Tuesday, 1 July 2014

திருவிழா பாக்க போவோமா?


 
இன்னிக்கி எங்க போறது?

பேசாம ஒரு திருவிழா கூட்டத்துக்குள்ள புகுந்துடுவோமா?

 நம்ம ஊருல திருவிழானாலே அசத்தல் தானே... இப்போ திருவிழா நடக்குதான்னு எல்லாம் கேக்கக்கூடாது, நாம போகணும்ன்னு முடிவெடுத்தாலே கண்டிப்பா திருவிழா நடக்கும்.


சரி, சரி, தாத்தா, பெரியப்பா, சித்தப்பா, அண்ணா, தம்பி, மாமா, மச்சான் எல்லாரும் வெள்ளை வெளேர்ன்னு வேஷ்டி கட்டிக்கோங்க. உங்க கிட்ட இருந்தா பட்டு வேஷ்டி கூட கட்டிக்கலாம். கழுத்துல மைனர் செயினு, விரல்ல அதிரசம் சைசுக்கு மோதிரம், வலது கைல வாட்சு, இடது கைல பிரேஸ்லெட்... ப்பாஆஆ... அசத்துறீங்க...

அட, இங்க பாருங்க, பெரியம்மா, சித்தி, மாமி, அக்கா, தங்கச்சி பாட்டி எல்லாம் நான் சொல்லாமலே ரெடி ஆகிட்டாங்க. அட, பாட்டி கழுத்துல பாம்படம் அசத்தல். தோள் வரைக்கும் காத வழிச்சு நீட்டி உருட்டி உருட்டி பாம்படம் போட்ருக்காங்க. சைஸ்ச பாத்த உடனே ரொம்ப கனமா இருக்கும்னு நினச்சீங்கனா ஐயாம் சோ சாரி, உள்ள மெழுகு வச்சு அடைச்சி வச்சிருக்காங்க. அடேங்கப்பா, சித்தி கழுத்துல அட்டியல பாருங்களேன், என்னா பெருசு. தங்கச்சி, அது என்ன, நெத்திச்சுட்டி டாலடிக்குது? அதுவும் சிகப்பு கல்லுல... இங்க நம்ம அக்கா மூக்குல வைர மூக்குத்தி... ஆள் ஆளுக்கு அசத்துறீங்க... பட்டுப்புடவை சரசரக்க வேகமா வாங்க....

ஹலோ, அங்க யாரு வந்தவங்கள வேடிக்கை பாக்குறது? போங்க சார், போய் திருவிழாவ வேடிக்கை பாருங்க. ரோஸ் கலர்ல பஞ்சு முட்டாய் இருக்கு, மஞ்ச, சிகப்பு, கருப்புன்னு கலர் கலரா சவ்வு முட்டாய் இருக்கு, சுடச்சுட தேன்குழல் ரெடி. இந்த பக்கம் வாங்க, வலது பக்கம் காரச்சேவு அடுக்கி வச்சிருக்காங்க, இடது பக்கம் இனிப்பு சேவு. ஹைய்யய்யோ அதென்ன, மஞ்சயா, உருண்ட உருண்டையா? அது பூந்திங்க. அப்படியேவும் சாப்பிடலாம், கொஞ்சம் பக்குவப்படுத்தி லட்டு பிடிச்சும் சாப்பிடலாம்.

அந்த கார வகைகள் எல்லாம் எங்க இருக்கு? அதோ, அந்த வருசைல இருக்கு. மிக்சர், சிப்ஸ், கிழங்கு வத்தல், ஹே, அதென்ன, கருப்பட்டி முட்டாய். எல்லாமே அசத்தல்.

இந்தாங்க, அண்ணே, பொம்பள புள்ளைங்கள பாக்காதீங்கண்ணே அவங்க பாட்டுக்கு, வளையல், ஜிமிக்கி, தோடு, சாந்து பொட்டு, நெயில் பாலிஷ், லிப்ஸ்டிக்ன்னு வாங்கி குவிச்சுட்டு இருக்காங்க. நீங்க வேணும்னா உங்க வீட்டு புள்ளைங்களுக்கு வாட்ச்சு, ஸ்டோரி புக், துப்பாக்கி, பலூன், யானை பொம்மை, குதிரை பொம்மை, கார் இப்படி ஏதாவது ஒண்ணு வாங்கி குடுங்க.

 சரி எல்லாரும் வாங்க, கொஞ்ச நேரம் ரங்கராட்டினம் சுத்தலாம். மயிலாட்டம், ஒயிலாட்டம்ன்னு வேடிக்கை பாக்கலாம். அங்க என்ன கூட்டம், அட, கபடி விளையாட்டு நடக்குது. கபடி, கபடி, கபடி..... ஹஹா.... கொஞ்ச நேரம் இங்க நின்னுட்டு அடுத்து சறுக்கு மரம் ஏறுரத பாக்க போகலாம். இல்லனா சின்ன புள்ளைங்களுக்கு முறுக்கு கடித்தல் போட்டியும், பலூன் உடைத்தல் போட்டியும் நடக்குது, அங்க போகலாம். என்னது, பாம்பு படமெடுத்து ஆடுறத பாக்க போகணுமா, ஹையய்யோ நான் வரல, எனக்கு பயம். நீங்க போயிட்டு வாங்க...

 ஹோய்.... அங்க பாருங்க, வான வேடிக்கை.... ஹைய் செமையா இருக்குல. இந்த சரவடி போடும் போது மட்டும் கொஞ்சம் காத பொத்திக்கணும். டம், டமால், டுமீல்... வீட்டுக்கு ஒரு துப்பாக்கியும் ரோல் பட்டாசும் வாங்கிட்டு போகணும். எல்லாரையும் ஹான்ட்ஸ் அப் சொல்லி சுட்டு சுட்டு விளையாடணும்...

 சரி, சரி, சாமி பல்லக்குல ஏறியாச்சு. எல்லாரும் கன்னத்துல போட்டுட்டு பக்தி பரவசத்தோட கும்பிட்டுக்கோங்க... எனக்கு உங்களுக்கு எல்லாம் சுத்தி காட்டின டயர்ட்... ரெஸ்ட் எடுக்க போறேன், வரட்டா....


3 comments:

  1. pathivai padikkumpothu chinna paiyyana irukkumpothu thiruvilavukku pona niyapakam vara chethathu akka. mindum athu pondra nadkal varuma?!

    ReplyDelete
  2. விழாக்கால நினைவுகள் நெஞ்சில் மோதுகின்றன
    நன்றி சகோதரியாரே
    தம2

    ReplyDelete