நாகர்கோவில்ல நடக்குற தேசிய புத்தக கண்காட்சிக்கு பொன்னீலன் சார் கூட போயிருந்தேன்...
காலேஜ்ல இருந்து வீட்டுக்கு வந்து, அவர கூப்பிட கிளம்பி போகவே ரொம்ப லேட் ஆகிடுச்சு. என்னை பாத்ததும் பொன்னீலன் சார் மனைவி, எம்மா நல்லா இருக்கியான்னு கேட்டதோட, கொஞ்சம் இரு, என்னை இருளப்பப்புரம் கோவில்ல இறக்கி விட்டுருவியான்னு கேட்டாங்க...
சரின்னு அவங்களையும் கார்ல ஏத்திகிட்டு, வர்ற வழில வர்சுவையும் ஏத்திகிட்டு கிளம்பினோம்.
சில நேரம் ரெண்டு பேர் பேசுறத வேடிக்கை பாக்குறதே அத்தன சந்தோசமா இருக்கும். அதுவும் முகவாய தோள்ல இடிச்சுக்குற மாதிரி செல்ல சண்டைகள் நடந்தா கேக்கவே வேணாம், செமையா வேடிக்கை பாக்கலாம்...
"இந்தா ஒரு ஜன்னல மட்டும் பூட்டிகிட்டு கோயிலுக்கு காணிக்க வைக்க ஒரு தேங்காயும் உரிச்சுகிட்டு இப்ப ஓடி வரேன்"ன்னு போனவங்கள கொஞ்ச நேரமா காணோம். ஒருவழியா அவங்க வந்ததும் "நம்ம ஊரு பொம்பளைங்க நேரம் காலம் பாக்க மாட்டாங்க"ன்னு சொல்லிகிட்டே பொன்னீலன் சார் கூடவே ஒரு பழமொழியும் சொன்னார்.
அதென்னமோ தெரியல, அந்த பழமொழி எனக்கு இப்ப மறந்து போச்சு. அடுத்த தடவ அவர பாக்குறப்ப நெனவு வச்சு அது என்னன்னு கண்டிப்பா கேக்கணும்.
"இன்னிக்கி பிள்ள வந்ததால என்னால கோயிலுக்கு போவ முடியுவு"ன்னு சிரிச்சுகிட்டே அவர சட்டைப்பண்ணாம கார்ல ஏறி உக்காந்தாங்க.
"நீ அந்த சிவன் கோயிலுக்கு போயிருக்கியாமா? ரொம்ப சிறப்பு வாய்ந்த கோவில் அது"ன்னு அவங்க கேட்டதும் எனக்கு கொஞ்சம் திணற ஆரம்பிச்சுது. பின்ன, நாம தான் எந்த கோவிலுக்கும் போக மாட்டோம்ல....
"இல்லல, நான் கோயிலுக்கெல்லாம் போறது இல்ல"ன்னு சொன்னேன். அதுக்குள்ள சாமி பத்தி பெருமையா அவங்களும், "நல்ல வேளை, நீ கோவிலுக்கு போக மாட்ட. இப்படியே இருமா"ன்னு இவரும் சொல்ல எனக்கு என்னோட பூட்டா, பூட்டி நியாபகம் வந்துச்சு...
பூட்டாவும் பூட்டியும் பாக்க எப்பவும் எலியும் பூனையுமா தான் இருப்பாங்க. ஆனா அவங்களுக்குள்ள ஒரு மெல்லிய காதல் ஓடிகிட்டே இருக்கும்.
சும்மா ஒருத்தருக்கொருத்தர் கிண்டல் பண்ணியும், நக்கல் பண்ணியும்.... அத எல்லாம் கூடவே இருந்து பாக்க அவ்வளவு ஜாலியா இருக்கும்.
அப்புறம் அவங்கள கோவில்ல இறக்கி விடுறப்ப தான் முதல் தடவையா அந்த கோவில பாத்தேன். நல்லா பெருசாவே கட்டியிருக்காங்க. எட்டிப் பாத்தா ஒரு சர்ச் வேற இருக்கு பக்கத்துலயே...
அதோட பிரம்மாண்டத்த பாத்து கொஞ்சம் மலைச்சு அங்க இருந்து ராஜாஸ் மால் போனோம்.
தன்னோட பேத்திய பாக்க நாளைக்கு பாண்டிச்சேரிக்கு போறதாகவும், அதனால பேத்திக்கு ஒரு பொம்மை வாங்கணும்னும் ஏற்கனவே பொன்னீலன் சார் சொல்லி இருந்தார்.
நான் கார் பார்க்கிங்லயே இருக்க, அவரும் வர்சுவும் போய் பொம்மை வாங்கிட்டு வந்தாங்க.
அங்க இருந்து கிளம்பி புக் ஃபேர் போய், கொஞ்ச நேரம் புத்தகங்கள புரட்டிட்டு இருக்குறப்ப ராம் வந்தார்.
அதென்னமோ தெரியல, எனக்கு இன்னமும் ஆட்கள பாத்தா சிநேகமா புன்னகைக்கவும், நல்லா இருக்கீங்களான்னு நலம் விசாரிக்கவும் வரவே மாட்டேங்குது. ஆனாலும் பேச்சுக்கிடைல எப்படியோ நானும் கொஞ்சம் பூந்துகிட்டேன்.
என்னோட சிறுகதை தொகுப்பு "தற்கொலைக் கடிதம்" பத்தி நிறைய பேர் அவருக்கு கால் பண்ணி பாராட்டினதா சொன்னார். அதுவும் புத்தகத்தோட தலைப்பு ரொம்ப அருமையா இருக்குன்னு சொன்னாங்களாம்.
கூடவே 2016 வருடத்துல "தெற்கு" விருதுகள் வழங்கும் விழாவுல சிறந்த சிறுகதைக்காக என்னோட சிறுகதை தொகுப்பு தேர்வாகி இருக்குறதாவும் சொன்னார்.
ஆக மொத்தம் நிறைய பேசி, ரெண்டே ரெண்டு புத்தகத்த வாங்கிட்டு அப்படியே கிளம்பி வர்ற வழியில பொன்னீலன் சாரோட மனைவியையும் கார்ல ஏத்திகிட்டு வந்தோம்.
இடையில, வர்சு சாக்லேட் வேணும்னு அடம்பிடிக்க, அவள கடைக்கு அனுப்பி வச்சுட்டு நாங்க கார்லயே உக்காந்து பேசிட்டு இருந்தோம்.
வர்சுவ எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. ரொம்ப தைரியசாலியா வளந்துருக்கான்னு சாரோட மனைவி சொன்னாங்க.
முன்னாடி இத விட டெரரா இருப்பா. இப்ப பொம்பள புள்ள அடக்க ஒடுக்கமா இருன்னு வீட்ல சொல்லிக்குடுத்து கொஞ்சம் அமைதி ஆகிட்டான்னு நான் சொன்னதும் தான் தாமதம், அப்படியே கோபத்துல வெடிச்சுட்டாங்க...
"பொம்பள புள்ளைங்க இன்னிக்கி காலத்துக்கு எங்க எல்லாம் போறாங்க, இங்க என்ன அடக்க ஒடுக்கமா இருக்கணும்மாம்ல, அதெல்லாம் வேணாம், அவ நல்ல தைரியசாலியா தான் வளரணும்"ன்னு பொரிஞ்சி தள்ளிட்டாங்க...
தெய்வ நம்பிக்கையோட கோவில் கோவிலா போற ஒரு டிபிக்கல் குடும்ப பெண்ணான அவங்களுக்குள்ள இப்படி ஒரு புரட்சியாளர் இருப்பார்ன்னு நான் நினைக்கவேயில்ல...
ஹாஹா..... சரியான ஜோடிங்க தான் ரெண்டு பேரும்....
அப்புறம், வர்சு ஒரு கராத்தே kid -ன்னு அவங்களுக்கு எடுத்து சொல்லி, அவ செய்ற ரவுடியிசத்த எல்லாம் சொன்னதும் அவங்களுக்கு அவ்வளவு சந்தோசம்... "எனக்கு இந்த புள்ளைய ரொம்ப பிடிச்சிருக்குமா"ன்னு சொல்றப்ப அவங்க வாயெல்லாம் பல்லு....
அவங்க ரெண்டு பேரையும் இறக்கி விட்டுட்டு வர்றப்ப வர்சு சொன்னா "அந்த தாத்தா நிஜமாவே கிரேட் தெரியுமா?"
நான் ஏன்னு கேட்டேன்...
"அவர் பேத்திக்காக பார்பி பொம்மை வாங்கிக் குடுக்குறார். பேத்தி என்ன கேட்டாலும் வாங்கி குடுக்குறார்ல, அப்ப அவர் கிரேட் தான"ன்னு சொன்னா.
"அந்த பேத்தி வயசு என்ன தெரியுமா"ன்னு திருப்பி கேட்டேன்.
"தெரியலயே"ன்னா...
"மெடிக்கல் காலேஜ் first year student"ன்னு சொன்னதும் "ஆஆஆஆ"ன்னு வாய பொளந்தவ தான், வீட்ல அவள இறக்கி விடுற வர மூடல.
ஆக, ஒரு மாபெரும் எழுத்தாளரோடு பயணிக்குறத விட அவர் குடும்பத்தோட பயணிக்குறது அத்தன சுவாரஸ்யமா இருக்கு....
இன்னும் இன்னும் எங்க பயணம் தொடர்ந்துகிட்டே தான் இருக்கப்போகுது....
அருமையான பதிவு
ReplyDeleteசிந்திக்கச் சுவையான கருத்தாடல்
சுவாரஸ்யமா இருக்கு....! (?
ReplyDeleteஅருமை...
ReplyDeleteஒரு ஆளுமையின் அருகில் இருக்கும் வாய்ப்பு வரம்...
பெண்களைத் தைரிய சாலிகளாகத் தான் வளர்க்க வேண்டும் என்பதை ஆதரிக்கிறேன்.
ReplyDelete-இராய செல்லப்பா நியூஜெர்சி