Monday 28 July 2014

ஆடி அமாவாசை - அம்மாவும் பிரகதியும்


ஆடி அமாவாசை... (26/07/2014)

அன்றைய நாள் ஆசிர்வதிக்கப்பட்டதா தான் கண்டிப்பா இருக்கணும்...

இந்த நாள் மேல எனக்கு அவ்வளவா நம்பிக்கை இல்ல. இந்த உலகத்துல நம்மள தனியா விட்டுட்டு போனவங்களுக்கு தர்ப்பணம் பண்ணினா அவங்க ஆத்மா சாந்தியடையும்ன்னு நம்பிக்கை... ஆனா எனக்கு அம்மாவுக்கு அதெல்லாம் பண்ணனும்ன்னு கொஞ்சம் கூட ஆர்வம் இல்ல. காரணம், என் கூட இருக்குரவள எதுக்கு அனாவசியமா வேறெங்கயாவது அனுப்பி வைக்கணும்?

ஆறு மணிக்கு ரெடியா இரு, வெளில போயிட்டு வருவோம்னு அப்பா சாயங்காலமே சொல்லிட்டு கோவிலுக்கு போயிட்டாங்க. நான் எங்கன்னு எல்லாம் பெருசா கேக்கல... இப்படி எங்கயாவது கூட்டிட்டு போனா, அது பாங்க்ஸ் சிக்கின் (சிக்கன் இல்ல, சிக்கின் தான்) சாப்பிட தான் இருக்கும்னு நானே நினைச்சுகிட்டேன்.

அப்பா கோவில்ல இருந்து வந்ததும் கதவை தட்டி கூப்பிட்டாங்க. ரெடியா தான் இருந்தேன். கடகடன்னு செருப்பை கால்ல மாட்டிகிட்டு வெளில வந்தா ஒரு ஆச்சர்யம். காருக்குள்ள பின் சீட்ல தம்பி. தம்பி மடியில பிரகதி.

ஒரு வேளை ஹாஸ்பிடல் எங்கயாவது போறோமோன்னு ஒரு சந்தேகம். எங்கப்பா போறோம்னு அப்பாவ பாத்து கேட்டேன். நீ வண்டிய எடு. போறப்ப சொல்றேன்னு சொல்லிட்டு அப்பா பக்கத்துல வந்து உக்காந்தாங்க.

கொஞ்ச தூரம் எதுவுமே சொல்லல... எனக்கு பிரகதி எங்க வர்றான்னு ஒரே ஆச்சர்யம். கண்ணாடி வழியா பாத்தா அவ தம்பி மடியில ஜம்முன்னு உக்காந்து இருக்கா. அதே ஜோதிகா பார்வை. அதே கெத்து. அதே புன்னகையும் கூட. எங்க பிரகதி எவ்வளவு அழகு தெரியுமா?

கார் சிட்டி தாண்ட ஆரம்பிச்சப்ப தான் சட்டுன்னு மூளைக்குள்ள ஒரு மின்னல். அம்மாவ பாக்கப் போறோம். அதே தான்...

அப்பா தலைல கை வச்சு முடிக்குள்ள வருடி விட்டாங்க. திடீர்னு மனசெல்லாம் பாரம் ஆன மாதிரி ஆகிடுச்சு. அந்த உணர்ச்சி கலவைகள எப்படி சொல்றதுன்னு எனக்கு தெரியல. ஏனோ ரோட்ல இன்னிக்குன்னு பாத்து ரொம்ப ட்ராபிக். கவனமா தான் வண்டி ஓட்ட வேண்டியிருந்தது.

எனக்கு மனசுல சித்தப்பாவோ, சித்தியோ, இல்ல அவரோட பசங்களோ நியாபகத்துல இல்லவே இல்ல. அதோ அந்த காம்பவுண்ட் திறந்து வீட்டுக்குள்ள போகாம வலது பக்கமா அந்த சிமின்ட் நடைபாதை வழியா நடந்தா நடந்தா, வெறுமையான புறாக்கூடுகளும், லவ் பேர்ட்ஸ் கூண்டுகளும், தண்ணியே இல்லாத மீன் தொட்டியும் வரும். சிகப்பு ஜாக்கெட், வெள்ளை முண்டு உடுத்தின பெண் இடுப்புல இருக்குற குடம் காலியாவே இருக்கும். கவனத்த அங்கெல்லாம் சிதற விடவே கூடாது.

மனம் மின்னல் வேகத்துல வீட்டை கடந்து, அதோ அந்த முள்வேலி தாண்டி, தோப்பு முடிவுல ரோட்டோரமா போய் அம்மாகிட்ட நிக்குது. அந்த தருணம் ஒரு ஆழ்நிலைக்கு சமம். மூச்சை அப்படியே நல்லா உள்ளிழுத்து வெளிய விட்டு பாத்தா, உடம்பு முழுக்க அம்மா வருடுன தடம் பதிஞ்சு போயிடும். போதும், இந்த தருணம் போதும்... இதுக்கு ஈடா வேற எதுவுமே கிடையாது...

கார கொண்டு வந்து காம்பவுண்ட்குள்ள விட்டப்போ நிஜமாவே அங்க யாரும் இருந்த மாதிரி தெரியல. அப்பா தான் இறங்கி போய் கேட் திறந்து விட்டாங்க. நல்லதா போச்சு. காரை பார்க் பண்ணிட்டு, கார் கதவை திறந்து, மனசு நினச்ச மாதிரியே கடகடன்னு கால் நடக்க ஆரம்பிச்சுடுச்சு. அப்பா தம்பி கூட பின்னால நடந்து வராங்க. பிரகதிய தம்பி கைல தூக்கிட்டு வரான்.

அம்மா கிட்ட போனப்போ, அப்படியே மடங்கி உக்காந்துட்டேன். அவள தொடல, அப்படியே அண்ணாந்து அவளையே பாத்துட்டு இருந்தேன். ஏண்டி இப்படி பண்ணினன்னு மனசு கேக்க ஆரம்பிச்சுடுச்சு. அப்பா அம்மாவ தடவி குடுத்துட்டு இருந்தாங்க. தம்பியும் அம்மாவ தொட்டுப் பாத்தான். அப்புறம் பிரகதிய கீழ விட்டுட்டு, எட்டி தாவல்ல இருந்த கிளைய முறிச்சி பிரகதி கிட்ட குடுத்தான்.

பிரகதிக்கு ஒரே ஜாலி தான். கொஞ்ச நேரத்துல ஒரு கொப்பை காலி பண்ணிட்டா. தம்பி அடுத்த கிளையை ஒடிக்க ஆரம்பிச்சான்.

அம்மாவுக்கு கண்டிப்பா வலிச்சிருக்காது. ஆனா அழுதுருப்பா. இதோ, ஈரப்பதத்தோட வீசுதுல, காத்து... அதுல அம்மா கலந்துருப்பா, பிரகதிய ஆரத்தழுவியிருப்பா... இவளும் அவளோட பிள்ளை தானே. என்னை பாத்துக்குற மாதிரி கண்டிப்பா பிரகதிய பாத்துப்பா தானே... அழுதுகிட்டே அம்மாகிட்ட நான் கேட்டது ஒண்ணே ஒண்ணு தான். "அம்மா, பிரகதி எங்களுக்கு வேணும். இன்னும் கொஞ்ச வருஷம் அவள எங்ககிட்ட விட்டு வையேன். ப்ளீஸ்"

தோளை தொட்டு பிரகதிக்கு எது நல்லதோ, அத அம்மா கண்டிப்பா பண்ணுவா. நீ முதல்ல எழுந்து அம்மா கிட்ட போய் இருன்னு அப்பா சொன்னப்ப தட்ட முடியல. எழுந்து அம்மாவ போய் கட்டிபிடிச்சுகிட்டேன். நான் அவளுக்கு முத்தம் குடுத்தப்ப தம்பி பிரகதிய கட்டிக்கிட்டு திரும்பிகிட்டான். கண் கலங்கிட்டானோ என்னவோ?

கொஞ்ச நேரம் அங்க தான் நின்னுட்டு இருந்தோம். பிரகதி அங்கயும் இங்கயுமா ஓடி விளையாடிட்டு இருந்தா. ஒரு பதினஞ்சு நிமிஷம் தான் இருக்கும். இனி இவளை அதிகமா துள்ள விட வேணாம்னு கிளம்பிட்டோம். சித்தப்பா வீட்ல எல்லோரும் எங்கன்னு கேக்கல... கேக்கவும் தோணல... மனச முழுக்க அங்கயே விட்டுட்டு இதோ கார மறுபடியும் நான் தான் ஓட்டிட்டு இருக்கேன்.

போற வழியிலயே சாப்பிட்டுட்டு போயிடுவோம்ன்னு அப்பா சொன்னாங்க. அப்படியே காரை அக்க்ஷயாவுக்குள்ள பார்க் பண்ணி, ரூப் கார்டன் போய் ஆளுக்கு ஒரு தோசை ஆர்டர் பண்ணினோம். கூடவே டொமாட்டோ சாஸ் (எனக்கு மட்டும்), உளுந்தவடை, இன்ஸ்டன்ட் ப்ரூ ஆர்டர் பண்ணினோம். பிரகதிக்கு நாலு இட்லி.

தோசைய கண்டதும், பிரகதி பாய்ஞ்சு போய் தம்பியோட சேர்ந்து திங்க ஆரம்பிச்சுட்டா... அப்பா கூட அவங்க தோசைய அவளுக்கே குடுத்துட்டாங்க. நான் அவளையே பாத்துட்டு தோசைய எடுத்து கைல வச்சுட்டு காத்திருந்தேன். வயிறு நிறைஞ்சுடுச்சு போல. அவ பாட்டுக்கு துள்ளி ஓட ஆரம்பிச்சுட்டா. இன்னிக்கி அந்த ரூப் கார்டன் வந்தவங்களுக்கு பிரகதி தான் பொழுது போக்கு. எல்லாரும் அவளையே தான் பாத்துட்டு இருந்தாங்க. போட்டோ எடுக்க கூட ட்ரை பண்ணினாங்க. ஆனா தம்பி ப்ளீஸ் வேணாம்னு சொல்லிட்டான். அப்புறம், அப்பாவும் தம்பியும் இட்லியும் வடையும் சாப்ட்டுட்டு, கிளம்பும் போதுஆளுக்கொரு ஐஸ்க்ரீம் ஆர்டர் பண்ணினாங்க. மொத்தம் நாலு ஐஸ்க்ரீம். ஆனா பிரகதி சாப்பிடல. ரொம்ப குளிரா இருந்துச்சுல... வாய வச்சுட்டு எடுத்துட்டா. ஆனா நல்லா சப்பு கொட்டிட்டே இருந்தா...

பிரகதியோட ஐஸ்க்ரீம் எடுத்துட்டு வீட்டுக்கு கிளம்பிட்டோம். வீடு வந்து சேர்ற வர பிரகதி ஐஸ்க்ரீம் சாப்பிடல. தம்பி அவளை அவ அம்மாகிட்ட கொண்டு போய் விட போய்ட்டான். நான், இந்தா இங்க வந்துட்டேன்.

அம்மா எது செய்தாலும் நல்லதுக்கு தான் செய்வா. பிரகதி அவளோட பிள்ளை. அவ பிள்ளைய என்ன பண்ணனும்ன்னு அவளுக்கு தெரியாதா? என்னோட இல்லல, நம்மோட பிரார்த்தனைகளும் அவளுக்கு உண்டு தானே... எல்லோரும் அவளை ஆசீர்வதிச்சுட்டு போங்க...

4 comments:

  1. மிகவும் ரசித்த பதிவு! பிரகதிக்கு இல்லாத வாழ்த்துக்களா?!! கண்டிப்பாக உண்டு!

    ReplyDelete
  2. எங்கள் ஆசிர்வாதம் எப்போதும் உண்டு

    ReplyDelete
  3. பிரகதிக்கு வாழ்த்துகள்.!

    ReplyDelete
  4. தத்துவ சிந்தனைகள் : வாழ்க்கை தத்துவம்நீங்கள் கண்டிப்பாக படிக்கவேண்டியவைகள்

    ReplyDelete