Monday 20 February 2017

தொடுதல் பழக்குவோம்



எந்த பக்கம் திரும்பினாலும் மனசுக்கு அச்சுறுத்துற மாதிரி தான் செய்திகள் வந்துட்டு இருக்கு. இதெல்லாம் பாக்குறப்ப மனசுக்குள்ள ஒரு மாதிரியான பயம் வர்றத தடுக்கவே முடியல.

மூணு வயசு, அஞ்சு வயசு குழந்தைங்க எல்லாம் எப்படி தான் சில பேரோட கண்ணுக்கு போகப் பொருளா தெரியுறாங்களோ புரியல....

ரொம்ப சுதந்திரமா வளந்தவன்னு பெருமையா நினைச்சுப்பேன் சில நேரம். ஆனா இப்ப தான் தெரியுது நானெல்லாம் ஏதோ ஒரு பாதுகாப்பு வளையத்துக்குள்ள ரொம்ப ரொம்ப ஜாக்கிரதையா பொத்தி பொத்தி வளர்க்கப் பட்டுருக்கேன்ன்னு...

எனக்கு தெரிஞ்ச ஆண்கள் ஒரு சகமனுசியா தான் பெண்கள நடத்தி இருக்காங்க. ஒரு கூட்டுக் குடும்பத்துக்குள்ள வாழ்ந்த வாழ்க்கை எவ்வளவு வரம் வாங்கி வந்ததுன்னு புரிய ஆரம்பிக்குது எனக்கு.

எங்க பாத்தாலும் பெண்கள் அப்படி இருக்கணும், ஆண்கள் அப்படி நடந்துக்கணும்ங்குற மாதிரியான கருத்துக்கள பாத்து பாத்து சலிப்பா இருக்கு. பயமா இருக்கு, அத செய்யாத, அடக்கி வை-ன்னு சொல்ற அத்தன வார்த்தைகளும் எனக்கு அசூயையா இருக்கு.

அதுக்காக நம்ம வீட்ல நடக்காத வரைக்கும் நாம பத்திரமா தான் இருக்கோம்னும் அசால்ட்டா விட்டுற முடியாது.

பாலியல் ரீதியான அச்சுறுத்தல்கள் பெருகி வர்ற இந்த நேரத்துல, நமக்கு எது தேவைங்குற புரிதல் முதல்ல வேணும்னு நினைக்குறேன்....

பொம்பள புள்ளைகிட்ட அப்படி இரு, இப்படி இரு, ஜாக்கிரதையா இருன்னு சொல்றதோ, ஆம்பள பசங்ககிட்ட பொண்ணுங்கள தொடாதன்னு சொல்றதோ இன்னும் ஒரு அச்சுறுத்தலான மனநிலைக்கு தான் கொண்டு போகும்ன்னு நான் நினைக்குறேன்...

எத பாத்தாலும் சந்தேகத்தோடவும் விரக்தியோடவும் பாத்துகிட்டு இருந்தா அதுக்கப்புறம் வாழ்ந்து தான் என்ன பிரயோஜனம்?

அதுக்கு பதிலா பாலியல் ரீதியா பாகுபாடு இல்லாத ஒரு சமூகத்த நாம உருவாக்க முயற்சிக்கலாம்....

பள்ளிகள்ல ஆண் பெண் குழந்தைகள பிரிச்சி உக்கார வைக்காம கலந்து உக்கார வைக்கலாம். ஒருத்தருக்கொருத்தர் பாராட்டுற நேரம் கை குடுத்துக்குறது, தோள் தட்டிக்குறது மாதிரியான நண்பர்களுக்குள்ள நடக்குற தொடுதல்கள அனுமதிக்கலாம், encourage பண்ணலாம்...

இந்த தொடுதல்கள் மூலமா இவங்க நம்மோட சக மனுசி, மனுஷன், நமக்கும் இவங்களுக்கும் வித்யாசம் கிடையாதுங்குற எண்ணம் குழந்தைகள அறியாமலே அவங்களுக்குள்ள புகுந்துடும்...

நாம கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் இது தான்....

எத நாம செய்யக் கூடாதுன்னு சொல்றமோ அத தான் பிள்ளைங்க செய்ய நினைப்பாங்க. ஒரு ஆர்வமும் குறுகுறுப்பும் அதுல தான் வரும். அதுக்கு மாறா, ஆண், பெண் நட்பு தப்பேயில்லன்னு சின்ன வயசுலயே புரிய வச்சுட்டா bad touch-க்கு உள்ளாகுற குழந்தைக்கு தானே வித்யாசம் புரிய ஆரம்பிக்கும். மெது மெதுவா bad touch பத்தி அவங்க மனசுல புரிய வைக்கலாம்... அப்படியே ஜாக்கிரதை உணர்வுகளையும் அவங்க புரிய ஆரம்பிச்சுடுவாங்க...

ஆணும் பெண்ணும் சக மனுசங்களா பழகுறது உளவியல் ரீதியா சரின்னு தோணினாலும் விஞ்ஞான ரீதியா இது சரியா வருமா? ஒரு ஆணையும் பெண்ணையும் கலந்து பழக விட்டா அவங்களுக்குள்ள காமம் சுரக்காம இருக்க வாய்ப்பு இருக்கான்னு ஒரு கேள்வி எழலாம்.

அதுக்கு என்னோட பதில் இது தான். உளவியல் ரீதியா ஒரு ஆணும் பெண்ணும் பாலின வேறுபாடு பாக்காம பழக ஆரம்பிச்சுட்டாலே அவங்களுக்குள்ள மனக் கட்டுப்பாடுங்குறது தானா வந்துடும். பாக்குற எல்லா ஆண்கள் மேலயும், அல்லது பெண்கள் மேலயும் காமம் பெருக்கெடுத்து ஓட வாய்ப்பே இல்ல.

அப்படி யாருக்கோ யார் மேலயோ ஈர்ப்பு வந்துச்சுனா அவங்களால அத எந்தவித கூச்சமும் இல்லாம வெளிப்படையா கேக்க முடியும். அப்படி கேக்குறப்ப பெண் “No” சொன்னா அத அந்த ஆண் சுலபமா புரிஞ்சுப்பான். அத ஒரு “take it easy”யா அவனால ஏத்துக்க முடியும். அந்த பெண்ணை கட்டாயப்படுத்தி அவள அடையணும்னு நினைக்க மாட்டான்.

எப்படி ஒரு பெண்ணுக்கோ அல்லது ஆணுக்கோ தன்னை பாலியல் ரீதியா நெருங்குரவங்ககிட்ட “NO” சொல்ல உரிமை இருக்கோ, அதே அளவு “YES” சொல்லவும் உரிமை இருக்கு. அத நாம புரிஞ்சுக்க தான் வேணும். ஏத்துகிட்டு தான் ஆகணும். காமமும் காதலும் தனிமனித சுதந்திரம். அடுத்தவங்கள காயப்படுத்தாத, அடுத்தவங்களுக்கு தீமை குடுக்காத, அடுத்தவங்கள புரிஞ்சுக்குற எந்த காதலும் காமமும் சரி தான்.


மறைச்சு வைக்கப்படுற காமம் தான் எதயாவது செய்து அத அடைஞ்சே ஆகணும்னு பிடிவாதம் பிடிக்க வைக்குது. தைரியம் உள்ளவன் பெண்களை கற்பழிக்குறான், கோழை குழந்தைகள சீரளிக்குறான். இதுல ரெண்டு வகையினருமே கடைசில உண்மை வெளில வந்துடக் கூடாதுன்னு கொலையும் பண்ணிடுறாங்க.

தங்களோட உணர்வுகள பரிமாறிக்க, கலந்து ஆலோசனை பெற வழியே இல்லாத ஒரு தனித்து விடப்பட்ட சமுதாயம் தான் உயிர்களோட மதிப்பும் உணர்வும் தெரியாம விளையாடிகிட்டு இருக்குங்குறது தான் உண்மை. இயந்திர உலகத்துல கூட்டு குடும்ப வாழ்க்கை சிதறி போனது கூட ஒரு காரணமா இருக்கலாம். அதனால தான் சொல்றேன், குழந்தைகள் அதிகநேரம் செலவிடுற பள்ளிகள்ல ஆண் பெண் சமத்துவத்த அங்கீகரிக்கலாம்.

அத விட்டுட்டு, ஆண்கள் அத்தனை பேரும் வெட்கப்படணும், வேதனைப்படனும், ஆண்கள் அத்தனை பேரும் மோசமானவர்கள், கருவிலயே ஆண்களை அழிக்கணும்ங்குற மாதிரியான பொங்குதலோ, ஒரு பையன இப்படி வளத்தது அவன் தாயோட தப்பு, அவன் இப்படி இருந்தா அவன் அம்மா எப்படி பட்டவளா இருப்பாங்குற இழிநிலை ஆராய்ச்சிகளோ தேவையே இல்ல...

ஒரே ஒரு விசயத்த எல்லாரும் புரிஞ்சுகிட்டா சரி....

ஆணில்லாம பெண் இல்ல, பெண் இல்லாம ஆண் இல்லவே இல்ல. ஒருத்தருகொருத்தர் வடிகாலா இருந்தே ஆகணும். அத சரியானபடி புரிதல்களோட இருக்கணும்ங்குறது மட்டும் தான் இப்போதைய வேண்டுதல் எல்லாமே....


2 comments:

  1. சிறப்பான யோசனைகள் சகோதரி...

    ReplyDelete
  2. பத்து வயதுக்க்கு கீழ்ப்பட்ட பெண்குழந்தைகள் மீதும் காமம் கொள்ளும் கொடூரர்கள் உங்கள் ஆலோசனைகளை வரவேற்கக்கூடும். பெண் குழந்தைகளைப் பெற்றவர்கள் இன்னும் அதிகமான பாதுகாப்பு ஏற்பாடுகளையே விரும்புவார்கள். ஏனெனில், ஆண்களின் சபலம் அத்தனை பிரசித்தியானது.

    - இராய செல்லப்பா நியூஜெர்சி

    ReplyDelete