Monday 30 December 2013

டைரியின் ஆட்டோகிராப்...


வருஷ கடைசி... எல்லாரும் அவங்கவங்க ஆட்டோகிராப்ப திரும்ப பாத்துக்குறாங்க. நான் கூட திரும்பி பாக்க ஏதாவது ஆட்டோகிராப் இருக்கான்னு யோசிச்சு பாத்தேன், இந்த ஆட்டோகிராப் வாங்குறதே பெரிய ஆட்டோகிராப் தானேன்னு அத பத்தி சொல்ல முடிவு பண்ணிட்டேன்.

அது ஒரு அழகிய டென்த் ஸ்டான்டர்ட் பருவம். டென்த் எக்ஸாம் ஆரம்பிக்குறது முன்னாடி என்னோட கிளாஸ் மேட்ஸ் எல்லாரும் கைல ஆள் ஆளுக்கு ஒரு ஆட்டோகிராப் புக்கோட அலைஞ்சுட்டு இருந்தாங்க. நமக்கு இதுல எல்லாம் ஏனோ சுத்தமா நம்பிக்கையே இல்ல. அதுலயும் எங்க கேங்க் கொஞ்சம் அராத்து பார்ட்டிங்க கூட... இந்த ஆட்டோக்கிராப் வாங்குறவங்கள எல்லாம் கடுமையா நக்கல் பண்ணிட்டு ஜாலியா திரிஞ்சுட்டு இருந்தோம்.

அப்போ தான் என் கேங்க்ல இருந்த ரபீக் ஒரு ஆட்டோக்கிராப் புக்க கொண்டு வந்து நீட்டினான். அந்த பக்கி கண்ணு எல்லாம் வேற கலங்கி போய் இருந்துச்சு. எதுக்குமே அசராத நாங்க எல்லாம் ஒரு நிமிஷம் அரண்டு போய் உக்காந்து இருந்த குட்டிசுவர் மேல இருந்து படார்ன்னு கீழ குதிச்சுட்டோம் (நாங்க உக்காந்து இருந்தது ஒரு சமாதி. பாவம் யாரையோ அங்க புதைச்சு எங்கள எல்லாம் அவர் தூக்கி சுமந்துட்டு இருந்தாரு. போர் அடிச்சா அது மேல ஏறி உக்காந்து தான் அரட்டையே அடிச்சுட்டு இருப்போம்). எங்க கேங்க்ல கலான்னு ஒருத்தி உண்டு. அவ தான் ஓடி போய் லூசாடா நீ, ஆட்டோக்கிராப் வாங்குறது நம்ம பிரெண்ட்ஷிப்புக்கே அவமானம்ன்னு சட்டைய புடிச்சு உலுக்குறா. பாவம், என்ன நினைச்சானோ கண்ண தொடச்சுகிட்டே திரும்பி போய்ட்டான். அதுவரைக்கும் கலகலன்னு இருந்த எங்க டீம் அப்படியே ஸ்லோமோசன்ல பீல் ஆகி, திரும்பி நடக்க ஆரம்பிச்சுட்டோம்.

அப்புறம் சாயங்காலமா வீட்ல வழக்கம் போல அரட்டை கச்சேரி நடத்திட்டு இருந்தப்போ அந்த பயல பத்தியே எல்லாரும் பேசிட்டு இருந்தோம். எதோ ஒரு சோகம் எல்லார் மனசுலயும் குடியிருக்க ஆரம்பிச்சுடுச்சு. நிஜமாவே நாம எல்லாம் பிரிஞ்சிருவோமோன்னு பயம். அப்போ தான் அம்மா சொன்னாங்க, இதெல்லாம் வாழ்க்கைல அடுத்தடுத்து வர்ற கட்டங்கள். எல்லாத்தையும் பேஸ் பண்ணனும். நீங்க ஒண்ணா இருக்க போற நேரம் வேணும்னா மாறலாம், ஆனா அன்பு இருக்கும்தானேன்னு.

அடுத்த நாள் எல்லார் கைலயும் ஆட்டோகிராப் நோட். நான் மட்டும் தான் வெறும் கைய வீசிட்டு போயிருந்தேன். அங்க போய் தான் அடடா, நாமளும் அப்பாகிட்ட ஒண்ணு வாங்கி கேட்டுருக்கலாமோன்னு தோணிச்சு. சரி, நாளைக்கு கொண்டு வரலாம்ன்னு முடிவு பண்ணி, எல்லாருக்கும் ஆட்டோகிராப் நோட்ல எழுதி குடுத்து அப்படியும் இப்படியுமா ஒரு நாள் கடந்து போச்சு. அப்பா வேற அன்னிக்கி பாத்து மாடு பிடிக்க எங்கயோ தூரமா போய்ட, எனக்கு ஆட்டோகிராப் நோட் வாங்கி தர யாருமே இல்ல.... அவ்வ்வ்வ்....

அப்புறம் அம்மா, ஒரு டைரி எடுத்து தந்தாங்க. இத கொண்டு போன்னு சொல்லி. அத வாங்கிட்டு போய் ஒருத்தி கைல குடுத்து, எல்லார்கிட்டயும் ஆட்டோகிராப் வாங்கி தந்துருன்னு குடுத்துட்டேன் (பின்ன, நாமளே போய் கேட்டா நம்ம கெத்து என்ன ஆகுறது?)

என்னோட டைரி ஒருத்தர் கைல இருந்து அடுத்தவர் கைக்குன்னு மாறி மாறி போய் சாயங்காலமா என்கிட்ட திரும்பி வந்துச்சு. அந்த நாள்க்கு அப்புறம் ஸ்டடி ஹாலிடேஸ். அடுத்து எக்ஸாம் அன்னிக்கி தான் எல்லாரும் மறுபடியும் பாக்க முடியும்ன்னு டாட்டா காட்டிட்டே எல்லாரும் கிளம்பி வந்தாச்சு. ஆனாலும் எங்க கேங்க் தான் யார் வீட்லயாவது ஒண்ணா தானே இருப்போம். அந்த தைரியத்துல அன்னிக்கி ஒருத்தி வீட்ல மீட்டிங்ன்னு பிக்ஸ் பண்ணிட்டு வீட்டுக்கு வந்தாச்சு.

வீட்டுக்கு வந்ததும் டைரி எங்க, டைரி எங்கன்னு பரபரத்தது அம்மா தான். என்னை கூட படிக்க விடாம பேக்ல இருந்தே பிடிங்கிட்டாங்க. அப்புறம் நானும் அம்மா மடில படுத்துகிட்டே படிக்க ஆரம்பிச்சேன்.

சில பேர், யூ ஆர் ஸோ ஸ்வீட், டோன்ட் பார்கட் மீ ன்னு வழக்கமான பார்முலால கிறுக்கி இருந்தாங்க. ஒருத்தன், இனியாவது அம்மாவ கஷ்ட்டப்படுத்தாத, அப்பா காச வீணாக்காதன்னு அட்வைஸ் மழை பொழிஞ்சிருந்தான். ஒருத்தி நீ பெரிய லாயரா வரணும்ன்னு எழுதி இருந்தா. மூர்த்தி, நீ ஒரு டாக்டரா வரணும்ன்னு ஆசைபட்டுருந்தான். அப்புறம் ஒண்ணு நீ ஒரு இஞ்சினியரா வரணும்னு வாழ்த்தி இருந்துச்சு. எனக்கு இப்போ ஒரே குழப்பம், நான் வருங்காலத்துல அப்படி என்னவா வர்றதுன்னு.

அப்படியே புரட்டிட்டு இருந்தப்போ யாரோ ஒரு பக்கி (அது யாருன்னு சரியா தெரியல, மறந்து போச்சு) நீ வருங்காலத்துல உன் புருசனோட சந்தோசமா இருக்கணும்ன்னு எழுதி வச்சிருந்துச்சி.

எனக்கு அவ என்னை அவமானபடுத்திட்ட மாதிரி ரோசம் பொத்துகிட்டு வந்துச்சு. எல்லார் முன்னாடியும் என்ன நிக்க வச்சு எல்லாரும் கைதட்டி சிரிக்குற மாதிரி இருந்துச்சு. காரணம், அப்போ எல்லாம் இந்த லவ், கல்யாணம்ங்குற வார்த்தை எல்லாமே எங்கள பொறுத்த வரை பேட் வேர்ட்ஸ். என்னோட பி.பி, சுகர் எல்லாம் உச்சத்துக்கு போய், அப்படியே ஒரு பத்ரகாளியா மாறி எப்படி அவ இப்படி எழுதலாம்ன்னு கோபத்துல டைரிய கிழிக்க போனேன். அம்மா உடனே அத என்கிட்ட இருந்து பிடுங்கி, அவ சரியா தான் சொல்லியிருக்கான்னு சொல்லிட்டு டைரிய தூக்கிட்டு போய்ட்டாங்க. அம்மா மேல வந்த கோபத்துல சாப்ட கூட செய்யாம அப்படியே பிரெண்ட் வீட்டுக்கு போயிட்டேன்.

அன்னிக்கி முழுக்க மூட் அவுட், அப்புறம் வழக்கம் போல கலாட்டா, கொஞ்ச நாள்ல எக்ஸாம்ன்னு நாள் ஓடியே போய்ட்டுது.

ஆனா கடைசி வர ஆட்டோகிராப் எழுதி குடுக்காமலும், வாங்காமலும் ஒரு ஜீவன் இருந்துச்சுன்னு அப்புறமா ஒருநாள் தெரிஞ்சுது.. அது தான் கலா... கடைசி வர ஒரு சொட்டு கண்ணீர் கூட விடாம அவ கெத்தா கிளம்பி போய்ட்டா. அப்புறம் ரெண்டு வருசத்துல கல்யாணம் ஆகி, ரெண்டு புள்ளைங்களுக்கு அம்மாவும் ஆகி, இப்போ தான் தட்டு தடுமாறி பி.ஜி செகண்ட் இயர் படிச்சுட்டு இருக்காளாம். இது கிளை கதை.


அந்த டைரிய அதுக்கப்புறம் நான் பாக்கவே இல்ல, கண்டிப்பா எங்கயாவது கும்பலோட கும்பலா எதோ ஒரு வீட்ல இருக்கத்தான் செய்யும். அம்மா கண்டிப்பா அத ரொம்ப பத்திரமா வச்சிருப்பாங்க. ஒருநாள் பொறுமையா உக்காந்து தேடணும்.

12 comments:

  1. வரும் ஆண்டு மேலும் சிறப்பாக அமைய எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. அவ்வ்வ்வ் அண்ணா... தேங்க்ஸ்

      Delete
  2. அப்படியே ஒரு பத்ரகாளியா மாறி//

    மாம் இஸ் ஆல்வேஸ் ரைட்.

    ஹாப்பி ந்யூ இயர்

    சுப்பு தாத்தா.
    www.menakasury.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. ஹஹா ஆனா அப்போ அது தெரியாதே தாத்தா... ஹாப்பி நியூ இயர்

      Delete
  3. ஏம்பா, பதிவு கிடைக்கலேன்னா முகநூல்ல போட்டதையே தூக்கி இங்கே போட்டுடறதா?
    :)

    ReplyDelete
    Replies
    1. எதுல போட்டா என்ன அண்ணா, எல்லாம் நாம எழுதினது தானே... பொதுவாவே நான் ரெண்டுலயும் போஸ்ட் பண்ணிடுவேன். நீங்க இப்போ தான் எப்.பில என் wall பக்கம் வர்றதால புதுசா தெரியுது. இதுல இன்னொரு விவகாரமும் இருக்கு, நம்ம பதிவ யாராவது சுட்டு போட்டாங்கனா, ரெண்டு இடத்துல நமக்கு ஆதாரம் இருக்கும். சண்டை போட வசதி அவ்வ்வவ்வ்

      Delete
  4. Replies
    1. என்ன அண்ணா சிரிப்பு?

      Delete
  5. ஆட்டோகிராஃப் நினைவுகள் இப்போது எனக்குள்ளும்.... :)

    ReplyDelete
    Replies
    1. ஹ்ம்ம்ம் எல்லாருக்கும் கண்டிப்பா அந்த நினைவுகள் இருக்கும் தானே

      Delete
  6. இன்று இழந்தவை(வர்)களை நினைவாக எண்ணிப் போய்க்கொண்டிருக்கையில் "நீ வருங்காலத்துல உன் புருசனோட சந்தோசமா இருக்கணும்" நனவாக்கியது சிரிப்பில்.

    ReplyDelete