ஹோம் வொர்க் எல்லாம் நானே செய்யணுமாம்,
எழுதி எழுதி கை எல்லாம் ஒரே வலி,
இந்த அம்மாவே இதெல்லாம் செய்யலாம்ல,
கொஞ்சம் கூட பொறுப்பில்லாத அம்மா...,

ஐயையோ ஸ்கூலுக்கு லேட்டாச்சு,
ஆட்டோக்கார மாமா வந்துருவார் ...
ஆமா, அவருக்கு கால்ல அடி பட்டுருந்துச்சே
ஆட்டோ ஓட்டும் போது வலிக்குமா?