Tuesday, 17 June 2014

இளவரசியும் தவளையும்


ஒரு நாட்டுல ஒரு இளவரசி இருந்தா. ஒரு நாள் அவ வழக்கம் போல அரண்மனை தோட்டத்துல விளையாட போனா. அரண்மனை தோட்டம்னா சும்மாவா? ரோஜாக்களும், பவள மல்லிகை கொடிகளும் அரண்மனை தோட்டத்தையே அழகாக்கி இருந்துச்சு. அங்க இருந்த குளத்துல வெள்ளை தாமரையும், சிகப்பு அல்லியும் கூடுதல் அழக குடுத்தன.

இளவரசி அவ தோழிகளோட சந்தோசமா இருந்தத பாத்த ஒரு தவளை தானும் அவ தோழியா ஆகணும்ன்னு ஆசப்பட்டுச்சு. அது தத்தி தத்தி இளவரசி முன்னால வந்து நின்னுச்சு. இளவரசியும் அந்த தோட்டத்து தவளைய அரண்மனைக்கு கொண்டு போனா.  

அரண்மனைக்குள்ள போன உடனே இளவரசிக்கு வேண்டியவங்க எல்லாருக்கும் தவளைய அறிமுகப்படுத்தினா. தோட்டத்துல தனியாவே இருந்த தவளை அரண்மனைல எல்லார் கூடவும் சந்தோசமா இருந்துச்சு. இளவரசியோட தோழிங்க எல்லாம் அதுக்கும் தோழி ஆகிட்டாங்க.

இப்படி எல்லாமே நல்லபடியா போயிட்டு இருந்தப்போ, ஒரு நாள் ராத்திரி இளவரசி தவளை க்ராக் க்ராக்ன்னு கத்துறத கேட்டுட்டா. அந்த சத்தம் வித்யாசமா இருக்கவே, இது மாதிரி நாமளும் பாட கத்துகிட்டா என்னன்னு இளவரசிக்கு தோணிச்சு.

இளவரசிக்கு அந்த யோசனை வந்த உடனே, தவளைக்கும் ரொம்ப சந்தோசம். இளவரசி முன்னாடி க்ராக் க்ராக்ன்னு அதிகமா கத்த ஆரம்பிச்சுடுச்சு. இளவரசியும் தவளை கத்துன சத்தத்துல சில வார்த்தைகள எடுத்துகிட்டு அழகழகான பாட்டுக்களா பாட ஆரம்பிச்சுட்டா. ரொம்ப சீக்கிரமே நாடு முழுக்க இளவரசியோட பாட்டு பிரசித்தி ஆகிடுச்சு.

இளவரசிக்கு கிடச்ச பாராட்டுக்கள கண்ட தவளைக்கு பொறாமை வர ஆரம்பிச்சுடுச்சு. நம்ம கிட்ட இருந்து பாட்டு கத்துகிட்டு இப்போ இந்த இளவரசி பிரபலமாகிட்டாளேன்னு மனசுக்குள்ள பொரும ஆரம்பிச்சிடுச்சு. அப்படியே இளவரசியோட தோழிகள் கிட்டயும் புலம்ப ஆரம்பிச்சுடுச்சு. போக போக தனிமைல சத்தம் போட்டு கூப்பாடு போடவும் ஆரம்பிச்சுடுச்சு.

இத கேட்ட இளவரசி தவளையோட அறியாமைய நினச்சு வருத்தப்பட, இளவரசியோட நல்ல தோழி, இளவரசிக்கிட்ட ஒரு விஷயம் சொன்னா. அது என்னன்னா, கத்துறதும், புலம்புறதும் தான் தவளையோட இயல்பு. அத தாண்டி அது வெளில வராது, வரவும் தெரியாது. ஆனா தன்னால தான் எல்லாமேங்குற அறியாமை மட்டும் இருந்துட்டே இருக்கும். குளத்துல இருந்த தவளைய அரண்மனைக்கு கொண்டு வந்தது தப்பு, அத குளத்துலயே விட்டுருங்கன்னு.

இளவரசிக்கு பாவமா இருந்தாலும் அது தான் சரின்னு பட்டுச்சு. தவளைய கொண்டு போய் குளக்கரைலயே விட்டுட சொல்லிட்டா.
இளவரசி மேலும் மேலும் தன்னோட திறமைய வளத்துக்குறதுல கவனம் செலுத்த ஆரம்பிச்சிட்டா.

தவளையோ, இளவரசி தனக்கு துரோகம் செய்துட்டதா புலம்பி புலம்பி அந்த குளக்கரைலயே காலத்த ஒட்டிச்சு. தவளை கூட இருந்த வம்பு பேசுற தோழிகளும் வேற வம்பு கிடைச்சதும் தவளைய விட்டுட்டு போய்ட்டாங்க. இப்போ எல்லாம் தவளை கத்துரதே இல்ல...


என்ன செல்லங்களா, இந்த கதைல இருந்து நாம என்ன தெரிஞ்சுக்க விரும்புறோம்னா, நட்புங்குறது பொறாமைப்படுறது இல்ல. அப்படி பொறாமை பட்டா அது நல்ல நட்பே இல்ல. அதே மாதிரி திறமைங்குறது யார் கிட்டயும் கத்துகிட்டு வர்றதில்ல, அது அவங்கவங்க உள்ளிருந்து வர்றது. தவளை கத்துன மாதிரியே கத்திகிட்டு இருந்தா இளவரசியை பைத்தியம்ன்னு சொல்லியிருப்பாங்க. தவளையோட கத்தல் கூட தன்னோட கற்பனையையும் சேர்த்து இளவரசி பாடினதால தான் அவளால நல்லா வர முடிஞ்சுது. அதனால நண்பர்கள் பாத்து எப்பவும் பொறாமை படவே கூடாது, தலைக்கனமும் கூடாது, சரியா... இல்லனா தவளைக்கு நேர்ந்த மாதிரி தனியாவே புலம்பிட்டு இருக்க வேண்டியது தான். கவனிக்க யாருமே இருக்க மாட்டாங்க... 

Friday, 6 June 2014

நிலவறை



ஷ்ஷ்ஷ்..... சத்தமே போடாம வாங்க....

நாம இப்போ இதுவரைக்கும் போகாத ஒரு இடத்துக்கு போகப்போறோம்...

வாங்க வாங்க, வீட்டோட பின்வாசலுக்கு வாங்க. ஏங்க, கிணத்தடி பக்கமா இப்போ போக வேணாம், நாம போக வேண்டிய இடம் பின்வாசல் ஒட்டிய நிலவறை தான்.

பாத்து, பாத்து, இருட்டா தான் இருக்கும். ஆனாலும் சூரிய வெளிச்சம் மெல்லிசா உள்ள வந்துட்டு தான் இருக்கு பாத்தீங்களா? எதுக்கும் ஒரு மண்ணெண்ணெய் லாந்தர் கைல எடுத்துப்போம். மெதுவா கால்கள எடுத்து வச்சு படி இறங்குங்க.. பத்தே படிதான். தரை வந்துடுச்சு பாத்தீங்களா?

ஹோய், யாரது, நிலவறை கதவ மூடினது, வெளிச்சம் வர வேணாமா? அப்புறம் பின்னால வர்றவங்க கண்ணு தெரியாம குவிச்சி வச்சிருக்குற தேங்கா மேல இடறி விழுந்துட போறீங்க... ஜாக்கிரதையா வாங்க..

இங்க தேங்காய் கொட்டி கிடக்கு பாத்தீங்களா, கிட்டத்தட்ட நூறு தேங்கா, ரெண்டு மாசத்துக்கு தேவையானத சேமிச்சு வச்சிருக்கு. தேவைப்படுறப்போ அஞ்சாறு நாளைக்கு ஒருதடவ பத்து, பதினஞ்சு தேங்காய வெளில எடுத்துட்டு போய் உரிச்சி வச்சிக்கலாம்.

இந்தா அந்த பக்கம் விறகு அடுக்கி வச்சிருக்காங்க. மழை நேரத்துல விறகு எல்லாம் நனஞ்சுடக்கூடாதுல, அதே போல வெயில் நேரத்துல கரையான் அரிச்சுடும். அதான் பாதுகாப்பா இங்க கொண்டு வந்து வச்சிருக்காங்க.

செமையா மாம்பழ மணம் வருதே, மாம்பழத்த காணோம்ன்னு தேடுறீங்களா? ஹஹா, அதோ அந்த ஈக்காம்பெட்டி இருக்கு பாத்தீங்களா, அது நிறைய வைக்கோல் தெரியுதா? அதுக்குள்ள தான் மாம்பழம் இருக்கு. வைக்கோலுக்குள்ள வச்சி மாம்பழம் பழுக்க வச்சா மணமும் ருசியும் தனி தான், தெரியும்ல...

ஆத்தீ.... பாத்து வாங்க, மம்பட்டி, கொறடு, சாந்து சட்டி, அருவா, கடப்பாரை எல்லாம் இங்க தான் இருக்கு. வயல் வேலை நடக்கும் போது எடுத்துட்டு போய்டுவாங்க, இதெல்லாம் விவசாயத்துக்கு தான் பயன்படுத்துவாங்க. நீங்க பயப்படாதீங்க.

அடடே, நாம இப்போ கொஞ்ச நேரம் அந்த வைக்கல்கட்டு மேல உக்காந்து ரெஸ்ட் எடுத்துக்கலாம். அந்தா, அந்த வலது மூலைல செந்துளுவன் பழம் இருக்கு பாருங்க, அப்படியே அந்த குலையை தூக்கிட்டு வாங்க, ஆளுக்கொரு பழம் எடுத்து சாப்பிடலாம்.

என்னது, மாம்பழமா? அந்த ஈக்காம்பெட்டிய அப்படியே தூக்குங்க, புட்டு சாப்பிடும் போது, அது கூட சைட் டிஷ்ஷா வெட்டி வச்சி சாப்பிடலாம்.

பாத்தீங்களா, உங்கள சுத்திக் காட்டுற உற்சாகத்துல வந்த வேலையை மறந்துட்டேன்....

குட் மார்னிங்...

Monday, 2 June 2014

சுறா, நீயா நானா? மற்றும் டிஸ்கவரி தமிழ்


நேத்து சுறா படம் பாத்த எப்பக்ட் - இன்னும் மயக்கம் தெளியல

அத போய் யாரு பாக்க சொன்னான்னு எல்லாம் கேக்காதீங்க, லேப் டாப் தான் போச்சே, கொஞ்ச நேரம் டிவி பாக்கலாம்ன்னு தான் அந்த பக்கமா போனேன். அதுவும் ரொம்ப வருஷம் கழிச்சு முதன்முறையா டிவி பாக்க போனேன். நான் டிவிய ஆன் பண்ணின உடனே சன் டி.வில சுறா படம் தான் ஓடிச்சு.

சரி, இந்த படத்த தான் பேஸ் புக்ல கழுவி கழுவி ஊத்துறாங்களே, இப்படி வரலாற்று சிறப்பு மிக்க படத்த பாக்கலனா எப்படிங்குற ஒரு ஆர்வத்தோட தான் படம் பாக்க உக்காந்தேன்.

அட, நல்லா தான போயிட்டு இருந்துச்சு. இந்த தமனா புள்ள இருக்கே, அத அப்படியே மெழுகு பொம்மையா செய்துட்டு இருந்தப்போ உள்ள ஒரு பேட்டரி வச்சி தூக்கிட்டு வந்துட்டாங்க போல. அது பேசினது வசனமாங்க?

இப்போ உங்க மைன்ட் வாய்ஸ் எனக்கு கேக்குது. எனக்கு தமனாவ பிடிக்கலன்னு நீங்க நினைக்குறீங்க.... அதானே இல்ல... ஆனா ஒண்ணுங்க, சில பேர பாத்தா புடிக்காது, பாக்க பாக்க தான் புடிக்கும் (இது தனுஷ் டயலாக்ன்னு காமடி பண்ணக்கூடாது, இங்க இப்போ இது காயு டயலாக்). இந்த புள்ள லூசா இருந்தாலும் கத போகுற போக்குல இத பாத்தா சிரிப்பு சிரிப்பா தான் வந்துச்சு.

ஏன்மா? அந்த ரமேசுக்கு முன்னால வேற யாரும் உன்ன விட்டுட்டு ஓடி போகலையா? இத்தன வயசு வர எப்படி கடல்ல குதிக்காம இருந்த? அப்புறம், கடல்ல விழுந்தா மேக்அப் தண்ணி பட்டு கரைஞ்சு போய்டும் கண்ணு, நீ ஏன் ஏசியன் பெய்ன்ட் ட்ரை பண்ணக் கூடாது?

இதுல எனக்கு இன்னொரு டயலாக் ரொம்ப பிடிச்சுது. அது என்னன்னு நான் சொன்னா இங்க யாரும் கொடி புடிச்சுட்டு சண்டைக்கு வரக்கூடாது சரியா. ஹிஹி பளிச்சுன்னு "எங்கப்பா ஒரு டம்மி பீசு"ன்னு படக்குன்னு சொல்லுமே, நான் கெக்கே பிக்கே, கன்னாபின்னான்னு சிரிச்சுட்டேன்.

அடுத்ததா வடிவேலு. வெறும் அவ்வ்வ்வ்ங்குற ஒரு சத்தத்த (இது சத்தம் தானே, வார்த்த இல்லீல) வச்சுகிட்டு மனுஷன் என்னமா நடிக்குறார்யா... டைப் டைப்பா அவர் மூஞ்சிய மாத்துற அழகு இருக்கே. ஹலோ வடிவேலு, ஐ லவ் யூ. அந்த இத்துனூண்டு குரங்கு மூஞ்சிக்குள்ள எத்தன கலைஞன் ஒளிஞ்சி இருக்கான் பார்யா... அப்புறம் விஜய வாடா போடான்னு சொல்றாரா, நமக்கு வடிவேலு தான் ஹீரோ மாதிரி தெரிஞ்சார்.

இப்படி எல்லாமே நல்லாதாங்க போயிட்டு இருந்துச்சு. அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா என் மண்டைக்குள்ள யாரோ வந்து நல்லா குழப்பி விட்டுட்டாங்க...

எப்பவுமே கேள்வி கேட்டே பழகிட்டேனா, இப்போ நான் கேள்வி கேக்குறேன், நீங்க பதில் சொல்லுங்க சரியா?

சுறாவுக்கு லட்சியம் வீடு கட்டுறது தானே, அப்புறம் எதுக்கு  அவ்வளவோ பெரிய காரு, கண்ணாடி, தொப்பி, கோட்டு, சூட்டு, சூ?

தன்னை விட பெரிய பணக்காரங்கள ஒரு சொட்டு சயனைட்ல சைலென்ட்டா மேல அனுப்புற வில்லன் ஏன் சுறா பின்னால லோலோன்னு அலையுறார்?

அப்புறம், வேறென்ன சந்தேகம்?

ம்ம்ம்ம் வந்து, வந்து.... ஐயோ, நான் யாரு, எங்க இருக்கேன்?
ஆமா, நீங்க எல்லாம் யாரு?
............................................................................

சுறா படம் பாத்துட்டு இருக்குறப்பவே அப்பப்போ விளம்பர இடைவேளைல வழுக்கிகிட்டு போய் அதாங்க ஸ்கிப் ஆகி (அது ஸ்லிப்ன்னு எனக்கு டியூஷன் எடுக்காதீங்க, ப்ளீஸ், நானே கன்பீஸ்ல இருக்கேன்) விஜய்டிவி பக்கமா போய் விழுந்துட்டேன்.

அட, நம்ம நீயா நானா கோபிநாத் நாட்டுக்கு முக்கியமான அதி தீவிரமான விசயத்த பத்தி டிஸ்கஸ் பண்ணிட்டு இருந்தார்.

உங்களுக்கு உங்க ஹஸ்பன்ட் எப்படி எல்லாம் ரொமான்ஸ் பண்ணனும்ன்னு ஆசையா இருக்குன்னு நாட்டுக்கு முக்கியமான ஒரு கேள்விய கேட்டார். உடனே மடை திறந்த வெள்ளமா வந்துச்சு பாருங்க பதில்கள். அட, அட, அட, நான் அப்படியே அசந்துட்டேன்.

இதுல ஒருத்தங்கள காலைல பக்கத்துல வந்து உக்காந்து கிஸ் பண்ணி எழுப்பி விடணுமாம். இன்னொருத்தங்க பைக்ல போகும்போது அப்படியே தோள்ல கை போட்டுட்டே தான் போகணுமாம் (நல்ல வேளை, இங்க தான் சுறா படம் என்னை இவங்க கிட்ட இருந்து காப்பாத்திச்சு).

இதுல ஒருத்தங்களுக்கு சினிமா பாத்து, அப்படி எல்லாம் நடந்துக்கணும்ன்னு ஆசை வந்துச்சாம்? எங்க போய் முட்டிக்க?

ஆனா இங்க கூட ஆன்னு வாய தொறந்துட்டேஒரு விஷயம் ரசிச்சேன்ங்க.

ஒருத்தங்க சொன்னாங்க, எல்லாரும் பீச்சுக்கு ஜோடியா தான போவாங்க, இவரு தனியா போவார்ன்னு. என்னாடா இது புதுமையா இருக்குன்னு கொஞ்சம் நிமிர்ந்து உக்காந்து, கேமராவ அந்த பக்கம் திருப்புனா, நான் சின்ன வயசுல இருந்தே தனியா தானே போவேன்ன்னு அப்பாவியா மூஞ்சி வச்சுட்டு சொன்னார் பாருங்க, ஏன் சார், நீங்க எப்பவுமே இப்படி தானா? இல்ல, இப்படி தான் எப்பவுமேவா?

பாவங்க, அவருக்கு சத்தம் போட்டாலாம் பிடிக்காதாம். அப்படியே அமைதியா அரை மணிநேரம் கடலை பாத்துட்டே இருக்கணுமாம். இதுல சார் அஞ்சு வருஷம் லவ் பண்ணி கல்யாணம் பண்ணிகிட்டாராம். அவர லவ் பண்ணுன அந்த பொண்ண கையெடுத்து கும்பிடணும். ஒரே ஒரு ரோஸ் வாங்கி குடுங்கன்னு கெஞ்சோ கெஞ்சுன்னு பப்ளிக்ல கெஞ்சுது. ஹஹா கல்யாணத்துக்கு முன்னால கேட்டா இதெல்லாம் தப்பு, அப்புறம் பாத்துக்கலாம்ன்னு சொல்லுவாரு, இப்போ கேட்டா வீட்ல பசங்க இருக்காங்கன்னு சொல்றாருன்னு அவங்க பீல் பண்ணப்போ, ஏன்யா, ஒரு ரோஜாப்பூ வாங்கி குடுக்க அறுபது வருசமாயா காத்திருக்கணும்?

இதுல பொண்டாட்டி குடுத்த கிரீட்டிங் கார்ட் பத்தி ஒரு கமன்ட் குடுத்தார் பாருங்க மனுஷன். ஒரு தாள குடுத்தா எவ்வளவு நேரம் தான் பாத்துட்டு இருக்க முடியும்? கொஞ்ச நேரம் பாத்துட்டு அப்புறம் தூக்கி போட்டுற வேண்டியது தான். அத என்ன பிரேம் போட்டா மாட்ட முடியும்?

அண்ணே, உங்க பீலிங்க்ஸ் நியாயம் தாண்ணே... உங்க பொண்டாட்டிகிட்ட தாராளமா பொறுமையா இருக்குறது எப்படின்னு எல்லா பொண்ணுங்களும் டியூஷன் போகலாம்.

அப்புறமா, இந்த நகரத்து பொண்ணுங்க என்னமோ வீனஸ்ல இருந்து குதிச்சு வந்த மாதிரி கிராமம்னா ஒரு வாழத் தகுதி இல்லாத இடம் மாதிரி பீல் பண்ணிட்டு இருந்தாங்க. இங்க நகரத்து பொண்ணுங்க மட்டுமே இருந்ததால அவங்க அலட்டல மட்டும் தான் பாக்க முடிஞ்சுது. என்னவோ, பொண்ணுங்களே அலட்டல் பேர்வழின்னு ஒரு கணம் எல்லார் மனசுலயும் வந்துட்டு போயிருக்கும். நகரத்து ஆண்கள் கிட்டயும் கேட்டுருந்தா தானே அவங்களும் கிராமத்த சீப்பா நினைக்குறாங்கங்குறது தெரிய வரும்.. என்னவோ போங்கப்பா... நான் பேசாம தூங்க போறேன்...
........................................................................................

ஆங்க்..... பாத்தீங்களா, சுறா படத்தையும் கோபிநாத்தையும் பாத்த எபக்ட்ல நான் ரசிச்ச இன்னொரு விசயத்த மறந்தே போயிட்டேன். இது இது ரெண்டும் பாக்குறதுக்கு முன்னாடி பாத்தது. நீங்க, இவ்வளவு நீள பதிவுல இத வாசிப்பீங்களான்னு தெரியல... ஆனாலும் நான் ரசிச்சத சொல்லிறணும்ல.

டிஸ்கவரி தமிழ்....

கூட்டமா இடம் விட்டு இடம் நகர்ருற உயிரிணங்கள பத்தினது. நிஜமாவே மலைச்சு தான் போயிட்டேன்.

முட்டை விட்டு தன்னோட சந்ததிய பெருக்க பெரிய ரிஸ்க் எடுத்து, காட்டுல இருந்து கடலுக்கு போற சிகப்பு நண்டுகள், மனுசனோட தவறால லெச்ச கணக்குல பெருகி இப்போ ஆறோட பொருளாதார வளத்தையே அழிக்குற மீன்கள், கும்பலா கிளம்பி வர்ற வவ்வால்கள்ன்னு எல்லாமே பிரமிப்பா தான் இருந்துச்சு. இயற்கை, எப்பவுமே அழகு தாங்க...

வாழ்க்கைல ஒரு பகுதிய தெளிஞ்ச நீரோடை, பச்சை பசேல்ன்னு காடுன்னு வாழ்ந்து பாத்துடணும்....
.............................................................................................

அப்புறம், இந்த போஸ்ட்ல நான் போடுற படம் ஏதும் நல்லா இல்லனா என்னைய திட்டிராதீங்க, நானே இருட்டுல தடவி தடவி, குத்து மதிப்பா போட்ருக்கேன். லேப் டாப்ல கண்ணே தெரியல. டிஸ்ப்ளே மாத்தணும். மறுபடியும் ஆன்லைன் வரணும்னா ஒரு மாசம் கூட ஆகலாம். 

Wednesday, 28 May 2014

சந்திரமண்டலம் போவோமா?


ரொம்ப நாளா உங்கள எல்லாம் சந்திரமண்டலத்துக்கு கூட்டிட்டு போகணும்ன்னு ஆசை. அதனால வாங்க, முதல்ல உங்கள வேற ஒரு இடத்துக்கு கூட்டிட்டு போறேன். 

இப்ப நாம நின்னுட்டு இருக்குறது மொட்டை மாடி. அங்க இருந்து பாத்தா சந்திர மண்டலம் தெரியுது பாருங்க...

என்னது, தெரியலையா?

அதெப்படி, நான் தான் தெரியுதுன்னு சொல்லிட்டேனே, அப்புறம் ஏன் தெரியாது?

சரி சரி, ரொம்ப பிகு பண்ணாதீங்க, இந்தா ஒரு தீபாவளி ராக்கட் வந்து மொட்டை மாடியில லேன்ட் ஆகுது பாத்தீங்களா, இது மேல ஏறிக்கோங்க, நாம சந்திரமண்டலம் போய்டலாம்...

இப்போ நாம விண்வெளில பறந்துட்டு இருக்கோம். பஞ்சு பஞ்சா மேகங்கள். எவ்வளவு அழகு பாத்தீங்களா? ஹலோ யாருங்க, மேகத்த பஞ்சு மிட்டாய்ன்னு நினச்சு திங்குறது? அட, தின்னாலும் பரவால, இனிப்பு இல்லன்னு சலிச்சுக்க வேற செய்றீங்க, பேசாம பயணத்த கண்டிநியூ பண்ணுங்க, இல்லனா ராக்கெட் அடியில தண்ணி ஊத்தி அணைச்சுடுவேன்.. ஆங்க்... அந்த பயம் இருக்கட்டும்.

ஆஹா... கிலோ கணக்குல தங்க பூக்கள கொட்டி வச்ச மாதிரி இந்த நட்சந்திரங்கள் என்னமா ஜொலிக்குது பாருங்க. ஹே ஹே... நட்சத்திர பூக்கள் என்ன நம்ம ஊரு பூ மாதிரி சாப்ட்டாவா இருக்கும்? சுட்டுடும்... பாத்து பறிச்சுக்கோங்க. கிறிஸ்த்மஸ் அன்னிக்கி நம்ம வீட்ல அலங்காரமா கோர்த்து தொங்க விடலாம்.

அச்சச்சோ, அப்படியே வலது பக்கமா திரும்புங்க, உடனே திரும்புங்க, சீக்கிரம் சீக்கிரம், ஒரு எரி நட்சத்திர கல்லு நம்மள நோக்கி தான் வந்துட்டு இருக்கு. ம்ம்ம்ம் வேகமா போங்க, அப்படியே வலது பக்கம் தான்... ஆமா, ஆமா அப்படி தான்... ஹப்பாடி, நூலிழை இடைவெளில தப்பிச்சாச்சு.

வாங்க, இன்னும் மேல மேல மேல பறக்கலாம்... 

அந்தா, கொஞ்சம் நிலப்பரப்பு தெரியுதே, அங்க தான் நாம தரையிரங்கணும். அட, மெதுவா குதிங்க, என்னமோ திருட்டு பஸ் ஏறிட்டு கண்டக்டர் பாக்குறதுக்கு முன்னாடி குதிக்குற மாதிரி குதிக்க பாக்குறீங்க.. இது நிலாங்க... அதான் சந்திரன். நாம இறங்கி இருக்குறது சந்திர மண்டலம். இங்க காற்றுல மிதக்குற மாதிரியே தான் ஒவ்வொரு அடியா எடுத்து வைக்க முடியும். ரெடி, ஒன், டூ, த்ரீ... ஜம்ப்.. 

அப்படியும் இப்படியுமா,ஒருவழியா சந்திர மண்டலத்துக்கு வந்து சேர்ந்தாச்சு. ஏன்ப்பா அந்த டீக்கடை எங்க இருக்குன்னு கொஞ்சம் பாத்து சொல்லுங்க, ஒரே டயர்ட். இனிமேல் இந்த தீபாவளி ராக்கெட் மேல எல்லாம் ஏறி வரக்கூடாது. பத்ரமா சைக்கிள்லயே வந்துடணும். அஞ்சலி பாப்பா மட்டும் தான் சைக்கிள்ல விண்வெளி போகணுமா என்ன?

அப்படியே அந்த வடை சுடுற பாட்டி எங்கன்னு தேடுங்க, நல்ல ஆம வடையா வாங்கி திங்கணும். கூடவே இட்லி சப்ளை பண்றாங்களான்னும் பாக்கணும். பசிக்குதுல..

ஹஹா பாத்தீங்களா, பசி வந்த உடனே உங்கள மறந்துட்டேன், சரி சரி, நீங்களும் பாட்டிய கண்டுபிடிச்சு போய் சாப்பிடுங்க. 

அப்புறம், இன்னொரு விஷயம் மறந்துட்டேனே......

குட் மார்னிங்



Thursday, 22 May 2014

தாயென்னும் தேவதை


வலித்திருக்கும் வேளைகளின் தான்
அவளின் தேவைகள்
உணர்வுகளில் உச்சமடைகிறது...

கைகள் துவள, உடல் மெல்ல சாய,
வெட்டி வெட்டியிழுக்கப்படும்
நரம்புகள் மத்தியில்
அவள் ஒரு மின்னலை போல்
வந்து வந்து மறைகிறாள்...

இப்படியான கடந்த காலங்களில்
வெறுமையின் உச்சக்கட்டத்தில்
எதையோ எதிர்பார்த்து
ஓர் அணைப்பு தேவைப்படும் நேரத்தில் தான்
அவள் என் அருகே வருவாள்...

பதமாய் அணைத்து,
இதமாய் இறுக்கம் தந்து,
நடுங்கும் கைகளை பற்றிக்கொள்வாள்...

தலைக்கு தோள்கொடுத்து,
விரல்களை கூந்தல்களுக்குள்
நுழைந்திடச் செய்வாள்...

முதுகோடு பாரமாயிருக்கும்
அவள் உடல் சூடு சுகம்.
கழுத்திலும் நெற்றியிலுமாய்
விழும் உதட்டு ஒத்தடங்கள் சுகமோ சுகம்...

இன்று,
தலையணை அசைவற்று
முதுகில் உறங்குகிறது...

இரு கைகளையும் கால்களையும்
அதற்கு முளைத்திட செய்யுங்கள்..
அணைப்பில் பதுங்க
நான் தயாராய் இருக்கிறேன்..

Saturday, 17 May 2014

ப்ரிட்டி வுமன் (Pretty Woman) – திரை விமர்சனம்


ஒரு நாள். கிட்டத்தட்ட ஒரு மாசம் இருக்கும். ரொம்ப போர் அடிக்குதுன்னு ஏதாவது ஒரு படம் பாக்கலாம்ன்னு இந்த படம் நல்லா இருக்குமான்னு பேஸ்புக்ல ஒரு கேள்வி கேட்டுட்டு பாக்க ஆரம்பிச்சேன். கொஞ்ச நேரம் நல்லா தான் போயிட்டு இருந்துச்சு. சட்டுன்னு அடுத்தடுத்து வந்த சீன்ஸ் என்னடா இது ஒரு மாதிரி படமா இருக்கும் போலயேன்னு நினைக்க வச்சு, அப்படியே விண்டோஸ்ல போய் க்ளோஸ் பட்டன அழுத்த வச்சிடிச்சு... அப்புறம் அந்த படம் பத்தி வந்த கமண்ட்ஸ், நல்ல படம், அப்படின்னு வந்தத எல்லாம் படிச்சாலும் ஏனோ அது மேல ஈர்ப்பு இல்லாம போய்டுச்சு.

நேத்து ராத்திரி தூக்கம் கலைஞ்சு எழுந்து உக்காந்துட்டேன். இனி தூக்கம் அவ்வளவு தான்னு தெரியும். என்ன பண்ணலாம்ன்னு கொஞ்ச நேரம் யோசிச்சேன். சரி, அந்த படம் தான் நல்லா இருக்கும்ன்னு சொன்னாங்களே, பாத்தா தான் என்னன்னு தோணிச்சு...

படம் இருந்த பென் டிரைவ் எடுத்து லேப்டாப்ல போட்டு, போல்டர் திறந்து அந்த படத்த ஆன் பண்ணினேன்.... எந்த படத்த?

அந்த படம் தான் “ப்ரிட்டி யுமன்”

படத்தோட கதை சுருக்கம் இதான்...

ஹீரோ எட்வர்ட் லூயிஸ் ஒரு பெரிய வியாபார புள்ளி. தன்னோட முக்கியமான கட்டங்கள்ல தன்னோட கேர்ள் பிரெண்ட் தன் கூட இருக்கணும்ன்னு ஆசைப்படுறார். ஆனா அவளோ எனக்கு பெர்சனல் வாழ்க்கை இருக்குன்னு சொல்லிடுறா... அப்புறமா அவருக்கு ஒரு சின்ன உதவி தேவைப்பட ஹாலிவுட்ல விபச்சாரம் பண்ற விவியன் உதவி பண்றா. அவளால எதேர்சையா ஈர்க்கப்படுற எட்வர்ட் ஒரு வாரம் அவள தன் கூட தங்க வச்சிக்க மூவாயிரம் டாலர் பேசி புக் பண்றாரு. அந்த ஒரு வாரங்கள்ல அவங்களுக்குள்ள என்ன நடந்துச்சு, முடிவு என்ன ஆச்சுங்குறது தான் கதை....

இங்க நான் விவியன அவள் இவள்ன்னு குறிப்பிட ஏனோ எனக்கு தயக்கமே வரல, காரணம் படம் முடியுறப்போ அவள் என்னோட மிக நெருங்கிய சிநேகிதியா மாறி போனா... சில இடங்கள்ல சின்ன குழந்தை மாதிரி துள்ளி குதிக்குறா. விவியன்- நிஜமாவே அவ ஒரு ப்ரிட்டி யுமன் தான்...

என்னை முதல்ல இம்ப்ரெஸ் பண்ணினது எட்வர்ட் தான். பாத்த உடனே வித்யாசமான ரசனை உள்ளவரா தெரிஞ்சார். எட்வர்ட் கிட்ட விவியன் ரொம்ப அதிமேதாவியா பேசுறா. ஐயம் நீட் அண்ட் கிளீன்ன்னு சொல்றப்பவே அவருக்கு சிரிப்பு பொத்துகிட்டு வந்துடுது. அவள பாத்துகிட்டே இருக்குற அவர், தன்னோட ஒரு நாள் தங்க முதல்ல அவளுக்கு முன்னூறு டாலர் குடுக்குறார். நாகரீகமா வளர்ந்த பெண்கள பாத்த அவருக்கு ஷாம்பைன தரைல அடுக்கி வச்சுட்டு சின்ன புள்ள மாதிரி தரைல உருண்டுட்டே காமடி ஷோ பாத்து ரசிக்குற விவியன் வித்யாசமா தெரியுறா. அவள கண்கொட்டாம புன்னகையோட பாத்துட்டு இருக்கார்.

அப்புறம் விவியன். அவ கிட்ட இருக்குற ஒரே ஒரு அரைகுறை ட்ரெஸ்ஸ போட்டுக்கிட்டு எட்வர்ட் கூட ஒரு வாரத்த கழிக்கணுமேன்னு புதுசா டிரஸ் எடுக்க போறா. அவளோட நடை உடைகள பாத்துட்டு அவங்க கடைல டிரஸ் எடுக்க அவளுக்கு தகுதி இல்லன்னு துரத்தி விடுறப்போ உடைஞ்சு போய்டுறா. அப்புறமா அவளுக்காக எட்வர்ட் எக்கச்சக்கமா ட்ரெஸ் எடுத்து குடுக்குறப்போ அவங்க கிட்ட போய் நீங்க பெரிய தப்பு பண்ணிட்டீங்கன்னு துள்ளி குதிக்குறா...

விவியன உளவாளின்னு சந்தேகப்படுற தன்னோட வக்கீல் பிலிப்கிட்ட அவ ஒரு உடலியல் தொழிலாளின்னு உண்மைய எட்வர்ட் போட்டு உடச்சுடுறார். பிலிப் அவ கிட்ட தரம்கெட்டு பேசுறப்போ அத்தன வலிகளையும் உள்ளுக்குள்ள வாங்கிகிட்டு அவர்கிட்ட சிரிச்சுட்டே நகர்ந்து போற விவியன், எட்வர்ட் கிட்ட வெடிச்சுடுறா. கடும் வாக்குவாதங்களுக்கு பிறகு நான் உங்களை சந்திச்சிருக்கவே கூடாது, என் காசை குடு, நான் இப்பவே கிளம்புறேன்னு கோபமா கேக்குறா. பணத்த கைல கொடுக்காம கட்டில்ல தூக்கி போட்டத எடுக்காம ரோசமா கிளம்பிடுறா. ஏன், எங்களுக்கு ரோசம், மானம் எதுவும் இருக்க கூடாதான்னு எட்வர்ட் முகத்துல ஓங்கி அடிச்ச மாதிரி இருந்துச்சு அவளோட செயல். சபாஷ்.

விவியன், எட்வர்ட்டோட அன்புல ஒவ்வொரு தடவையும் உருகி, அவர் மேல தனக்கு வந்த காதல வெளிபடுத்துறப்ப அத கேட்டு சாதரணமா எடுத்துகிட்டு ஒண்ணுமே சொல்லாதது ஏன்னு எனக்கு புரியவே இல்ல.

கடைசியா விடைப்பெறுறப்போ எட்வர்ட் நம்ம ரெண்டு பேர் இடையில என்ன இருக்குன்னு கேக்குறப்போ, எனக்கு தெரியாது. சின்ன வயசுல என் அம்மா என்னை ரூம்ல அடச்சு வச்சுட்டு போறப்போ, எப்பவுமே ஒரு கனவு காணுவேன். ஒரு பெரிய டவர்ல மாட்டிக்குற இளவரசி தான் நான்னும், என்னை கூட்டிட்டு போக என் ராஜகுமாரன் குதிரைல வருவான்னும் நினைச்சுப்பேன். ஆனா இப்போ, இங்க வேட்டைக்கு போறதே நான் தான்னு சொல்லுவா. அதுக்கு அவர், நான் எப்பவுமே உன்னை ஒரு விபச்சாரியா நடத்தலன்னு அவர் பாட்டுக்கு சொல்லிட்டு போய்டுறார். தொண்டையடைக்க அவளோ “ஹி ஜஸ்ட் டிட்” அவர் அப்படி நடத்தினார்ன்னு உடைஞ்சி போய்டுறா.

என் கூடவே இரு, எனக்காக இல்ல, உனக்கு என் கூட இருக்க பிடிச்சிருக்குல, அதனாலன்னு எட்வர்ட் அவ கிட்ட சொல்றப்போ, இல்ல, எனக்கு வேலை இருக்குன்னு காண்ட்ராக்ட் முடிஞ்சு அவ கிளம்பி போய்டுறா. அவ வலி, நமக்கு புரியுது.

செண்டிமெண்ட்ஸ் இல்லாம படமா? இங்க கூட அப்பா பையன் செண்டிமெண்ட் இருக்கு. பதினாலரை வருஷம் தன்னோட அப்பா கூட பேசாம இருக்கும் எட்வர்ட் ரோட்டுல ஒரு அப்பா மகன பார்த்து உணர்ச்சிவசப்பட்டு போய்டுறார். அப்பா மேல இருக்குற கோபத்த அத்தனையும் பிசினஸ்ல காட்டுற அவர், கடைசில மனசு மாறி, தன்னோட பிசினஸ் உத்திகள மாத்திக்குற கட்டம் அருமை.

இந்த படத்துல எனக்கு பிடிச்ச ரொமான்ஸ் சீன் ஒண்ணு இருக்கு. மீட்டிங் போயிட்டு இருக்குறப்ப எட்வர்ட் விவியனுக்கு கால் பண்ணுவார். அவ போன் அட்டென்ட் பண்ணின உடனே, உன்ன கால் அட்டென்ட் பண்ணாதன்னு சொன்னேன்லன்னு கலாய்ப்பார். மறுபடியும் மறுபடியும் கால் பண்ணி, “நெவர், எவர் பிக் அப் தெ போன்”ன்னு அதட்டுவார். அவ அழகா சிரிச்சுட்டே “தென் ஸ்டாப் காலிங்”ன்னு சொல்லுவா. அப்போ அவங்க ரெண்டு பேர் மூஞ்சியையும் எக்ஸ்ப்ரசனயும் பாக்கணுமே... பின்னிட்டாங்க போங்க... இத்தன நடிப்ப எங்கயா வச்சிருந்தீங்க?

நான் இதுல ரசிச்ச இன்னொரு கேரக்டர் அவங்க தங்கியிருக்குற ஹோட்டலோட மானேஜர் பார்னி. ஆரம்பத்துல விவியன் உடை, நடை எல்லாம் பாத்து கடுப்பாகுற அவர், அடுத்தடுத்து அவள மரியாதையோட பாத்து ரசிக்குற சீன்ஸ் செம. ஒரு நல்ல ட்ரெஸ் வாங்க முடியாம தவிக்குற அவளுக்கு ஹெல்ப் பண்றதாகட்டும், பார்ட்டில எப்படி சாப்பிடுறதுன்னு தெரியாத அவளுக்கு கிளாஸ் எடுக்குறதாகட்டும், தேவதை மாதிரி வர்ற விவியன புருவம் உயர்த்தி அழகா ரசிக்குறதாகட்டும், மனுஷன் பின்னி எடுத்துருக்கார்.

இங்க இன்னொரு உறவை பத்தி சொல்லணும். அதான், விவியனுக்கும் அவள் தோழி கிட் லூக்காவுக்குமான உறவு. பணம்ன்ன உடனே அவங்க படுற சந்தோசம், அலும்பல், ஆனா அத மீறி அவங்ககிட்ட இருக்குற சின்னப்புள்ளத்தனம்... வெகுளித்தனம்... அவங்க ரெண்டு பேர் இடைல இருக்குற விட்டுக்குடுத்தல், புரிதல்... அட்டகாசம்.

ஆக மொத்தத்துல படம் அடி பொழி. ஆனா என்ன, கொஞ்சம் பாக்க பொறுமை வேணும். எனக்கு அந்த பொறுமை வந்துடுச்சுன்னு நினைக்குறேன். இன்னொரு படம் பாத்துட்டு மறுபடியும் வரேன், இப்போ டாட்டா....



Thursday, 15 May 2014

உறவுகள்...


உறவுகள்... 

இப்போ எல்லாம் சொந்தக்காரங்கனாலே கல்யாணம், காதுகுத்துல மீட் பண்றது தான்ங்குற அளவு ஆகி போச்சு. வீட்டை விட்டு வெளில கிளம்பினாலே பீச், சினிமா, ஹோட்டல், பார்க்ன்னு தான் கிளம்பிடுறோம். மிஞ்சி மிஞ்சி போனா பிரெண்ட் வீட்டுக்கு கெட் டுகதர்.. 

இதே கெட்-டுகதர நம்ம குடும்பத்தோட கொண்டாடுறோமா? 

முன்னாடி எல்லாம் லீவ் விட்டா பசங்கலாம் தாத்தா பாட்டி வீட்டுக்கு போய்டுவோம். ஒரு மாசம் அங்க உள்ளவங்களோட அடிச்சி புடிச்சி விளையாடிட்டு, அந்த ஊரோட ஒரு பாசத்த பந்தத உருவாக்கி விட்டுட்டு தான் திரும்பி வீட்டுக்கே வருவோம். 

ஆனா, இப்போ உள்ள குட்டி பசங்கள நினச்சா, பாவமா இருக்கு. 

ஒரு வாரம் முன்னாடி ஒருத்தங்க அப்பாவ பாக்க வந்திருந்தாங்க. அப்பா வெளில போய்ட்டாங்க, வெயிட் பண்ணுங்கன்னு தம்பி அவங்கள சோபால உக்கார வச்சான். அவங்க, எதோ கால்ல ரெக்கை கட்டி விட்ட மாதிரி வாட்ச் பாக்குறதும், வாசல்ல போய் எட்டிப் பாக்குறதுமா பரபரத்துட்டு இருந்தாங்க. அப்பா வந்ததும், பையனையும் பொண்ணையும் டான்ஸ் கிளாஸ் விட்டுருக்கேன், அங்க இருந்து கூட்டிட்டு போய் நீச்சல் கிளாஸ் விடணும், லேட் ஆகிடுச்சுன்னு சொல்றாங்க.. 

லீவ் நாள்ல கூட பசங்களுக்கு சுதந்திரம் இல்ல பாருங்க. அந்த டான்ஸ் அவங்கள ப்ரீயா விட்டா ஆடிக்கிட மாட்டாங்களா? இல்ல நீச்சல் தான் கத்துக்க மாட்டாங்களா? அவங்களா விரும்பி கேட்டா விடணும், திணிக்க கூடாது இல்லையா? 

இங்க நந்து (பக்கத்து வீட்டு ஏழு வயசு பொண்ணு) நல்லா பாட்டு பாடுவா, டான்ஸ் ஆடுவா, ரொம்ப திறமையா பதிலுக்கு பதில் காமடி பண்ணுவா... உடைஞ்சு போன பொருள் எடுத்து அவளா ஏதாவது செய்துட்டு இருப்பா. அவ எந்த ஸ்பெசல் கிளாஸ்சும் போனதில்ல. அவ செய்றத பாத்துட்டு சின்னதா ஒரு பாராட்டு, அவ முயற்சிக்கு தடை போடாம இருக்குறது, அப்புறம் சில திருத்தங்கள் மட்டும் கத்துக் குடுக்குறது, அவ்வளவு தான்... அவள் சுதந்திரம், அவள் வாழ்க்கை, அவள் திறமை... வேணா பாருங்க, நந்து சுய அறிவு உள்ள, பிரச்சனைகள திறம்பட சமாளிச்சு, எதிர்நீச்சல் போட தெரிஞ்ச பொண்ணா வருவா... 

சரி, சரி, பாருங்களேன், நான் சொல்ல வந்த விசயத்த விட்டுட்டு ஏதேதோ பேசிட்டு இருக்கேன்... 

நேத்து @14/05/14 சாயங்காலமா ஒரு நிச்சயதார்த்த வீட்டுக்கு போறதா தான் ப்ளான். ஆனா அப்பா திடீர்னு என்னை கொண்டு போய் ஒரு சொந்தகாரங்க வீட்டுல இறக்கி விட்டுட்டு போய்ட்டாங்க... 

எங்க உறவுக்காரங்க எல்லாருமே சுத்தி சுத்தி இருக்குற பல கிராமங்கள்ல இருக்காங்க. திசையன்விளை, நாங்குநேரி எல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், செட்டிகுளம், அஞ்சுகிராமம்ல ஆரம்பிச்சு, வழுக்கம்பாறை வரை நீளும் உறவுகள். 

என்ன தான் பெரியவங்க ஒண்ணா இருந்திருந்தாலும், பசங்க வளர வளர மேல்படிப்பு, கல்யாணம்ன்னு ஒண்ணொண்ணா சிதற ஆரம்பிச்சிடுவாங்க. நான் கூட குடும்ப உறவுகள்ன்னு ரொம்ப ஒட்டிகிட்டதில்ல. நான் ஸ்கூல் படிச்சுட்டு இருந்தவரை எல்லா விசேசங்களுக்கும் போவோம், குடும்பம், உறவுகள்ன்னு அது ரொம்ப ஜாலியா போகும். அதுவும் நான் காலேஜ் அடியெடுத்து வச்சதுக்கப்புறம் என்னை கவனிக்கவே அப்பாவுக்கும் அம்மாவுக்கும் நேரம் சரியா இருந்துச்சு. அவங்களுக்கு என்னை தவிர யாருமே தேவையில்லைங்குற அளவு நிலைமை மாறி போச்சு.  அது தனிக் கதை... இப்போ தேவையில்லை. 

கிட்டத்தட்ட ஏழு வருஷம் கழிச்சு, இந்த வருஷம் தான் நான் மறுபடியும் அந்த வசந்த காலத்துல அடியெடுத்து வச்சிருக்கேன். 

ஆமா நேத்து நான் போன இடம் சுவர்க்கம். அப்படி தாங்க சொல்லணும். அது தான் உண்மையும் கூட... 

அவங்க எனக்கு தூரத்து உறவு தான். ஆனா என்னோட மாமா, சித்தி குடும்பங்கள் எல்லாருமே அங்க குவிஞ்சிருந்தாங்க. எதுக்கு? சும்மா அரட்டை அடிச்சு அப்படியே ஒரு சாயங்கால பொழுதை கழிக்க தான்... 

நான் அங்க போனப்பா இருட்டிடுச்சு. கிட்டத்தட்ட ஏழு மணிக்கு போய் சேர்ந்தேன். பெரும்பாலும் எல்லாருமே அங்க கூடியிருந்தாங்க. கிட்டத்தட்ட முப்பது பேர். அதுக்கும் மேலயே இருக்கும். எண்ண முடியல... தம்பி ஏற்கனவே அங்க போய், சமையல் அறைல பிசி. அங்க அவன் தான் மாஸ்டர் குக். 

அத்தனை பேரும் ஹால்ல உக்காந்து டிவி பாத்துட்டு இருந்தாங்க. நான் போன உடனே ஓ..........ஹோன்னு பெரிய குலவை வரவேற்ப்பு. பெரியவங்க எல்லாம் எழுந்து வந்து கைய புடிச்சுட்டு நல்லாயிருக்கியா?ன்னு நாடிய புடிச்சு கொஞ்சி நலம் விசாரிச்சாங்க. அப்புறமா வா, வந்து உக்காருன்னு சோபால உக்கார சொன்னாங்க. அதுக்குள்ள மாமா பசங்க எல்லாம் அண்ணி இங்க வாங்க, இங்க வாங்கன்னு தரைல அவங்க கூட கைய புடிச்சு இழுத்து உக்கார வச்சுட்டாங்க. 

சரி, டிவில அப்படி என்ன பாத்துட்டு இருந்தாங்க? 

இதுவரைக்கும் நடந்த பாமிலி கெட்-டுகதர், எல்லாரும் சேர்ந்து போன டூர், வீட்டுக்குள்ள பசங்க பண்ணின சேட்டைகள் எல்லாம் போட்டோ எடுத்து வச்சு அத தான் போட்டு பாத்துட்டு இருந்தாங்க. ஒவ்வொரு போட்டோ வரும் போதும் சம்மந்த பட்ட ஆள் பெயர சொல்லி ஒரு ஓஹோ... இதுல பெரியவங்க, சின்னவங்க வித்யாசமே இல்ல, எல்லாருமே அவங்கள மறந்து கூச்சல் போட்டுட்டு இருந்தாங்க. எப்படியும் ஊர் முழுக்க கேட்டுருக்கும். அந்த களேபரத்தையும் ஒருத்தன் போட்டோ, வீடியோ எடுத்துட்டு இருந்தான். 

நேரம் ஆக ஆக தரைல உக்காந்து பாத்துட்டு இருந்த பசங்க, அப்படியே படுத்தாச்சு. அப்படியே கன்னத்துல கைய முட்டுக் குடுத்து, ரசிச்சுட்டு இருந்த அவங்கள நான் ரசிச்சுட்டு இருந்தேன். என் சித்தி பொண்ணு ஒருத்தி, அவ அப்பாவ தரைல உக்கார சொல்லி, அவர் மடில கட்டிபுடிச்சி படுத்துகிட்டா. எனக்கு, நான் அம்மா, அப்பா,தம்பி எல்லாரும் ஒருத்தர் மடில ஒருத்தர் படுத்துட்டு டிவி பாக்குறது தான் நியாபகம் வந்துச்சு. 

டிவி பாத்து முடிச்சுட்டு எல்லாரும் முற்றத்துக்கு நிலா பாக்க போனோம். அங்கயும் முற்றத்துல எல்லாரும் ஒருத்தர் மேல ஒருத்தர் கால் போட்டுட்டு அவங்கவங்க அப்பா அம்மா மடியில தல வச்சி படுத்தாச்சு. இடையிடைல கிண்டல் பண்ற மாமா பசங்கள அடிக்க துரத்திட்டு ஓடுற தங்கச்சிங்க.. அடியே அத்தான அடிக்காத, கட்டிக்கப் போறவன் நான்ங்குற கிண்டல் வசனம்... அப்பா, பாருங்கப்பா, இந்த பய என்னைய கட்டிக்க போறானாம்ன்னு அப்பா கிட்டயே கம்ப்ளைன்ட் பண்ணி சிணுங்கல்கள்... அவன் சொல்றது தானே உண்மைன்னு சீண்டுற அப்பாக்கள்... அம்மாக்கள்...  ச்சே.. சான்சே இல்ல.. இதானே வசந்தம்... 

இங்க யாருமே பெரியவங்களா இல்ல. எல்லாருமே சின்ன பசங்களா தான் இருந்தாங்க. மாமா ஒருத்தங்க, அவங்க தங்கச்சிய கைய புடிச்சு வருடி குடுத்துட்டு இருந்தாங்க. தோள் மேல கைய போட்டு அப்படியே நெஞ்சுல சாய்ச்சு வச்சிருந்தாங்க. புள்ளைங்கள கட்டிகுடுக்குற வயசாச்சு, இங்க பாருயா, சிவாஜியயும் சாவித்திரியையும்ன்னு சித்தப்பா கிண்டல் அடிச்சுட்டு இருந்தாங்க... ஹஹா... 

அப்புறம், சாப்பாட்டு நேரம். ராத்திரி மணி பத்தரை. அப்பா அப்போ தான் வந்து சேர்ந்தாங்க. தம்பியும், இன்னும் சில மாமா பசங்க, பெரியம்மா, சித்தி பசங்க எல்லாரும் சமையல் முடிச்சாச்சு. பரோட்டா, சிக்கன் குருமா, சிக்கன் பொறிப்பு, முட்டை... கூடவே வெஜிடபிள் குருமா, காலிபிளவர் பொறிப்பு வேற. இதான் மெனு. இதுல காமடி என்னன்னா தம்பி சுத்த சைவம். ஆனா அவன் கைப்பக்குவம் இருக்கே... அட அட அட... அசத்திட்டான். 

எல்லாரும் உக்காந்து சாபிட்டுட்டு இருந்தோம். அப்போ இன்னொரு விஷயம் கவனிச்சேன். என் பெரியம்மா பையன், என் அண்ணன், அவனுக்கு கல்யாணம் ஆகி ஆறு மாச கைக்குழந்தை இருக்கு. அண்ணி (அவன் மனைவி) சாப்பிட உக்காந்ததும் ஓடி போய் பக்கத்துல உக்காந்துகிட்டான். என்ன வேணும்ன்னு கேட்டு கேட்டு வாங்கி குடுத்தான். சில பேர் இத சாப்பிடு, அத சாப்பிடுன்னு ஓவர் பாசத்துல சாப்பிட வைப்பாங்க, ஆனா இவன் வித்யாசமா கேட்டு கேட்டு வாங்கி குடுத்தது எனக்கு ஆச்சர்யமா இருந்துச்சு. குழந்தைய தூக்கி வச்சுட்டு அவங்க சாப்பிட்டு முடிக்குற வரை கூடவே இருந்து பாத்து ரசிச்சுட்டு தான் இவன் சாப்பிட ஆரம்பிச்சான். ஹஹா இத எல்லாம் நம்ம பசங்க கவனிச்சா சும்மா விடுவாங்களா.... ஓஹோ.... தான்.... அண்ணி முகத்துல வெக்கத்த பாக்கணுமே... 

அப்படியும் இப்படியுமா கிண்டலும் சந்தோசமுமா வீடு வந்து சேர்றப்போ மணி பனிரெண்டு மேல ஆகிடுச்சு. இருமலும் காய்ச்சலும் சேர்ந்துடுச்சு. ஆனாலும் இது இதோட முடிஞ்சு போற விசயமும் இல்ல... இதோ இன்னிக்கி மாமா பையன் ட்ரீட் குடுக்குறான். போயே ஆகணும்ல.... எப்படி விடுறது? கிளம்பிட்டோம்ல... 

இந்த உறவுகள் அமைய என்ன வரம் வாங்கி வந்தோம் சாமி... அவ்வ்வ்வ் கண்ணு வேர்க்க ஆரம்பிச்சுடுச்சு. நான் இன்னொரு நாள் வரேன்... 
.
.