Sunday 23 February 2014

சக்தியும் கார்த்திக்கும்


சக்தி- இந்த பெயர நினச்ச உடனே எனக்கு சந்தோசம் துக்கம்ன்னு மாறி மாறி தொண்டை அடைக்குது.

அவன் இப்போ இல்லன்னு ஆன உடனே எல்லாருமே எனக்கு ஆறுதல் சொல்ல ரொம்பவே கஷ்டப்பட்டுட்டாங்க...

அதுல சிலர், சக்திக்கும் அவங்களுக்கும் உள்ள தொடர்ப எல்லாம் நினைவு படுத்தி அவங்கள அவங்களே தேத்திகிட்டு என்னையும் ஆறுதல் படுத்தினாங்க.
............................................................................

இதுல முக்கியமா கார்த்திக் என்கிட்ட என்ன சொன்னார்ன்னு பாப்போமா?
.............................................................
காயத்ரியோட குணநலன்களைப் பற்றிய பரிச்சயம் உடையவனாகவும்.. அவரின் அக்கறைக்குரியவனாகவும் இருப்பதின் காரணத்தாலே...

இந்த நாளோட வருத்தத்தை உங்கள் எல்லாரையும் போல வெளிக்காட்டிக்கொள்ள வாய்ப்பில்லாதவனாய் மௌனப்பட்டுக் கொண்டேன்.

வீட்டு வாசல்ல ஒரு அணில் இறந்துடுச்சு மக்கான்னு காயு சொன்ன போதும் வருத்தப்படாதேன்னு ஓரிருவார்த்தையில் சமாதானப்படுத்திவிட்டேன்.

மறுநாள் ஒரு குட்டி அணில் தன் தாய் செய்து வைத்த கூட்டிலிருந்து தவறி விழுந்துட்டு மக்கா... என்கூடவே இருக்குன்னு ஆனந்தப்பட்டு அதற்கு பெயர் வைக்கக் கேட்டாள்...

ஆணா பெண்ணா என்று தெரியாத அணிலுக்கு சக்தி எனப் பொதுப்பெயரிட்டேன். உண்மையாகச் சொல்வதெனில் காயுவுக்கு முழுக்க முழுக்க சக்தி ஒரு சக்தி டானிக்.

அவனோடான செல்லச்சீண்டல்கள், கீச்சுக்குரலொலின்னு தனக்காக ஒரு உலகத்தையே வடுவமைச்சுகிட்டாங்க...

அப்போதே ஒரு பயம் இருந்தது.. தன் சுயத்தின் பெயரால் அவன் மரங்களையும் வேர்பட்டைகளையும் தேடி இடம்பெயர்ந்துவிட்டால் எப்படித் தாங்கிக்கொள்வாள்... தாயில்லாப் பிள்ளைகளைச் சமாதானப் படுத்துவது அத்தனைச் சுலபமில்லை.

அதிலும் அன்பின் முழுமொத்த உருவமாகி நிற்குமிவளை எப்படிச் சமாதானப்படுத்தவோ! அதனாலேயே எனக்கான ப்ரியத்தை வெளிக்காட்டாமல் அவளது செல்ல சக்தியை... சமைத்து தின்பேன் பாரெனச் சீண்டிவைப்பேன்.

என் பிள்ளை இவனடா! என்றோடுவாள்.

நல்லவேலையாக காலம் சக்திக்கு ஒரு வலிகளற்ற மரணத்தை காயத்ரியினது கரங்களிலே தந்துவிட்டிருக்கிறதென்று சமாதானம் கொள்கிறேன்.

ஒரு வேளை அவன் தொலைந்து போயிருந்தால்.. முடிவுகளற்ற காரணங்களாலேயே பாவம் களைத்துப் போயிருப்பாள்.

உன் அப்பாவை நினைத்து எனக்கு பொறாமையுணர்ச்சி எழுகிறது பெண்ணே!

தக்கலைக்குப் போய்க் கொண்டிருந்த மனிதருக்கு தகவல் சொன்னதும் மருத்துவரை அழைத்துக் கொண்டு வந்து பரிசோதிக்கச் செய்தாராமே...

போகட்டும் அணிலென்று விடும் அப்பாவின் மகளாக நீ பிறந்திருக்கவில்லை என்பதே ,நீ உயிர்களிடத்து கொண்ட பிரியத்தின் காரனத்தை புரிதலாக்குகின்றது.

சக்தி! அவன் பெயரில் பெரும் அன்பும் பாசமும் எனக்குண்டு... stuart little - பார்த்துக்கொண்டிருந்தவன் நம் சக்திக்கும் இப்படி உடை நெய்யக் கேட்டேன் நினைவிருக்கிறதா உனக்கு...

நாம் கேட்டால் செய்யமாட்டான் நீயே கேளென்று கிரிதரனிடத்தில் ஸ்டூவர்ட் லிட்டில் போல் சக்தி லிட்டில் என அட்டைப் படம் வடிவமைக்க அறிவுறுத்தினதெல்லாம் அவன் மேலுள்ள அன்பின் பெயராலென கொள்வாய்.

போ பைத்தியமே! உன்னை சமாதானமே செய்ய முடியாதென்பது எனக்குத் தெரியும்.. ஆயினும் வேடிக்கையாய் உனக்கு ஆறுதல் கூறிக்கொண்டிருந்தேன். நீயும் அமைதிப்பட்டு திடமானவளாய் நடித்துக்கொண்டிருந்திருக்கிறாய்.

கைகள் நடுங்கியதாய் எழுதி கரைந்தழுகிறாய்.. கண்கள் இருளடைந்து கட்டாந்தரையில் நினைவுதப்பி மயங்கி விழுந்த பேதையே உனக்கான ஆறுதல் நிச்சயமாய் என்னிடமில்லை ஆகையால் அழுது தீர்த்துவிடு.

என்ன பெண்ணிவள் இப்படி இருக்கிறாள்  என விமர்சிப்பவர்கள் விமர்சித்துவிட்டுப் போங்கள். அதுபற்றி கவலையில்லை.. இங்கே சக்திக்கு மட்டும் தான் புரியும் காயத்ரி என்று ஒரே ஒருத்திதான் உலகில் இருக்கிறாள் என்பது..

எனக்கொரு சின்ன திருத்தமும் உண்டு.. அதாவது...
இயற்கையோடு வாழும் உயிர்கள் நம்மோடு வாழும் போது பூரணவாழ்வைப் பெறமுடியாது அல்லது.. அதன் தன்மையிலிருந்து விலகிய வாழ்க்கையில் அதன் சுயம் இழக்கப்பட்டுவிடுமென்று..

இந்த விஞ்ஞான அஞ்ஞான விளக்கங்களில் எல்லாம் நம்பிக்கை கொள்ளாதே காயத்ரி.. உனக்கு தெரியும்ல சக்திக்கும் உனக்குமான உறவு.. இந்த விஞ்ஞானம் பச்சைப் புல்லில் இருக்கும் மாங்கனீசு பசுவின் உடலில் பாலாகி எப்படி கால்சியம் வருகிறது என்னும் கேள்விக்கு மாட்டை அறுக்கச்சொல்லும்..

அதற்கு உணர்வுகள் பற்றிய எந்த தெளிவும் இருக்கப் போவதில்லை... தெரியப் போவதுமில்லை. 
சக்தி சம்பாதித்து வைத்த மனிதர்கள் மீதெல்லாம் எனக்கு ஆச்சர்யங்களூக்கு அப்பாற்பட்ட கருணை மேலெழுகிறது. புகைப்படத்திலேயும், எழுத்துக்களின் சிலாகிப்பிலேயும் கண்டுணர்ந்த ஒரு உயிரிடத்தினில் நீங்கள் செய்த அன்பு... வார்த்தைகளின் விவரனைக்குள் அடங்காதது.

கவலையே கொள்ளாதேயுங்கள் சக்தியினை புதைத்த மண்ணீலே தென்னங்கன்று ஒன்று நட்டு வைத்திருக்கிறோம்.. நாளையே அது வானுயர வளர்ந்து கெழுந்ததும் அதன் மீதிலேறி விளையாடும் அணில்களெல்லாம் அவன் சாயலில் நீடூழி வாழ்கும்...

சியர்ஸ்... காயு...
...........................................................................

சக்தி, உனக்காக இங்க பிரார்த்தனை பண்ண நிறைய பேர் இருக்காங்கடா... நீ எங்கள விட்டுட்டு போயிருக்க வேணாம் செல்லம்...


4 comments:

  1. மனதின் நினைவுகளுக்கு ஆறுதல் சொல்ல விஞ்ஞானத்திற்கு சக்தி இல்லை... உங்கள் எண்ணங்களுக்கு நிச்சயம் பலன் தரும் சக்தி உண்டு...

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்ம் நினைவுகள் மட்டும் தான் இனி பலம் கொடுக்கும் அண்ணா

      Delete
  2. எல்லா உயிர்களுக்காகவும் இதயக்கதவை திறந்தே வைத்திருக்கும் எளிமையான உயிர்கள் உணரும் வலி மிகவும் அடர்த்தியானது...என்ன செய்வது...இழப்புகள் நம்மை எப்போதும் இனம்கானாத இயலாமையில் விட்டுச்செல்கிறது.

    ஒரு உயிரின் மீதான அன்பை அனைத்து உயிர்களின்மீதும் படரவிட்டு நகர்ந்துகொண்டே இருப்போம்.

    ReplyDelete
    Replies
    1. அண்ணா, புரியுது.... கொஞ்ச நாள்லயே என்னோட உள்ளங்கை அவனை தேட ஆரம்பிச்சுடுச்சு.... அவனுக்காக விரல மடக்க கூட செய்யாம வலிக்க வலிக்க விரிச்சு வச்சிருப்பேன். அவன் அதுல படுத்து தூங்க

      Delete