Monday, 6 February 2017

சவாதி அண்ணன் - வேர்களை தேடி



மூத்தம்மாவ பாக்க வீட்டுக்கு போயிருந்தேன்...

அம்மா அப்பாவ நல்லா வச்சு காப்பாத்தணும்னு சவாதி அண்ணன் ஆச ஆசையா கட்டின வீடு அது...

நான் போனதுமே, பரபரன்னு ஓடி வந்து கதவ தொறந்தாங்க....

"ஏ மக்ளே, சோமா இருக்கியா? வா மோளே, பாத்து வா, மெதுவா வா..."ன்னு பரவசத்தோடயே வரவேற்றாங்க...

"ஒண்ணுமில்ல மூத்தம்மா, நம்ம குடும்பத்துல உள்ள அத்தன பேர் பத்தின விவரங்களையும் தேடிட்டு இருக்கேன்... அதுல பெண் வாரிசுங்கள பத்தின குறிப்புகள் இல்ல, அதான் உங்ககிட்ட கேட்டுட்டு போவலாம்னு வந்தேன்" நேரா விசயத்துக்கு வந்துருந்தேன்...

அதென்னவோ, எப்படி இருக்கீங்க, நல்லா இருக்கீங்களா?ன்னு யார பத்தியும் குசலம் விசாரிக்குற பழக்கம் எனக்கு வரவே மாட்டேங்குவு...

அப்படியே ஒவ்வொரு விபரமா கேட்டுகேட்டு பேப்பர்ல எழுதிட்டு இருந்தேன்.

மூத்தம்மாவுக்கு நிரம்ப சந்தோசம். பல கதைகளும் பேசினதுக்கு அப்புறம் பேச்சு சவாதி அண்ணன் பத்தி திரும்பிச்சு...

அவன் பேரு கனக சபாபதி. எனக்கு அவன் சவாதி அண்ணன்.

இங்க பொதுவா எல்லார் வீட்லயும் show case இருக்கும். அண்ணனோட show case ரொம்ப பெருசு. ஒரு பெரிய சுவர் முழுக்க show caseசா மாத்தி வச்சிருந்தான். அதுல புத்தகங்கள தவிர வேற எதுவும் இருக்கவும் இருக்காது...

என்னோட புத்தகம் ஒண்ண எடுத்துட்டு போயிருந்தேன். அண்ணனுக்கு தான் புத்தகம் பிடிக்கும்ல மூத்தம்மா, அதான் கொண்டு வந்தேன், இது அவனுக்குன்னு அத மூத்தம்மாகிட்ட குடுத்தேன்...

அந்த புத்தக அலமாரியில இருந்த சில புத்தகங்கள எடுத்து பாத்தேன். அம்மா அப்பாவ பாராமரிக்குற முறைகள அடிகோடு போட்டு வச்சிருக்கான்...

பின்ன இந்த பய ஏன் இப்படி திடீர்னு செத்துப் போனான்னு தொண்டைக்குள்ள துக்கம் அடைக்க ஆரம்பிச்சுது...

கணவன் மனைவி சண்டை, சந்தேகம், மனநிலை பாதிப்புன்னு ஆளாளுக்கு பேச விட்டுட்டு அவன் பாட்டுக்கு போய் சேர்ந்துட்டான்...

அவன் செத்து போனதுக்கு யாரு வேணா ஆயிரம் காரணம் சொல்லலாம், ஆனா அந்த உண்மை அவனுக்கும், அவன் கூடவே எரிஞ்சி போன அண்ணிக்கும் தான் தெரிஞ்சிருக்கும்...

"அவன் அப்படி போனான்னு நினைக்கல மோளே, அவன் நேரம் போகணும்னு இருக்கு, போய்ட்டான்... உன் அண்ணி இருக்காளே, அவளும் ஒரு வார்த்த சொல்லல. என் முன்னால தான் ரெண்டு பேரும் உள்ள போனாங்க, கதவடைச்சுகிட்டாங்க. அவனுக்கு கொல்லாங்கொட்டை தவுத்து குடுத்துட்டு இருந்த சத்தம் கூட கேட்டுச்சு. அத தின்னுகிட்டு இருக்கும் போது தான் இப்படி ஒரு சம்பவம் நடந்து போச்சு"ன்னு சொன்னப்ப மூத்தம்மா கண்ணுல கண்ணீரே இல்ல. எல்லாமே வத்தி போயிருக்கும்.

நின்ன இடத்துலயே நின்னு எரிஞ்சி செத்துப் போனான் அண்ணன். யாரையும் பழி சொல்லாம, வீரப்பா அதிகார தோரணைலயே பதில் சொல்லிட்டு அண்ணியும் செத்து போனாங்க.

"உன் அண்ணன் போனப்ப உன் மூத்தப்பா கொஞ்சமும் கலங்கல. இன்னிக்கி போகலனா இன்னொருநாள் தனியா போயிருப்பான், இப்ப தொணைக்கு பொண்டாட்டியையும் கூட்டிட்டு போயிட்டான்னு மட்டும் சொல்லுவார்" மூத்தம்மா மூத்தப்பா பத்தி சொன்னாங்க. அண்ணன் செத்த ஒரு வருசத்துல மூத்தப்பாவும் செத்துப் போய்ட்டார்...

"இந்த வீட்ல தனியா இருக்க உங்களுக்கு பயமா இல்லையா மூத்தம்மா"ன்னு கேட்டா, "நான் தனியா எல்லாம் இல்ல மோளே, அதான் உன் அண்ணன் கூட தானே இருக்கான். எனக்கு ஏதாவது பிரச்சனைனா அவன் இப்பவும் வந்து நிப்பான்"ன்னு சொன்னாங்க.

அவனுக்கு பிடிக்காத எதுவும் அந்த வீட்ல நடக்கவே முடியாது. அவன் நடக்க விடவும் மாட்டான். மூத்தமாவ நல்லா கவனிக்கணும்ன்னு வீட்டு வேலை செய்ற கோமதி பாட்டிகிட்ட கனவுல வந்து அடிக்கடி சொல்லுவானாம்.

மூத்தப்பா சாகுறதுக்கு முன்னாடி லீவ் போட்டுட்டு போன நர்ஸ் கனவுல போய் அப்பாவுக்கு உடம்பு சரியில்ல, உடனே எங்கப்பாவ போய் கவனிங்கன்னு சொல்லி இருக்கான்... ஆச்சர்யமா இப்பவும் பாப்பா சித்தி (நர்ஸ்) சொல்ற விஷயம் இது...

ஆமா, நம்புறவங்க நம்பட்டும், நம்பாதவங்க நம்ப வேணாம், ஆனா அண்ணன் இன்னமும் இங்கயே தான் இருக்கான். அதுவும் பொண்டாட்டியோட சந்தோசமாவே இருக்கான்...

1 comment:

  1. படிக்கப் படிக்க கஷ்டமாயிருச்சு...
    அவங்க அம்மாவுக்கு துணையா இருக்கட்டும்...

    ReplyDelete