Wednesday, 11 March 2015

நான் காயு பேசுறேன்...எப்பவுமே எனக்கு பிடிக்காத, இல்ல பயப்படுற, இல்ல அலர்ஜி ஆக கூடிய வார்த்தைகளோட பயன்பாடுகள கண்டா அந்த இடத்துல இருந்து ஓடிடுவேன்...

அதென்ன அவ்வளவு பெரிய வார்த்தைகள்ன்னு கேக்குறீங்களா?
சாப்ட்டியா, தூங்குனியா, காலேஜ் போனியா மாதிரியான அதீத உரிமைகள்
உடம்பு இப்ப எப்படி இருக்கு, எல்லாம் சரியாகிடுச்சா, பயப்படாத, நாங்க இருக்கோம் அப்படிங்குற அக்கறை வார்த்தைகள்
அச்சச்சோ... ஐயையோ, ச்சோ ச்சோ அப்படியான உச்சுக் கொட்டுற வார்த்தைகள்

இதெல்லாம் சாதாரண வார்த்தைகள் தான? இத பாத்து நான் ஏன் பயப்படணும்னா அதுக்கு காரணம் இருக்கு.... இன்னொரு விஷயம், இந்த வார்த்தைகளுக்கே பயப்படுற நான், அதீத அன்பை பொழியுற உருகுற இடத்துலயும் இருக்கவா போறேன்? கண்டிப்பா மாட்டேன்.... எஸ்கேப் தான்...

சரி, நான் யாரு?

நான் காயத்ரி தேவி.... அப்படின்னு உங்களுக்கு எல்லாம் அடையாளப்பட்டவள். இந்த பேர் மேல எனக்கு தனி கிரேஸ் உண்டு. காரணம் என் அம்மா. என் அம்மா மட்டும் தான் என்னை காயுன்னு கூப்டுவா.... மத்தவங்கள பொருத்தவரைக்கும் ஒவ்வொரு பேரு. வீட்டுல பொதுப் பேரு அம்மு. நண்பர்கள் ஒரு மாதிரி கூப்டுவாங்க, நண்பிகள் ஒரு மாதிரி கூப்டுவாங்க, என்னோட கைட் வேற மாதிரி கூப்டுவாங்க...

ரொம்ப மொக்கப் போடுறேன்னு எனக்கே தெரியுது, இந்த பெயர் காரணம் ரொம்ப முக்கியமா என்ன?

என்னோட ஸ்கூல் லைப் நான் வரமா வாங்கிட்டு வந்த கிப்ட்ன்னு சொல்லலாம். அவ்வளவு சந்தோசம், அவ்வளவு ஆட்டம், அவ்வளவு அனுபவங்கள். என் வயசு பசங்க சினிமா போவாங்கனா எங்க குரூப் ஏதாவது கிராமத்துக்கு போவோம். நாங்க பேசாத சப்ஜெக்ட் கிடையாது. முக்கிய சப்ஜெக்ட் குடும்ப கட்டுப்பாடு பத்தினதா இருக்கும், கூடவே எயிட்ஸ், ப்ளட் டொனேசன், மது விலக்கு பத்தி மக்களோட மக்களா கலந்துப்போம். வயசுக்கு மீறின சிந்தனைகள், பேச்சுன்னு அப்பவே ரொம்ப சுத்துவேன். என்னோட பாட்டி சொல்லுவாங்க, இந்த பொண்ணு என்ன இப்படி அதீத வளர்ச்சியோட இருக்குன்னு.

எல்லாத்துக்கும் திருஷ்டி பொட்டு வைக்குற மாதிரி ப்ளஸ் டூ முடிச்சுட்டு காலேஜ் சேர்ந்து பத்து நாள் இருக்கும். சர் சர்ன்னு டூ-வீலர்ல பறந்துட்டு இருந்த காலம். ஒரு சின்ன ஆக்சிடென்ட்.

எதுக்கும் இருக்கட்டுமேன்னு தலைல ஒரு ஸ்கேன் எடுத்துப் பாத்துருவோம்ன்னு அம்மா சொல்ல, அடுக்கடுக்கா அதிர்ச்சி தாக்க ஆரம்பிச்சிடுச்சு.

நான் எப்பவுமே ஒரு அடாவடி. எனக்கு நானே பரிதாபப்பட்டுக்குறதுனா என்னன்னு எனக்கு தெரியாது. ஆனா இந்த அனுபவம் புதுசா இருந்துச்சு. செத்துப் போய்டுவேனோங்குற பயம். பதற்றம். அம்மா தான் கேட்டா, ஏன் செத்துப் போனா என்னத் தப்பு? சந்தோசமா செத்துப் போன்னு தைரியம் குடுத்தவ அவ தான்...

மாலிக்நன்ட் ப்ரைன் ட்யூமர். இந்த சினிமால எல்லாம் சொல்லுவாங்க, இன்னும் மூணு இல்ல ஆறு மாசம் தான்னு. அத கேக்குறப்ப என்னமோ பெரிய ஜோக் கேட்ட மாதிரி சிரிச்சிப்போம். ஆனா நிஜ வாழ்க்கைல கேக்கும் போது எனக்கு அம்மாவோட உள்ளங்கை மட்டும் தான் தேவைப்பட்டுச்சு. ராத்திரி நேரங்கள்ல அம்மா முதுகோட சேர்த்து அணைச்சிருப்பா. அது மாதிரியான சொர்க்கம் கிடைக்கவே கிடைக்காது, இந்த ராத்திரி கடைசி ராத்திரியா இருந்துரட்டும்னு நிறைய நாள் நினைச்சிருக்கேன்.

சர்ஜரி பண்ணினா பொழைக்க 20% சான்ஸ் இருக்கு, அதுவும் ஒரு வருசத்துக்கு தள்ளிப் போடலாம்னு டாக்டர்ஸ் சொன்னப்ப, நிறைய பேர் வேணாம்னு சொன்னாங்க. அம்மா தான், செத்தா இன்னிக்கே செத்துப் போ, இல்லனா என் புள்ளையா திரும்பி வான்னு சொன்னா... அவளுக்காக தான் நான் திரும்பி வந்தேன்னு சொன்னா, அது உண்மை தான்னு ஒத்துப்பீங்க தானே...

அப்புறமா வந்த ரேடியேசன், கீமோன்னு ஒரு வருஷம் வலி, வலின்னு வலிகளோடவே என்னை பழக்கி விட்டுடுச்சு. அதிதீவிரமா தலை வலிக்கும், கண்ணு சரியா தெரியாது, ஒரு மாதிரி வாமிட், கிடினஸ்... வெயில்-ல போகவே முடியாது. இத எல்லாம் தாண்டி நான் மறுபடியும் முதல்ல இருந்து காலேஜ் போனேன்.

எனக்கு பிடிச்ச விஷயங்கள்ல அதிதீவிரமா ஈடுபடுவேன். எனக்கான டார்ஜெட்கள நானே உருவாக்கிப்பேன். இதான் நான், என்னால எல்லாமே முடியும், முடியாதுங்குறது என் அகராதியிலயே இருக்கக் கூடாது. அத்தனை கஷ்டங்கள்லயும் கூட இருந்தது என்னோட அப்பா, அம்மா.... எனக்கான முழு சுதந்திரம் எனக்கு இருந்துச்சு. காலைல வெயில் ஆரம்பிக்குறதுக்கு முன்னாடி காலேஜ் போய்டுவேன். சாயங்காலம் அஞ்சரை, வெயில் தாழ்ந்த பிறகு வீட்டுக்கு வருவேன். அந்த நேரம் காலேஜ் லைப்ரரி நிறைய யூஸ் பண்ணுவேன். நிறைய கத்துப்பேன். கார் டிரைவிங் எனக்கு ரொம்ப பிடிச்ச ஒரு விஷயம். சர்ர்ர்ர்ர்ர்ன்னு அதி வேகத்துல பறப்பேன்.

அப்புறம் மறுபடியும் தலைவலி. கழுத்து பின்பக்கமா நீர் கோர்த்துக்கும். மறுபடியும் வேர்கள் முளைக்க ஆரம்பிச்சிடுச்சு. இந்த தடவ சர்ஜரி இல்ல... ஆனா கீமோ எடுக்க வேண்டியதா போச்சு. அப்படி இதுவரைக்கும் மூணு கீமோ.... ஓவர் ஓவர்....

இதனால நிறைய சைட் எபக்ட். நியாபக மறதி. திடீர்னு ஒரு விசயத்த பத்தி பேசிட்டு இருப்பேன். அப்படியே மறந்துடுவேன். கேட்டுட்டு இருக்குறவங்க கிட்டயே என்ன, என்னன்னு திரும்ப திரும்ப கேப்பேன். கால்-ப்ளேடர்ல கல்லு சேர்ந்து, அத வேற ஒரு சுப வேளை சுப தினத்துல படக்குன்னு புடுங்கி எறிஞ்சாச்சு. அடுத்த டார்ஜெட் கர்ப்பப்பையா இருக்க, அது வேணும் இருக்கட்டும்னு மயக்கம், ப்ளீடிங், வலின்னு எல்லா மாசமும் அதிதீவிரமா போராடிட்டு இருக்கேன்.

நான் பொழைக்கவே மாட்டேன்னு வலி ஜீரணிக்க டாக்டர்ஸ் எனக்கு ட்ரக்ஸ் யூஸ் பண்ண சொல்லுவாங்க. அது ஏனோ, ரொம்ப பிடிவாதமா அத தள்ளி வச்சுட்டே வந்துருக்கேன். நாலஞ்சு தடவ எடுத்துருக்கேன்ங்குறது தனிக் கதையா இருந்தாலும் அதுல இருந்து வலுகட்டாயமா மீண்டுருக்கேன்.

கோபம், ஹிஸ்டீரியா எல்லாத்தையும் கடந்து இப்ப தான் கொஞ்சம் கொஞ்சமா என்னை மீட்டுட்டு வர்றேன். இப்ப எல்லாம் வலினா என்னன்னு எனக்கு தெரியல... வலிக்குற நேரத்துல மட்டும் தான் கொஞ்சம் அழுக வருது, ஆனா அப்புறம் அத நினைச்சுப் பாத்தா அது ஒரு தனி ஜாலி.

இத எல்லாம் நான் ஏன் இப்ப சொன்னேன்? எனக்கே தெரியாது. உக்காந்தேன், எதோ ஒரு தீவிரத்துல டைப் அடிச்சேன், பேஸ் புக்ல போஸ்ட் பண்ணினேன். அவ்வளவு தான்... ஆனா இப்ப இத இங்க ப்ளாக்லயும் போஸ்ட் பண்ண ஒரு காரணம் இருக்கு. இனி நான் கடந்து வந்த பாதைகள உங்க கூட பகிர்ந்துக்க முடியும். வாசிக்குரவங்களுக்கு ஒரு தன்னம்பிக்கைய குடுக்க முடியும்... அதனால தான் என்னை பத்தி தீவிரமா பேசாம இருந்த நான் பேச ஆரம்பிச்சதா நினைச்சுக்குறேன்...

அப்புறம், எனக்கு அனுதாபங்களோ, ஆறுதலோ தேவையில்லைன்னு மறுபடியும் சொல்லிக்குறேன். காரணம், என்னோட சூல்நிலைகள, நான் ஈசியா கடந்து வந்துடுவேன், ஆனா இந்த வார்த்தைகள் சுருக்குன்னு முட்டுக்கட்டை போட்டுடும் அதனால தான்... ஏன் எதுக்கு இவளோட பதிவுகள் இப்படி இருக்கு, இவ என்ன சொல்ல வர்றான்னு நீங்க குழப்பிக்காம இருக்குறதுக்காக மட்டுமே இந்த பதிவு...

மத்தப்படி இதே அன்பு போதும், இதே விளக்கங்கள் போதும், வேற எந்த கேள்வியும் கேட்டுடாதீங்களேன் ப்ளீஸ்...
.


.

15 comments:

 1. வேறு எந்த கேள்வியும் கேட்கவில்லை சகோதரியாரே
  தம 2

  ReplyDelete
 2. உங்கள் மன உறுதியே உங்களுக்கு துணை...

  என்றும் அன்புடன்...

  ReplyDelete
 3. our best wishes கயா. எங்க வீட்டு காயத்ரியை இப்படித்தான் கூப்பிடுவோம். அதனால் ...

  உங்க உடல்நலக்குறைவுகளும் இனி கதம் ஹோ கயா!

  ReplyDelete
 4. அன்பு கயூ, நீ நிலைத்து நீடுழி வாழ வாழ்த்துகள் மா.உன்னிடம் இருந்து படிக்க நிறயா பாடங்கள் இருக்கு

  ReplyDelete
 5. வாழ்த்துகள் காயத்ரி. வாழ்வாங்கு வாழ்வீர்கள்!

  ReplyDelete
 6. வணக்கம்
  பாரதி கண்ட புதுமைப் பெண் அல்லவா.... வாழ்க வளமுடன் த.ம 4

  என்பக்கம் கவிதையாக வாருங்கள் அன்புடன்
  ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: சிறகடிக்கும் நினைவலைகள்-8:

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 7. oru china Accident nu soli oru novela eluthetega. oru vaaram yoga class pooi paakalam virupam irutha.

  ReplyDelete
 8. I have visited your blog many times. Quite interesting. many times i feel that you are talking to me personally. Especially your sakthi the squirrel episode, really superb. I too have one squirrel as my friend. it came to my place daily to eat the kolam. If I get up late, he( I think, he) will shout..
  But this one, no nothing to say, you have enough of courage that too in tons. Love you ma

  ReplyDelete
 9. எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது
  எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கும்
  எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்............

  ReplyDelete
 10. இதே மனவுறுதியுடன், மகிழ்வாக இருங்கள்.

  ReplyDelete
 11. சவால் நிறைந்த வாழ்க்கையை எதிர்கொள்ளும் உங்கள் மனத்திட்பத்துக்கும் அந்த சாதுர்யத்தைக் கற்றுத்தந்த அம்மாவுக்கும் என் மனங்கனிவான வாழ்த்துகள் காயத்ரி.

  ReplyDelete
 12. இப்படியொரு அதிர்ச்சி செய்திய சொல்றீங்க .நீங்கள் சொல்வது பொய்யாகப் போக வேண்டுகிறேன்.
  நூறு சதவீதம் நிச்சயம் குணமடைவீர்கள்.உங்கள் மன உறுதி உங்களை நலமடைய செய்யும்

  ReplyDelete
 13. பதிவை படிக்கும் போது மனம் கனத்தது, ஏதேதோ எழுத நினைத்தேன். ஆனால், கடைசி வரிகளை படித்ததும்.. அத்தனையும் மனதுக்குள் புதைத்துக் கொண்டேன்.

  இருந்தாலும் சொல்கிறேன், சின்ன வலியைக்கூட தாங்கிக் கொள்ள முடியாத அளவிற்கு சுகபோகமாக வளரும் இன்றைய தலைமுறைக்கு உங்களின் வலி மிகப் பெரிய பாடம்.

  ReplyDelete
 14. சகோ வணக்கம்.

  தங்களின் தன்னம்பிக்கை வியக்க வைக்கிறது.

  என் நெருங்கிய உறவொன்று இதே போல் பாதிக்கப்பட்ட போது நொறுங்கிப் போனேன்.

  கண்முன் தெரிவன யாவும் என்னை எரித்த புகையாய்த் தோன்றிய கணங்கள்.

  ஆறுதல் என்ற பெயரில் இன்னும் அழச்செய்த நாவுகளை அறுத்தெறியத் துடித்த வன்மம்.

  பாவம் என்ற கருணையின் சில்லறைகளை ஏந்தாத என் தட்டுகளில் இட்டு, ஒரு கணம் என்னைப் பிச்சைக்காரனாக்கிவிட்டுப் பின் போய், யாருக்கு என்ன செஞ்சானோ இப்ப அனுபவிக்கிறான் என்று தூற்றி உமிழ்ந்த தருணங்கள்.

  யாவும் கடந்து போயின.

  இந்த உங்களின் நெஞ்சுறுதி அன்று எனக்கில்லை.

  ஆனால் இருப்பதாய்க் காட்டினேன்.

  துயரத்தை வலியை எதிர்கொண்டேன்.

  என்னிடம் இல்லா மன உறுதியைப் பாதிக்கப்பட்ட உறவிற்குக் கொடுத்தேன்.

  அவ்வலியை நான் ஏற்பதாக இரந்தேன்.

  என்னுடைய தனிப்பட்ட விடயங்களை நான் இது போல் பகிர்தல் இல்லை.

  ஆனாலும் உங்களின் பதிவு என்னை ஊடுருவுகிறது.

  மருத்துவ அறிக்கையினைப் பொய்ப்பித்துப் பத்தாண்டுகளுக்கு மேலாயிற்று.

  முன் நின்று கல்நின்றது நோய்.

  நாங்கள் இருக்கிறோம்.

  உங்கள் நம்பிக்கையும் உறுதியும் நோக்க நீங்கள் நலமாய் இருப்பீர்கள்.

  நலமாய் இருக்க வேண்டும்.

  வாழ்த்துகள்.

  நன்றி.


  ReplyDelete
 15. I read your blog 4 ,5 times now only write to u,when ever read your words i got extra energy,How is your dad,How that brave lady demise,

  Regards,
  gurusamy,
  tirupur

  ReplyDelete