Tuesday, 18 June 2019

துர்காமாதா: எனது வாசிப்பு அனுபவங்கள் – அரவிந்த்

இது நாகர்கோவிலைச் சேர்ந்த உதவிப்பேராசிரியையாய் பணியாற்றும் ஜீவாவின் முதல் புதினமா? நம்ப முடியவில்லை (என்ன ஆழமான கருத்துச்செறிவுமிக்க விவாதங்கள்)!

இவரது “தற்கொலைக்கடிதம்” கதைத்தொகுப்பிலும், வலைப்பதிவுகளிலும் முகநூலிலும் சிரிப்பு நடையில் தனது சொந்த அனுபவங்களையும் சீரியசான நடையில் பெண்களின் துன்பங்களையும் இன்னபிற சமூகச்சிக்கல்களையும் தீர்வுகளோடு அலசுவதை நாம் படித்திருக்கிறோம்.

தோழர்களுடனான விவாதங்களுக்குப்பின் மேலும் எவ்வளவு ஆழமாக சமூகச்சிக்கல்களை புரிந்திருக்கிறார் என்பதற்கு இப்புதினமே சான்று.

வட இந்தியர்களை நம் பொழப்பிற்கு வேட்டு வைப்பவர்கள், நம் வேலைகளையெல்லாம் பறிப்பவர்கள், பாலியல் குற்றமிழைப்பவர்கள் என்ற பிரச்சாரங்கள் வைக்கப்படும் இந்த காலக்கட்டத்திற்கு மிகப்பொருத்தமான புத்தகம் இது.

வட இந்திய ஏழைகள் யார்? எந்தெந்த சூழ்நிலைகளில் வேலைக்கு இங்கே வருகிறார்கள்? அரசியலும் அதிகாரவர்க்கமும் கொண்ட முதலாளித்துவ சமூகம் அவர்களை எந்தெந்த இழிநிலைகளுக்கு தள்ளுகிறது? கணத்திற்கு கணம் பெருகிவரும் பாலியல் குற்றங்களை எப்படி தடுப்பது போன்ற பல கேள்விகளுக்கு விடையே இப்புத்தகம்.

"உத்திரப்பிரதேசம் குலாபி கேங்க்" இயக்கம் போன்ற ஜார்க்கன்டில் ஒரு போராளி இயக்கத்தில் உன்னத லட்சியத்தோடு போராடுபவள் குறும்பும் குதூகலமும் தைரியமும் நிறைந்த கதாநாயகி துர்கா. அதிகாரவர்க்கச்சுரண்டலை எதிர்த்து யாரைக்காக்க முனைகிறார்களோ அம்மக்களே இவர்களை நம்பாமல் ஏன் எங்கே போகிறார்கள் என்ற கேள்வியோடு ரியாசோடு தனக்கிருந்த காதலையும் தியாகம் செய்து தமிழகம் நோக்கி காண்ட்டிராக்டர்களோடு புறப்படுகிறாள் நாயகி.

இங்கு வந்தப்பிறகு அவள் சந்திக்கும் தொழிலாளர்கள், எதிர்ப்பார்ப்புகளோடு வந்தவர்களை மனசாட்சிக்கு புறம்பானவேலைகளை நோக்கி தள்ளப்படும் நிலைமைகள், பணமும் அதிகாரமும் அவர்களை பந்தாடும் விதங்கள், தோழர்களோடு விரிவாக விவாதித்து அவள் கண்டடையும் தீர்வுகள், இதற்கிடையில் அவளே ஒரு மாபெரும் அரசியல் சூதாட்டவழக்கில் சிக்கி என்ன ஆகிறாள் என்பதே கதைச்சுருக்கம்.

சமூகநீதியை வலியுறுத்தும் உயரிய போராளி இயக்கங்களையும் மீறி நுகர்வுவெறியை தூண்டிலாகக் கொண்டு முதலாளித்துவம் எப்படி மக்களை பணத்தை நோக்கி பைத்தியமாக ஓடவைத்து எந்த எல்லைக்கும் சென்று எப்பாவத்தையும் செய்யவைக்கிறது என்று தோழர்களால் மிகத்தீவிரமாக விவாதிக்கப்படும் பக்கங்கள் இன்றைய சமூகம் முழுமையும் படிக்கவேண்டிய பொக்கிஷங்கள்.

இரண்டு வயதுக் குழந்தைகளுக்கே தொடுகைகளின் வகைகளை (good touch, bad touch) கற்றுக்கொடுப்பதன் அறிவீனத்தை எடுத்துக்காட்டி இவ்வகை விஷயங்கள் எப்படி நம் பண்பாட்டிலேயே விளையாட்டுச் சீண்டல்களாக மனதில் பதிய வைக்கப்பட்டுகின்றது என்று நிஷா எடுத்துரைக்கும் காட்சி படைப்பின் உச்சம்.

துர்காவைக் காக்க ரியாஸ் உட்பட நண்பர்கள் செய்யும் தந்திரங்கள் பக்கங்களின் வேகத்தைப் பெருக்கி வாசகர்களை ஒரே மூச்சில் வாசித்து முடிக்க வைக்கிறது.

புதினம் மிக விரைவாக முடிந்துவிட்ட உணர்வால் அடுத்த புத்தகங்களில் எங்கள் எதிர்ப்பார்ப்புகளை இங்கே பதிவுசெய்கிறோம்.

1. பாலியல் குற்றங்கள் பெருகிவிட்ட புள்ளிவிவரங்களை வைக்கும் ஆசிரியரின் பிரதிபலிப்பாக தெரியும் சுடரொளியின் கூற்றுகள் "சமூக ஊடகங்களின் பெருக்கத்தாலேயே இயல்பாக இருப்பவை பெரிதுபடுத்தப்படுகின்றன" என்ற சிலரின் கூற்றுகளுக்கு பதிலளிப்பதாக அடுத்த படைப்பு இருக்கவேன்டும்.

2. பாலியல் குற்றங்களை செய்யும் ஆண்களை கன்டுகொள்ளாமல் பெண்களே மீண்டும் மீண்டும் குற்றம் சுமத்தப்படுகிறார்கள் என்று கூறும் நாம் இதே நுகர்வு கலாச்சாரத்திற்கு அடிமையாகி சுரன்டலின் பிரதிதிகளாய் செயல்படும் சில மேல்தட்டுவர்க்கப் பெண்களையும் எப்படி தூய சிந்தனையுள்ளவர்களாக மாற்றுவது என்பதையும் எடுத்துக்காட்டுவதாக உங்களின் அடுத்தடுத்த படைப்புகள் இருக்கவேண்டும்.

3. கல்வியை விளையாட்டோடும் உடற்பயிற்சியோடும் சுவாரசியமாக தரவேண்டும் என்று பள்ளிகளுக்கு சொல்லும் நாம், செயலிகளும் ரோபோக்களும் பயிற்றுவிக்கப்போகும் வரும் யுகத்தில் எப்படி இச்சிந்தனைகளை செயலாக்கப்போகிறோம் என்பதை பேசும் படைப்புகளை எதிர்ப்பார்க்கிறோம்.

4. தனிநபர் தரவுகளைக்கொண்டு தனிநபர் விருப்பங்களை வடிவமைக்கும் வல்லமையுள்ள இன்றைய முதலாளித்துவ கருவிகளை நம் உயர்ந்த பாலியல் குற்றமற்ற சீரியசிந்னைகள் கொன்ட மாந்தர்களை உருவாக்க எப்படி உபயோகிக்கப்போகிறோம் என்று எடுத்துக்காட்டும் உயரிய படைப்புகளை எதிர்ப்பார்கிறோம்.

இத்தகைய ஆழ்ந்த சின்தனைகளையும் எக்கச்செக்க எதிர்ப்பார்ப்புகளையும் தூண்டிய உங்கள் துர்காமாதாவிற்கு எங்கள் வாழ்த்துக்களும் வந்தனங்களும்.

நீங்கள் மென்மேலும் பற்பல படைப்புகளை உருவாக்கி சமூகத்தைச் செப்பனிட்டு வெற்றிபெற எங்கள் உளம்கனிந்த வாழ்த்துக்கள்.




நன்றியுடன் அரவிந்த் 
 
 
நாவலை பெற: 

விலை: ரூ: 150 மற்றும் கூரியர்செலவு மட்டும்
தொடர்புக்கு: பொன்னுலகம் புத்தக நிலையம், திருப்பூர்.
அலைபேசி எண்கள்: 70104 84465, 88707 33434
வங்கி கணக்கு: PONNULAGM PUTHTHAGA NILAIYAM, Karur Vysya Bank, Thiruppur, P N Road Branch, A/C -No-1235115000041544, IFSC KVBL0001235
 

Wednesday, 12 June 2019

ஜீவாவின் துர்கா மாதா - எனது பார்வையில்... கவிப்பூரணி

என்னோட நாவலோட word format மகேஷ்கிட்ட குடுத்து படிச்சிட்டு கருத்து சொல்லுமானு கேட்டுருந்தேன்.
அவன் அத அவன் நண்பர்களோட பகிர, இப்போ அவன் நட்பு கவி பூரணி அத படிச்சிட்டு ரிவியூ எழுதி அனுப்பி இருக்காங்க.
என் நாவலுக்கு வந்த முதல் ரிவியூ இது. படிச்சதும் அவ்ளோ சந்தோசம் எனக்கு. 

நல்ல உற்சாகமான வார்த்தைகளோடு துவங்குகிறது இந்நாள்....
...................


Novel என்ற ஆங்கிலச் சொல் ‘புதுமை’யைக் குறிப்பதாகும். அந்த சொல்லிற்கு ஏற்றார்போலவே தோழி ஜீவா அவர்களால் எழுதப்பட்ட ‘துர்கா மாதா’ எனும் இந்த நாவல் நான் இதுவரை படித்திருப்பதில் மிகவும் புதுமையான கதைக்களத்தையும் தற்கால நடைமுறையைக் குறித்த மிக வித்தியாசமான மற்றும் ஆழமான பார்வையையும் கொண்டு ஒரு புரட்சிகரமான படைப்பாக வெளிவந்திருக்கிறது.


எனக்கு தோழி ஜீவா அவர்களை அறிமுகம் செய்து அவர்களது வலைத்தளத்தில் வெளிவந்த‘பாலியல் கல்வி’ தொடரையும் படிக்கத் தூண்டியது தம்பி திருப்பதி மஹேஷ்தான். அந்த தொடர் குறித்தே எனது கருத்துக்களை எழுதி ஜீவா அவர்களுக்கு மின்னஞ்சலாவது அனுப்பிவிட வேண்டுமென மிகவும் ஆர்வத்தோடு இருந்தேன். சில காரணங்களால் அது நடைபெறாமலே போய்விட்டது. அவர்களது ‘தற்கொலைக் கடிதம்’ புத்தகம் கூட என்னிடம் இருக்கிறது. அதற்கும் கூட என்னுடைய கருத்துக்களைச் சொல்லிவிட எண்ணி இருந்தேன். இன்னும் படித்த பாடுதான் இல்லை. ஆனால், அதைவிடவும் ஒரு பெரிய ப்ராஜெக்ட்டில் அவர்களது எழுத்து குறித்ததான எனது பார்வையை முன்வைக்க நல்லதொரு வாய்ப்பு மீண்டும் தம்பி மஹேஷ் மூலமே கிடைத்திருக்கிறது. ‘துர்கா மாதா’ எனும் இந்த நாவலையும் அவரே என்னிடம் கொடுத்து நேரம் கிடைக்கையில் படிக்கும்படி சொல்லி இருந்தார்.

தன்னுடைய முதல் நாவலை இவ்வளவு குறுகிய காலத்தில் சிறப்பானதொரு படைப்பாக அமைப்பது என்பது எல்லோருக்கும் சாத்தியம் கிடையாது. ஆனால் தோழி ஜீவாவிற்கு அது மிக நன்றாகவே தன்னுடைய ஆர்வத்தோடும் பலரது துணையோடும் சாத்தியமாகி இருப்பதற்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

 முன்னுரையைப் படிக்கும் போதே படைப்பு பற்றிய ஆர்வமும் எதிர்பார்ப்பும் மாற்றங்களை எதிர்நோக்கும் ஒரு பெண்ணாக எனக்குள் எழுந்திருந்தது.
பொதுவாகவே நாவல்கள் என்றதும் ஒரு சாதாரணமான அல்லது ஒரு பாமர வாசகியாக நான் எப்போதூமே கதைக்கருவைவிட கதையைத்தான் அதிகம் எதிர்பார்ப்பது வழக்கம். படிக்கும் மகிழ்விற்காக மட்டும் படிப்பதுதான் எனது மனப்போக்கு. ஆனால் முதல் முறையாக இந்த நாவலின் முன்னுரையைப் படித்த போது கதைக்கருதான் இந்த நாவல் படிப்பதற்கே ஒரு பெரிய உந்துதலைக் கொடுத்தது என்பேன்.

முழு படைப்பையும் வாசித்தாகிவிட்டது. ஒரு த்ரில்லர் படம் போல சீட் நுனியில் உட்கார வைத்து மிக மிக அழுத்தமான பெண்ணியம் பேசி இருக்கிறார் எழுத்தாளர்.
பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் சமீப காலத்தில் மிக அதிகமான அளவில் தலை தூக்கி இருப்பதற்கான ஆணி வேர் காரணங்களாக பணபலம், முதலாளித்துவம், நுகர்வு கலாச்சாரம், அரசியல், சமூகப்போக்கு என்று பலதரப்பட்ட விசயங்களை மிகத் தெளிவாகவும் துல்லியமாகவும் நடைமுறையைப் படம் பிடித்துக் காட்டி இருக்கிறார். பெரும்பாலும் இறந்தகால படைப்புகளையே படித்து வந்த எனக்கு, இந்த நிகழ்காலப் படைப்பு படிப்பதற்கு ஸ்வாரஸ்யமாக மட்டுமல்லாமல் சிந்திக்கவும் தூண்டுகோலாய் அமைந்திருக்கிறது.

2 இடங்களை மிகவும் குறிப்பிட்டுப் பாராட்டியே ஆக வேண்டும் என்று எனக்குத் தோன்றிய விசயங்களை இங்கே பகிர விழைகிறேன்.
பாலியல் வன்முறைகளுக்கான காரணங்களை அலசி ஆராய்ந்து அதை விவரித்திருக்கும் இடம் மிகச் சிறப்பு. அதன்பின்னர், good touch bad touch பற்றி துர்கா முன்வைப்பதாக ஆசிரியர் முன்வைத்த இடம் சபாஷ். safe zone என்ற பெயரில் நமது சமு்தாய அமைப்புதான் காமம் குறித்தான தூண்டுதலைப் பிள்ளைகளிடம் உருவாக்குகிறது என்பதும் சுமை ஆகிவிட்ட கல்வி முறை பற்றியும் மறந்து போய்விட்ட விளையாட்டுலகம் பற்றியும் பெற்றோர்களாலும் ஆசிரியர்களாலும் புறக்கணிக்கப்படும் குழந்தைகள் உலகம் குறித்தும் மிகச் சிறப்பாக மனோதத்துவ முறையில் நடைமுறைக்கேற்ற பரந்துபட்ட பார்வையை வைத்திருக்கிறார் ஆசிரியர். குழந்தைகளைக் குழந்தைகளாகப் பார்க்காத ஒரு சமுதாய அமைப்பில் நிச்சயம் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை அந்த சமூகமேதான் திணித்து அதன் விளைவாக அவர்களைப் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக வழிவகுக்கிறது என்பதை சிறப்பாக அணுகி இருப்பதோடு பள்ளிக்கூடங்கள் குழந்தைகளைக் குழந்தைகளாக இருக்க அனுமதிக்கும் ஒரு இடமாக இருக்க வேண்டும் என்பதையும் மிகவும் ஆணித்தனமாகக் கூறி இருக்கிறார்.

இப்போது கதைக்கு வரலாம். புலம்பெயர்ந்து தமிழகம் வந்து பிழைப்புத் தேடும் தன் மாநிலத்தவர் படும் துன்பங்களை நேரடியாக தானே அனுபவித்துப் பார்த்து அவர்களது உணர்வுகளைப் புரிந்து அவர்களைப் பாதுகாக்க ஏதாவது ஒரு வழி செய்ய வேண்டும் என்ற தவிப்போடு வரும் ஒரு ஜார்கண்டியப் பழங்குடிப்பெண்ணான துர்கா சந்திக்கும் போராட்டமே இப்புதினத்தின் சுருக்கமான கதைக்களம். கதாநாயகி துர்காவை மிகவும் எளிமையான துணிச்சலான, குரும்புக்காரத்தனமான மற்றும் அன்பு வாய்ந்த இயல்பான பெண்ணாகப் படைத்திருப்பது சிறப்பு. அநேகம் பெண்கள் காணும் சுதந்திரக் கனவை துர்காவைப் பார்த்ததில் நிஜத்தில் கண்ட திருப்தி எனக்கு.

சு்டரொளி, நிஷா மற்றும் மருத்துவர் கதாப்பாத்திரங்களும் கதைக்கு பலமூட்டின. என்னவோ தெரியவில்லை, இதை வெறும் கதையாக மட்டும் என்னால் ஏதோ கடந்துவிட்டு போக முடியாது என்று தோன்றுகிறது. படித்துவிட்டு சுடச்சுட எழுதித் தீர்க்க வேண்டும் என்பதுபோல் ஏதோ தோன்றுகிறது. ஆனால் அவை கூட வார்த்தைகள் கொண்டு சொல்லுவது மிகக் கடினம்தான். உணர்வுப்பூர்வமாக எங்கேயோ மிகவும் ஆழமாகத் தொட்டுவிட்டீர்கள் ஜீவா.
பழமைவாதத்தை பெண்களால் வெறுக்க மட்டுமே முடிகிறதே தவிர, அதிலிருந்து எப்படி அவர்களுக்கான வாழ்வை அவர்களே தேர்ந்தெடுப்பது என்று புரியாமல் அந்த பழமைவாதத்திலேயே ஊறிப்போய்விடுகிறார்கள் என்று எதார்த்தத்தை சுதந்திர உணர்வை நேசிக்கும் பெண்களின் ப்ரதிநிதியாக எடுத்துரைத்திருக்கிறீர்கள். அருமை...

அதே போல் குடும்ப சூழ்நிலைகளால் எப்படி பாலியல் தொழிலில் பெண்கள் தள்ளப்படுகிறார்கள் என்பதை சஞ்சனா மற்றும் மகா பாத்திரங்களின் வாயிலாகப் பேசி இருக்கிறார். வட மாநிலத்தவர் நம் ஊரில் சந்திக்கும் ப்ரச்சனைகள் அல்லது நமது ஆட்கள் அவர்கள் குறித்து முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் போன்றவற்றை எல்லாக் கோணங்களிலும் இயல்பாக அலட்டலில்லாமல் சொல்லி இருக்கிறார். ஒரு பக்கம் பிழைப்பு தேடி வந்து அடிமைப்பட்டிருப்பவர்கள், மறுபக்கம் வடக்கிலிருந்து இங்கு வந்து அதிகாரம் செலுத்துபவர்கள் என்று வட மாநிலத்தவரின் இரு துருவங்களையும் கதை படம் பிடித்துக் காட்டுவது நேர்மை.

பெரும்பாலும் கதைகளில் வரும் காதல் கூட மிகவும் பழமைவாத சாயப்பூச்சான possessive - ஆகவே இருக்கும். ஆனால், துர்கா ரியாஸ் காதல் மிகவும் வெளிப்படையாகவும் சு்தந்திரமானதாகவும் இருந்தது குறித்து மகிழ்ச்சி. கதையில் ஒரு சமுதாயத்தின் இயக்கத்திலிருக்கும் ஏறக்குறைய எல்லா அம்சங்களும் இடம் பெற்றிருந்ததோடல்லாமல் அன்றாட வாழ்வில் நடக்கும் சிறு சிறு விசயங்கள் கூட அழகாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது.

மொத்தத்தில் ஒரு நல்ல படைப்பைப் படித்த மகிழ்ச்சி மட்டுமல்லாது ஒரு நல்ல ஆழமான பார்வையும் பொறுப்பும் கொண்ட துணிச்சலான, நேர்மையான பெண் எழுத்தாளரின் உணர்வை உணர்ந்த திருப்தி இந்த நாவலைப் படிக்கும் ஒத்த சிந்தனாவாதிகளுக்கு ஏற்படும் என்றுதான் சொல்ல வேண்டும். என் சிற்றறிவிற்கு எட்டிய வரையில் பாரதியார், ஜெயகாந்தன் வரிசையில் ஜீவாவின் துணிச்சல் பாராட்டிற்குரியது. இந்த நாவல் நிறைய பெண்கள் படிக்கும்படியாக சேர வேண்டும் என்பதும் தோழி ஜீவா மென்மேலும் பல படைப்புக்களைத் தமிழ் இலக்கிய உலகிற்குத் தர வேண்டும் என்பதும் அவரை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு துணிச்சல் மிக்க பெண் எழுத்தாளர்கள் மென்மேலும் சுதந்திரமா்க எழுத்துலகிற்கு வர வேண்டும் என்பதும் எனது ஆசை. hats of to you jeeva... வாழ்த்துக்கள்.

Saturday, 8 June 2019

ஜீவாவின் "துர்கா மாதா" - நாவல் வெளியீடு


சிறு வயதில் எனக்குள் சிந்திக்கும் விதையை தூவியது இன்று சொத்துடமை சமூகத்தின் ஒரு பிரதிநிதியாய் இருக்கும் என் அப்பா தான். சொத்தில் எனக்கும் சமபங்கு உண்டென பேசித்திரிந்த காலங்களில் தட்டிக்கொடுப்பார். அது ஒருகாலம்.

காலமாற்றத்தில் சிக்கி சூழ்நிலைக்கைதியாக அடைந்துக் கிடந்த நேரம் இந்த சமூகம் பெண்களை பகடைக்காயாய் வைத்து ஏன் காய் நகர்த்துகிறதென்று என் மனதுக்குள் நிறைய கேள்விகள் எழும்.

ஒரு குடும்பத்தின் மொத்த மானமும் அந்த வீட்டின் பெண்களின் தொடைகளுக்கிடையில் இருப்பதாய் பூச்சி காட்டும் இந்த சமூகத்திலிருந்து விலகி என் பார்வை விசாலமான போது நான் சில பாடங்களை கற்க ஆரம்பித்தேன்.

பெண் என்பவள் அவளுடைய சிரிப்பு, கோபம், அழுகை, காதல், காமம் அத்தனையையும் இயல்பாய் கடக்க வேண்டுமென்ற புரிதல் கொண்டேன். கொஞ்சம் கொஞ்சமாய் என்னை நான் மீட்டெடுத்தேன்.

நாம் மீள்வது பெரிதல்ல, ஆனால் அதிலிருந்து மீள முடியாமல் தவிப்பவர்களுக்கு கைகொடுத்தாக வேண்டும். அதுதானே சரியாக இருக்க முடியும்?

ஆனால் எங்கிருந்து துவங்குவது, எப்படி செய்வதென்ற சரியான பாதை தெரியாமல் திணறிக் கிடந்தேன்.

பெண்களுக்கு எதிரான ஒவ்வொரு பாலியல் வேட்டையின் போதும் அதற்கு காரணகர்த்தாவாக இந்த சமூகம் பெண்களையே கைகாட்டும். அவர்களுக்கே தடைகளிடும். அக்கறை என்கிற பெயராய் அடக்குமுறையை ஏவி விடும். இவை என்னை பெரும் அச்சத்தில் ஆழ்த்தும். எனக்கு இந்த அச்சத்துக்குள் மூழ்கிக்கிடக்க விருப்பம் இல்லை. தண்ணீருக்குள் இருந்து திமிறி எழுந்து பெரும் ஆசுவாசம் கொள்ளவே விரும்பினேன் நான்.

முற்போக்கு சிந்தனைவாதிகள் என சில ஆண்களின் பெண் விடுதலை குறித்த கருத்துக்களில் உடன்பாடில்லாமல் பின் என்னதான் விடுதலை என மூச்சுத் திணறியிருக்கிறேன். ஏனெனில் அவை அத்தனையும் பெண்ணை இன்னும் அவர்களுக்கு அடிமையாய், மேலும் சொல்லப்போனால் பாலியல் சுரண்டலுக்கு தான் வழிவகுக்கும்.

ஜெனவரி மாதத்துவக்கத்தில் இது குறித்து தோழர் திருப்பூர் குணா அவர்களோடு பேசிக்கொண்டிருந்தேன். அவர் புரட்சிகர கட்சிகளில் பெண்களை மதிக்கும் விதம் பற்றி கூறினார். அதோடு தோழர் இரா. பாரதிநாதன் எழுதிய “தறி” நாவலையும் படிக்க கொடுத்தார். இதன் மூலம் புரட்சிகர கட்சிகளின் முக்கியத்துவமும் அவற்றின் அவசியமும் எனக்கு மெல்ல மெல்ல புரிபட ஆரம்பித்தது.

பின் ஒரு நாள் அவரும் நானும் ஒரு உணவகத்தில் அமர்ந்து உணவுண்டு கொண்டிருந்த போது ஒரு வடநாட்டு பெண் உழைப்பாளியை பாத்தேன். எங்களுக்கு முன்னே எச்சில் தட்டுகளை அடுக்கி மேசைகளை சுத்தம் செய்துக்கொண்டிருந்தார். பேச்சுவாக்கில் தோழர் திருப்பூர் குணாவின் வாயிலிருந்து இந்த வார்த்தைகள் வந்து விழுந்தன.

“இந்த பெண்ணும் கூட ஒரு போராளியாக இருக்கலாம். யார் கண்டது?”

இந்த வார்த்தைகள் தான் எனக்குள் முதலில் ஒரு சிறுகதையை தோற்றுவித்தது.

ஆம். இந்த வார்த்தைகள் மீண்டும் மீண்டும் என் மண்டையை குடைந்துகொண்டிருந்த போது, என்மனதில் சட்டென வந்து ஒட்டிக்கொண்டது “குலாபி கேங்க்”. ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேச மாநில எல்லைகளில் அமைந்துள்ள பூந்தேல்கண்ட் பகுதியில் பெண்களால் பெண்களுக்காக உருவாக்கப்பட்ட அமைப்பு அது. தற்போது 55 வயதாகும் சம்பத் பால் என்கிற பெண்மணியால் 25 வருடங்களுக்கு முன்னால் உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பில் கிட்டதட்ட ஒன்றரை இலட்சம் பேர் வரை உறுப்பினர்களாக இருக்கிறார்களாம்.

துர்கா என்னும் பெயருடைய அன்று நாங்கள் பார்த்த அந்த வடநாட்டுப் பெண்ணையே கதாநாயகியாக கொண்டு குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடூரத்தை நான் அந்த சித்தரித்திருந்தேன். அதனை அவரிடம் பகிர்ந்துக்கொண்டேன். அதைக்கேட்டதும் அவர் அது ஒரு நாவலின் தன்மையை கொண்டிருப்பதாக கூறினார்.

அப்பொழுது தான் சில குரல்கள் அனைவரின் மனங்களையும் ஆட்டிப்பார்த்தன. பொள்ளாச்சி பாலியல் கொடூரங்களால் எப்படி சூழப்பட்டுள்ளது என்பதை வெட்டவெளிச்சமாக்கிய குரல்கள் அவை. உடலும் மனமும் நடுங்கிப் போனது. ஒருபுறம் அதை பற்றிய கொந்தளிப்புகள் இருந்தாலும் அதற்கு காரணக்கர்த்தாவாக பெண்களின் ஒழுக்க விழுமியங்கள் மீதே விரல்கள் சுட்டப்பட்டன. மிகப்பெரிய கொடூரத்தை, அதன் மீதான கொந்தளிப்பை இந்த குற்றசாட்டு எப்படி நீர்த்துப் போக வைத்து விடுகிறது? அதிர்ச்சி தான் இல்லையா?

மூன்று இரவுகள் உறக்கமில்லாமல் கழிய அந்த இரவின் ஒரு நாள் நானும் தோழர் திருப்பூர் குணாவும் நீண்ட விவாதத்தில் இருந்தோம். அமைப்பு, அரசியல், இலக்கு, நடைமுறை என விவாதமும் விமர்சனமும் சண்டையும் நடந்ததுகொண்டேயிருந்தது.

அந்த சண்டையில் கொஞ்சம் அரசியல் பிடிபட தொடங்கியது. பெண்களின் அதிகாரத்தை உத்தரவாதபடுத்துகிற அமைப்பினால் மட்டும்தான் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்கிற உண்மை புரியவந்தது. இப்போது சண்டை ஓய்ந்து இந்திய புரட்சிகர இயக்கங்கள் மீது அக்கறை உருவானது. இந்த பிரச்சனைக்கு நம்மால் என்ன செய்ய முடியுமென யோசித்தோம். அதனை “பொள்ளாச்சி பயங்கரம் – என்ன செய்ய வேண்டும்” என்ற புத்தகமாக்கினோம்.

இந்த புத்தகம் என் சிந்தனைகளை மேலும் வலுவாக்கியது.

முடிந்தவரை சட்ட ரீதியாகவும் தேவைப்பட்டால் தடி கொண்டும் காரியம் சாதிக்கும் இந்த “குலாபி கேங்க்” போன்ற ஒரு அமைப்பு தமிழ்நாட்டிற்கும் வேண்டுமென்ற எனது விருப்பத்தை தோழர் திருப்பூர் குணாவிடம் தெரிவித்தேன்.

அப்புறமென்ன?

அதன்பிறகு பொள்ளாச்சி பயங்கரம் மட்டுமில்லாது பெண்களின் பிரச்சினைகள் அனைத்தையும் எப்படி பார்ப்பது என்ற எனது பார்வை மாறியது. பின் அதை குறித்து தொடர் விவாதங்கள் செய்தோம். தோழர் திருப்பூர் குணா அவருடைய கட்டுரைகள் சிலவற்றை அனுப்பித் தந்து படிக்கத் தந்தார். சிறுகதை மெல்ல மெல்ல ஒரு நாவலாக கருக்கொள்ள துவங்கியது.

இதோ அந்த சிறுகதை இப்பொழுது ஒரு நாவலாக மாறிவிட்டது. கதாப்பாத்திரங்களுக்கு பெயர்கள் தேவைப்பட்ட பொழுது திருப்பூர் குணாவே அவர் நண்பர்களின் பெயர்களை பரிந்துரைத்தார். அதை தடைசொல்லாமல் அங்கீகரித்த நண்பர்களுக்கு அன்பும் நன்றிகளும்.

ஆரம்பத்தில் மிகவும் தயங்கி தயங்கித்தான் எழுதினேன். ஆனால் அதை இடைவிடாது நச்சரித்து முழுமையாக்கியதில் திருப்பூர் குணாவின் பங்கு முக்கியமானது.அவருக்கு என் அன்பும் நன்றியும்...

இதோ வரும் 16/06/2019 அன்று லயோலா தொழிற்கல்வி வளாகம், ஏ ஏ ரோடு, மதுரை (தேம்பாவனி இல்லம் அருகில்) வைத்து மாலை நான்கு மணிக்கு நாவல் வெளியிடப்படுகிறது.

தலைமை:                                           தோழர் சுரேஷ்  

நிகழ்ச்சித் தொகுப்பு:                           தோழர் முத்துகிருஷ்ணன்
                                                             - மாநில ஒருங்கிணைப்பாளர்,                                               -                    
                                                                                         ஜனநாயக உரிமை பாதுகாப்புப் பேரவை                              
               
வரவேற்புரை:                                      தோழர் நிஷா - WSB Rebels - பெண்கள் குழு

வாழ்த்துரை:                                         தோழர் ஸ்ரீரசா - மாநில துணைச்செயலாளர்
                                                            - தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம்
                        
                                                               தோழர் முரளி - அகில இந்தியச் செயலாளர் 
                                                                                    - மக்கள் சிவில் உரிமைக் கழகம்

                             
நூல் அறிமுகம்:                                    தோழர் மதி கண்ணன் - அமைப்புச் செயலர்  
                                                                                   - மானுட விடுதலை பண்பாட்டுக் கழகம்

                                                           
வெளியிட்டு உரையாற்றுபவர்:            தோழர் செல்வி - மனிதி - பெண்கள் அமைப்பு

பெற்றுக்கொண்டு உரையாற்றுபவர்:   தோழர் இரா. காமராசு -  பொதுச்செயலாளர் -                                                                  தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்
                                                         
ஏற்புரை:                                                         தோழர் ஜீவா - நூலாசிரியர்

நன்றியுரை:                                                    தோழர் திருப்பூர் குணா
                                                                 - பொன்னுலகம் புத்தக நிலையம்      

வாய்ப்புள்ளவர்கள் அனைவரையும் வரவேற்கிறோம்.... 


நாவலை பெற: 

விலை: ரூ: 150 மற்றும் கூரியர்செலவு மட்டும்
தொடர்புக்கு: பொன்னுலகம் புத்தக நிலையம், திருப்பூர்.
அலைபேசி எண்கள்: 70104 84465, 88707 33434
வங்கி கணக்கு: PONNULAGM PUTHTHAGA NILAIYAM, Karur Vysya Bank, Thiruppur, P N Road Branch, A/C -No-1235115000041544, IFSC KVBL0001235