Tuesday, 15 August 2017

“தற்கொலைக் கடிதம்” ஒரு பார்வை – கிருஷ்ண கோபால்



02/ 07/ 2017 இலைகள் இலக்கிய இயக்கத்தில் வாசிக்கப்பட்டது
.......................................................................................................................................

தமிழ் சிறுகதை உலகம் உலகச் சிறுகதைகளுக்கு இணையான பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியிருக்கிறது. புதுமைப்பித்தன் தொடங்கி ஜானகிராமன், சுந்தர ராமசாமி, அம்பை, ராம கிருஷ்ணன், ஜே.பி. சாணக்கியா, பாலசுப்பிரமணியம் பொன்ராஜ், எஸ்.செந்தில்குமார், எஸ்.ஜே.சிவசங்கர் வரையிலும் புதிது புதிதாய் எழுத்தாளர்கள் உருவாகிக்கொண்டே இருக்கிறார்கள். படைப்பாளிக்கான எழுத்துச்சுதந்திரம் பாதிக்கப்படும் வரை இந்த பாய்ச்சல் நிகழ்ந்துக் கொண்டேயிருக்கும்.

தமிழில் யதார்த்த எழுத்தின் காலம் முடிந்துவிட்டது என்றால் இல்லை. அதை விவாதத்திற்குள்ளாக்கி புரிந்துக்கொள்ள முயற்சிக்க வேண்டும். ஜீவாவின் கதை உலகம் என்னப் பேசுகிறது, அவரின் கதை மாந்தர்கள் யார், நவீன கதைச்சொல்லியாக இருக்கிறாரா இல்லையா, பாடுபொருள் என்ன என்பதைப் பற்றிப் பேசலாம்.

வலி, வேதனை, துயர், புறக்கணிப்பு, அன்பு, காதல், பாசம், கொண்டாட்டம், பழமை, மரபை விடாமை என உணர்வுகளின் சங்கமமாக அவரின் அக உலகம் பெண்ணின் வெளியாக கதையில் விரிவுக்கொள்கிறது.

இத்தொகுப்பில் மொத்தம் பெரியதும் சிறியதுமாக 20 கதைகள் இருக்கின்றன. இக்கதைகளில் நான் பொருட்படுத்தி பேசும் கதைகளாக கன்னிப்பூசை, சாகசப்பயணம், அப்பா, இருப்புக்குழி, ராக்காயி வீட்டு மருமக, மாதவன் சார் நலம் போன்ற கதைகளைச் சொல்வேன்.

சிறுகதைகளுக்கான வடிவம் வேறு, கதைக்கான வடிவம் வேறு. தற்கொலைக் கடிதம் தொகுப்பில் அனேகமாக எல்லாம் கதைகள் தான் ராக்காயி வீட்டு மருமவ மற்றும் சாகசப்பயணம் போன்ற கதைகள் சிறுகதையின் கூறுகளை சிறிது கொண்டிருப்பதாக நினைக்கிறேன்.

சில நேரங்களில் இது கதைகளா இல்லை சுயவரலாறா என்கிற சந்தேகம் உண்டு. பொதுவாக அனேக கதைகளில் ஆசிரியர் தன் வாழ்வில் எதிர்கொண்ட பிரச்சனைகளை அப்படியே இன்னொருவரிடம் சொல்லும் யுக்தியை தான் அதிகம் பயன்படுத்தியிருக்கிறார். இது பெரும்பாலும் ஒருவரின் கதைதான் என்கிறபோது சற்று சலிப்பு மேலிடுகிறது.

எழுத்தாளர் தன் சொந்த அனுபவங்களை எழுதக் கூடாதா என்றால் எழுதலாம். ஆனால் வேறு வேறு வடிவத்தில் கதைகள் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். உண்மையைச் சொன்னால் கதைகளில் உயிர் இருக்கிறது, உடல் இல்லை. இதை இப்படி வேண்டுமானால் சொல்லலாம், உள்ளடக்கம் உள்ளது, வடிவம் இல்லை எனலாம்.

ஜீவாவின் கதைகளில் எனக்கு பிடித்த அம்சமம் கதை வாசிக்க தடையில்லாத ஒரு ப்ளோவைதான் சொல்ல வேண்டும். அதுக் கூட பொது மொழிதான் என்றாலும் நாம் அதை ஏற்றுக் கொள்ளலாம். நினைத்ததை எழுத்தில் கொண்டு வந்துவிடும் மொழி ஆளுமை இருப்பதாகவே நம்புகிறேன். ஜீவாவின் வாழ்வின் அனுபவங்களை மதிக்க வேண்டும். அவர்தம் வாழ்வியல் சூழலுக்குள் அவரின் இடம் என்ன என்பது புரிகிறது.

பழமை மரபு மீது ஆசிரியருக்கு இருக்கும் ஈடுபாடும் மதிப்பையும் இருப்புக்குழி மற்றும் கன்னிப்பூசை கதைகள் சொல்லிச் செல்கிறது. வட்டார மரபை உயர்த்திப்பேசும் சிறுகதைகள் இவைகள் எனலாம். முதலில் கன்னி பூசை பற்றி விரிவாக பேசலாம்.

ஒரு குடும்பத்தில் உள்ள ஆணோ பெண்ணோ இறந்துப் போனால் அவர்களை தெய்வமாக நினைத்து வழிபடும் மரபு தென்புலத்தில் உண்டு. கன்னியாக வழிபடத் தொடங்கியதும் குடும்பத்தில் உள்ள ஒரு நபரின் மீது கன்னி வந்து குடும்பத்தில் உள்ள நல்லது கெட்டது சொல்லும். குடும்பத்தை வாழ வைக்கும் கன்னிக்கு தென்மேற்கு மூலை எனப்படும் கன்னி மூலையில் மேடை எழுப்பி, கன்னிக்கு பிடித்தமான பொருட்களை படையலிட்டு வருடத்திற்கொரு முறை பூசைக் கொடுப்பார்கள்.

கணேசன் மாமா சிறுவயதில் இறந்து விடுகிறார். அவரை கன்னியாக வழிபட தொடங்குகிறார்கள். குடும்பத்தில் உள்ள பிற மாமாமார்களுக்கு கல்யாணமாகிறது. கூட்டுக்குடும்பம் தனித்தனியே பிரிந்துச் செல்கிறது. கணேசன் மாமாவின் அண்ணன் நாராயணன். நாராயணனின் மனைவி சங்கரி. சங்கரி மீது கன்னித் தெய்வம் வந்து அருள் சொல்கிறது. குடும்ப பிரிவினை காரணமாக தனியே இருக்கிறார் நாராயணன் மாமா. கன்னிக்கு பூசை கொடுக்கும் போது சங்கரி மாமி மீது ஆராதனை வந்து தொலைவிலிருக்கும் வீட்டுக்கு வந்து விடுவாள். சிதறிப் போன கூட்டுகுடும்பத்தை எப்படி கன்னி தெய்வம் இணைத்து வைக்கிறது என்பது தான் கதையோட ஜீவனாக நான் கருதுகிறேன்.

அடுத்து இருப்புகுழி கதையைப் பற்றிச் சொல்லியாக வேண்டும். இருப்புகுழி என்பது அய்யா வழி மரபில் உள்ள ஒரு மரணச் சடங்கின் முக்கிய கூறு. இறந்து போன ஒருவர் ஊரில் முக்கிய நபராக இருக்கிறார். வயதானவர், மதிப்புமிக்கவர், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட கால் பெருவிரலை இழந்து சாக்ஸ் காலோடு அலைபவர். விரலை இழந்தவர் தன் மானத்தை இழந்ததை போல் நொந்துப் போகிறார். நோய் முற்றி ஒரு காலை எடுக்க வேண்டும் என்கிற சூழலில் காலை இழப்பதற்கு முன்பே இயல்பாக மரணம் அவரை தழுவிக் கொள்கிறது. இது சிறுகதையின் மேல் சரடு. இறந்து போனவரை இருப்புக் குழிக்குள் புதைத்து கல்லறை தோட்டம் அமைத்தார்கள் என்பது இன்னொரு சரடு.

பொதுவாக கிறிஸ்ட்டியானிட்டியின் பாதிப்பால் அய்யா வழியில் கூட இறந்தவரை புதைப்பதற்கு இருப்புக்குழி எடுத்துப் புதைக்க மெனக்கெடுவதில்லை. அவர்கள் படுக்கை நிலையிலுள்ள கல்லறைப்பெட்டியையே பயன்படுத்த தொடங்கி விட்டார்கள். ஏனெனில் அய்யாவழிக்காரர் ஒருவர் இறந்துவிட்டார் என்றால் உடனே அவரை சம்மண நிலையில் கால்களை மடித்து வைத்து, கைகளை மார்பு கூடோடு ஒட்டி, தவநிலையில் உக்கார வைத்து விடுவார்கள். இது துரிதமாக நடக்க வேண்டியப் பணி. சற்று தாமதித்தாலும் கைகால்களை நாம் நினைத்தப்படி நிமிர்த்தமுடியாது. உலகமயமாக்கலின் தாக்குதல் நிகழ்ந்தபின் மீடியாக்களின் பெருக்கத்தால் பொருள் மட்டுமே வாழ்க்கையில் முக்கியமென்றும், மனித மதிப்பீடுகள் வீழ்ச்சியடைந்தபின் எவருமே மரணசடங்கில் இருப்புக்குழி மரபை பேணுவதில்லை.

என் தாத்தாவையும் பாட்டியையும் இருப்புக்குழி அமைத்துதான் அடக்கம் செய்தார்கள். என் மாமா இறந்தபோது அவரை கிருஸ்டியானிட்டி முறைப்படி கல்லறைப் பெட்டியில் வைத்து அடக்கம் செய்தார்கள். இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் மாமா இறந்தது வெள்ளிக்கிழமை, அவரை அடக்கம் செய்தது சனிக்கிழமை. அடக்கம் செய்யும் போது ஊர்க்காரர்கள் சனிப்பிணம் தனியே போகக்கூடாது என்றுச் சொல்லி ஒரு சேவல் கோழியை உயிரோடு குழிக்குள் போட்டுப் புதைத்து விட்டார்கள். உயிர்பலிக்கு எதிரான அய்யாவழியில் சிறுதெய்வ வழிபாட்டின் மரபில் பின்பற்றப்படும் உயிர்பலியை இங்கே ஏற்றுக்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டது.

வாழ்வே ஒரு புதிர் நிறைந்தது. முரண்நகையோடுதான் இயங்குகிறது போலும். மரபு என்பது இனக்குழு வாழ்வில்தான் பராமரிக்கப்படுகிறது. ஜீவாவின் இருப்புக்குழி கதையில் இரண்டு விஷயங்கள் முரண் நகையாக தோன்றியது. ஒன்று இறந்து போன பெரியவரை வடக்குப்பார்த்து தவநிலையில் வீட்டிற்குள் வைத்திருக்கும் போது பக்கத்தில் பத்தி மணத்துக்கொண்டிருக்கிறது. இரண்டாவது இருப்புக்குழி அமைத்து சடலத்தை மூடியபின் மார்பிள் கல் கொண்ட கல்லறைத் தோட்டம் அமைத்தார்கள் என்று வருகிறது. இது பத்தி கொளுத்தி வைத்திருக்கிறது என்பது பிராமண மதமான இந்துமத மரபையும், கல்லறைதோட்டம் அமைத்தல் என்பது கிறிஸ்ட்டியானிட்டி மரபோடு தொடர்பும் கொண்டது. கால மாற்றம் இனக்குழுவாழ்வின் வீழ்ச்சி இவை எப்படி ஒரு பூர்வீக மரபை உடைத்து ஒரு நகலாக உருமாறுகிறது என்பதை கதை வழியே உணர முடிந்தது. இந்தத் தொகுப்பில் உள்ள முக்கியமான கதையாக நான் இதை உணர்கிறேன். இருப்புக்குழி கதையில் மிளிரும் முரண் நகை ஒரு பெரும் கலாச்சார மாற்றத்தை மறைமுகமாக குறிப்பிடுகிறது என்பது கதையின் சிறப்பம்சங்களில் ஒன்று.

பானிபூரியும் மசாலாபூரியும் ஒரு விளையாட்டான சிறுகதை தான். நவீன மனிதர்கள் தங்கள் உணவு வகைகளில் பல மாற்றங்களை விரும்புகிறார்கள். உலகமயமாக்கலுக்குப்பின் பிராய்லர் கோழிகளின் வருகை அது எப்படி உருவாக்கப்படுகிறது, அதன் சதை ஏன் இவ்வளவு மிருதுவாக இருக்கிறது, ஏன் இவ்வளவு சுவையாக இருக்கிறது என்கிற வரலாறுத் தெரியாமலேயே நம் தலைமுறைகள் தொடர்ந்து உட்கொண்டதன் விளைவு ஆண்மை குறைபாடு, பெண்கள் சீக்கிரமே பூப்பெய்தல், மாதவிடாய் கோளாறுகள், உடல் குண்டாகுதல் போன்ற செயற்கையான நோய்களுக்கு நாம் ஆளாகவேண்டியிருந்தது. இந்த உணவை உண்டதின் நீட்சியாகவே பரோட்டா, பானிப்பூரி, மசாலாப்பூரி போன்ற நம் கலாச்சாரத்திற்கு ஒத்துக் கொள்ளாத உணவு வகைகளை நான் உட்கொள்கிறோம். நான் குறிப்பிட்டது இந்த சிறுகதைக்கு வெளியே நிற்கிறது என்றாலும் இதைக் குறிப்பிட்டாகவேண்டியிருக்கிறது.

தற்கொலைக்கடிதம் கதை, கதையின் சாராம்சத்திலிருந்து சிறிதும் மாறாமல் அழுத்தமான வடிவமாக, இப்புத்தகத்தில் பிரசுரிக்கப்படாத பரோட்டாவுக்கு பின்னால் உள்ள ரகசியம் சிறுகதையில் அழுத்தமாக வெளிப்படுகிறது.

சாகசப்பெண் கதையில் கொடுமையான நோயிலிருந்து மீண்டு வரும் பெண் கார் ஓட்டுகிறாள், அப்பாவிடம் அன்பு கொண்டவளாக இருக்கிறாள். இக்கதையில் வாழ்வை எதிர்கொள்ளும் விதம் அலாதியானது.

ஒரு கேன்சர் நோய்க்கு மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்ளும் பெண் எப்படி அவளைப் போல் கேன்சர் ஆரம்ப நிலையில் இருக்கும் மனதளவில் சோர்ந்து போயிருக்கும் ஒருவருக்கு கவுன்சிலிங் கொடுக்கிறாள், எப்படி படிப்படியாக அவன் நம்பிக்கைக் கொண்டு சிகிச்சைப் பெறுகிறான், சிகிச்சைப் பெற்று அவன் குணமாகிறான் என்பதை உளவியல் பார்வையில் அணுகியிருக்கும் சிறுகதை இது.

கதாசிரியரின் பாடுபொருள் அனேகமாக குடும்ப உறவுகளைச் சார்ந்தே இயங்குகிறது. அப்பா, அம்மா, தம்பி, மாமா, மாமி, மாடுகளோடு உள்ள உறவுகள் என்றே நீள்கிறது. லெச்சுமி என்ற பசுமாடு கன்றுக்குட்டி ஈனும்போது நெஞ்சடியையும் தூக்கமின்மையும் கதாபாத்திரங்கள் உணர்ந்ததுபோல் வாசகனும் அந்த உணர்வை பெற வைத்தச் சிறுகதை.

பழம் நம்பிக்கையோடு பின்னிப்பிணைந்து வாழும் உறவுகள் கிராமத்து எளிமையான மனிதர்கள், ஒரு பெண் சுதந்திரப்பறவையாக ஊர்சுற்ற நினைக்கிறாள், அவளை அடக்கி வைக்க நினைக்கிறது குடும்பம். கட்டுப்பாட்டை உடைத்து இளங்கன்று பயமறியாது என்பது போல் திக்கற்று சுற்றுகிறாள். பட்டாம்பூச்சியை கண்டு குழந்தைப்போல் குதூகலிக்கிறாள், வழியில் நடந்து செல்லும் யானையைக் கண்டதும் மகிழ்வுக் கொள்கிறாள். கட்டியணைக்கத் துடிக்கிறாள். இப்படியாக பெண் வெளி தன் ஒடுக்கப்பட்ட சமூக அமைப்பிலிருந்து வெளியேறத் துடிக்கும் கதை பானிபூரியும் மசாலா பூரியும்.

இவ்வாறு பல கதைகளில் வெவ்வேறு பெயர் தாங்கி வரும் பெண் கதாபாத்திரம் ஆசிரியரே என்பதை கதை வாசிக்கும் போதே எளிமையாக உணர முடிகிறது. இந்த சிறுகதைகளை ஒன்றாக்கி சற்று கூடுதலான காலங்கள் எடுத்து ஒரு நாவல் எழுதியிருக்கலாமோ எனத் தோன்றுகிறது. நாவல் எழுதுவதற்கான ஒரு ப்ளோ எழுத்து மொழியில் ஜீவாவுக்கு கைகூடியிருக்கிறது என்றே நம்புகிறேன்.

ராக்காயி வீட்டு மருமவ கதை பெண்ணின் மாதவிடாய் பிரச்சனையைப் பற்றிப் பேசிப் போகிறது. சமீபத்தில் முகநூலில் மாதவிடாய் பற்றி ஒரு ஆணிடம் ஏன் பேசக்கூடாது என்ற கட்டுரையையும் இச்சிறுகதையோடு இணைத்துப்பார்க்கிறேன். இரண்டும் வெவ்வேறு தளம் என்றாலும் ஒரே பிரச்சனையைப்பற்றிப் பேசிச் செல்கிறது. பொதுவாக கதைகள் அனேகமாக பாதியிலேயே முடிந்து போய் விடுகிறதோ என்று நினைக்கிற அளவுக்குச் செல்கிறது. அது இன்னும் நீண்டுச் செல்லலாம். அதற்கான வெளி அக்கதைகளில் இருக்கிறது. நாம் சொல்ல வந்ததை சொல்லிவிட்டோம் என்கிற குழப்பம் ஆசிரியருக்கு இருப்பதாக உணர்கிறேன்.

கிட்டத்தட்ட எல்லா கதைகளிலும் ஆசிரியர் ஒளிந்திருந்து எல்லாவற்றையும் சொல்முறை யுக்தியிலும் நினைவோடை யுக்தியிலும் உரையாடுகிறார். ஆனால் சிறந்த சிறுகதையில் ஆசிரியர் யார் என்று வாசகன் கண்டுபிடிக்க இடம்கொடுக்க கூடாது என்பது என் எண்ணம்.

என்னுடைய கதைத்தொகுப்பை விமர்சனம் வைக்கின்ற அளவுக்கு தீவிரமாக எதுவும் இல்லையென்று ஒருமுறை சொல்லியிருக்கிறார் கதை ஆசிரியர் ஜீவா. ஆனால் எந்த ஒரு படைப்பாக இருந்தாலும் அது வெளியில் வந்ததும் அதுப்பற்றி ஒரு சரியான விமர்சனம் வந்தால்தான் ஆரோக்கியமாக இருக்கும் என்று நினைக்கிறேன். அப்பொழுது தான் படைப்பாளி அடுத்தக் கட்டத்திற்கு போக முடியும். படைப்பு ஆழமும் விரிவும் கொள்ளும். அதனால் விமர்சனத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இன்னும் கொஞ்சம் பொறுமையாக இந்தத் தொகுப்பை கொண்டு வந்திருக்கலாம் என்பது என்னுடைய எண்ணம். உங்களை சுற்றி இருந்தவர்கள் இதை உங்களிடம் சொல்லியிருக்கலாம். சற்று தாமதித்து கொண்டு வந்திருந்தால் இன்னும் சிறப்பாக பேசப்பட்டிருக்கும்.

தொடர்ந்து வாசியுங்கள், எழுதுங்கள், இதைவிடவும் சிறப்பான கதையை பதிவுச் செய்யுங்கள்.

இலக்கிய உலகிற்கு அடியெடுத்து வைத்து சிறுகதை தொகுப்பை கொண்டு வந்த உங்களுக்கு அன்பும் வாழ்த்தும்.

3 comments:

  1. அருமை நீண்ட நாட்களுக்குப் பிறகு தங்கள் எழுத்து இருக்கும் என்று நினைத்தேன் ஆனால் புத்தக விமர்சனம் என்று போதும் கருத்து ஆழமிக்க ஆசிரியரின் பார்வை சிறப்பு வாய்ந்தது. வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. அருமையான நூல் விமர்சனம்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. குயிலிசை போதுமே அட குயில் முகம் தேவையா... உணர்வுகள் போதுமே அதன் உருவம் தேவையா...
    I feel Jill Jill cool cool when I read your blogs, pls continue your own way.

    ReplyDelete