Thursday 26 January 2017

புத்தக வெளியீட்டு விழா - தற்கொலைக் கடிதம்
நாள்: 22/01/2017 (ஞாயிறு)

இடம்: தமிழ் அரங்கம்

நேரம்: மாலை 4.30
…………………………………………………………..

இந்த நாளையும் இடத்தையும் நேரத்தையும் என்னால எப்பவுமே மறக்க முடியாது. காரணம், அன்னிக்கி தான் என்னோட முதல் சிறுகதை தொகுப்பு “தற்கொலைக் கடிதம்” வெளியாகின நாள்.

அதென்னமோ தெரியல, உடம்பு சரியில்லாததாலோ என்னவோ ரொம்ப லேட்டா தான் கிளம்பினேன். ஏற்கனவே பொன்னீலன் சார் என்னை காணோம்னு போன் வேற பண்ணிட்டார். அவசர அவசரமா கிளம்பி அவர கூட்டிட்டு விழா நடக்குற இடத்துக்கு போனப்ப மணி அஞ்சு. அதிகமான பேர் வரலைனாலும் சொந்த பந்தங்கள், நட்புகள், அப்பா, மாமான்னு எல்லாரும் முன்கூட்டியே அங்க உக்காந்துட்டு இருக்காங்க.


விழா நாயகி நீ, இப்படி லேட்டா வரலாமான்னு கேட்டுகிட்டே படபடன்னு மேடைல கூப்ட்டு உக்கார வச்சுட்டாங்க. எனக்கு ஒரே பயம். என்னடா இது, வந்த உடனே மேடைல ஏத்திட்டாங்களேன்னு. அப்பாவும் மேடைக்கு வருவார்ன்னு பாத்தா, அவர் கீழே உக்காந்துட்டு இருந்தார். சரிதான், ஆள் மேல வர மாட்டேன்னு அடம்பிடிச்சிருப்பார்ன்னு நினைச்சுகிட்டேன்.

.....................................................................

புத்தகம் ரெடி ஆனதுமே உடனே வெளியீட்டு விழா வச்சுடணும்ன்னு ரொம்ப துடிச்சேன். ஆனா பதிப்பாளர் ஜெபா தான் ஜனவரி இருபத்தி ரெண்டை தேர்வு செய்தார். அந்த நாள்ல தான் பொன்னீலன் சார் ப்ரீயா இருப்பார்ன்னு சொன்னார். நமக்கு நாள் கிழமை எல்லாம் முக்கியம் இல்ல, ஆனா பொன்னீலன் சார் வந்தே ஆகணும்ன்னு அடம். அதனால சரின்னு சொல்லிட்டேன். நூல் ஆய்வுரை சாகித்ய அகாடமி யுவ புரஸ்கார் அவார்ட் வாங்கின மலர்வதி பண்ணினா நல்லா இருக்கும்னு ஜெபா விருப்பபட்டார்.


திடீர்னு ஒருநாள் ஜெபா, நம்ம program கூடவே இன்னொருத்தர் புக்கும் ரிலீஸ் பண்ணலாம்னு இருக்கோம். நீங்க என்ன சொல்றீங்கன்னு கேட்டார். எனக்கு திடீர்னு என்ன சொல்லன்னு தெரியல. அன்னிக்கி சாயங்காலமே ஜெபாவும் ராமும் வீட்டுக்கு வந்து, இப்படி வைக்குறதால நமக்கு நல்லது தான். முத்தலக்குறிச்சி காமராசு சார் நிறைய புத்தகங்கள் எழுதினவர். அவர் கூட நம்மோட புத்தகத்த வெளியிடுறது ரொம்ப நல்லதுன்னு புரிய வச்சாங்க. வேலைகள் மளமளன்னு நடக்க ஆரம்பிச்சுது.

........................................................

இரண்டு புத்தகங்களோட வெளியீட்டு விழா இது.

முதல் புத்தகம் “தற்கொலைக் கடிதம்” நான் எழுதினது. இன்னொன்னு முத்தலக்குறிச்சி காமராசு சார் எழுதின “எனது பயணங்கள்” நூல்.

இரண்டு புத்தகங்களையும் வெளியிட்டது எழுத்தாளர் பொன்னீலன். தற்கொலைக் கடிதத்த பெற்றுக் கொண்டது சாட்சாத் என்னோட அப்பா, ஸ்ரீதரன் குமாரபெருமாள். நூல் ஆய்வுரை செய்தது எழுத்தாளர் மலர்வதி. எனது பயணங்கள பெற்றுக் கொண்டது டாக்டர். ச. மனக்காவல பெருமாள். அவரோட நூலை ஆய்வு செய்தவர் எழுத்தாளர் குமரி எழிலன்.

தலைமை: யுத்தப்பிரசங்கி ஜாண்முறே

வரவேற்புரை: கடிகை ஆன்றனி

முன்னிலை: வழக்கறிஞர். இராதாகிருஷ்ணன்

வாழ்த்துரை: ஜே.இ. ஜெபா

நன்றியுரை: கார்த்திக் புகழேந்தி

விழா ஏற்பாடு: திரிவேணி இலக்கிய சங்கமம்


நிகழ்ச்சி சரியா அஞ்சு மணிக்கு ஆரம்பிச்சு எட்டே காலுக்கு முடிஞ்சுது. நானெல்லாம் புத்தகம் எழுதுவேனா அப்படிங்குற சந்தேகம் இருந்ததால கடிகை ஆன்றனி என்னை பத்தி என்ன சொல்லன்னு தெரியாம பாவம் நிறைய சமாளிச்சார். புத்தகத்தோட தலைப்பு பத்தி தான் அதிகமா கேட்டாங்க, எப்படி ஒரு எதிர்மறை தலைப்பை வைக்க முடிஞ்சுதுன்னு.

ராம் பேசுறப்ப, இந்த புத்தகத்த நான் தான் எடிட் பண்ணினேன். அதுக்கு என்ன தலைப்பு வைக்கன்னு தெரியாம இருந்தப்ப மனசுல தோணினது தான் இந்த தலைப்புன்னு சொன்னார்.

முத்தலக்குறிச்சி காமராசு சார் ஏற்கனவே மேடைல இருந்தவங்களுக்கு அறிமுகம் ஆனவர்ங்குறதால அவர பத்தின நிறைய விஷயங்கள் பேசினாங்க. அவர் எழுதின புத்தகங்கள், சாதனைகள்ன்னு நிறைய சொன்னாங்க. அதனால என்னோட புத்தகத்த பத்தியும் விழாவ பத்தியும் நான் இங்க சொல்லிக்குறேனே. முத்தலக்குறிச்சி காமராசு சார் என்னை மன்னிக்கணும்.

.............................................

பொன்னீலன் சார் பேச ஆரம்பிச்சப்ப தான் நான் கொஞ்சம் நிமிர்ந்து உக்காந்தேன். மேடைல இருந்தவங்கள்ல நமக்கு அவர மட்டும் தான தெரியும். என்னோட புத்தகத்த கைல வச்சுட்டு பக்கத்துக்கு பக்கம் அவர் குறிப்பு எழுதி வச்சிருந்தார். மெல்ல எட்டிப் பாத்தேன், என்ன எழுதி இருக்கார்ன்னு. ஆனா எதுவுமே தெரியல. மேடைல பேசுறப்ப, இந்த புத்தகத்த பத்தி பேச நிறைய விஷயம் இருக்குன்னு ஆரம்பிச்சு, முதல் கதை கன்னி பூஜை பத்தி பேச ஆரம்பிச்சார். பேச ஆரம்பிச்சார்ன்னு சொல்றத விட வரிவரியா வாசிக்க ஆரம்பிச்சார். இது தான் உன் மொழி. யாராலயும் சொல்ல முடியாத மொழின்னு பாராட்டினார். அதோட “இறந்து போன கன்னி பெண்களுக்கு பூஜை செய்வாங்க, ஆனா கன்னியா இறந்த ஒரு ஆணுக்கு நடக்குற பூஜையை நீ தான் முதல் முதல்ல பதிவு பண்ணியிருக்க”ன்னு சொன்னப்ப நான் என்னோட சித்திகள், மாமாக்கள் முகத்த கவனிச்சேன். அவங்க முகத்துல ஒரு பெருமிதம். பின்ன, எங்க வீட்ல நடக்குற கன்னி பூஜைய தான நான் எழுதி இருந்தேன். அப்புறமா, “இருப்புக் குழி” சிறுகதை பத்தி பேசினார். “அன்புள்ள ராமையாவுக்கு” எழுதின கடிதத்த பாராட்டித் தள்ளினார். நான் வாயடைச்சு போய் எல்லாத்தையும் கவனிச்சுட்டு இருந்தேன்.அடுத்ததா என்னோட நூலை ஆய்வு செய்த எழுத்தாளர் மலர்வதி என்ன சொல்லுவாங்களோன்னு பதட்டத்தோட இருந்தேன். ஆனா எடுத்ததுமே “தற்கொலைக் கடிதம்” பத்தி பேச ஆரம்பிச்சு என் பதட்டத்த தணிச்சுட்டாங்க. “எனக்கு வாழணும். மனசுல இருக்குற வெறி அடங்க அடங்க வாழணும்”ன்னு நான் எழுதி இருந்தத குறிப்பிட்டு அவ்வளவு தான், இது தான் மொத்த சாராம்சமும்ன்னு சொன்னாங்க. அப்பா பத்தி எழுதி இருந்தத குறிப்பிட்டு, தன்னோட பூனை குட்டி நியாபகம் வந்ததாகவும், தீனிப் பண்டாரங்கள் படிச்சுட்டு கருவாட்டுக் குழம்ப பத்தி பேசினாங்க. மொத்தத்துல நிறைய பாராட்டினாங்க. ஒரு மாதிரி நான் காத்துல மிதந்துட்டு இருந்ததால அதெல்லாம் இங்க என்னால எழுத்துல குடுக்க முடியல.

ஜெபா பேசுறப்ப, என்னோட மனைவி தலைவலிக்குதுன்னு இப்ப சொன்னா எனக்கு பதறுது. அது தான் இந்த புத்தகத்தோட வெற்றின்னு சொன்னார். ஜெபா, அடுத்த முறை உங்க மனைவி தலைவலிக்குதுன்னு சொன்னா கண்டிப்பா நீங்க அவங்க பக்கத்துல இருப்பீங்க. எனக்கு தெரியும்.

........................................

நிகழ்ச்சி முடிஞ்சதும் எல்லாரும் வந்து கைக்குடுத்தாங்க. என்னோட மாமா, மாமி, சித்தின்னு ஒட்டு மொத்த குடும்பமும் சந்தோசமா கிளம்பி போனாங்க. எனக்கு அது தான் வெற்றியா தோணிச்சு.

சொக்கலிங்கம் சார் நான் ரொம்ப நல்லா பேசினேன், மனசுல இருக்குறத யதார்த்தமா பேசினேன்னு சொன்னார். இந்த இடத்துல என்னையும் அவங்கள்ல ஒருத்தியா மதிக்குற “கலை இலக்கிய பெருமன்ற”த்துக்கு என்னோட நன்றிய கண்டிப்பா நான் சொல்லியாகனும்.

.......................................

இந்த பதிவ எழுதிட்டு இருக்கும் போது இந்தா இப்ப தான் பொன்னீலன் சார்கிட்ட இருந்து போன்....

கால் அட்டென்ட் பண்ணி "ஹலோ"ன்னு சொன்னதுமே "எம்மா உன் புத்தகத்துக்கு ஏகப்பட்ட வரவேற்பு இருக்கு"ன்னு சொன்னார். குரல்ல அவ்வளவு உற்சாகம்...

"மனக்காவல பெருமாளே உன்னோட புத்தகத்துல அஞ்சு காப்பி வேணும்னு சொன்னாராம். இப்படியே உன் புக் வித்து தீர்க்குது. உன்கிட்ட இருக்குற மொழி அப்படிப்பட்டது"ன்னு பாராட்டினார்.

"எழுத்துலகத்தில் நீ அங்கீகரிக்கப்பட்டு விட்டாய்"ன்னு அவர் சொல்றது எல்லாம் சாதாரணமான விசயமா என்ன?

"இனி நீ படிபடியா உன்னை முன்னேற்றி உன் மொழிய உன் ஊருக்குள்ள இழுத்துட்டு வா. வேற எவனும் சொல்ல முடியாத மொழிக்கு போயிரு. அந்த மொழில நீ நின்னுட்டா ஒருத்தராலயும் நிக்க முடியாதுல"ன்னு சொன்னப்ப நன்றி சொன்னேன்.

"நன்றி எல்லாம் வேணாம் மா. நீ ஆரம்பி"ன்னு சொல்லிட்டு அடுத்த கூட்டங்களுக்கு கண்டிப்பா கூட்டிட்டு போறேன்மான்னு சொல்லி போன வச்சார்.

இதுக்கு மேல வேறென்ன வேணும்?

................................................................


கொசுறு தகவல்: அன்னிக்கி மொத்தமா வித்த என்னோட புத்தகத்து எண்ணிக்கை அறுபது

புத்தகத்தை வாங்க தொடர்பு கொள்ள வேண்டிய ஆன்லைன் முகவரி: http://www.marinabooks.com/detailed?id=5%200280

http://www.wecanshopping.com/products/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D.html


 

10 comments:

 1. மனம் நிறைந்த வாழ்த்துகள்.....

  ReplyDelete
 2. vaalthukal. thagalin eluthu nadiku kiditha angekarm. alipidhal arumai. noorkal enum vaarthai eanuku pudithu thaga iruthathu. nigalchien sevi oliyo alathu kaanoliuyo inithu irukalam.

  ReplyDelete
  Replies
  1. அவசர அவசரமா நடந்ததுல எதையும் ஏற்பாடு செய்ய முடியல. வாழ்த்துக்கு நன்றி

   Delete
 3. மனம் நிறைந்த வாழ்த்துகள் சகோதரி! மேலும் தாங்கள் நிறைய புத்தகங்கள் வெளியிடவும் வாழ்த்துகள்!

  கீதா: காயத்ரி ஹேட்ஸ் ஆஃப்! எதுக்குனா மொழி நடை..அது உங்கள் தள்த்திலேயே அறிந்தது தானெ என்றாலும் இப்போது புத்தகவடிவில் பலரது கையில்!!

  மனக்காவலபெருமாள் டாக்டர்!! ஆஹா என் அம்மா, பாட்டிக்கு மருத்துவராச்சே!! இப்போது பாட்டி, அம்மா இருவருமே உயிருடன் இல்லை. அவர்களுக்கு எந்த மருத்துவரிடம் செல்லாமல், மனக்காவலப்பெருமாளிடம் சென்று வந்தால்தான் திருப்தியாக இருக்கும். ஊரையும் மீண்டும் நினைவுக்குக் கொண்டுவந்தது உங்கள் பதிவு. ஊர்ப்பக்கம் வந்தே பல வருடங்கள் ஆகிவிட்டது. உங்கள் பதிவுகளைப் பார்க்கும் போதெலாம் ஊருக்கு வர வேண்டும் என்று மனசு துடிக்கும். வரும் போது நிச்சயமாக உங்களைச் சந்திப்பேன் காயத்ரி! வாழ்த்துகள்! பாராட்டுகள்!

  ReplyDelete
  Replies
  1. ரொம்ப ரொம்ப நன்றி.... மனக்காவலபெருமாள் என் புத்தகத்த வாங்கினார்ன்னு சொன்னது தான் ரொம்ப சந்தோசம். அதுவும் அஞ்சு காப்பி

   Delete
 4. வாழ்த்துக்கள் சகோதரி...

  ReplyDelete