Sunday, 3 March 2013

வேண்டும் ஒரு உயிர்சாசனம்...!

நானும் யோசித்து கொண்டுதான் இருக்கிறேன்…
விரக்தியும் சோர்வுமில்லாத ஒரு கவிதையை
எழுதி விட வேண்டுமென்று...!

எழுதி விடலாம் தான்...

மூச்சடக்கி தத்தளிக்க வைக்கும்
உணர்வலைகளுக்கு மத்தியில்
பற்றிக்கொள்ள கிடைத்த சிறு மரத்துண்டாய்
நீ என்னோடு தனித்திருந்தால்...!

இத்தனை நாள் காதலில்
எத்தனை நாள் உன்
அருகாமையை வேண்டி நின்றேன் என்று
உண்மையாய் நீ என்னை புரிந்து கொண்டிருந்தால்...!

உன்னை மறந்து என்னோடு
லயித்துக்கிடந்த நாட்களெல்லாம்
மீண்டுமொருமுறை என்றில்லாமல்
ஆயுளுக்கும் தொடருமென உயிர்சாசனம்
எழுதி விட்டு இறுதிவரை காத்திருந்தாயென்றால்...!

எத்தருணங்களிலும் எனக்கான சந்தோசங்களை
நான் இழந்து விடுவதில்லை...
ஆனாலும் உன்னை மட்டுமே
சுவாசித்துக் கொண்டிருக்கிறேன் என்று
எப்படி புரிய வைப்பேன் உன்னிடம்?

உன் சுகம் மட்டுமே பெரிதாய் தெரிகிறதே,
என் நிலை யோசித்தாயா என்று...
சடுதியும் சிந்திக்காமல் கேட்டாயே ஒரு கேள்வி...
இதையே நானும் திருப்பி கேட்டால்?

எங்கிருந்து கற்றுக்கொண்டாய்? என்னிடத்தில்
பொய் சொல்லலாம் என்னும் வித்தையை?
மறந்து விட்டாயே... உன்னை விட
உன்னை அதிகமாய் அறிந்தவள் நான் தானென்று...!

அத்தனையும் அடக்கி விடத்தான் துடிக்கிறேன்...
அடக்கப்பட்ட நெஞ்சுக்குள் ஆக்சிஜன் புறம் தள்ளி
சிகப்பணுக்கள் கைப்பற்றி வெடித்துச் சிதறுகிறது,
அணுஅணுவாய் உன்மேல் நான் கொண்ட காதல்...!

அர்த்தங்களும் அனர்த்தங்களும் உள்ளிருப்பு செய்வது,
உமிழப்படுவதற்கு முன்பு வரை மட்டுமே தான்...
என்னை காணாது இத்தனை தவிக்கும் நீ...
நான் இல்லாது போனால் என்ன செய்வாய்
என்று எதிர்க்கேள்வி எழுப்புகிறாய்...

உன்னுள் புகைந்து கொண்டிருக்கும் எரிமலை குன்றுகளோ
நெருப்பு லாவாக்களை அள்ளி வீசுகின்றன...
எனக்குள் தகித்திருக்கும் இயலாமை மேகங்களோ
கண்ணீர் துளிகளை பேய் மழையாய் பொழிகின்றன...!

தவித்திருக்கும் நேரத்தில் உன் தோள் தேடுகிறேன்...!
இன்னொருமுறை வதைத்து விடாதே...
உன்னிடத்தில் மட்டும் முருங்கையின் வலிமையை கொள்கிறேன்...
உன் பயணத்தில் சகபயணியாய் எனக்கொரு வரம் கொடு...
என் உயிரோடு உறவாடி கவிதையாக பயணிக்கிறேன்...!

நிஜங்களின் கனவு...!

புதைக்குழி ஒன்று என்னை ஈர்ப்பதாய் ஓர் உணர்வு....
சகதிக்குள் நான் மெல்ல மெல்ல மூழ்கிக்கொண்டிருக்கிறேன்...

சுவாசப்பாதையின் வழுக்குப்பாதைக்குள்
உட்புகுந்து ஊர்ந்து செல்கிறது
இடம்பெயர்ந்த மண்புழு ஓன்று....

நட்புக்கரம் நீட்டி பாசக்கயிறு வீசும்
எமன் பார்த்து புன்னகைக்கிறேன்
புது விடியல் காணும் மலர்ச்சியாய்....

கனவுதான் என்றாலும்
மூழ்கித்தான் போவேனோ,
இல்லை மூச்சடைத்து எழுவேனோ...

சிந்தையில் பாரதி சிரித்துவிட்டுப் போகிறான்...!

உறவாடும் உயிர்ப்பூ...!

என் நினைவு பொக்கிசத்திலே
இவள் என்றும் கவலை ஏதுமறியா
ஒரு மான் குட்டியாய் சுற்றித் திரிகிறாள்...!

ஒவ்வொரு நாளையும்
எண்ணிக்கையால் நிரப்பி
மரணம் எதிர்நோக்கி
பிடிப்பற்ற வாழ்க்கை வாழ்பவர் மத்தியில்
மரணத்தின் நிழலை கூட
அவள் அறிந்தவளில்லை...!

அவளின் அறிமுகம்
இதோ என் மனதில்
மயிலிறகால் பளிச்சென
வருடி விட்டு செல்கிறது...!

விரித்த கூந்தலிலே
ஒற்றை சாமந்தி சூடி
என் அறை வாசல் கடக்கையிலே…
ஏதோ நினைத்துக்கொண்டவளாய்
பூனை பாதம் வைத்து
அருகில் வந்து நின்றவள் அவள்...!

வலி மறக்கும் காரணிகளை
தேடி தேடி அலுத்துப்போன
மூளை செல்களுக்குள்
சில நொடிகளில் ஆக்சிஜனை
ஏராளமாய் நுழைக்கச் செய்தவள்...!

இப்படியே முடிந்து தான் போகுமோ
என் ஆயுள் என்று விரக்தியாய் நானிருக்க
என் வேதனைகளை மறக்கடிக்கும்
வாசமாய் இந்த செண்பகப்பூ
சிரித்துக்கொண்டிருக்கிறாள்...!

எங்கும் அமைதியாய், சோகமாய்
ஒரு ராணுவ கட்டுப்பாட்டுக்குள்
கட்டுண்ட கைதி போலே
களையிழந்த சிறைச்சாலைக்குள்
இவளின் சிரிப்பொலி
குயிலின் கீதத்தை நினைவிருத்தி
பசுங்சோலையை உயிர்ப்பித்துக் கொடுத்தது...!

எத்தனை வாய்ப்பிருந்தும்
பிடிவாதமாய் கற்க மறுத்த
கொஞ்சும் மொழியை
அவள் பிஞ்சு வாயால் கேட்க
அத்தனை ஆனந்தம் எனக்கு...!

தட்டுத்தடுமாறி அவள் பேசும்
லயத்தில் தமிழ் இன்னும் இன்னும்
அழகாய் மிளிர்கிறது...!

தலையசைத்து தாளத்தோடு சிரிக்கையிலே
நடனமாடும் அவள்
ஜிமிக்கிகளோடு இணைந்து
கண்களும் அபிநயம் பிடிக்கும்...!

நாளை வருகிறேன், தமிழ் படித்துக்கொடு என
கையசைத்து அவள் விடைபெற்ற போது
நாளைக்கான விடியலையும்
நம்பிக்கையோடு விதைத்துச் சென்றாள்
எனக்கும் சேர்த்து...!

இதோ இன்று அவள்...
தண்ணீர் உறிஞ்சிய
இலவம்பஞ்சாய் வீழ்ந்து கிடக்கிறாள்...!

அசைவற்று கிடக்கும் வலக்கையினிலே
உயிர்திரவம் உள்நுழைந்து கொண்டிருக்கிறது...!
இடபக்கத்து முக்காலியிலோ அவளை
காப்பாற்ற துடிக்கும் தந்தையின் மனம்
மருந்துகளாய் இறைந்து கிடக்கின்றன...!

இன்னமும் உயிர் மிச்சம் இருப்பதை
ஏறி இறங்கும் அவள் நெஞ்சுக்கூடு
உணர்த்திக்கொண்டிருக்கிறது...!
என்றும் மாறா புன்னகை மட்டும்
அவள் உதட்டில் நிரந்தரமாய் குடிகொண்டிருந்தது...!

அவள் உயிர் பிடிக்கும் கிரகமாய்
புற்றுநோய் உருவெடுத்து
வந்த எமன் கொஞ்சம் தயங்கியே
எட்ட நின்று வேடிக்கை
பார்த்துக்கொண்டிருக்கிறான்...!

தன்னம்பிக்கை விதைத்துச் சென்றவள்
இன்னமும் அதை விட்டு விடாமல்
ஒரு சுவாச போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறாள்...!

இறைவா இவளுக்கு
வலி இல்லா மரணம் கொடு என
முடிவு புலப்பட்டு விட்ட
ஏழாம் அறிவு வேண்டிக்கொண்டாலும்
எழுந்து வா எழுந்து வா என
ஆழ்மனம் அழைத்துக்கொண்டிருக்கிறது...!

Sunday, 17 February 2013

நானிங்கு நீயோ?

ஆழ்நிலை தவமாய்
கணினித்திரையில் உன் விரல்கள்
பரபரப்பாய் இயங்கி கொண்டிருக்க…
உன் சிந்தனை சிதறல்களை
உயர்த்திய புருவங்களோடு
கழுத்தை கட்டிக்கொண்டு ரசிக்கிறேன் நான்...!

அதெப்படி?
வார்த்தைகளின் கோர்வைகள்
உன்னிடத்திலே மயக்கம் கொண்டு
அப்படி கிறங்கிப்போய் கிடக்கின்றன?

நீ நினைத்த மாத்திரத்தில்
நினைத்த உருவத்துள் சுலபமாய்
கூடு விட்டு கூடு பாய்ந்து விடுகிறாய்...!
நானோ என்னிடத்திலும்
கொஞ்சம் கவனம் வையென
காது கடித்து என் பக்கம் திருப்புகிறேன்...!

கிழக்கே கரம் விரிக்கும்
கதிரவனும் தோற்றான் போ...
உன் பார்வை அனலினிலே
நெருங்கி வந்து எரிந்து சாம்பலாக
நானொன்றும் சாதாரணமானவளா என்ன?

இறந்த சாம்பலுக்குள்ளிருந்தே
மேலெலும் பீனிக்ஸாய்
என்னையே உயிர்ப்பித்துக் கொண்டுன்
மடியில் அமர்வேன் நான்...!

கைகள் மாலையாய் கோர்த்திருக்க
கெஞ்சும் கிள்ளையாய்
ஒரு அரைப்பார்வை பார்கிறேன் நான்...
ம்ஹும்... அசைவில்லையே உன்னிடத்தில்...!
கோபத்தின் வீரியம் மட்டும்
உதட்டோர சுளிப்பில்
பனிகட்டியாய் உருகிக் கொண்டிருக்கிறது...!

ஓய்வெடுக்கா கரங்களினால்
என் கரம்பற்றி உன் நெஞ்சில் பதிக்கிறாய்...
இதென்ன?
உன் விரலசைக்கும் வேகத்திலே வீழும்
உன் சுயம், கோபம், காதல்,
பொறுப்பு, நேர்மை, கனிவு என
அத்தனை கலவைகளுக்கும்
நானே பிம்பமாகி போகிறேன்?

ஆயுளும் முடிந்துவிட்டால் தான் என்ன?
ஆகாயம் இருக்கும் வரை வாழ்ந்திருப்போமென
பக்கத்து வீட்டு வானொலியும்
நமக்காகவே அறிவித்துக்கொண்டிருக்கிறது...!

மனதோடு ஒரு ராகம்...!

வான் விட்டு பிரியாத நிலவாய் நாமும்
வாழ்வோடு இணைந்து ஒரு பயணம் செல்வோம்...!

தோழனாய் நீ வந்த காலம் மாறி
என் உயிரோடு கலந்திட்ட மாயம் என்ன?

கார்முகில் பொழிகின்ற மழையை போலே
என் மனதோடு நீ ஒரு ஜாலம் செய்தாய்...!

கிழக்கினில் உதித்திட்ட சூரியன் போலே
வந்தது நமக்குள்ளே உறவின் பந்தம்...!

கண்மூடி திறக்கின்ற நொடியில் நீயும்
என் நரம்போடு ஓர் இசை மீட்டிச்சென்றாய்...!

கனவுக்குள் புகுந்தென்னை திருடிக்கொண்டே
சலிக்காமல் நீயும் ஓர் காவல் செய்தாய்...!

விழிபார்த்து அல்ல, என் உணர்வின் வழி நீ
ஊடுருவிக்கொண்டே என் இதயம் அடைந்தாய்...!

என் நாடி நரம்பெங்கும் சிலிர்த்தது கொண்டே
புகுந்திட்ட உன்னை நான் முழுதாய் உணர்ந்தேன்...!

எத்திசையும் நிறைந்து நிற்கும் காற்றைப் போலே
என் சுவாசம் முழுதும் நீயாய் நிறைந்தே கொண்டாய்...!

இளங்காலை சிரிக்கின்ற வெண்பனிக் கொண்டு
என் தேகம் முழுதுமாய் சிலிர்க்கச் செய்தாய்...!

நீரோடை பிரதிபலிக்கும் பிம்பமாய் நானும்
நீயாக உருமாறி உன் உயிரில் கலந்தேன்...!

இனி நமக்குள் பிரிவொன்று என்றும் இல்லை
உயிர் கோர்த்து வாழ்வோம் என் வாழ்வே நீ வா...!

Tuesday, 5 February 2013

தீண்டத்தகா விலைபொருள்...!

நம் கண்கள் மோதிக்கொண்டதால்
காதல் பற்றியதென்று கவிபாட துணியவில்லை நான்...!

பார்த்துக்கொண்டோம்,
முறைத்துக்கொண்டோம்,
பின் ஏனோ சிரித்தும் கொண்டோம்...!

மூளையின் தூசுபடிந்த மூலையில்
பளிச்சென்று ஏதோ ஒன்று படபடத்துக்கொண்டது...!

படபடத்து சென்றது பச்சைக்கிளியின்
ரெக்கையென நான் நினைத்திருக்க,
பறந்து சென்ற வவ்வாலோ
தலைகீழாய் விதிமாற்றி சிரித்தது...!

நீ ரோஜா மலர் என்றாய்...
பாதுகாப்பாய் முட்களை வெட்டித்தள்ளியபடி...!

மான் குட்டியின் மறுபிறவி நீ என்றாய்...
வேங்கையொன்றாய் எனக்காக காவல் இருந்தபடி...!

உன்னை எடுத்துரைத்த தந்தை
எனக்கு இற்றுப்போன கோடாலியானார்...
அதட்டி உருட்டிய தாயோ
எனக்கு சொக்கட்டானாய் மாறிப் போனாள்...
தாய் மறந்தேன், தந்தை மறந்தேன்,
கூடி குலவிய உறவுகள் மறந்தேன்...!

தேவதூதனாய் நீ என் கைப்பிடித்து
அணைத்துக்கொள்கிறாய்...
உன் முதுகின் பின்னால் எட்டிப்பார்த்த
சாத்தானின் உதடோ கள்ளத்தனமாய் சிரித்துக் கொண்டது...!

உன் நிழல் தீண்டுமிடம்
சுவர்க்கம் என்றே அடியெடுத்து வைத்தேன்...
புதைமணலாய் நீ என் பாதம் தாங்குவாய் என்று அறியாமல்...!

அவசர அவசரமாய் நீ நடத்திய
காதல் நாடகம் முற்றுபெற்றதாய் அறிவிக்கப்பட்டு,
அடுத்த அத்யாயம் உடனே துவங்கப்பட்டது...
மான் வேட்டை நடத்தும் வேடர்கள் மத்தியில்...!

இச்சைகள் கொண்டு பெண்மை ருசிக்கும்
பேய்களின் மத்தியில்
என் இதயம் பிடுங்கி
முள் படுக்கையில் தள்ளிவிட்டுப் போகிறாய்...!

தடுமாறி விழுகிறேன்,
காற்றடிக்கும் திசையெல்லாம் இழுத்துச் செல்லப்படும்
நூலறுந்த பட்டமாய் திசைமாறி போகிறேன்...
எச்சில் ஊற பின்தொடர்கிறது,
சதைத்தின்னும் பிணங்களின் கூட்டம்...!

செத்தும் நடக்கிறேன், வலித்தும் படுக்கிறேன்...

வாழ்க்கை கொடுக்கிறேன் என
என் மேனி வருடிக் கொள்கிறான் ஒருவன்...
காசு எறிந்து விட்டு
அலட்சியமாய் பிடித்திழுக்கிறான் மற்றொருவன்...!

இங்கு நான் இரையாகி கொண்டிருக்கிறேன்,
நாளும் பொழுதுமாய் விலையாகிப் போகிறேன்...!

நீ விதைத்துச் சென்ற விதையொன்று
இன்னுமோர் சிதையேற துடிக்கிறது...!
ஆண் என்றால் அவனொரு தரகன்...
பெண் என்றால் அவள் மற்றுமோர் பந்தயப் பொருள்...!

வேறு கண்ணோட்டம் தோன்றுவதில்லை உங்களுக்கு...
உங்கள் பார்வையில் நான் ஒரு விலைமகள்...!
என் சமூகம் ஒரு தீண்டத்தகா விளைநிலம்...
நீங்கள் தீண்டி விளையாடி விட்டுச் செல்லும் பொழுதுகள் நீங்கலாக...!

முதல் ஸ்பரிசம்...!

இது உனக்கும் எனக்குமான
முதல் ஸ்பரிசம்…!

உன்னை என்னிடத்தில்
கையளித்தவன் முகத்தை பாரேன்…
தான் ஆண்மகனென்று நிரூபித்த திமிர்…
ஒற்றை கண்ணடித்து
என்னை பரவசமாய் பார்க்கிறான்…!

உன் பிஞ்சு தீண்டல்,
உன்னை பதியம் செய்தவனின் செல்ல சீண்டல்
இரண்டும் சேர்ந்து
உலகம் மறக்க வைக்கிறது என்னை…!

நம்மை தவிர
நம்மை சுற்றி இருந்தவர்கள்
மாயமாய் மறைகிறார்கள்…!

உன் பிஞ்சு விரல் பற்றுகிறேன் ஆசையாய்...
அதே நேரம் ஈரம் உணர்கிறேன் நெற்றியில்…!

உன்னை அணைத்த நான்...
நம்மை அணைத்த அவன்...
உன்னோடு அவன் மார் சாயும் போது
முதுகில் படர்கிறது எனக்கான நிம்மதி…!

எத்தனை ஜென்மம் காத்திருந்தேனோ
உன் பிஞ்சு முகம் காண..!

உன்னை முத்தமிட மனம் தவிக்கிறது,
என் முரட்டு உதடுகள்
உன்னை காயப்படுத்தி விடுமோயென
தயக்கம் எட்டிப்பார்க்கும் முன்
என்னவனின் முரட்டு மீசை
உன்னை அழுத்தமாய் கொஞ்சத் துவங்குகிறது…!

சட்டென என்னுள் எட்டிப்பார்த்தது பொறாமையா?
வெடுக்கென அவன் தலை மயிர் பற்றி இழுக்கிறேன்...!

அப்படியே சாய்ந்து
என் கழுத்திலும் முத்தமிடுகிறான்…
இந்த நிமிடம், இந்த நொடி,
அவனின் காதல், அவனின் காதல் பரிசாய் நீ...!

அன்பு மகளே... உணர்ந்துகொள்,
இது காமமில்லை, காமம் தாண்டிய பந்தமடி நீ...
சுவாசித்துக்கொள்...
நமக்கான பந்தம் இதுதானென்று...!

எங்களின் காற்றுப் புகா இடைவெளிக்குள்
புகுந்து விட்டவள் நீ…
இன்னும் இன்னும் எங்கள் பந்தம்
ஈர்த்துக் கொள்ள காந்த விசையாய் ஜனித்தவள் நீ…!

கட்டுக்கடங்கா ஆசையோடு
களைத்திருக்கும் கண்களால் உன்னையே
பருகி கொண்டிருக்கிறேன் நான்…
நீயோ, என்னிடத்தில் சேர்ந்து விட்டேனென
நிம்மதியாய் ஒரு செல்ல கொட்டாவி விடுகிறாய்...!

என் உள்ளங்கை பற்றி இதமாய் அழுத்துகிறான்
உன்னை விதைத்தவன்...
அப்படியே உன் வாயில் வழிந்த எச்சில் தொட்டு
ரசித்து சுவைக்கிறான் திருடன்…!

உன்னைக் காட்டி நான் அவனை தவிர்ப்பதும்..
உன்னை கொஞ்சி அவன் என்னை வெறுப்பேத்துவதும்
தொடரும் நிகழ்வுகளாய் என்றென்றும்...!

செல்ல கோபங்களும் போலி முறைப்புகளும்
இனி வழிநடத்திச் செல்லட்டும்
நம் வாழ்க்கை சுவாரசியங்களை...!