Monday, 12 November 2012

நீயாகி போகின்றாய்...!

என் சிந்தைக்குள் சல்லி வேறாய் 
புகுந்தென்னை சுக்குநூறாய் உடைத்தவனே ..
உன் ஆணிவேராய் வீற்றிருந்தேன்,
அறியாமல் நீ போனதேனோ?

சலனித்தறியாத தெளிர் நீராய்
நானிருந்தேன்... குட்டைக்குள் புகுந்து விட்ட
களிர் ஒன்றாய் சஞ்சலத்தை புகுத்தி விட்டாய்...!

வண்ணத்து பூச்சியென
வான்வெளியில் பறந்திருந்தேன்...
தேன் சுவைக்கும் வண்டாகி
என் இறகுகளை சிறையெடுத்தாய்...!

கற்றாழை காட்டுக்குள்ளே
வழிதெரியாமல் தவித்திருந்தேன்...
கட்டுவீரியன் புகுந்ததுபோல்
புகுந்தென் கண்கள் கவர்ந்து கொண்டாய்…!

பாலைவனம் நடுவே
பாவை என் முகம் நோக்கி
புழுதி காற்றை இறைத்து விட்டு
வெண்சாமரமும் வீசுகின்றாய்...!

வெள்ளை புறாவென உன்னை சரணடைய
பறந்தே வந்த என்னை...
போர்முனையில் நிற்க வைத்து
வேடிக்கை காட்டுகிறாய்...!

காரொன்று பொழிவது போல் 
பொழிந்து விட்டு
கானல் அதுவென 
காதோரம் கிசுகிசுக்கிறாய்...!

வார்த்தை ஜாலத்தால்
வான் முழம் அளப்பவனே...
என்னையே இழந்து நிற்கிறேன்
உன்முன் நிராயுதபாணியாய்...!

சில்லிட வைக்கும் தூறலாய் நான் சிலிர்ப்பதாகட்டும்
வெந்தணல் மேனியாய் நான் துடிப்பதாகட்டும்
எல்லாவற்றிக்குமான காரணகர்த்தா
நீயே... நீயேயென எங்கும் நீயாகி போகின்றாய்...!

Saturday, 10 November 2012

புன்னகை மறந்த தருணங்கள் ...!

இரவின் நீளம் நீண்டுக் கொண்டே போகிறது
என்னை பற்றிய உன் நினைவு
தொலை தூரம் போய் விட்டதால்...!

‎"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""''தொல்லை பேசியாய்" தொலைபேசி,
உன் அழைப்பு இன்றி…
முள் படுக்கையில் தவம் செய்கிறது…!

லெட்சியமில்லாத வாழ்க்கை ஒன்றை
உன் பாராமுகம் பரிசளித்து
கிங்கரனாய் சிரிக்கிறது…!

மழலை விட்டொழிந்த பந்தைப்போலே
என்னை நீ விட்டெறிந்து சென்று விட்டாய்...!
நானோ சிறகொடிந்த பறவையொன்றாய்
போக்கிடமின்றி தவிக்கிறேன்...!

நீயில்லாத கனவுகள் வெற்று காகிதம் போல...
கிறுக்கபடாத உன் நினைவுகள் அங்கே
செதுக்கி செல்கிறது என் இதயத்தை...!

பேசவே தெரியாமல் என் மவுனங்கள்
உன்னோடு பேசிக்கொண்டிருக்கின்றன...!
உன்னோடு கைகோர்த்த தருணங்கள்
இன்னும் விலகாமல் பிசிறாய் நினைவில்...!

வசந்தத்தில் ஓர் நாள் அடித்தோய்ந்த
புயலாய் நீ... என் நினைவுகள் புகுந்து
இளமை வதம் செய்கிறாய்...!

ஆர்ப்பரிக்கும் ஆழிப்பேரலையாய் நீ...
ஆக்ரோஷ அலைகளின் நடுவே
சன்னமாய் ஒலிக்கிறது என் விசும்பல்...!

உனக்கான என் சோகங்களை
சிறு புன்னகையுடனே கடந்து செல்கிறேன்...!
இட்ட மை இட்டபடி இருக்க
கரைகிறது என் கண்ணீர் உனக்காக...!

Friday, 9 November 2012

கோர்க்கத்துடிக்கும் ஆசைகள்...!

சுகமும் துக்கமும்
கலந்து விரைகின்ற மேகக் கூட்டத்திற்கிடையில்
துருவ நட்சத்திரமாய் நீ...!

அர்த்தமற்றதாய் கழிந்து செல்லும் நாட்காட்டியில்
உன் நினைவுகள் மட்டும்
ஏதோ ஒரு அர்த்தத்தை
கற்பித்துக் கொண்டிருக்கிறது...!

காற்றின் மெல்லிய உணர்வுகளோடு
உன் வாசம் தாங்கிய நினைவுகள்
என்னில் கண்ணாமூச்சி ஆடி
தோற்றுபோய் வெளிப்படுகிறது...!

சட்டென பெருமழையொன்று அடித்துவிட்டு
ஓய்ந்தது போல்
கனவுக்குள் நீ தோன்றி புன்சிரிப்பை தந்து விட்டு
கண்மணிக்குள் மறைந்து கொள்கிறாய்...!

பல நேரங்களில்
என் நெற்றிப்பொட்டில்
பதியப்படும் ஈரங்களில் தான்
உன் மொத்த அன்பும்
கொட்டிக் கிடக்கிறது...!

நீ பேசிய வார்த்தைகளை கோர்க்க நினைக்கிறேன்...
சடசடவென உதிர்ந்தே விடுகிறது
சற்றும் ஈரமில்லாமல்.....
மனம் மட்டும் குதூகலமாய்...!

காத்திருக்கிறேன்....
காத்தே கிடக்கிறேன்...
காதோரம் உன்னிடம் ரகசியம் சொல்ல...!


காத்திருக்கும் விடியல்...!

எட்டிப்பார்க்கும் சூரியனை கண்டு
கீழ் வானம் சிவந்திருக்க
கொண்டை சேவல் ஒன்று
துயில் கலைந்து கொக்கரித்த
இளம் குளிர் போர்வைக்குள்ளே
கனா ஒன்று கண்டேனடா...!

தெருவெங்கும் மாவிலை தோரணங்கள் நீண்டு வர,
தென்னை மரங்கள் தாளத்தோடு வரவேற்க
பெண்பார்க்க நீயும் வந்தநாள் அந்நாளடா...!

சீர்வரிசை தட்டுகள் இடைநிற்க
பெண்டுகள் உன்னை வழிகாட்ட
கதவிடுக்கின் ஓரம் நின்று இரகசியமாய்
உன்னை நானும் முழுதாய் ரசிக்கிறேனே...!

ஆவல் மின்னும் கண்களோ
உன்னை அள்ளி அள்ளி பருகிய பின்னும்
மேலும் மேலும் தாகம் திணித்து மருகியே நின்றதடா...!

மன்மதனின் பார்வையொன்றை இரகசியமாய்
என்னிடத்தில் நீ வீசி, உயிர் வதைத்த நொடி
உன்னை என்னில் கொண்டேனடா...!

வார்த்தைகளின்றி நானும் தடுமாற
நீயோ கண்கள் வழி கவி பேசி
குறுநகை ஒன்றில் என்னை வீழ்த்திவிட்டு
வேடிக்கையாய் நகைக்கிறாய்...!

அடுத்த மாதம் ஆடியாமே?
ஆவணியில் தேதி வைக்க
அவசரமாய் தாக்கல் ஒன்றை
இப்பொழுதே சொல்லி விடு...!

முந்தி வரும் கார்த்திகையோ
பிந்தி வரும் தை மாதமோ
மணநாளை நீட்டிவைத்து
உன்னோடு என் வாழ்நாளை 
தேய்ந்து போக வைக்காதே...!

உனக்கென்ன? வருகிறேன் என
முற்றத்து மையத்தில் நின்று
சைகை மொழி செய்தியொன்றை
நவிச்சியமாய் நவின்று விட்டு
ஊர்வலத்தில் தேராக
அசைந்தே சென்று மறைந்து விட்டாய்...!

நானல்லவோ வாசல் வழி
உன் பிம்பம் காண்பேனென
நிதம் நிதம் விழி நோக
பார்த்துக்கொண்டே தேய்கிறேன்...!

முறை சோறு ஆக்கிப்போட 
முறைமாமன் வந்து நின்றான்...
சுற்றத்தார் விருந்தோம்பலில்
உண்டு களித்த மயக்கத்திலும்
துரும்பாய் நான் போனேனடா...!

கரம் பற்றி என்னை நீ கரைசேர்க்கும் நாளுக்காய்
நாணம் ஒன்றே நகையாய் பூட்டி
நாயகி நானும் கனகாலம் காத்திருக்கிறேன்...!

ஆடி முடிந்து ஆவணியும் தவறாமல்
வந்து கொண்டே தானிருக்கிறது...! 
என்றோ நீ வருவாய்...! கனவில்லை நிஜம் தருவாய்...!


Thursday, 8 November 2012

கனவுக்கு உயிர் கொடு...!

கரம் பற்றி அக்னி வலம் வந்து
என் வாழ்க்கை உள்வட்டதுள்
புகுந்து விட வரமொன்று கேட்பவனே...!

உன்னிடத்தில் நான் கேட்க
வரமொன்றும் வசமில்லை, மாறாக
வாழ்க்கையொன்று உள்ளது...!

எப்படி பட்ட வாழ்க்கை என
என்னோடு பயணித்து அறிந்து கொள்ள
வருகிறாயா?

வா....!

அதோ பச்சையம் இழந்து விட்ட
புதராய் மண்டிய நிலமொன்றை
ஆடுகள் மேய்கின்றனவே...!
அதை தாண்டிய எச்சில் காடுகள்
மிச்சமாய் நம்மை வரவேற்கின்றன...!

அங்கே…

பொறாமை சூழ்ந்த கண்கள் இல்லை...
புறம் பேசும் உதடுகள் இல்லை...
பொய்மை உரசும் செவிகள் இல்லை...
வஞ்சனை நினைக்கும் இதயமில்லை...

ஆதலால்...

மனித சஞ்சாரமற்ற அந்த அத்துவான
கானகதுள் புதிதாய் நம் சந்ததியொன்றை
ஆணிவேராய் பதியம் செய்வோம்...!

ஆம்...!

சுயம் ஒன்றை தொலைத்து விடா
சுயம்பு லிங்கங்களாய் அவர்கள்...!

மரித்து விட்ட மனிதம் அறியா
மகத்துவ மானிடராய் அவர்கள்...!

மோகன்ஜாதாரோ எல்லோரா மிஞ்சிய
நாகரீக பகலவனாய் அவர்கள்...!

அவர்களோடு...

சிந்துவெளி நாகரீகத்தின் ஆற்றுப் படுகையின் மேல்
மதங்களில்லா புது உலகை ஸ்ரிஸ்டிப்போம்...!

நான், எனது, மட்டுமில்லாது நாம் நமது என்ற
வார்த்தை பிரவாகங்கள் தாண்டிய
புத்தம்புது சிந்தனையை விதைப்போம்...!

பகிர்ந்தளிக்கும் விதியினை பிரபஞ்சம் தாண்டி
பரப்பி விட செய்வோம்...!

அடக்குமுறைகளும் ஆளுமைகளும்
பயணித்தறியா புதிய பாதையொன்றில்
தேசம் கடந்து நேசம் பரப்ப செய்வோம்...!

இவையெல்லாம்...

நடந்தேற இயலா கனவுகளாய் மரித்தே போகுமென
கூச்சலிடும் மானிடர் மத்தியில்

நான்...

நாளைய விடியலை காண்கிறேன்
உந்தன் துணையோடு...!


Tuesday, 23 October 2012

நிலவு வழித் தூது...!

ஏ நிலவு பெண்ணே...!

நீயே இந்த வழக்கின் உரையாடலை தீர்த்து வையடி…!

கார் என்றானாம், மாலை தொடுவானமென்றானாம்...
செங்காந்தள் நிரமவள், கற்பின் கனலென்று மகுடம் சூட்டி…
இருள் சூழ்ந்த மாலை நேரத்தில்
மதி மயங்கி கள்ளுண்ட மந்தியானானாம்...!

அத்தனை வர்ணனை
தூது செல்ல உன்னிடத்தில் கொட்டிய
என்னவன், என்முன் வார்த்தைகளின்
பஞ்சம் வர விக்கித்து நின்றதேனோடி...!

உனக்கு தெரியுமா?
வாய் சொல்லில் வீரனடி அவன்…
அவன் அதரம் உதிர்க்கும்
அத்தனை அனர்த்தங்களும்
அர்த்தமாய் தான் போய் விடுகிறது
அவன் கண்கள் ஊடுருவி நோக்கும்
மொத்த பாவையருக்கும்…!

கற்பனை உலகில் அவன் அங்கே
சஞ்சாரம் செய்து கொண்டிருக்க
பாவை என் மனமோ சஞ்சலத்தில் தவிக்குதடி...!

உன் மேகக் காதலனோ கொண்டலாய்
உன்னிடம் நேசம் பொழிந்திட்டான்…!
இங்கொருவனை பார்…
கொண்ட மையல் முழுவதையும்
தையல் உன்னிடம் கொட்டி விட்டு
வார்த்தைகள் தேடிக் கொண்டிருக்கிறான் என்னிடத்தில்...!

அவனிடத்தில் சென்று இதை கூறு
உன் அன்பிற்கினியவள் பசலை பீடிக்க
வெற்றிலை கொடியின்
இடையணைப்பில் கூட
மூச்சுத் திணறுகிறாளென்று...!
ஆம்பல் பூத்த தடாகத்து புல்வெளியில்
கரையிட்ட மச்சமாய் துள்ளித் தவிக்கிறாளென்று...!

அரை நாழிகை பொழுது கூட தலைவன்
பிரிந்து விட்ட காரணத்தால்
அரை நூற்றாண்டாய் வேடிக்கை காட்டுகிறது…!

விரைந்து செல்லடி மஞ்சு கொஞ்சும் வான்மதியே...!
இன்னும் ஒரு நொடி நீ தயங்கி நின்றால்
தலைவனின் பிரிவுணர்ந்த அன்றில் பறவையாய்…
என் தேகக்கூட்டில் உயிர் மட்டும்
மின்மினியாய் கண்சிமிட்டும்…!

நானோ...!

அவன் நினைவு தரும் மயக்கத்தில்
பிச்சியாய் உன்னோடு பிதற்றிக் கொண்டே
இப்படியே கல்லாய் சமைய வேண்டியது தான்…
அவனிருக்கும் திசை நோக்கி...!

Monday, 15 October 2012

யாரிவன்???

மவுனங்கள் மட்டுமே வீழ்ந்துகிடக்கும்
ஆள் இல்லா கானகத்துள்
தனித்து விடப்பட்ட சிறு தும்பியாய் நான்...!

வழிபோக்கர் யாருமில்லா தடங்கள் மீது திடீரென
தோன்றும் சலசலப்பாய்
எங்கிருந்தோ ஒலிக்கிறது அவனின் குரல்...!

ஹெல்லோ என்கிறான்...!

யாரிவன்? இவனுக்கும் எனக்கும்
என்ன பந்தம்?

கொட்டும் மழையாய் அவன்
குரலின் ஈர்ப்பு
வைத்திருக்கும் என்னை
அத்தனை புத்துணர்ச்சியாய்...!

என்னிடத்தில் அவன் காட்டும் அலட்சியம்
ரகசியமாய் காட்டிக்கொடுக்கும்
என்மேல் அவனுக்கான அக்கறையை...!

நான் சீண்டி விளையாடவும்
மனம் நிறைந்து சிரிக்கவும்
திட்டித் தீர்க்கவும், கொட்டிக் குமுறவும்
என்னை நான் முழுதாய் உணரவும்
எனக்கென இறைவன் படைத்த
விளையாட்டு பொம்மையிவன்...!

சோலைக்குள் நான் துயிலும் நாட்களெல்லாம்
காணாமல் போகின்றவன்
வெறுமை சூழ்ந்த அடுத்த நொடி
“என்னாச்சுடி” என எட்டிப் பார்க்கிறான்...!

என் ஒரே ஒரு குரலுக்கு ஓடி வருகிறான்
எனக்காக பதறுகிறான்
என் கண்ணீர ஏந்துகிறான்
நான் சிரிக்கும் அடுத்த நொடி “பை”யென
கையசைத்து விட்டு
வெடுக்கென ஓடி விடுகிறான்...!

கொல்லும் தனிமையை கவி எழுதி வதைத்து விடு,
காத்திருக்கிறேன் என்றவன்
அதை படிக்க போவதில்லையென அவனும் அறிவான்
அவனை அறிந்த நானும் அறிவேன்...!

இதோ அவனுக்கான என் கவியும்
என்னோடு சேர்ந்து தனிமையில்...!