Monday 2 February 2015

குடி குடியை கெடுக்கும்...



நேத்து மதியம் சாப்ட்டுட்டு ரெஸ்ட் எடுத்துட்டு இருந்தேன். ஏற்கனவே உடம்பு சரியில்லன்னு சொல்லியிருந்ததால வீட்ல யாரும் டிஸ்டர்ப் பண்ணல. திடீர்னு ஒரு குரல் என் ரூம் பக்கத்துல ஒலிச்சுது. நான் பாப்பாவ பாக்கணும், பாத்துட்டு தான் போவேன்னு. பாட்டி அவளுக்கு உடம்பு சரியில்ல, ரெஸ்ட் எடுக்குறான்னு சொன்ன பிறகும் கேக்கல. நான் உடனே மெதுவா எழுந்து கதவைத் திறந்தேன்.

ஒரு ஆள் நின்னுட்டு இருந்தார். கூடவே பாட்டி. அப்பா ஹால்ல சோபால உக்காந்துட்டு இருக்காங்க.

“பாப்பா, நல்லா இருக்கியாமா, என் பேர் பால்ராஜ்மா. இங்க தான்மா நம்மூருல டீக்கடை வச்சிருக்கேன். நீ வெளில போகும்போது பாப்பேன் பாப்பா, ஆனா பேச எல்லாம் வாய்ப்பு கிடைக்கல. வர்ற ஞாயிற்று கிழமை தங்கச்சிக்கு (அவர் பொண்ணுக்கு) நிச்சயதார்த்தம் வச்சிருக்கேன் பாப்பா. நீ கண்டிப்பா வரணும். வந்து நான் எப்படி ஏற்பாடு எல்லாம் பண்ணியிருக்கேன்னு பாக்கணும்”ன்னு சொன்னார். அவர் கிட்ட அப்படி ஒரு ஆர்வம். ஆளை முழுங்குற மாதிரி பாக்குறாங்கன்னு சொல்வாங்களே, அப்படி தலை முதல் கால் வரைக்கும் என்னை பாத்து பாத்து சந்தோசப்படுறார்.

எனக்கு ஒரே குழப்பம். யாருடா இந்த ஆளு, சம்மந்தமே இல்லாம நம்மள பாப்பா பாப்பாங்குறார், அப்பா வேற பாத்து புன்னகைச்சுட்டே இருக்கார்ன்னு. இதுல அவர் பொண்ணு நிச்சயதார்த்தத்த வேற நான் எதுக்கு போய் பாக்கணும்ன்னு சுத்தமா புரியல.

நின்னுட்டேயும் இருக்க முடியல, சரி இந்தாளு விட மாட்டார் போலன்னு மெதுவா ஹால்ல போய் அப்பா பக்கத்துல உக்காந்துட்டு நீங்களும் உக்காருங்கன்னு சொன்னேன்.

இல்ல, பரவாலமா, எனக்கு நேரம் ஆச்சு, மத்த வீடுகளுக்கும் போய் எல்லாருக்கும் அழைப்பு வைக்கணும்ன்னு சொல்லிட்டே, பாப்பாவுக்கு என்னை தெரியுதான்னு கேட்டார். நான் இல்ல தெரியலன்னு சொன்னதும், அதானே உனக்கு தெரியாது, அப்போ நீ ரொம்ப சின்ன கொழந்தை, ஆனா எனக்கு தெரியும், என்னோட வாழ்க்கைல வெளக்கு ஏத்தி வச்சவமா நீன்னு சொன்னதும் எனக்கு ஒரே குழப்பம்.

அப்பாவ பாக்குறேன், சரி, அப்பாகிட்ட கேட்டா நல்லாயிருக்காதுன்னு அவர் கிட்டயே அப்படி என்ன பண்ணினேன்னு கேட்டேன்.

நீ அப்போ ரொம்ப சின்னக் கொழந்த பாப்பா, தெருவுல உன் வயசு புள்ளைங்களோட விளையாடிட்டு இருப்ப. நான் ஒரு மொடாக் குடிகாரன். அன்னிக்கி குடிச்சுட்டு கருமம் ஒடம்புல ஒட்டுத் துணி கூட இல்லாம கிடந்துருக்கேன். சுத்தமா முடியல பாப்பா. வர்றவன் போறவனெல்லாம் காறித் துப்புறான். எட்டிட்டு சவுட்டிப் போட்டு போனவனும் உண்டு. அப்ப நீ தான் பாப்பா வீட்ல இருந்து ஒரு சீலத் துணி கொண்டு வந்து போர்த்தி விட்ட. என்கிட்ட தண்ணி வேணுமான்னு கேட்ட. ஆனா அப்புறம் என் பொண்டாட்டி வந்து கூட்டிட்டு போய்ட்டா. அம்மா இருந்தா சொல்லியிருப்பாங்க. என் பொண்டாட்டி புள்ளையோட அம்மா கிட்ட தான் வந்து அழுதேன். புத்தியோட பொழச்சுக்கன்னு அறிவுரை சொன்னாங்க பாப்பா. உங்க மாமன் பெரியய்யா கிட்ட சொல்லி கடை வைக்க உதவி பண்ணுனதே நம்ம தாயி தான் பாப்பா. அன்னியோட அந்த கருமத்த உட்டவன் தான் பாப்பா. இன்னிக்கி என் புள்ளைக்கு நல்ல நெலமைல கல்யாணம் கட்டிக் குடுக்கப் போறேன். நான் நல்லா வந்தத உங்க கிட்ட எல்லாம் காட்டணும்ன்னு ஆச பாப்பான்னு சொல்லிட்டே போனார்.

எனகென்னமோ அம்மா தான் நிறைய அட்வைஸ் பண்ணியிருப்பான்னு தோணிச்சு. சின்ன புள்ளைல அப்படி நான் என்ன செய்துருக்க முடியும்?

உங்க பொண்ணு என்ன படிச்சிருக்காங்கன்னு கேட்டேன். ஏதோ டீச்சராம்ல, அதுக்கு படிச்சிருக்கா பாப்பா, அடுத்த தடவ வேலைக்கு ஆள் எடுக்கும் போது இவளுக்கும் கிடச்சிருமாம்ல, இப்ப நம்ம பெரிய தாத்தன் ஸ்கூல்ல தான் வாத்திச்சியா இருக்கான்னு சொன்னார்.

மனசுக்குள்ள சந்தோசமா இருந்துச்சு. அவர அனுப்பிட்டு ரூமுக்குள்ள வந்தப்ப எதுவுமே செய்யலனாலும் என்னமோ சாதிச்சுட்ட மாதிரி அப்படி ஒரு கெத்து வந்துச்சு. தன்னாலயே சிரிப்பும் கண்ணீரும் சேர்ந்துடுச்சு.

படுத்துட்டே யோசிச்சு பாக்க ஆரம்பிச்சேன். இந்த குடியும், போதையும் எத்தன குடும்பங்கள சீரழிச்சு போட்ருக்கு? குடிக்குற எத்தனை பேருக்கு அவங்க வீட்டு புள்ள குட்டிங்க வாழ்க்கையோட அவங்க விளையாடுறது தெரியும்? குடிக்கும் போது அத எல்லாம் நினச்சு பாத்தா ஒரு மிடறு உள்ள இறங்குமா என்ன?

ஸ்கூல் படிக்குறப்ப பிரெண்ட்ஸ் எல்லாம் சேர்ந்து கிராமம் கிராமமா சுத்தியிருக்கோம். பெரும்பாலும் எங்க நோக்கம் ரெத்த தானமும், எய்ட்ஸ் அவேர்னஸ்சும் தான்னாலும் இந்த மாதிரி நிறைய ஆட்கள கடந்து வந்துருக்கோம். குடிச்சு குடிச்சு குடல் அழுகி, வாழத் தெரியாம பொண்டாட்டியவே தொழிலா மாத்தி வாழ வேண்டிய அவல நிலையையும் பாத்துருக்கோம், நடு ரோட்டுல பையன தூக்கி போட்டு அடிச்சு உதச்சு, அவன் ஸ்கூல் பீச பிடிங்கிட்டு போற அப்பனையும் பாத்துருக்கோம். குடி போதைல ரோட்டுல அடிபட்டு நாயை விட கேவலமா செத்துக் கிடந்தவங்கள பத்தி கேள்வியும் பட்ருக்கோம். எங்கப்பன் எல்லாம் செத்தா தாண்டா எங்களுக்கு நிம்மதின்னு பிஞ்சு மனசு கதறுனத கேட்ருக்கோம்.

நாங்கெல்லாம் சொல்லி எந்த ஆளும் திருந்துன மாதிரி எனக்கு நியாபகம் இல்ல. ஆனா அந்த வகைல பால்ராஜ் ஒரு சாதனை மனுஷன் தானே... அந்த மனுஷன் வீட்டு கல்யாணத்துக்கு போகாம வேற எந்த வீட்டு கல்யாணத்துக்கு போகப் போறோம்?

இந்த நேரத்துல குடி பத்தி நான் எழுதின கவிதைய உங்க கிட்ட ஷேர் பண்ணிக்கனும்னு தோணிச்சு...

இதோ அந்த கவிதை....

அப்பா ப்ளீஸ்ப்பா.....
..........................................................
நீயெல்லாம் ஏன்ப்பா குடிக்குற?
குடிச்சுட்டு வந்து அம்மாவ போட்டு அடிக்குற...
அம்மா பாவம்லப்பா, நமக்காக தானே
அடுத்த வீட்ல போய் பத்து பாத்திரம் தேச்சுட்டு வருது.

அடுத்தவங்க கிட்ட ஏச்சும் பேச்சும் வாங்கிட்டு
அவங்களுக்கு மாடா ஒழச்சுட்டு
அவங்க குடுக்குற காச பாத்து பாத்து
வீட்டுக்கு கொண்டு வந்தா
நீ அத புடிங்கிட்டு போய் குடிச்சுட்டு வர...

நான் ஏன்ப்பா உனக்கு பொண்ணா பொறந்தேன்?
பொட்ட புள்ளைய பெத்து போட்டுருக்கா
சிறுக்கினு அப்பவும் அம்மாவ தான் திட்டுற...

என்கிட்ட நீ பாசமா தான் இருக்க,
ஆனா குடிச்சுட்டு வந்தா
புள்ளனு கூட பாக்காம
பொட்டச்சிக்கி எதுக்கு படிப்புன்னு
எட்டில ஒதைக்குற...

போன பரிட்சையிலயாவது அந்த கோபிய முந்திட்டு
நான் முதலாவதா வரணும்னு நினைச்சேன்.
என் புத்தகத்த எல்லாம் கிழிச்சு போட்டுருந்தா கூட
ஒட்டி வச்சி படிச்சிருப்பேன்,
நீ தீயில போட்டு கருக்கிட்ட.

பள்ளி கூடத்துல நான் தான் நல்லா பாடுறேனாம்
பெரிய பாட்டுக்காரியா வருவன்னு சார்மார்
எல்லாம் சொல்றாங்க...
இப்போ நடந்த பாட்டு போட்டியில
நான் தான் பஸ்ட்...
கலக்டர் முன்னால பாட சொன்னாங்க...
ஆனா பாக்க நீ வரலயேப்பா...

நம்ம சங்கீதா அப்பா
அவள சந்தைக்கு கூட்டிட்டு போய்
கேட்டதெல்லாம் வாங்கி குடுப்பாராம்...
கத கதயா சொல்றா...

போன மாசம் திருவிழாவுக்கு
பெரியப்பா கூட எனக்கு பலூன் வாங்கி தந்தாரு,
நடேசன் மாமா தேன்குழல் வாங்கி தந்தாரு...
நீ என்ன எங்கயுமே கூட்டிட்டு போனது இல்ல,
ஆசையா என்ன தூக்கி தட்டாமால சுத்தினதில்ல...

ஆனாலும் அப்பா, நீ அப்பப்போ வாங்கிட்டு வருவியே
அந்த முட்ட போண்டா, வாழக்கா பஜ்ஜி, பரோட்டா...
அதெல்லாம் நீ பக்கத்துல உக்காந்து
தின்னுடி ராசாத்தி னு சொல்லுறப்போ
எனக்கு எப்படி இருக்கும் தெரியுமா?

கண்ணுல இருந்து தண்ணி வருதுப்பா,
எனக்கு எங்கப்பா தான் ஒலகமேனு
கூட்டாளிங்க கிட்ட எல்லாம் ஓடி போய்
சொல்லணும் போல இருக்கும்.

நீ ஏன்ப்பா அப்படியே இருந்துர கூடாது. உன்ன நான்
படிச்சு பெரிய ஆபீசர் ஆகி
ராஜா மாதிரி வச்சுப்பேன்ப்பா...

உன் மடியில படுத்து தூங்கணும்,
உன் கழுத்த கட்டிக்கிட்டு
அந்த ராமாயியக்கா பசங்க
என்ன கிண்டல் பண்ணின கதை சொல்லணும்.
நீ மட்டும் அவங்கள ஓட ஓட விரட்டினா
நான் விழுந்து விழுந்து சிரிப்பேனே...

அப்பா, குடிக்க மட்டும் செய்யாதப்பா.
நீ குடிச்சுட்டு வந்துபுட்டா
உங்கண்ணுக்கு புள்ளையா தெரிய மாட்டேங்குறேன்...
கழுத கழுதனு என்னைய கழுதைய விட கேவலமா நினைக்குற...

உன்கிட்ட சொல்ல வேண்டியத எல்லாம்
சுவர பாத்தும் வானத்த பாத்தும் தான்
சொல்ல வேண்டியதா இருக்கு...
அப்பா, ப்ளீஸ்ப்பா......

16 comments:

  1. வாழ்த்துக்கள் சகோதரி!!
    - நட்புடன் Baskar
    http://aarurbass.blogspot.com/

    ReplyDelete
  2. கவிதை அருமை. குடிப்பழக்கம் உள்ள அதுவும் பெண் குழந்தை உள்ள ஒவ்வொரு தகப்பனும் படிக்க வேண்டிய கவிதை. த.ம.1

    ReplyDelete
    Replies
    1. ஆமா. ஆனாலும் பெண் குழந்தைகள்ன்னு இல்ல, யாராயிருந்தாலும் திருந்த வேண்டியது தானே

      Delete
  3. நீங்க அப்பவே அப்படி.... வாழ்த்துக்கள்... கவிதையின் உணர்வு குடிப்பவர்க்கு பிடிபட வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. நான் எப்படிங்குறது எனக்கே தெரியாத காலம் அது. அந்த உணர்வு பிடிபட்டு விட்டால் அத விட வேற சந்தோசம் இருக்குமா அக்கா

      Delete
  4. அருமை. குடியின் கொடுமையை உணர்ந்தும் திருந்தாமல் பலர் இருப்பது வேதனைதான்

    ReplyDelete
    Replies
    1. குடிச்சுட்டா எங்க உணரப்போறாங்க இவங்கெல்லாம்

      Delete

  5. பதிவும் கவிதையும் மிக அருமை

    ReplyDelete
  6. அற்புதமான கவிதை
    கவிதையை முடித்த விதம்
    கவிதையை இன்னமும்
    உச்சத்திற்குக் கொண்டு செல்கிறது
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. Replies
    1. ஓட்டுப் போட்டதுக்கும் தேங்க்ஸ்

      Delete
  8. அற்புதமான கவிதை
    அருமையான செயல்
    வாழ்த்துக்கள் சகோதரியாரே

    ReplyDelete
  9. மனதைத் தொட்ட பதிவு.

    கவிதையும் நன்று.

    த.ம. +1

    ReplyDelete