Wednesday 17 February 2016

அப்பாவும் ஆட்டுக்குட்டியும்...



அப்பா கிட்ட சிரிச்சு பேசி ரொம்ப நாள் ஆச்சு. எனக்கோ இல்ல அவருக்கோ முகம் பாத்து பேச ஏதோ ஒரு தயக்கம் இருந்துகிட்டே இருந்துச்சு.

இன்னிக்கி அப்பா ரூமுக்குள்ள போவேன்னு நான் நினைச்சுக் கூட பாக்கல. ஆனா போக வேண்டிய கட்டாயம்.

வேலைய முடிச்சுட்டு எட்டிப்பாத்தா, வரிசையா கொஞ்சம் புக்ஸ் இருந்துச்சு.

என்னன்னு மேல இருக்குற புக் எடுத்துப் பாத்தா, கறவை பசுக்களை பராமரிப்பது எப்படின்னு இருந்துச்சு. இத்தன வருஷம்ஆகியும் மனுஷன் இன்னும்இதத்தான் படிச்சுட்டு இருக்காரான்னு நினைச்சுகிட்டே அடுத்து என்ன புக்ன்னு நோட்டம் விட்டேன்...

அட, கார்த்திக்கோட "ஆரஞ்சு முட்டாய்". அதுக்கும் கீழ "வற்றாநதி"

புக் வாசிச்சீங்களாப்பான்னு கேக்குற தைரியம் வரல. மெதுவா வெளில வந்து உக்காந்தேன்.

திடீர்னு எங்க இருந்து ஓடி வந்தாங்களோ, முதல்ல பைரவி தான் ஓடி வந்தா. வந்தவ தயக்கத்தோட எட்டிப்பாத்தா. நான் கைநீட்டி வான்னு சொன்னதும் என்ன நினச்சாளோ மடில தாவி வந்து படுத்துகிட்டா.

அடுத்து வந்தது வருண். பயலுக்கு இதபாத்து ஒரே பொறாம. அவனும் மடியில படுக்க ட்ரை பண்ணினான். பைரவிக்கே இடம் பத்தல, இதுல அவன் வேறயா?

கீழ இறங்குடான்னு தள்ளி விட்டதும் என்ன நினைச்சானோ, என்னை முட்டித் தள்ள ஆரம்பிச்சுட்டான்.

அடேய், உன்னை மாதிரி எத்தன கேடிகள பாத்துருப்பேன், எங்ககிட்டயேவான்னு அவனுக்கு சவால் விட்டு நானும் கொஞ்ச நேரம் அவன் தலைய தடவி, கழுத்த தடவி, முட்ட வந்தவன தடுத்துட்டு இருந்தேன்.

வெண்ணிலா இங்க நடந்தத எல்லாம் பாத்துட்டு என்கிட்ட வந்து ஒரு முத்தம் வாங்கிட்டு தரைல போய் படுத்துட்டா.

அப்ப தான் அப்பா எங்கயோ வெளில போயிட்டு வீட்டுக்கு வந்தாரு. வந்தவரு, அட, நீஎப்ப வந்தன்னு கேட்டுகிட்டு, கொஞ்சம் பொறு, சாப்ட்டுட்டு வரேன்னு போய்ட்டார். நான் அப்படியே திண்ணைல உக்காந்து வேடிக்கைப்பாக்க ஆரம்பிச்சுட்டேன்.

ஊசி வாத்து முட்டைல ரெண்டு பொறிச்சியிருக்கு. மஞ்சள் நிறத்துல அழகா அதுகள பாக்குறது தனி சுகம். இதுல ஆச்சர்யமான விஷயம் என்னனா அம்மா வாத்து ரெண்டு குஞ்சுகளோடயும் மூணு முட்டைகளோடயும் கூட்டுக்குள்ள அடைக்காத்துகிட்டு இருக்கு, அப்பா வாத்து வெளில நின்னு, அந்தப்பக்கமா வர்றவங்க போறவங்கள எல்லாம் சண்டைக்கு போற மாதிரி சீறிகிட்டு தொரத்தி விடுது...

நான் அத ரசிச்சு பாத்துட்டு இருந்தப்ப தான் அப்பா வெளில வந்தார். புறா எல்லாம் பாக்குறியான்னு கேட்டார்.

சரின்னு தலையாட்டினேன்.

உடனே கொஞ்சம் அரிசி, கடலை, உளுந்து எல்லாம் எடுத்துட்டு வந்து முற்றத்துல தூவ ஆரம்பிச்சார். எங்க இருந்து தான் அவ்வளவு புறாக்கள் பறந்து வந்துச்சோ, அப்படியே முற்றம் நிறைஞ்சு போச்சு.

எல்லாமே வீட்டுலயே பொறிச்சதாம். ஒவ்வொண்ணும் தனி அழகு. அப்படியே அப்பாகிட்ட ஆட்டுக்குட்டிங்க, கன்னுகுட்டிங்க, புறாக்கள், வாத்துக்கள் பத்தி பேசிட்டே இருந்ததுல மனசு அப்படியே லேசாகிடுச்சு.

அட, சொல்ல மறந்துட்டேனே, பின்னால தோட்டத்துல சினை முயல் ஒண்ணு இருக்காம், சீக்கிரமா குட்டிப் போட போகுதாம்...








(பின்குறிப்பு:  பைரவி,  வருண், வெண்ணிலா  எல்லாம்  எங்க  வீட்டு  ஆட்டுகுட்டிங்க. அவங்கள  பத்தி  சீக்கிரமே  பெரிய  போஸ்ட்டா  எழுதுறேன்)

8 comments:

  1. அருமையான ரசனை மிகுந்த அனுபவ பகிர்வு. வழக்கம் போல் உங்கள் துள்ளலான நடையில்..!
    த ம 2

    ReplyDelete
    Replies
    1. ஹாஹா நன்றி அண்ணா

      Delete
  2. அழகிய நடை ... ரசித்தேன்...

    ReplyDelete
    Replies
    1. தேங்க்ஸ் ரசிச்சதுக்கு

      Delete
  3. ரசித்தோம் ரசித்தோம்....ரசனையான அழகான பதிவு. உங்கள் வீட்டைப் போல! பின்னே இத்தனைச் செல்லங்களுடன் இருந்தால் வீடு எவ்வளவு அழகு!!! உங்கள் வீட்டிற்கு இதற்காகவே வர வேண்டும்...

    ReplyDelete
    Replies
    1. ஹாஹா... கண்ணுப் போடக் கூடாது

      Delete