"நம்ம வீட்ல பாம்பு இருக்கு தெரியுமா?"ன்னு கேட்டுகிட்டே வந்தான் ராஜீவ்...
"ஐ, பாம்பா... சூப்பர், எங்க பாத்த?"ன்னு கேட்டேன்...
"உன் கார் முன்னால தான் ஊந்து போயிட்டு இருந்துச்சு"ன்னான்...
எனக்கு சாயங்காலமா பீச் போவமான்னு தங்கச்சி கேட்டது நியாபகம் வந்துச்சு. ஒரு கும்பலா போய் சில பல செல்ஃபிக்கள் எடுக்கணும்னு ப்ளான்.
கார் கண்ணாடி எல்லாம் ஏத்தி விட்டுருக்கான்னு தெரியல. இந்த எருமைங்க யார் ஏறினாலும் ஒழுங்கா கண்ணாடிய பூட்டுறதும் இல்ல, கதவ சரியா லாக் பண்றதும் இல்ல.
நிறைய தடவ அவசர அவசரமா கிளம்பி காலேஜ் போறப்ப, இதுக்காகவே நான் வண்டிய இடைல நிறுத்தி கதவ ஒழுங்கா லாக் பண்ண வேண்டியிருக்கும்...
இவன் வேற பாம்பு பாத்தேன்னு சொன்னானா, எனக்கு பாம்பு காருக்குள்ள இருந்து, சாயங்காலம் நாங்க வண்டிய எடுத்துட்டு போயிட்டு இருக்குறப்ப, திடீர்னு அது முன்னால வந்து தரிசனம் தந்தா எப்படி இருக்கும்னு கற்பனை எல்லாம் ஓட ஆரம்பிச்சிடுச்சு.
ஏற்கனவே இப்படி தான், காலேஜ்ல லேப்க்குள்ள பாம்பு வந்துரும்னு லேப் அசிஸ்டென்ட் பயந்தப்ப எனக்கு மட்டும் ஒரே சந்தோசமா இருந்துச்சு.
"தாத்தாகிட்ட வீட்டை சுத்தி இருக்குற செடி எல்லாம் வெட்ட சொல்லிட்டேன். இப்ப ஆள் வந்துருவாங்க"ன்னு அவன் குரல் கேட்டதும் தான் கற்பனை குதிரை என்னை தூக்கி வாரி போட்டுட்டு ஓடி போச்சு...
"என்னது, செடிய வெட்டப் போறாங்களா?"ன்னு அதிர்ச்சியில நான் அப்படியே ஷாக் ஆகிட்டேன்...
"பின்ன, பாம்பு வந்தா பயமா இருக்காதா, அதான் அந்த பிச்சி செடி, ரோஜா செடி எல்லாம் வெட்டிற சொல்லிட்டேன்"ன்னான்....
அவன் அதோட விடல, "இந்த காக்டெயில், finches எல்லாத்தையும் தூக்கி வெளில பறக்க விட சொல்லிட்டேன். அதோட நாத்ததுக்கு தான் பாம்பு வீட்டுக்கு வருது"ன்னு கூலா சொன்னான்.
எனக்கு பி.பி எல்லாம் கோக்குமாறா எகிற ஆரம்பிச்சுது.
"ஒரு செடிய வளர்த்து கொண்டு வர்றது எவ்வளவு கஷ்டம் தெரியுமா, இப்படி அருவா எடுத்து ஒரே வெட்டுல வெட்டணும்னு சொல்றியே, ஒரு உயிரோட அருமை தெரியுமாடா உனக்கு"ன்னு கத்த ஆரம்பிச்சுட்டேன்...
"பாம்பை பாத்தேன்னு சொன்ன, நான் எவ்வளவு சந்தோசப்பட்டேன் தெரியுமா? இன்னிக்கி ஒரு பாம்பு நம்மளால பாக்க முடியுதா, இயற்கை எல்லாம் இப்படியே அழிஞ்சு போயிட்டு இருந்தா கடைசில வெட்ட வெளில சுடுற சூரியன்ல நீயும் நானும் கரிஞ்சு தான் போகணும்:ன்னு படபடன்னு பொரிஞ்சு தள்ளிட்டேன்.
மொபைல் எடுத்து அப்பாவுக்கு கால் பண்ணி வெட்ட வேணாம்னு சொல்லிறலாம்னா அப்பா கால் அட்டென்ட் பண்ணவே இல்ல. அப்புறம் அண்ணனுக்கு கூப்ட்டு விசயத்த சொல்லி, "அப்பாகிட்ட செடிங்ககள வெட்ட வேணாம்னு சொல்லுண்ணே... வீட்டுக்கு வந்தாலே தனிமைல வெறிச்சுன்னு இருக்குற எனக்கு தொணையா இருக்குறது இந்த செடிங்களும் பறவைங்களும் தான். அதுகளும் இல்லனா எனக்கு பைத்தியமே பிடிச்சுடும்"ன்னு அழுதுட்டேன்...
"அதெல்லாம் நீ பயப்படாத, பாம்பு வந்தா இப்ப என்ன, எப்பவும் செடி மூட்டுக்குள்ளயா நாம போய் இருக்கோம். நான் சித்தப்பாகிட்ட சொல்றேன், சித்தப்பா சும்மா ராஜீவ சமாதானப் படுத்த சொல்லி இருக்காரு, அப்படி எல்லாம் பண்ண மாட்டாரு"ன்னு அவன் சொன்னதுக்கு அப்புறம் தான் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆனேன்...
நிஜமாவே யாருமே இல்லாத தனிமை எவ்வளவு கொடுமையா இருக்கும்னு அனுபவிச்சு பாத்தா தான் தெரியும். காலேஜ்ல இருந்து வீட்டுக்கு வந்தாலே, அங்க நமக்குன்னு யாரு இருக்காங்குற நெனப்பு அவ்வளவு இம்சையா இருக்கும். கிட்டத்தட்ட ஒரு ஜெயில் மாதிரின்னு தான் சொல்லணும்.
நிறைய பேரு கேப்பாங்க, எப்படி இப்படி தன்னந்தனியா உன்னால இருக்க முடியுது, பேசாம உன் அப்பாகூட போய் இருக்க வேண்டியது தானே"ன்னு. அதுக்கு நான் இப்படியே இருந்துடுவேன்னு பதில் சொல்லிடுவேன்.
அப்பப்ப வர்ற கிளிகள் சத்தம், கீச் கீச்ன்னு கத்துற அணில்கள் சத்தம், குயில், காக்கான்னு எல்லாரோட சத்தமும் தான் எனக்கு ஐ லவ் யூ சொல்லிகிட்டே இருக்கும்.
பாக்யா அடிக்கடி சொல்லுவா, உங்க வீட்ல உருப்படியா இருக்குற விசயமே அந்த பிச்சி செடிங்க தான்னு.... அது உண்மை தான். காரை கொண்டு வந்து பார்க் பண்ணினாலே, பச்சை பசேல்ன்னு அதோட செழுமையும், வெள்ளை வெள்ளையா பூத்து கிடக்குற பறிக்காத பூவும், கூடவே வர்ற வாசமும் மனசுக்கு அப்படி ஒரு இதம். சிகப்பு, மஞ்சள், வெள்ளைன்னு அப்பப்ப மொட்டு விடுற ரோஜாக்கள பாத்தா அது ஒரு பெருமை. சந்தோசம். "ஹாய் டா பசங்களா, நல்லா இருக்கீங்களா"ன்னு ஒரு விசாரிப்பு விசாரிக்க தோணும்.
கதவ தொறந்துட்டு ஹால் உள்ள வந்தா இரை கேட்டு கண்ணாடிய முட்டிக்கிட்டு நிக்குற மீன்கள பாத்தா ஒரு சிரிப்பு வரும். "இந்தா வந்துட்டேன்"ன்னு அதுக்கு ரெண்டு இரை எடுத்து போட்டுட்டு இருக்குறப்பவே ப்ரித்வி கழுத்தை ஒரு பக்கமா சாய்ச்சு என்னை பாத்துகிட்டே "க்க்க்க்கேஏஏஏ"ன்னு ஒரு குரல் குடுப்பான். நாமளும் எதிர்குரல் அவன் குரல் மாதிரியே குடுக்கணும். நல்ல மிமிக்கிரி ப்ராக்டிஸ்... சம்யூ குறுகுறுன்னு என்னையே பாத்துட்டு இருப்பா... இவங்க தான் என்னோட காக்டெயில். அவங்கள பாத்து சிரிச்சு ரசிச்சுட்டு என்னோட ரூமுக்குள்ள நுழைவேன்.
அங்க எனக்கு எப்பவும் துணையா இருக்குறது finches. உங்களுக்கு புரியணும்னு தான் finchesன்னு சொன்னேன். மத்தப்படி, அவங்க தான் என்னோட போர்ப்படை தளபதிகள். யுவா, கயல், நவீன், மிருதுள், பாரதி, நளன், தமயந்தின்னு அவங்க பேரு.
இப்படி ஒரு உலகத்துல வாழ்ந்துட்டு இருக்குற என்கிட்ட வந்து செடிய வெட்டப் போறோம், பறவைங்கள விரட்டப் போறோம்னு விளையாட்டா சொன்னா கூட டென்சன் வருமா வராதா?
"நீ சின்னப் புள்ளைல பாம்பு பின்னால தொரத்திகிட்டு ஒடுவியாம், உண்மையா?"ன்னு ராஜீவ் அடுத்த கேள்வி கேட்டான்.
அதென்னடா சின்னப்புள்ளையிலன்னு சொல்ற, இப்பவும் பாம்பு பின்னால ஓட ஆசை தான், ஆனா உடல்நிலை ஒத்துழைக்க மாட்டேங்குறதேன்னு மனசுல நினைச்சுகிட்டே "ஆமா... எனக்கு எல்லா உயிர்களுமே ரொம்ப புடிக்கும். அதுங்க கூட பழகுறதும் நேசிக்குறதும், பேசுறதும் ஒரு சாகசம். உனக்கு புரியாது. நீ என்னடான்னா ஒரு பாம்பை பாத்ததுக்கு பயந்து நடுங்கி, இப்படி எல்லாத்தையும் அழிக்கணும்னு அழிசாட்டியம் பண்ணிட்டு வந்துருக்க"ன்னு மூக்கை பிடிச்சு இழுத்தேன்.
"ஏன் எனக்கு இதெல்லாம் தெரியல"ன்னு கேட்டான்.
"நேசிக்க ஆரம்பி, அதுக்கும் வலிக்கும், அதுக்கும் ஏதாவது பிடிக்கும், அதுக்கும் மனசுன்னு ஒண்ணு இருக்கும்ன்னு நீ புரிஞ்சுகிட்டாலே அதுங்க கூட பேச ஆரம்பிச்சுடலாம்"னு சொன்னேன்.
"ரொம்ப மொக்கப் போடாத"ன்னு சொல்லிட்டு போய்ட்டான்... இப்ப பழையபடி தனிமை.
"க்க்க்க்கேஏஏஏ, ரூம்ல என்ன பண்ணிட்டு இருக்க"ன்னு ப்ரித்வி இந்தா கூப்டுறான்....
வீட்டுலயே மாப்ள இருந்தா.. அவர வீட்டோட மாப்பிள்ளன்னு சொல்லலாம். ஆனால் நாட்டுலயே மாப்ள இருந்தா...?. இதுல உங்க வீட்ல பாம்ப வளக்க பாக்குறீங்க. என்ன கொடும மஹேஷ் இது..😃
ReplyDeleteஎன்னவொரு பிரியம்....!
ReplyDeleteசூப்பர் சகோ! இப்போது இப்படி ஒரு வீட்டை நினைத்துப் பார்க்கையில் இன்பம் வருது!! எஞ்சாய்!!
ReplyDeleteகீதா: காயத்ரி கை கொடுங்க! அப்படியே மனதில் வீடுனா எப்படி இருக்கணும்னு நினைப்பேனோ அப்படியே உங்கள் வீடு!!// "ஆமா... எனக்கு எல்லா உயிர்களுமே ரொம்ப புடிக்கும். அதுங்க கூட பழகுறதும் நேசிக்குறதும், பேசுறதும் ஒரு சாகசம். உனக்கு புரியாது.// யெஸ்!!!! அது ஒரு தனி உலகம்! அன்பைத் தவிர வேறு எதுவுமே இல்லாத உலகம். புத்துணர்வு தரும் அழகிய உலகம்! இவ்வளவு பேர் இருக்க தனிமையா...!! கண்டிப்பா நாகர்கோவில் வந்தா உங்களைப் பார்க்க வருவேனோ இல்லையோ இவங்களப் பார்க்க வருவேன்...கண் முன்னால் விரிகிறது உங்கள் விவரணம்..