Tuesday 15 May 2012

பெற்றவளை பெற்றவள்...!


தன்னுயிர் தனதுயிரை
ஈன்றெடுத்த நேரம்
பெருவுவகை கொண்டிட்டாளாம்
என் பாட்டி...!

தொட்டிலிட்டு ஆராட்டி
அழுத நேரம் அமுதூட்ட
பாங்காய் கையளித்து
பரவசமடைந்த என்
இரண்டாம் தாயவள்...!

தூங்கா இரவுகளில்
என் அழுகை ஒலியை
சங்கீதமாய் ஏற்று
தூக்கம் தொலைந்து
இன்பம் ஈட்டிய
ஈன்றெடுக்கா அன்னையவள்...!

நிலவுக்குள் ஒழிந்த பாட்டியையும்
பாட்டியை ஏமாற்றிய காக்கையையும்
திராட்சை வெறுத்த நரியையும்
வென்று விட்ட ஆமையையும்
நண்பர்களாக்கி உலாவ விட்டவள்...!

ஆலும் வேலும் பல்லுக்குறுதியென
ஆசான் கற்பிக்கும் முன்பே
வேப்பங்குச்சிக் கொண்டு
பல்தேயக்க வைத்த முதல் ஆசான்...!

தந்தையின் மிரட்டல்களை
அவள் முதுகின் பின்னால்
சாந்தமடைய செய்தவள்...
தாயின் அதட்டல்களை
சரிதானென தன்னைத்தானே
சாந்தப் படுத்திக் கொண்டவள்...!

“தாய்மடி வாசம் மீறிய
ஏதோ ஒரு பிடிமானம் அவளிடத்தில்...”
நான் கூற வந்ததை
யாரிடத்தோ கூறிக்கொண்டிருந்தாள்
என்னை பெற்றவள்...

2 comments:

  1. தாய்மடி வாசம் மீறிய
    ஏதோ ஒரு பிடிமானம் அவளிடத்தில்...”
    //

    நான் உணர்ந்தவை தங்கல் வரிகளில் அருமையான கவிதைகள் அனைத்துமே வாழ்த்துகள்

    ReplyDelete