Tuesday 17 June 2014

இளவரசியும் தவளையும்


ஒரு நாட்டுல ஒரு இளவரசி இருந்தா. ஒரு நாள் அவ வழக்கம் போல அரண்மனை தோட்டத்துல விளையாட போனா. அரண்மனை தோட்டம்னா சும்மாவா? ரோஜாக்களும், பவள மல்லிகை கொடிகளும் அரண்மனை தோட்டத்தையே அழகாக்கி இருந்துச்சு. அங்க இருந்த குளத்துல வெள்ளை தாமரையும், சிகப்பு அல்லியும் கூடுதல் அழக குடுத்தன.

இளவரசி அவ தோழிகளோட சந்தோசமா இருந்தத பாத்த ஒரு தவளை தானும் அவ தோழியா ஆகணும்ன்னு ஆசப்பட்டுச்சு. அது தத்தி தத்தி இளவரசி முன்னால வந்து நின்னுச்சு. இளவரசியும் அந்த தோட்டத்து தவளைய அரண்மனைக்கு கொண்டு போனா.  

அரண்மனைக்குள்ள போன உடனே இளவரசிக்கு வேண்டியவங்க எல்லாருக்கும் தவளைய அறிமுகப்படுத்தினா. தோட்டத்துல தனியாவே இருந்த தவளை அரண்மனைல எல்லார் கூடவும் சந்தோசமா இருந்துச்சு. இளவரசியோட தோழிங்க எல்லாம் அதுக்கும் தோழி ஆகிட்டாங்க.

இப்படி எல்லாமே நல்லபடியா போயிட்டு இருந்தப்போ, ஒரு நாள் ராத்திரி இளவரசி தவளை க்ராக் க்ராக்ன்னு கத்துறத கேட்டுட்டா. அந்த சத்தம் வித்யாசமா இருக்கவே, இது மாதிரி நாமளும் பாட கத்துகிட்டா என்னன்னு இளவரசிக்கு தோணிச்சு.

இளவரசிக்கு அந்த யோசனை வந்த உடனே, தவளைக்கும் ரொம்ப சந்தோசம். இளவரசி முன்னாடி க்ராக் க்ராக்ன்னு அதிகமா கத்த ஆரம்பிச்சுடுச்சு. இளவரசியும் தவளை கத்துன சத்தத்துல சில வார்த்தைகள எடுத்துகிட்டு அழகழகான பாட்டுக்களா பாட ஆரம்பிச்சுட்டா. ரொம்ப சீக்கிரமே நாடு முழுக்க இளவரசியோட பாட்டு பிரசித்தி ஆகிடுச்சு.

இளவரசிக்கு கிடச்ச பாராட்டுக்கள கண்ட தவளைக்கு பொறாமை வர ஆரம்பிச்சுடுச்சு. நம்ம கிட்ட இருந்து பாட்டு கத்துகிட்டு இப்போ இந்த இளவரசி பிரபலமாகிட்டாளேன்னு மனசுக்குள்ள பொரும ஆரம்பிச்சிடுச்சு. அப்படியே இளவரசியோட தோழிகள் கிட்டயும் புலம்ப ஆரம்பிச்சுடுச்சு. போக போக தனிமைல சத்தம் போட்டு கூப்பாடு போடவும் ஆரம்பிச்சுடுச்சு.

இத கேட்ட இளவரசி தவளையோட அறியாமைய நினச்சு வருத்தப்பட, இளவரசியோட நல்ல தோழி, இளவரசிக்கிட்ட ஒரு விஷயம் சொன்னா. அது என்னன்னா, கத்துறதும், புலம்புறதும் தான் தவளையோட இயல்பு. அத தாண்டி அது வெளில வராது, வரவும் தெரியாது. ஆனா தன்னால தான் எல்லாமேங்குற அறியாமை மட்டும் இருந்துட்டே இருக்கும். குளத்துல இருந்த தவளைய அரண்மனைக்கு கொண்டு வந்தது தப்பு, அத குளத்துலயே விட்டுருங்கன்னு.

இளவரசிக்கு பாவமா இருந்தாலும் அது தான் சரின்னு பட்டுச்சு. தவளைய கொண்டு போய் குளக்கரைலயே விட்டுட சொல்லிட்டா.
இளவரசி மேலும் மேலும் தன்னோட திறமைய வளத்துக்குறதுல கவனம் செலுத்த ஆரம்பிச்சிட்டா.

தவளையோ, இளவரசி தனக்கு துரோகம் செய்துட்டதா புலம்பி புலம்பி அந்த குளக்கரைலயே காலத்த ஒட்டிச்சு. தவளை கூட இருந்த வம்பு பேசுற தோழிகளும் வேற வம்பு கிடைச்சதும் தவளைய விட்டுட்டு போய்ட்டாங்க. இப்போ எல்லாம் தவளை கத்துரதே இல்ல...


என்ன செல்லங்களா, இந்த கதைல இருந்து நாம என்ன தெரிஞ்சுக்க விரும்புறோம்னா, நட்புங்குறது பொறாமைப்படுறது இல்ல. அப்படி பொறாமை பட்டா அது நல்ல நட்பே இல்ல. அதே மாதிரி திறமைங்குறது யார் கிட்டயும் கத்துகிட்டு வர்றதில்ல, அது அவங்கவங்க உள்ளிருந்து வர்றது. தவளை கத்துன மாதிரியே கத்திகிட்டு இருந்தா இளவரசியை பைத்தியம்ன்னு சொல்லியிருப்பாங்க. தவளையோட கத்தல் கூட தன்னோட கற்பனையையும் சேர்த்து இளவரசி பாடினதால தான் அவளால நல்லா வர முடிஞ்சுது. அதனால நண்பர்கள் பாத்து எப்பவும் பொறாமை படவே கூடாது, தலைக்கனமும் கூடாது, சரியா... இல்லனா தவளைக்கு நேர்ந்த மாதிரி தனியாவே புலம்பிட்டு இருக்க வேண்டியது தான். கவனிக்க யாருமே இருக்க மாட்டாங்க... 

5 comments: