Wednesday 13 January 2016

கனவொன்றின் நிஜம்



அந்த கனவென்னை துரத்திக் கொண்டேயிருக்கிறது.
காற்றிலும் வேகமாய் ஓடிக் கொண்டிருக்கிறேன்...
ஆம், அவனென்னைப் பார்த்து விடக் கூடாது.

அவன் கண்களில் நான் பட்டுவிட்டால்
சர்வ நிச்சயமாய் எல்லாம்
முடிவுக்கு வந்து விடும்...

தெய்வீக காதலென்ற
கூற்றுகள் உடைபட்டு
அத்தனை பிரியங்களும்
சிதறிவிடக் கூடும்.

அவன் நெருங்கி விட்டதாய்
உள்ளுணர்வு சொல்கிறது.
இல்லை, இல்லவேயில்லை,
எப்படியாயினும் தப்பித்துவிட வேண்டும்...

நினைப்பதெல்லாம் நடந்து விடுகிறதா என்ன?

காலடித் தடம் நெருங்கி வருகிறது...
அய்யோ, அவ்வளவே தானா?
என்னைப் பார்த்த நொடி
வெறுத்து விடுவானா?
இல்லையில்லை,
அதிர்ச்சியில் உறைந்து விடுவான்...

இவ்வளவு தானா நீ?
ஏமாற்றுக்காரியென
அவன் கண்கள் வெறுப்பை
உமிழ்ந்து கனலும்...

கண்கள் உறைய, அடுத்தது நடப்பது
என்னவென்று அறியாது
மயங்கி சரிந்த வேளையிலே தான்
அது சம்பவித்தது...

இதெப்படி சாத்தியம்?
யாதொரு முகச்சுளிப்போ சந்தேகமோ இல்லாது
மனம் முழுக்க காதலாய்
அவனென்னை தூக்கிச்
சுமந்துக் கொண்டிருக்கிறான்...

அதிர்ச்சியில் உறைந்து விட்ட நான்
வெகு அசட்டையாய் மறந்து விட்டிருந்தேன்,
நான் கண்டுக் கொண்டிருப்பது
கனவென்று...

5 comments:

  1. சந்தோஷம் அளித்த நிஜமான கனவு பற்றிய கற்பனையாக ஆக்கம், மிகவும் அருமையாக உள்ளது. பாராட்டுகள்.

    ReplyDelete
  2. அருமையான கவிதை.
    ரசித்தேன் அக்கா.

    ReplyDelete
  3. சிறப்பா இருக்கு! இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. அருமை.
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் தமிழர் திருநாளாம் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete