Friday 30 November 2012

பித்துக்குளி மனம்...!

நடுநிசி தாண்டி நீண்டுக் கொண்டிருக்கிறது
உனக்கும் எனக்குமான ஊடலும் கூடலும்...!

சுவற்று பல்லியின் தடதடக்கும் சத்தம்
என்னை அரைமயக்கத்திலிருந்து விடுவிக்க செய்கிறது...!

உன்னைப்பற்றிய நியாபகங்கள்
தெளிவில்லாத புகைமூட்டமாய் என்னை சுற்றி
என் மூச்சு திணறவைத்து வேடிக்கை காட்டுகின்றன...!

நீ யார்? எப்படிபட்டவன்? எங்கிருக்கிறாய் நீ?
உன் குணம் தான் என்ன?
நல்லவனா? கெட்டவனா?
இதுவரை நான் யாதுமறியேன்...!

எங்கிருந்து வந்து
திடீரென என் மன சஞ்சலத்துள்
முழுதாய் நிறைத்துக்கொண்டாய்?

என்னை உன்னிடத்தில் ஈர்த்தது என்ன?
யோசித்து யோசித்துப் பார்க்கிறேன்...
விடைகள் சிறிதும் இரக்கமின்றி
தலைக்குள் தட்டாமாலை சுற்றுகின்றன...!

உன்னை பற்றிய நியாபக அலைக்குள்
வெறுப்புகளே அதிகம் மண்டிக்கிடக்கின்றன...!
பிடிக்கவில்லை என்று சொல்ல
ஆயிரம் காரணம் தெரிந்த எனக்கு
உன்னை நேசிக்க காரணமே இல்லாமல் போனதேனோ?

விருப்பக்காரணங்கள் ஏதுமின்றி
உன் இதயச்சுவரை உரசிப்பார்த்தவன்
எப்படி நானாயிருக்க முடியுமென்று
கேள்விகள் கேட்டுத்துளைத்தெடுக்கிறாய்...!
உன்னால் மீண்டும் கீறப்பட்டு ரணமான மனதில்
அதிகமாகவே இன்னும் வியாபிக்க துவங்குகிறாய்...!

யார் “டீ” போட்டு அழைத்தாலும்
அவர்களுடன் கலிங்கப்போர் நடத்தும் நான்,
அதை உச்சரிக்காத உன் உதடுகளை வெறுக்கிறேன்...!

“எங்கடி போயிட்ட” என்ற
உன் தவிப்பில் காதல் உணரும் நான்,
“சொல்லுங்க” என்ற உன்
மறுவார்த்தையில் மிரண்டு தான் போகிறேன்...!

என்னை தவிக்கவிடுவதன்
காரணங்கள் கேட்டாலும் சொல்லுவதில்லை
“இவன் இப்படித்தான்” என
உதடு பிதுக்கி கைகள் விரிக்கிறாய்...!

விரித்த உன் கைகளுக்குள்
அடைக்கலம் தேடி நான் தவித்திருக்க...
மறுபடி “வாடி என் தங்கமே” என அணைத்துக்கொள்கிறாய்...!

மனக்கண்ணாடியில் உன்னை நான்
பார்த்துக்கொண்டிருக்கிறேன்...
என்னைப் பற்றிய உன் எண்ணம் என்னவென கேட்கிறாய்...!
“உன்னை எனக்கு பிடிக்கவில்லை
அதை விட அதிகமாக பிடித்திருக்கிறது”
பித்துக்குளியாய் பிதற்றிக்கொண்டிருக்கிறேன் நான்...!

2 comments:

  1. ரசிக்க வைக்கும் வரிகள்...

    ReplyDelete
  2. நல்ல கேள்வி.,நிச்சயம் நானில்லை யென நினைக்கிறேன்

    ReplyDelete