Friday, 26 December 2014

தற்கொலை கதைகள்


தற்கொலை....

கனநேரத்துல என்ன பண்றதுன்னு தெரியாம சட்டுன்னு பண்றதுல இருந்து பக்காவா ப்ளான் பண்ணி செய்ற வரைக்கும் ஏகப்பட்ட காரணங்கள் இருக்கு.

இப்ப ஏன் திடீர்னு தற்கொலை பத்தி பேசுறேன்னு ரொம்ப யோசிக்காதீங்க, நான் எல்லாம் தற்கொலை பண்ணிக்குற அளவுக்கு அவ்வளவு பெரிய தைரியசாலி எல்லாம் கிடையாது. அப்படி பட்ட நான் கூட சட்டுன்னு எமோசனலா முடிவெடுக்க வேண்டிய நிலைமை கூட வந்துருக்கு. என்னோட மனசுக்குள்ள எப்பவுமே ஒரு ஆசை உண்டு, சாவோட விளிம்பு வரைக்கும் போய்ட்டு சட்டுன்னு திரும்பி வந்துடணும்னு எப்பவுமே நினைப்பேன். பல தடவ அத நான் அனுபவிக்கவும் செய்துருக்கேன், ஆனா இதுவரைக்கும் திருப்தியான அளவு அந்த எக்ஸ்பீரியன்ஸ் எனக்கு இன்னும் கிடைக்கலன்னு தான் சொல்லுவேன்...

ஓய், என்ன நீ இப்படி எல்லாம் பேசுற, வந்தேன்னா, இந்தா பாருன்னு கம்பை எல்லாம் நீங்க எடுத்துட்டு வர்றதுக்கு முன்னாடி நான் எஸ்கேப் ஆகிடுறேன்... ஆனா கொஞ்சம் கதைகள் சொல்லிட்டு போய்டுறேனே...
............................

என்னோட தூரத்து சொந்தம், பெரியப்பா பொண்ணு. சின்ன வயசுல ஊர் ஊரா கொஞ்சம் சுத்தினதால ஊருக்கு வந்து செட்டில் ஆனப்ப அவள தான் முதல் முதல்ல சொந்தம்னு அறிமுகப்படுத்தினாங்க. ரொம்ப பாசமா இருப்பா. அன்பும் அடக்கமுமா பொண்ணு வேணும்னு கேப்பாங்களே அவங்க எல்லாருக்கும் அவள புடிக்கும். பட்டு சேலை கட்டி கொஞ்சம் நகை போட்டா அப்படியே மகாலட்சுமினு ஊர்ல சொல்லுவாங்க. என்னை விட ஆறு வயசு பெரியவ. எல்லாரையும் போல ஒரே மாதிரி படிக்க கூடாதுன்னு சென்னைல கெமிக்கல் இஞ்சினியரிங் படிச்சா. நாலு வருஷம் சென்னைல இருந்தாலும் ஊருக்கு வந்தப்போ அவளாவே தான் இருந்தா. அதே அன்பு. அதே பணிவு. பந்தானா கிலோ என்ன விலைன்னு கேக்குற பார்ட்டி. இங்க வந்ததும் சும்மா இருக்க வேணாமேன்னு ஒரு காலேஜ்ல லெக்சரரா போனா.

வேலைக்கு போன ஆறு மாசத்துல அவளுக்கு கல்யாணம் பேசினாங்க. பாத்த முதல் மாப்பிளையே ஓகே ஆக, நாங்க எல்லாம் அவளை கலாய்ச்சு தள்ளிட்டோம். அப்ப கூட புன்னகையோட தான் கடந்து போவா. சந்தோசமா கல்யாணத்துக்கு தேவையான எல்லாம் அவளே போய் பாத்து பாத்து வாங்கினா. ஆனா கல்யாணத்துக்கு மூணு நாள் முன்னாடி அமைதியாகிட்டா. எல்லாரும் புள்ளை எதோ வீட்ல எல்லாரையும் பிரியணுமேன்னு வருத்தத்துல இருக்குன்னு விட்டுட்டாங்க. நான் கூட கவனிச்சேன். ஆனா விளையாடுற வயசு. அத எல்லாம் அலசி ஆராய்ஞ்சுட்டா இருக்க முடியும்?

ஒரு வழியா கல்யாணம் முடிஞ்சு மூணே நாள்ல மாப்பிளை வீட்ல இருந்து அவள கொண்டு வந்து விட்டுட்டு போய்ட்டாங்க. அவளுக்கு மனோவியாதி வந்துருக்குன்னு ஒரு மூணு மாசம் ட்ரீட்மென்ட் எடுத்து, அப்புறம் பையன் வீட்ல வந்து கூட்டிட்டு போனாங்க. மறுபடியும் அவ நார்மல் ஆகிட்டா.

அப்புறம் ஒரு வருஷம் அதே புன்னகை, அதே அன்பு. அதே கவனிப்பு. அவ மாமியாரும் மாமனாரும் எப்போ வீட்டுக்கு வந்தாலும் அவ்வளவு பெருமையா பேசுவாங்க. இவ ஒரு புன்னகையோட கேட்டுட்டு இருப்பா. ரெண்டாவது வருஷம் அவளுக்கு பொம்பள புள்ள பொறந்துச்சு. அந்த நேரம் அவ ஹஸ்பன்ட் ப்ராஜெக்ட் விசயமா பிரான்ஸ் போய்ட்டார். குழந்தை பிறந்த நாலாவது மாசம், அவ ஹஸ்பண்ட் வர்றார்ன்னு அவங்க தனியா வாழ்ந்த வீட்டுக்கு மாமியார் மாமனாரோட போய், வீடு எல்லாம் நல்லா கிளீன் பண்ணி, குழந்தையை குளிப்பாட்டி, பீடிங் பாட்டில்ல பால் கலக்கி மாமியார் கைல குடுத்துட்டு ரூம்ல போய் குளிச்சு ட்ரெஸ் மாத்திட்டு வரேன்னு போனவ ரொம்ப நேரமா வெளில வரல

என்னன்னு போய் பாத்தா ஆள் தூக்குல தொங்கிட்டு இருக்கா. நாலு மாச கைக்குழந்தை, ஊருக்கு வர்ற புருஷன், கூடவே இருந்த மாமியார் மாமனார் எல்லாரையும் விட்டுட்டு எப்படி, ஏன், எதுக்கு அவ செத்துப் போனான்னு இன்னிக்கி வரைக்கும் யாருக்குமே தெரியாது. ஒரு காலேஜ் லெக்சரர், நாலு மாச குழந்தைக்கு அம்மா.... ஏன் செத்தா? கேள்விக் குறி தான். அவளுக்கு அந்த செகண்ட் என்ன தோணிச்சுன்னு தெரியல, போய்ட்டா... ஆச்சு அஞ்சு வருஷம்.
...................................

இது என் காலேஜ் ஸ்டாப் ஒருத்தங்க சொன்னது. அந்த பொண்ணு இவங்க க்ளாஸ்மேட். ஒரு சைன்ட்டிஸ்டா வரணும்ன்குறது அவங்க கனவு. கூடவே மாமா பையன கட்டிக்கணும்னு தான். ரெண்டு பேர் வீட்லயும் பயங்கர எதிர்ப்பு. ஏதோ குடும்ப பிரச்சனை போல. இவங்க பி.ஜி பைனல் இயர் படிக்குறப்ப கடைசி செமஸ்டர் முடிஞ்ச அன்னிக்கி பிரண்ட்ஸ் எல்லாரும் சேர்ந்து அலைபாயுதே ஸ்டைல்ல கல்யாணத்த பண்ணி வச்சிட்டாங்க.

பொண்ணும் பையனும் அதே ஸ்டைல்ல யாருக்கும் தெரியாம அவங்கவங்க வீட்டுக்கு போய், பொண்ணு எம்.பில் பண்ணி முடிச்சதும் வீட்ல கல்யாணத்துக்கு பையன பாக்க, இவங்க வேற வழியில்லாம உண்மைய சொல்ல, அதே ஸ்டைல்ல வீட்ட விட்டும் தொரத்திட்டாங்க.

பையன் ஒரு ஹாஸ்பிடல்ல சீப் லேப் இன்சார்ஜ். நல்ல சம்பளம். இவங்களும் ஒரே பீல்ட்ங்குறதால அடுத்து பி.ஹச்.டி பண்ணலாம்னு சென்னைல ஒரு டாக்டர் கீழ ரெஜிஸ்டர் பண்ணிட்டாங்க. இப்படியே நாலு வருஷம் ஓடிடுச்சு. ரெண்டு வயசுல ஒரு பையன் வேற. பி.ஹச்.டி முடிய போற நேரம், வீட்ல புருசனுக்கும் பொண்டாட்டிக்கும் சண்டை வர, மேக் அப்க்கு வாங்கி வச்சிருந்த நெயில் பாலிஸ் ரிமூவர ஹஸ்பன்ட் முன்னாடியே குடிச்சிருக்காங்க. பதறி போய் கார்ல தூக்கி போட்டுட்டு ஹாஸ்பிடல் கொண்டு ஓடினா, உள்ள போறதுக்குள்ள ஆள் அவுட்.

ஒரு நெயில் பாலிஸ் ரிமூவருக்கு இவ்வளவு எபக்ட் உண்டுன்னு கண்டிப்பா அவங்களும் நினைச்சிருக்க மாட்டாங்க, மருத்துவ உலகமும் நினச்சிருக்காது. போகுற நேரம் வந்துட்டா எப்படி வேணா போய் தான் ஆகணும் போல... இன்னிக்கி அந்த பொண்ணோட தங்கச்சியவே அவருக்கு வீட்ல கட்டி வச்சிட்டாங்க. பையன பாத்துக்கணும்ல...
......................................

இது எங்க ஊர்ல நடந்தது. பொண்ணு மதுரைல ஹாஸ்டல்ல தங்கி இஞ்சினியரிங் படிச்சுட்டு இருந்தா. பையன் எங்க ஊர்க்கார பையன். படிப்பு வராம ஊர் சுத்திட்டு இருந்தான். ரெண்டு பேருக்கும் லவ். எந்த ஊர்ல யார் இருந்தா என்ன, மொபைல் இருக்குல. இதுல அந்த பொண்ணு கூட இருக்குற பொண்ணை இவனுக்கு இன்ட்ரோ வேற பண்ணி வச்சிட்டா. மூணு பேருமே நல்லா பேசுவாங்க, இவன் மதுரைக்கு போவான் வருவான். இப்படியே ஒரு வருஷம் ஓடிப் போச்சு.

அப்புறமா இவ பிரெண்ட் அவன் கிட்ட தனியா பேசுறத எல்லாம் கண்டுபிடிச்சு, ரெண்டு பேரையும் கண்டிச்சிருக்கா. இனி எந்த தப்பும் நடக்காதுன்னு ரெண்டு பேரும் சத்தியம் எல்லாம் செய்து குடுத்துருக்காங்க.

இவங்க விசயம் தெரிஞ்ச எல்லாருமே அந்த பொண்ணை ரொம்பவே கண்டிச்சாங்க. பையன் சரியில்ல, ரெண்டு பேருக்கும் செட்டாகாது, விலகி வந்துடுன்னு. ஊருக்கு வரும் போது எல்லாம் அவன் தான் வேணும்னு அவளும் பிடிவாதமா வீட்ல சண்டைப் போடுவா, அப்புறம் மதுரை கிளம்பி போய்டுவா.

ஒரு வழியா பைனல் இயர் முடிஞ்சு ஊருக்கு இவ வந்தப்ப கல்யாண பேச்சு ஆரம்பிக்க, அவன் தான் வேணும்னு வீட்ல பயங்கர சண்டை. ரெண்டு பேர் வீட்லயும் என்ன பண்ண, வேற வழி இல்ல, கல்யாணம் பண்ணி வச்சிடலாம்னு முடிவெடுத்து நிச்சயதார்த்தத்துக்கும் நாள் குறிச்சுட்டாங்க. அப்போ தான் அவன பாக்க இவ போயிருக்கா. அவன் மொபைல் வாங்கி எதேச்சையா பாக்குறப்ப அவன் இன்பாக்ஸ் முழுக்க அவ பிரெண்ட் கிட்ட இருந்து வந்த மெஸ்சேஜ். பாக்கவே அருவெறுப்பான அந்த மெஸ்சேஜ் எல்லாம் பாத்துட்டு ஆக்ரோசத்தோட வீட்டுக்கு வந்தவ மண்ணெண்ணெய் கேனை எடுத்து விட்டு கொளுத்திகிட்டா. ஸ்பாட் அவுட்...

ரெண்டு வருஷம் கழிச்சு அந்த பையன் வேற பொண்ணை கல்யாணம் பண்ணிகிட்டான். இவ போனவ போனவ தான்...
..............................................

உடம்புல தீய வச்சுக்குறது, மல மேல இருந்து குதிக்குறது, ட்ரைன் முன்னால பாயுறது, தூக்கு போட்டுக்குறதுன்னு இதுல எது நினைச்சாலும் நடந்துட்டா அப்புறம் தடுக்க முடியாது. விஷம் சில நேரம் பட்டுன்னு உயிர எடுத்துடும், சில நேரம் பொழச்சுக்கலாம்... அப்படி பொழச்சு வந்துட்டா, அந்த நிமிசங்கள நினச்சு பகீர்ங்குது மனசு... தற்கொலை கொடுமைடா சாமி....

Friday, 5 September 2014

ஆசிரியர் தினம்



எந்த பண்டிகை எந்த நாள்ல வந்தாலும் சரி, அதுக்கு முந்தைய வொர்கிங் டே-ல அதை கொண்டாடிறது எங்க காலேஜ் வழக்கம். அந்த வரிசைல நேத்து எங்க டிபார்ட்மென்ட்ல இரண்டு கொண்டாட்டங்கள்...

ஒண்ணு, திரு ஓணக் கொண்டாட்டம்

அடுத்து, டீச்சர்ஸ் டே கொண்டாட்டம்...


இத பத்தி எழுதலாம்னா ஒரே சோம்பல். சோம்பேறித்தனம் வந்து குடியேறிச்சுடுச்சுன்னா அப்புறம் அவ்வளவு தான் ஒரு வேலையும் ஓடாது. சோம்பல் யார விட்டது? இந்தா ஒரு மணி வரைக்கும் எழுத சோம்பல் பட்டுட்டு தான் இருந்தேன்... ஆனா திடீர்ன்னு ஒரு மைன்ட் வாய்ஸ்... ஹோய், நேத்து தான உனக்கு புள்ளைங்க எல்லாம் ஹாப்பி டீச்செர்ஸ் டே விஷ் சொன்னாங்க, நீ உன் டீச்செர்ஸ்க்கு சொல்ல வேணாமான்னு.... இந்தா கடகடன்னு எழுத ஆரம்பிச்சுட்டேன்ல...

வாழ்க்கைல நாம எதையோ சாதிச்சுட்டோம்ன்னு பெருமை எப்போ தோணும் தெரியுமா? மனசுல இருந்து நமக்கு ஒரு பாராட்டு கிடைக்கும் போதோ, இல்ல உரிமையோட நம்மள ஒருத்தங்க தூக்கி கொண்டாடும்போதோ தான்.

நேத்து எங்க டிபார்ட்மென்ட்ல முதல்ல ஓணம் கொண்டாட்டம் நடந்துச்சு. எல்லா ஸ்டாப் அப்புறம் ஸ்டுடென்ட்ஸ் குழுமி இருந்தாங்க. எல்லா ப்ரோக்ராமும் முடிஞ்சதும் டயர்ட்டா இருந்ததால நான் தனியா அங்கயே இருந்தேன். எப்பவுமே நான் ஸ்டுடென்ட்ஸ் கிட்ட கொஞ்சம் இல்ல நிறையவே சிடு சிடு தான். ஆனா நிஜம் என்னன்னா ஒண்ணு கூட எனக்கு பயப்படாது. நேத்து நான் பாட்டுக்கு கத்திகிட்டே இருக்கேன், எல்லாம் என்னை சுத்தி வளைச்சுட்டாங்க. ஹாப்பி டீச்சர்ஸ் டே மேடம்ன்னு ஆளாளுக்கு ரெட் ரோஸ், அப்புறம் பைவ் ஸ்டார் சாக்லேட் குடுத்து என்னை திக்குமுக்காட வச்சுட்டாங்க. அப்புறம் எங்க மூஞ்சிய தூக்கி வச்சுட்டு இருக்க? சிரிச்சுட்டேன்... ஹஹா...

சரி, நானெல்லாம் இந்த அளவுக்கு படிச்சி, என் கைலயும் சாக்பீஸ் வந்துச்சுனா அதுக்கு காரணம் என்னோட டீச்சர்ஸ் தானே....

ரொம்ப பொடியா இருந்தப்போ என்னை எல்லாம் சமாளிக்கவே முடியாது. எத பாத்தாலும் அத ரசிப்பேனாம். பட்டாம்பூச்சி, கோழி, ஆடு, இப்படி எத கண்டாலும் வழிமாறி அது பின்னால ஓடிடுவேன். என்னை சமாளிக்கவே பத்து பேர் வேணும். அப்பா எப்பவும் பிசி, அம்மா வீட்டை விட்டு அதிகம் வர்றதில்ல. அதனால என்னை ஸ்கூலுக்கு கூட்டிட்டு போக அங்க உள்ள மிஸ் தான் வருவாங்க. ஊருல பாதி பிள்ளைங்களும் அவங்க கூட ஒழுங்கா ஸ்கூல் போறப்ப என்னை மட்டும் சமாளிக்க ரொம்ப தான் திணறிப் போவாங்க... எனக்கு வீட்ல இருந்து சாப்பாடு தந்து விட்டுருவாங்க. நான் சத்துணவு தான் வேணும்னு அடம் பிடிப்பேன்... ஹஹா.... எனக்கு இப்பவும் அந்த கின்டர்கார்டன் நியாபகங்கள் வருது. என்னோட சாப்பாடை அந்த மிஸ் கிட்ட குடுத்துட்டு, நான் சத்துணவு முட்டைக்கு அடி போட்டுட்டு இருப்பேன். அவங்க வேற வழியில்லாம என் சாப்பாட்டை மத்த ஸ்டாப்ஸ் கிட்ட பகிர்ந்து குடுத்துட்டு அதுக்கு பதிலா எனக்கு விதம் விதமா முட்டாய், பலூன் வாங்கி தருவாங்க.

அது என்னது, அப்படினா என்ன? தெளிவா சொல்லுங்க, ஏன் அப்படி? எதனால? இப்படி தான் எப்பவும் கேள்வி கேட்டுட்டே இருப்பேன். என் கேள்விகளுக்கு பதில் சொல்லி சொல்லியே பாவம் எல்லாரும் டயர்ட் ஆகிடுவாங்க... அப்புறம் பிப்த்க்கு அப்புறமா நிஜமாவே கத்துக்கணும்ங்குற ஆர்வம், சந்தேகம் வந்தா உடனுக்குடன் கேக்குறத எல்லாம் பாத்து அவங்களே எனக்கு நிறைய சொல்லித்தருவாங்க. நான் கேள்வியே கேக்க முடியாத படி கத்து குடுத்தவங்க என்னோட டீச்சர்ஸ்...

என்னோட வாழ்க்கைல முக்கியமா ஒருத்தங்க வந்தாங்க. அவங்க, தங்கம் மிஸ். அவங்க உண்மையான பெயர் எனக்கு இப்போ மறந்து போச்சு, ஆனா நாங்க தங்கம் மிஸ் தங்கம் மிஸ்ன்னே சொல்லி பழகிடுச்சு. அப்போ நாங்க காமராஜ் மெட்ரிக்குலேசன்ல டென்த் படிச்சுட்டு இருந்தோம். லீவ் நாள்ல எங்களுக்கு கோச்சிங் கிளாஸ் எல்லாம் உண்டு. அந்த வயசுல சேட்டை ரொம்பவே அதிகம். எப்பப் பாத்தாலும் பிரெண்ட்ஸ்க்குள்ள சண்டை போட்டுட்டு, ஜடைய புடிச்சு இழுத்து வம்பு பண்ணிட்டு, சைக்கிள் கத்துக்குறோம்ன்னு கீழ விழுந்து அடி பட்டுட்டு சுத்திகிட்டு இருந்த நேரம். அப்ப தான் தங்கம் மிஸ் எங்க ஸ்கூல் வந்தாங்க. ரெண்டே ரெண்டு நாள் எங்கள நல்லா வாட்ச் பண்ணின அவங்க எங்கள வலுகட்டாயமா புடிச்சு ஸ்கூல் என்.எஸ். எஸ்.ல தள்ளி விட்டுட்டாங்க. அங்க போனதுக்கு அப்புறம் தான் எனக்கு என்னை சுத்தி உள்ளதையும் தாண்டி ஒரு சமூகம் இருக்குன்னே தெரிய வந்துச்சு. ஏழ்மைனா என்ன, இப்படியும் சூழல்ல மனுசங்க இருக்காங்கன்னு எனக்கு புரிய வச்சவங்க அவங்க. அவங்க முதல் முதலா எங்ககிட்ட சொன்னது ஒரு விஷயம், இங்க நீங்க சேவை செய்ய போறீங்க. அதுக்கு முன்னாடி நீங்க ஒரு விஷயம் தெரிஞ்சிக்கணும். இங்க நீங்க யார் மேலயும் அனுதாபப்படக் கூடாது, இரக்கப்படக் கூடாது, ஏன்னா, எது இருக்கோ இல்லையோ இவங்களுக்கு சுய மரியாதை நிறைய இருக்கும். அத இம்மியளவு கூட நீங்க குலைக்கக் கூடாதுன்னு சொன்னாங்க. உங்களுக்கு இப்படி ஒரு கஷ்டம் வந்தா நீங்க எப்படி செயல் படுவீங்களோ, அப்படி அவங்க கூட இணைஞ்சு நீங்க செயல் படணும்ன்னு சொல்லிக் குடுத்தாங்க. அந்த வார்த்தைகள் எப்பவுமே எனக்கு பசுமரத்து ஆணி மாதிரி மனசுல பதிஞ்சுடுச்சு. இன்னிக்கும் யாரைப் பாத்தாலும் ஐயோ பாவம்னு கண்டிப்பா எனக்கு தோணாது, என்னால முடிஞ்சா ஓடி போய் அவங்க கூட இருந்து தோள் குடுக்குறேன்...

அதுக்கப்புறம் படிப்படியா ஸ்கூல் முடிஞ்சு காலேஜ் வந்தப்போ அங்கயும் எனக்கு தோள் குடுத்தவங்க ஏராளம். என்னோட ஆர்வத்தை பாத்துட்டு அப்பவே ப்ராஜெக்ட்ஸ் பண்றதுக்கு என்கிட்ட நம்பி குடுப்பாங்க. மத்த ஸ்டுடென்ட்ஸ் மாதிரி நான் ரொம்ப மார்க் எல்லாம் எடுக்க மாட்டேன், எப்பவுமே ஆவெரேஜ் தான். ஆனாலும் யாருமே என்னை திட்ட மாட்டாங்க. சந்தோசத்தையும் அக்கறையும் ஏராளமா அள்ளிக் குடுத்த அத்தனை பேருக்கும் என்னோட நன்றிகள்....

சொல்ல மறந்துட்டேனே, எப்பவுமே சந்தோசமாவும் செய்த காரியத்துல எல்லாம் வெற்றியும் கிடைச்சுட்டே இருக்குமா என்ன? வாழ்க்கைல தோற்றுப் போவோமோன்னு கண்ணு கலங்கி என்னோட யூனிவர்சிட்டி வாசல்ல நான் நின்னப்ப, உன்னோட பீல்ட் பத்தி எனக்கு எதுவும் தெரியாது தான், ஆனா உனக்கு என்னால முடிஞ்ச அளவு பின்புலமா இருக்கேன். நம்பிக்கை இருந்தா சொல்லு, இப்பவே கைட்ங்குற இடத்துல நான் சைன் பண்றேன்னு சொன்னவங்க என்னோட கைட் வசந்தா மேடம். தலைமுடி எல்லாம் இழந்து உருகுலைஞ்சு போன என்னோட உருவம் கொஞ்சம் கூட அவங்களுக்கு சந்தேகத்த குடுக்கல. மாறா நீ முன்னாடி போ... பக்கபலமா உன் பின்னால நான் வருவேன்னு சொன்னவங்க. இப்ப வரைக்கும் தெரியாது தெரியாதுன்னே நிறைய விசயங்கள எனக்கு கத்துக் கொடுக்குரவங்க. கொஞ்சம் கூட இரக்கமே இல்லாம என்னை வேலை வேலைன்னு வேலை வாங்குறவங்க... ஹஹா லவ் யூ மேடம்.

இப்படி என்னோட வாழ்க்கைல நான் ஆசிரியர் தின வாழ்த்து சொல்லனும்னா நிறைய பேர் இருக்காங்க... என்னோட வாழ்க்கைல நான் வாழ்க்கைய கத்துக்குறதுக்கு காரணமா இருக்குற எல்லாருக்கும் என்னோட இனிய ஆசிரியர் தின வாழ்த்துகள்...

Friday, 22 August 2014

தம்பியும் நானும்....


சின்ன வயசுல நான் ரொம்ப வாலு. ஒரு இடத்துல இருக்கவே மாட்டேன். எப்பப் பாத்தாலும் மாட்டுதொளுவத்துல மாடுகளோட மல்லுக்கட்டிட்டு இருப்பேன், இல்லனா, கரையான் புத்துல பாம்பு இருக்கான்னு கை விட்டு தேடிட்டு இருப்பேன். இருபது வருசத்துக்கு முன்னாடி எங்க ஊரு காடு மாதிரி தான் இருக்கும். என்ன தான் வீடு பெருசா இருந்தாலும், வீட்டை சுத்தி கொல்லாங்காடு, வாழைத்தோப்பு, வயலுன்னு ஒரு கலவையா இருக்கும். வீட்டுக்கு பத்தடி தூரத்துலயே ஒரு மொட்டை கிணறு வேற உண்டு. அந்த கிணத்துல தண்ணி எல்லாம் கிடையாது. அதுக்கு உள்ள இருந்து வேப்பமரம், புளியமரம் அப்புறம் காடு மாதிரி புல்லு, செடிகள்ன்னு அடைஞ்சு கிடக்கும். அங்கயே தான் நிறைய கரையான் புற்றும் உண்டு.

சில நேரங்கள்ல மேய வர்ற ஆடு மாடுகள் கால் தவறி உள்ள விழுறதும் உண்டு. நான் வேற எப்பப்பாரு அங்கயே போய் இருப்பேனா, அப்பப்ப அங்க கடந்து போற பாம்புகள் எல்லாம் ரொம்ப பரிட்சயம் ஆகி போயிருந்தது. பாம்பை கண்டா அங்க இருந்து ஓட மாட்டேன். அப்படியே அசையாம உக்காந்துருப்பேன். பாம்பு கண்ணை விட்டு மறைஞ்சதும் ஒரு பயம் கப்புன்னு வரும் பாருங்க... ஒரே ஓட்டம் தான்... மூச்சிரைக்க நேரா ஓடி வந்து ரூம்ல மலங்க மலங்க முழிப்பேன். யாரும் பாக்கலனா ஓகே, ஆனா அம்மா பாத்துட்டா, ஹிஹின்னு ஒரு திருட்டு சிரிப்பு சிரிப்பேன் பாருங்க, அம்மா புருவம் உயர்த்தி, கொன்னுப்புடுவேன்னு ஆள்காட்டி விரலாலயே சைகை செய்வாங்க. சத்தம் போட்டு பாட்டிக்கு கேட்டுடுச்சுனா அப்புறம் பத்ரகாளி மலையேற நேரம் ஆகுமே...

தம்பி இதுக்கெல்லாம் ரொம்ப பயப்படுவான். அதனால அந்த பக்கமா விளையாட கூப்ட்டா, ம்ஹும்ன்னு சிணிங்கிக்கிட்டே அம்மா முந்தானைய புடிச்சுப்பான். ஆனா அந்த ஊமை குசும்பனுக்கு திங்க ஏதாவது முதல்ல குடுக்கலன்னு வைங்க, உடனே, நான் போய் மொட்டை கிணத்துல விழப்போறேன்னு மிரட்டுவான். அம்மாவுக்கு தெரியாதாக்கும் அவனை... சிரிச்சுகிட்டே அவனையே பாத்துட்டு இருப்பாங்க. நான் சும்மா இருப்பேனா, அப்படியாவது அவனை அந்த பக்கம் கூட்டிட்டு போய்டணும்ன்னு அவனுக்கு நிறைய அட்வைஸ் குடுப்பேன்.

டேய் தம்பி, அந்த பக்கம் எல்லாம் ஒண்ணும் பயம் இல்ல, நடந்தா ரெண்டே ரெண்டு விஷயம் தான் நடக்கும், ஒண்ணு உன்னை பாம்பு கடிக்கும். அப்படி பாம்பு கடிச்சா, ஓடி வந்துடாத, விஷம் தலைக்கு ஏறிடும். அதனால அங்க நின்னே ஒரு சத்தம் குடு, அக்கா போய் கத்தியும் துணியும் எடுத்துட்டு வரேன். துணி வச்சு காலை இருக்க கட்டிட்டு, இந்த கத்தியால வெட்டிட்டா, அப்புறம் பயமே இல்லன்னு அட்டகாசமா க்ளாஸ் எடுப்பேன். பையன் அப்பவே மிரண்டுடுவான்.

ஆனாலும் நாம விட மாட்டோம்ல, ரெண்டாவது, நீ தவறி அந்த கிணத்துக்குள்ள விழுந்துடுவ. அப்பா வீட்ல இருந்தா உடனே கயிறு போட்டு உன்னை தூக்கிடுவாங்க, அதுவே வெளியூர் போய்ட்டா நீ கவலைப்படாத, உனக்கு பிரட், இட்லி, சோறு எல்லாம் மேல இருந்தே தூக்கிப் போடுறேன். அப்பா வர்ற வரை நீ சாப்ட்டுட்டு இருக்கலாம்ன்னு சொல்லுவேன்...

ஏங்க, நான் சரியா தானே சொல்லியிருக்கேன். ஆனா இந்த பய, அம்மாவ இன்னும் இறுக்கமா கட்டிபுடிச்சுட்டு, பெருவிரல எடுத்து வாய்ல வச்சு சப்ப ஆரம்பிச்சுடுவான். போடின்னு தலைய வேற வெட்டி வெட்டி இழுத்துப்பான்...

தாயம் வச்சு விளையாடிட்டு இருப்போம். இவன் விளையாட வந்தா, இவனுக்கு பிடிச்ச தாயக்காய் தான் முதல்ல எடுப்பான். வேற யாரும் அத எடுத்துடக் கூடாது. அட, அது பரவால, அவனுக்கு மட்டும் தான் தாயம் விழணும்னு அடம்புடிப்பான் பாருங்களேன். சிரிப்பு சிரிப்பா வரும். இந்த பாம்பட்டை விளையாடுரப்ப பாம்பு அவனை கொத்திடக் கூடாது... ஆட்டத்த கலைச்சு விட்ருவான்.

ஆனா ஒண்ணு, எனக்கும் தம்பிக்கும் ரொம்ப ஒற்றுமையான ஒரு விஷயம் ஒண்ணு உண்டு. அதுவும் சாப்பிடுற விசயத்துல. எங்களுக்கு ரொம்ப பிடிச்ச சாப்பாட்டு ஐட்டங்கள் என்னலாம்ன்னு பாத்தீங்கனா, வறுத்த மற்றும் ஊற வச்ச புளியங்கொட்டை, புண்ணாக்கு வகைகள், அதுவும் புண்ணாக்குல கடலை புண்ணாக்கும் எள்ளு புண்ணாக்கும் தான் டாப். ருசி பின்னிடும். ஆனா இதெல்லாம் எடுத்து தின்னா பாட்டி நைநைன்னு தொனத்தொனத்தே காது ஜவ்வு கிழிஞ்சிடும். நாங்க போய்ட்டுவோம்னு பாட்டி மாட்டு தீவன ரூம்ல லைட் அணைச்சு வச்சிருப்பாங்க... இருட்டுக்கு பயந்து தம்பி அந்த பக்கமா வரவே மாட்டான்.

நமக்கு தான் அட்வஞ்சர்னா அல்வா சாப்பிடுற மாதிரியாச்சே... அந்த இருட்டுலயும் மோப்பம் பிடிச்சு, கடலை புண்ணாக்கையும் எள்ளு புண்ணாக்கையும் மடி நிறைய கட்டிப்பேன். அப்புறம் என்ன, நானும் அவனும் பெட் ரூமுக்கு போய் கட்டுலுக்கு அடியில உக்காந்து வெளுத்து கட்டிருவோம்.

இதுல சில நேரம் பாட்டிகிட்ட நான் மாட்டிக்குறதும் உண்டு. அப்போ மடியில இருக்குற புண்ணாக்க தட்டி விட்ருவாங்க. அம்மா தான், ம்க்கும்... புள்ள இருட்டுல பயம் இல்லாம போறாளேன்னு சந்தொசப்படுவீங்களான்னு பாட்டிக்கிட்ட ஒரு வெட்டு வெட்டிகிட்டு, கை நிறைய புண்ணாக்கு ஒளிச்சு கொண்டு வந்து தருவாங்க... உன்னை போல ஒரு தாய் எங்களுக்கு மட்டும் தான் கிடச்சிருக்கா அம்மா....

அப்புறமா, அம்மாவுக்கே கோபம் வர வைக்குற மாதிரி நாங்க பண்ற காரியம்னா, அது கருப்பட்டி காப்பில புண்ணாக்கும் தவுடும் கலந்து விட்டுறது தான். அம்மா எப்பவும் ஒரு பெரிய பானை நிறைய கருப்பட்டி காப்பி போட்டு வச்சிருப்பாங்க. விறகடுப்புல அது எப்பவும் கதகதப்பா இருக்கும். வீட்டுக்கு வர்றவங்க, தோட்டத்துல வேலை செய்றவங்கன்னு எல்லாரும் அப்பப்ப வந்து குடிச்சுட்டு போவாங்க. சில நேரம் காப்பி பானைக்குள்ள எட்டிப்பாத்தா காப்பி குறைவா இருக்கும். உடனே நானும் தம்பியும் சேர்ந்து தவுடு எடுத்துட்டு வந்து அது உள்ள போட்டு தண்ணியும் கலந்து விட்ருவோம். யாராவது காப்பி குடிக்கலாம்னு வந்து கப்புல எடுத்து வாய்ல வச்சா..... ஹஹா... அப்புறம் என்ன, அம்மா கட்ட கம்ப எடுத்துட்டு தம்பிய தான் தொரத்துவாங்க. நாம தான் ஏதாவது மரத்து மேல ஏறி எஸ்கேப் ஆகிடுவோம்ல...

இப்படி ஏகப்பட்ட சேட்டைகள்... இன்னொரு நாள் இன்னும் கொஞ்சம் சொல்றேன்...

ஆனா ஒண்ணு, இப்போதைய எனக்குள்ள நிறையவே மாற்றம். எடுத்துட்டு இருக்குற மெடிசின்ஸ்னால சில நேரம் ரொம்ப டென்சன் ஆகிடுவேன். காட்டுக்கத்தல் போட ஆரம்பிச்சேன்னா நானே தான் சட்டுன்னு முழிச்சுட்டு நிறுத்தணும். அப்படி தான் ஒருநாளு இங்க ஒரு பாட்டி கூட வாக்குவாதம் ஆகி, அவங்க சொன்ன வார்த்தைகள் கேட்டு பி.பி எகிறி, ஒரு கட்டைய எடுத்து வீசிட்டேன். அது நேரா போய் என்னோட மீன் தொட்டியில பட்டு, கண்ணாடி உடைஞ்சு, தண்ணி எல்லாம் கொட்ட ஆரம்பிச்சுடுச்சு.

சத்தம் கேட்டு, ஓடி வந்த அப்பாவும் தம்பியும் முதல்ல பண்ணினது, மீன் தொட்டில இருந்த மீன் எல்லாத்தையும் தனியா பிடிச்சு போட்டது தான். அவங்களுக்கு தெரியும், மீனுக்கு ஏதாவது ஆச்சுன்னா அப்புறம் நாலு நாளைக்கு அழுதுட்டே இருப்பேன்னு. மறுநாள் காலைல பதினோரு மணிக்கு நான் ரூம் கதவை தொரக்குரப்ப அதே மீன் தொட்டி, புது கண்ணாடியோட ரெடி ஆகிட்டு இருக்கு. தம்பி தான் உள்ள பிளாஸ்டிக் செடி எல்லாம் அடுக்கிட்டு இருக்கான்.

இவன் பொறுமைசாலியா? பொறுப்பாளியா?

Friday, 8 August 2014

ரக்க்ஷா பந்தன்... தம்பியும் நானும்


தம்பி பொறந்தது வீட்ல தான். அவன் பொறந்தப்போ அழவே இல்லையாம். எல்லாரும் புள்ள செத்து போச்சுன்னு முடிவு பண்ணிட்டு அவனை புதைக்க குழி வெட்ட கிளம்பிட்டாங்களாம். அப்போ தான் எங்க ஊரு நர்ஸ் சந்தேகம் வந்து அவனோட தொப்புள் கொடிய வெந்நீர்ல போட்டு பாத்துருக்காங்க. சூடு தாங்காம பய கொஞ்சம் நெளிஞ்சிருக்கான். அப்புறம் என்ன, அவனை புதைக்க கொண்டு வந்த கார்ல அவன ஹாஸ்பிட்டல் தூக்கிட்டு போயிருக்காங்க. நெஞ்சு முழுக்க சளி அடச்சு போயிருந்த அவன அழ வைக்கவே ஒரு நாள் ஆகிடுச்சாம்...

சின்னப் புள்ளைல தம்பி குண்டு குண்டுன்னு கட்டையா உருளி மாதிரி இருப்பான். எப்பவும் கண்ண உருட்டிட்டு, வாய்ல ஒரு கூழாங்கல்ல போட்டு குதப்பிட்டே இருப்பான். அந்த பய சிரிச்சா அதிசயம் தான்... சிரிப்புனா என்னதுன்னு நம்ம கிட்ட கேப்பான். அவ்வளவு அமுக்குணி பய...

அப்புறம் ஸ்கூல் போக ஆரம்பிச்சப்போ நான் ரொம்ப சீன் போடுவேன். நம்ம பழக்க வழக்கம் எல்லாம் பசங்க கூட தானே.. அவங்க கூட மங்கட்டைல இருந்து கதை விட, இவனை பேக் தூக்கிட்டு போய் என் க்ளாஸ்ல வைக்க சொல்லிடுவேன். அப்புறம் என்ன, நான் சிக்ஸ்த் படிக்குற வரைக்கும் அவன் தான் என் பேக் சுமப்பான். நான் ஜாலியா அவன் பின்னால நடந்து போவேன்.

எப்பப்பாரு அம்மா மடியில தான் படுத்து தூங்குவான். அட, பாத்ரூம் போகணும்னா துணைக்கு அம்மா போகணும். அவ்வளவு பயந்தாங்கொள்ளி.... ராத்திரி தூங்கும் போது எனக்கும் அம்மாவுக்கும் தான் சண்டை வரும். அப்பா என்னோட முகத்த பாத்துட்டு தான் தூங்கணும்னு எப்பவும் சண்டை பிடிப்பேன். அம்மா அவங்க பக்கமா தான் தூங்கணும்னு சண்டைக்கு வருவாங்க... இதனாலயே அப்பா ரெண்டு கையையும் ஆளுக்கொண்ணா தலையணையா தந்துட்டு விட்டத்த பாத்துட்டே தூங்கிடுவாங்க... ஆனா இவனுக்கு அந்த பிரச்சனையே இல்ல. அம்மா முந்தானை மட்டும் இருந்தா போதும். அத சுருட்டி வாய்ல வச்சுட்டே தூங்கிடுவான்.

வீட்ல ஏதாவது அப்பா சாப்பிட வாங்கிட்டு வந்தா போதும். நான் தான் முதல் ஆளா பாய்ஞ்சு போய் அத பிடிங்கிப்பேன். இவன் உடனே மூஞ்சி எல்லாம் அழுவுற மாதிரி வச்சுகிட்டு சிணுங்கிகிட்டே அம்மாகிட்ட ஓடிடுவான். அப்புறம் என்ன, என் தலைல ரெண்டு கொட்டு விழும். பண்டம் பங்குக்கு போய்டும்... கிர்ர்ர்ர்....

ஆனா ஒண்ணு, சின்ன வயசுல இருந்தே அவனால தோல்விய தாங்கிக்க முடியாது. விளையாட்டுல கூட தோத்துப் போகபோறான்ன்னு தெரிஞ்சா உடனே அழுக வந்துடும். நானும் கொஞ்சம் அவன் கிட்ட போக்கு காட்டிட்டு அப்புறம் விட்டுக் குடுத்துடுவேன். அட, நம்ம தம்பி தான, அவன் கிட்ட தோத்துப் போனா தான் என்ன?

ரெண்டு பேரும் குடுமி பிடிச்சு எல்லாம் சண்டை போட்டதே இல்ல. அவனுக்கு ஏதாவது தேவைனா நான் அத விட்டுக் குடுத்துட்டு போய்டுவேன். எனக்கு எது தேவைன்னு அவனுக்கு தெரியாது. நான் அவன் கிட்ட காட்டிக்க மாட்டேன். அதனாலயே அவன் கொஞ்சம் சுயநலவாதியா வளந்துட்டான். அவன் பொருள யாரும் எடுக்கக் கூடாது. அப்படி எடுத்துட்டா சண்டைக்கு எல்லாம் வர மாட்டான், ஆனா மூஞ்சி வாடி போயிடும்.

பத்து வயசுக்கு அப்புறம் நாங்க ரெண்டு பேரும் தான் பெஸ்ட் பிரெண்ட்ஸ். அம்மாவுக்கு ரெஸ்ட் குடுத்துட்டு அப்பா, நான், தம்பி மூணு பேரும் சமையல் அறைக்குள்ள புகுந்துடுவோம். ஐயோ ஐயோன்னு அம்மா அலறுற வரைக்கும் சமையலறை தூள் பறக்கும். பாத்திரங்கள் உருளும். ஒரு முட்டை அவிக்க பத்து பாத்திரம் வாஷ் பேசின் போக வேண்டி வரும். அப்புறம் அப்பா கூட நாங்க சமையலறைக்குள்ள கூட்டு சேரக்கூடாதுன்னு அம்மா தடா போட்டுட்டாங்க... அப்பா ஒத்த ஆளா நின்னு எங்களுக்கு சமைச்சுப் போடுவார்.

அடுத்து ரெண்டு வருசத்துல சமையலறை எங்க ராஜ்ஜியம் தான். கேசரி, பால்பாயாசம், அல்வா, வடை ன்னு சின்ன சின்னதா ஆரம்பிச்சு அதிரசம், முறுக்கு,  முந்திரி கொத்துன்னு முன்னேறி பிரியாணில வந்து நின்னோம். எங்க ரெண்டு பேர் சமையலையும் நாங்களே சாப்ட்டுடுவோம். அம்மாவும் அப்பாவும்  டேஸ்ட் வேணா பாக்கலாம். அவ்வளவு தான். அப்புறம் ஒரு நாள் பீசா செய்றோம்னு ஆரம்பிச்சோம். எல்லாம் நல்லா தான் வந்துச்சு. அந்த பேஸ் செய்ய ஈஸ்ட் அதிகமா போட்டுட, வாய்லயே வைக்க முடியல, அம்மே....

தோட்டத்துக்குள்ள விளையாட போறப்பவும் சரி, மழைல நனையுறப்பவும் சரி, ரெண்டு பேரும் ஒண்ணாவே விளையாடுவோம். அப்பா கோவில் கணக்கு எழுதி வச்சிருக்குற டைரி எடுத்து ஒரு நாள் நாங்க கப்பல் விட.... அன்னிக்கி தான் அடி வெளுத்துட்டாங்க... அவ்வ்வ்வ்.... அப்பவும் நான் அய்யோ ஐய்யோன்னு அடி விழுறதுக்கு முன்னாலயே கத்தி கதறி ஊரை கூட்ட, அவன் வழக்கம் போல சத்தமே வராம கேவிட்டு தான் இருப்பான். கண்ணுல மட்டும் கண்ணீர் மாலை மாலையா கொட்டும். ஊர்ல உள்ளவங்க எல்லாம் ஒண்ணு கூடிட்டாங்க. இதுல ஒரு பாட்டி, உன் புள்ளைங்க ரெண்டும் தங்கங்க... பாரு ஒரு தடவ கூட அடிச்சுகிட்டது இல்ல... அவங்கள போய் நீ அடிச்சிட்டியேன்னு அப்பாவ பாத்து கேக்க, டொட்டடொட்டடொய்ங்... ஒரே செண்டிமெண்ட் சாங் தான்...

அப்புறமா அவன் டென்த் வந்தான். நான் லெவெந்த். புள்ள எப்பப்பாத்தாலும் படிப்பு தான். நான் வேற அவனை கிண்டல் பண்ணிட்டே இருப்பேன், படிச்சு கலக்டர் ஆக போறானாம்ன்னு... ஆனாலும் கண்டுக்கவே மாட்டான். எப்பப் பாத்தாலும் ரேடியோவ ஆன் பண்ணி கேட்டுட்டே படிப்பான். ஒரு நாள் ரொம்ப சின்சியரா படிக்குறானேன்னு பக்கத்துல போய் பாத்தா, அட, பக்கி.... உக்காந்தபடியே நல்லா உறங்கிட்டு இருக்கு... ஹஹா... இதான் அவன் அப்ப இருந்தே பண்ணிட்டு இருந்துருக்கான்.

அவனோட வசந்த காலம், அவன் பாலிடெக்னிக் போனப்ப தான். அங்க அவன் ஒரு தேவதைய பாத்தான். இவன விட வயசுல பெரியவ. அவ ப்ளஸ் டூ முடிச்சுட்டு மார்க் கம்மின்னு பாலிடெக்னிக் பஸ்ட் இயர் வந்தவ. பொண்ணுங்க கிட்ட பேசவே பேசாத என் தம்பி, சிரிச்சா வாய்ல இருந்து முத்து உதுந்துடும்னு சிரிக்காம இருந்த என் தம்பி கலகலன்னு சிரிக்க ஆரம்பிச்சது அப்போ தான். நக்கலும் நையாண்டியும் அவன் கூடப் பொறந்தது போல அவ்வளவு சரளமா வர ஆரம்பிச்சுது... இந்த ஊமை குசும்பனா இப்படி மாறிட்டான்னு நானும் அம்மாவும் வாய் பிளந்து பாத்துட்டே இருப்போம்.

அட, அம்மா கழுத்த பிடிச்சு தொங்கிட்டு, அம்மாவுக்கு முத்தம் குடுத்துட்டு, என்னை பாத்தா அப்படியே ஒரு வெக்க புன்னகை சிந்திட்டு, ஏதாவது ஒரு டூயட் பாட்ட பாடிட்டு திரிஞ்ச என் தம்பி அழகோ அழகு.

காலேஜ் விட்டு வீட்டுக்கு வந்தா அவ கிட்ட போன்ல பேசிட்டே இருப்பான், சனி ஞாயிறுல அவ வீட்டுக்கே வந்துடுவா. எப்பப் பாத்தாலும் அவ கூடவே சுத்திட்டு இருப்பான். ஆனா அவள லவ் பண்றதா எங்ககிட்ட சொன்னதே இல்ல. இப்படியே ஒரு வருஷம் ஓடி போச்சு. நான் ப்ளஸ்டூ முடிச்ச நேரம், திடீர்னு எனக்கு கல்யாணம்ன்னு பத்திரிகைய நீட்டிட்டா. இவன் எப்படி தான் அந்த ஆயிரம் இடியையும் மின்னலையும் ஒரு சேர தாங்கிகிட்டானோ என்னவோ? ஒரு வாரம் யார் கூடவும் பேசல. அப்புறம் அவ கல்யாணத்துல அவன் தான் ஓடி ஓடி எல்லா வேலையும் செய்தான். அவள ப்ளைட் ஏற்றி பறக்க விட்டுட்டு கிளி பறந்து போய்டுச்சுன்னு இங்க குட்டி பசங்க கிட்ட சொல்லிட்டு இருந்தான்.

ஒரு நாள் அம்மா கிட்ட நான் அதிகமா அன்பு வச்சா, ஏன்மா அவ என்னை விட்டுட்டு போயிட்டான்னு கேட்ருக்கான். அம்மா என்ன சொன்னாங்கன்னு தெரியாது, ஆனா எல்லாமே சகஜமா போயிட்டு இருந்த மாதிரி தான் இருந்துச்சு.


திடீர்னு ஒரு நாள் எனக்கு சின்னதா ஒரு ஆக்சிடென்ட். ஸ்கூட்டில போறப்ப எது மேலயோ இடிச்சு கீழ விழுந்து தலைல கொஞ்சமா அடி. அப்புறம் வந்த நாட்கள், மளமளன்னு எங்க வாழ்க்கைய புரட்டி போட்டுடுச்சு. ஐ.சி.யூல நான் துடிச்சத பாத்தவன், அப்படியே மவுனமா ஆனவன் தான். என் கிட்ட பேசுறதையே நிறுத்திட்டான். நான் பொழச்சு வந்தப்ப கூட ஏதோ பக்கத்து வீட்டு நோயாளிய பாக்குற மாதிரி எட்டி நின்னு பாத்துட்டு போயிடுவான்.

அம்மா எவ்வளவோ போராடி பாத்துட்டாங்க. ம்ஹும்... அவன் என் கிட்ட பேசவே இல்ல. எனக்கும் கொஞ்சம் கொஞ்சமா அவன் அப்படி இருந்தது பழகி போயிடுச்சு. அவனும் நானும் ஒரே வீட்ல இருந்தாலும் நான் கொஞ்சம் சிரிச்சா அவன் எழுந்து போயிடுவான். நான் இருக்குற இடத்துக்கே அவன் வர மாட்டான். அவன் ரூமே கதின்னு இருக்க ஆரம்பிச்சுட்டான். அவனுக்கு இப்போ ஒரே பேச்சுத் துணை அம்மாவா தான் இருந்தாங்க.

காலம் யாருக்காகவும் நிக்குரதில்ல. அம்மாவையும் இழந்து எல்லாம் முடிஞ்சி வீட்டுக்கு வந்தப்ப அவன் மவுனமாவே மாறிட்டான்.

அப்படியே இஞ்சினியரிங் படிக்க அவனை சென்னை அனுப்பிட்டாங்க அப்பா. அட்லீஸ்ட் அங்கயாவது அவனுக்கு பிரெண்ட்ஸ் கிடைப்பாங்கன்னு. வீட்டுக்கு வந்தா, வழக்கம் போலத் தான்...

ஒரு நாள் திடீர்னு அப்பா மாட்டுத்தொழுவத்துல வழுக்கி விழுந்துட்டாங்க. கால் ஸ்லிப் ஆகி, எலும்பு விரிசல் விட்டுடுச்சு. அந்த நேரம் பாத்து லீவுக்கு வந்தவன் தான்... அட, அட, அட... அப்பாவ அவன் தாங்கு தாங்குன்னு தான்குன அழகு இருக்கே....

அப்பாவுக்கு தனியா ஒரு பெரிய ரூம் ஒதுக்கி குடுத்தான். அப்பா ரெஸ்ட் எடுக்க கால் அமுக்கி விட்டான். அப்பாவுக்கு போர் அடிச்சா அங்கயே டி.வி. அப்புறம் நியூஸ் பேப்பர், நாவல்ன்னு வாங்கி குவிச்சுட்டான். ஒரு குழந்தைய போல எல்லா பணிவிடையும் அப்பாவுக்கு செய்தான். நான் பக்கத்துல போனா, நான் பாத்துக்குறேன்னு ஒரே வார்த்தைல என்னை தள்ளி வச்சிடுவான். ஆனா அப்போ வந்த அழுகை எனக்கு சந்தோசத்த தான் குடுத்துச்சு.

உலகத்துலயே கால் முறிஞ்சி போச்சுன்னு சந்தோசமா எல்லாருக்கும் போன் பண்ணி சொன்னா ஒரே அப்பா என் அப்பாவா தான் இருக்கும். அட, பேப்பர் போடுற பையன்ல இருந்து பால் கறக்குற அண்ணா, பக்கத்து ஊரு நாட்டாமை வரை எல்லாரையும் கூட்டி வச்சு, சந்தோசமா அரட்டை அடிச்சு, என் பையன் என் பையன்னு பெருமை பீத்திக்கவே என் அப்பாவுக்கு நேரம் சரியா இருந்துச்சு. விட்டா இவரு எழுந்திரிச்சு நடக்கவே மாட்டார்னு வாக்கிங் ஸ்டிக் வாங்கி குடுத்து நடக்க வச்சிட்டோம்.

மறுபடியும் ஒரு ஆறு மாசம் எனக்கு ஹாஸ்பிட்டல் வாழ்க்கை. இந்த தடவ அவன் என்னை விட்டு ரொம்ப ஒதுங்கி போகல. டாக்டர் ரூமுக்கு போறப்பவும் நர்ஸ் ஊசிப் போட வரப்பவும் அவன் என் கைய புடிச்சுகிட்டான். அந்த சீசன் முழுக்க அவன் வாங்கி குடுத்த தொப்பி தான் போட்டுகிட்டேன். பாத்து பாத்து எனக்காக வாங்கிட்டு வந்துருந்தான் மொட்டை மண்டை வெளில தெரியாதபடிக்கு.... ஹஹா...

சொந்த வீட்டை விட்டுட்டு வெளில வந்தப்ப அவன் அக்கறை என் மேல திரும்பியிருந்துச்சு. நான் எவ்வளவு உடைஞ்சு போயிருப்பேன்னு அவனுக்கு தெரியும். காரணம், அவனும் தானே உடைஞ்சு போயிருப்பான். சின்னதா ஒரு புன்னகை, எனக்காக அவன் வாங்கி கொண்டு தர்ற ஐஸ்க்ரீம், அக்கறையா சமைச்சு போடுற சிக்கன்...

சக்தி போனதுக்கு  அப்புறம் அவனுக்கு என் மேலான அக்கறை இன்னும் அதிகமாகிடுச்சு. எனக்காக அணில்கள் பின்னால போய் வீடியோ போட்டோ எடுத்துட்டு வந்து என் கிட்ட காட்டினான். அப்பா கூட சேர்ந்து என் உலகத்த இன்னும் அழகாக்க மீன் குளம் ஒண்ணு ரெடி பண்ணி தந்தான். நான் சமைக்கவே கூடாதுன்னு அப்பா கிட்ட சொல்லியிருக்கான். எனக்கு என்ன தேவைன்னு பாத்து பாத்து செய்றான்...

அவன் என் கூட பேசுற ஒவ்வொரு வார்த்தைலயும் தான் எவ்வளவு அன்பு இருக்கும்... "இந்தா, சரி, என்ன வேணும், பரோட்டா, ம்ம்ம்ம், சொல்றேன், சாப்டாச்சு..." ஏதாவது புரியுதா? இதெல்லாம் தான் அவன் என் கிட்ட பேசுற வார்த்தைகள்... அட, இவ்வளவாவது பேசுறானே...

இன்னிக்கி வாட்ஸ் அப்ல மாமா பசங்க கூட அவன் அடிக்குற அரட்டை குரூப் மெஸ்சேஜ்ல கேட்டுட்டே இருக்கும். இதுக்காகவே அப்பா மொபைல் நான் எடுத்து எனக்குன்னு வச்சுகிட்டேன். நான் யாருக்கும் மெசேஜ் பண்றதில்ல. அரட்டையிலயும் கலந்துக்குறதில்ல... ஆனா என் தம்பி கூட இருக்கேன், அவனோட ஒவ்வொரு சிரிப்பையும் சிரிச்சுட்டு.... ரசிச்சுட்டு....

அவன் ஏன் இப்படி இருக்கான்னு கேட்டா, அதுக்கு பதில் இருக்காது. ஏதோ ஒரு செண்டிமெண்ட் அவன் மனசுக்குள்ள. அவன் இப்படியே இருந்துட்டு போகட்டுமே.... அவனை அவன் போக்குல விட்ருவோம்...

அவன் பேரு என்னன்னு கேட்டா ஒரு செகண்ட் திணறி அப்புறமா தான் அவன் பேரை சொல்லுவேன். காரணம், இதுவரைக்கும் அவன நான் பேர் சொல்லி கூப்பிட்டது இல்ல, அவன் பேரை சொல்லி அடுத்தவங்க கிட்ட பேசிகிட்டதும் இல்ல. எனக்கு அவன் எப்பவுமே தம்பி தான். அப்படி தான் அவனை கூப்பிடுவேன். அவனும் அப்படியே தான்... நான் அவனுக்கு அக்கா தான்...

அவன் பெயர் உங்களுக்கு தெரியவே வேண்டாம்....


Monday, 28 July 2014

ஆடி அமாவாசை - அம்மாவும் பிரகதியும்


ஆடி அமாவாசை... (26/07/2014)

அன்றைய நாள் ஆசிர்வதிக்கப்பட்டதா தான் கண்டிப்பா இருக்கணும்...

இந்த நாள் மேல எனக்கு அவ்வளவா நம்பிக்கை இல்ல. இந்த உலகத்துல நம்மள தனியா விட்டுட்டு போனவங்களுக்கு தர்ப்பணம் பண்ணினா அவங்க ஆத்மா சாந்தியடையும்ன்னு நம்பிக்கை... ஆனா எனக்கு அம்மாவுக்கு அதெல்லாம் பண்ணனும்ன்னு கொஞ்சம் கூட ஆர்வம் இல்ல. காரணம், என் கூட இருக்குரவள எதுக்கு அனாவசியமா வேறெங்கயாவது அனுப்பி வைக்கணும்?

ஆறு மணிக்கு ரெடியா இரு, வெளில போயிட்டு வருவோம்னு அப்பா சாயங்காலமே சொல்லிட்டு கோவிலுக்கு போயிட்டாங்க. நான் எங்கன்னு எல்லாம் பெருசா கேக்கல... இப்படி எங்கயாவது கூட்டிட்டு போனா, அது பாங்க்ஸ் சிக்கின் (சிக்கன் இல்ல, சிக்கின் தான்) சாப்பிட தான் இருக்கும்னு நானே நினைச்சுகிட்டேன்.

அப்பா கோவில்ல இருந்து வந்ததும் கதவை தட்டி கூப்பிட்டாங்க. ரெடியா தான் இருந்தேன். கடகடன்னு செருப்பை கால்ல மாட்டிகிட்டு வெளில வந்தா ஒரு ஆச்சர்யம். காருக்குள்ள பின் சீட்ல தம்பி. தம்பி மடியில பிரகதி.

ஒரு வேளை ஹாஸ்பிடல் எங்கயாவது போறோமோன்னு ஒரு சந்தேகம். எங்கப்பா போறோம்னு அப்பாவ பாத்து கேட்டேன். நீ வண்டிய எடு. போறப்ப சொல்றேன்னு சொல்லிட்டு அப்பா பக்கத்துல வந்து உக்காந்தாங்க.

கொஞ்ச தூரம் எதுவுமே சொல்லல... எனக்கு பிரகதி எங்க வர்றான்னு ஒரே ஆச்சர்யம். கண்ணாடி வழியா பாத்தா அவ தம்பி மடியில ஜம்முன்னு உக்காந்து இருக்கா. அதே ஜோதிகா பார்வை. அதே கெத்து. அதே புன்னகையும் கூட. எங்க பிரகதி எவ்வளவு அழகு தெரியுமா?

கார் சிட்டி தாண்ட ஆரம்பிச்சப்ப தான் சட்டுன்னு மூளைக்குள்ள ஒரு மின்னல். அம்மாவ பாக்கப் போறோம். அதே தான்...

அப்பா தலைல கை வச்சு முடிக்குள்ள வருடி விட்டாங்க. திடீர்னு மனசெல்லாம் பாரம் ஆன மாதிரி ஆகிடுச்சு. அந்த உணர்ச்சி கலவைகள எப்படி சொல்றதுன்னு எனக்கு தெரியல. ஏனோ ரோட்ல இன்னிக்குன்னு பாத்து ரொம்ப ட்ராபிக். கவனமா தான் வண்டி ஓட்ட வேண்டியிருந்தது.

எனக்கு மனசுல சித்தப்பாவோ, சித்தியோ, இல்ல அவரோட பசங்களோ நியாபகத்துல இல்லவே இல்ல. அதோ அந்த காம்பவுண்ட் திறந்து வீட்டுக்குள்ள போகாம வலது பக்கமா அந்த சிமின்ட் நடைபாதை வழியா நடந்தா நடந்தா, வெறுமையான புறாக்கூடுகளும், லவ் பேர்ட்ஸ் கூண்டுகளும், தண்ணியே இல்லாத மீன் தொட்டியும் வரும். சிகப்பு ஜாக்கெட், வெள்ளை முண்டு உடுத்தின பெண் இடுப்புல இருக்குற குடம் காலியாவே இருக்கும். கவனத்த அங்கெல்லாம் சிதற விடவே கூடாது.

மனம் மின்னல் வேகத்துல வீட்டை கடந்து, அதோ அந்த முள்வேலி தாண்டி, தோப்பு முடிவுல ரோட்டோரமா போய் அம்மாகிட்ட நிக்குது. அந்த தருணம் ஒரு ஆழ்நிலைக்கு சமம். மூச்சை அப்படியே நல்லா உள்ளிழுத்து வெளிய விட்டு பாத்தா, உடம்பு முழுக்க அம்மா வருடுன தடம் பதிஞ்சு போயிடும். போதும், இந்த தருணம் போதும்... இதுக்கு ஈடா வேற எதுவுமே கிடையாது...

கார கொண்டு வந்து காம்பவுண்ட்குள்ள விட்டப்போ நிஜமாவே அங்க யாரும் இருந்த மாதிரி தெரியல. அப்பா தான் இறங்கி போய் கேட் திறந்து விட்டாங்க. நல்லதா போச்சு. காரை பார்க் பண்ணிட்டு, கார் கதவை திறந்து, மனசு நினச்ச மாதிரியே கடகடன்னு கால் நடக்க ஆரம்பிச்சுடுச்சு. அப்பா தம்பி கூட பின்னால நடந்து வராங்க. பிரகதிய தம்பி கைல தூக்கிட்டு வரான்.

அம்மா கிட்ட போனப்போ, அப்படியே மடங்கி உக்காந்துட்டேன். அவள தொடல, அப்படியே அண்ணாந்து அவளையே பாத்துட்டு இருந்தேன். ஏண்டி இப்படி பண்ணினன்னு மனசு கேக்க ஆரம்பிச்சுடுச்சு. அப்பா அம்மாவ தடவி குடுத்துட்டு இருந்தாங்க. தம்பியும் அம்மாவ தொட்டுப் பாத்தான். அப்புறம் பிரகதிய கீழ விட்டுட்டு, எட்டி தாவல்ல இருந்த கிளைய முறிச்சி பிரகதி கிட்ட குடுத்தான்.

பிரகதிக்கு ஒரே ஜாலி தான். கொஞ்ச நேரத்துல ஒரு கொப்பை காலி பண்ணிட்டா. தம்பி அடுத்த கிளையை ஒடிக்க ஆரம்பிச்சான்.

அம்மாவுக்கு கண்டிப்பா வலிச்சிருக்காது. ஆனா அழுதுருப்பா. இதோ, ஈரப்பதத்தோட வீசுதுல, காத்து... அதுல அம்மா கலந்துருப்பா, பிரகதிய ஆரத்தழுவியிருப்பா... இவளும் அவளோட பிள்ளை தானே. என்னை பாத்துக்குற மாதிரி கண்டிப்பா பிரகதிய பாத்துப்பா தானே... அழுதுகிட்டே அம்மாகிட்ட நான் கேட்டது ஒண்ணே ஒண்ணு தான். "அம்மா, பிரகதி எங்களுக்கு வேணும். இன்னும் கொஞ்ச வருஷம் அவள எங்ககிட்ட விட்டு வையேன். ப்ளீஸ்"

தோளை தொட்டு பிரகதிக்கு எது நல்லதோ, அத அம்மா கண்டிப்பா பண்ணுவா. நீ முதல்ல எழுந்து அம்மா கிட்ட போய் இருன்னு அப்பா சொன்னப்ப தட்ட முடியல. எழுந்து அம்மாவ போய் கட்டிபிடிச்சுகிட்டேன். நான் அவளுக்கு முத்தம் குடுத்தப்ப தம்பி பிரகதிய கட்டிக்கிட்டு திரும்பிகிட்டான். கண் கலங்கிட்டானோ என்னவோ?

கொஞ்ச நேரம் அங்க தான் நின்னுட்டு இருந்தோம். பிரகதி அங்கயும் இங்கயுமா ஓடி விளையாடிட்டு இருந்தா. ஒரு பதினஞ்சு நிமிஷம் தான் இருக்கும். இனி இவளை அதிகமா துள்ள விட வேணாம்னு கிளம்பிட்டோம். சித்தப்பா வீட்ல எல்லோரும் எங்கன்னு கேக்கல... கேக்கவும் தோணல... மனச முழுக்க அங்கயே விட்டுட்டு இதோ கார மறுபடியும் நான் தான் ஓட்டிட்டு இருக்கேன்.

போற வழியிலயே சாப்பிட்டுட்டு போயிடுவோம்ன்னு அப்பா சொன்னாங்க. அப்படியே காரை அக்க்ஷயாவுக்குள்ள பார்க் பண்ணி, ரூப் கார்டன் போய் ஆளுக்கு ஒரு தோசை ஆர்டர் பண்ணினோம். கூடவே டொமாட்டோ சாஸ் (எனக்கு மட்டும்), உளுந்தவடை, இன்ஸ்டன்ட் ப்ரூ ஆர்டர் பண்ணினோம். பிரகதிக்கு நாலு இட்லி.

தோசைய கண்டதும், பிரகதி பாய்ஞ்சு போய் தம்பியோட சேர்ந்து திங்க ஆரம்பிச்சுட்டா... அப்பா கூட அவங்க தோசைய அவளுக்கே குடுத்துட்டாங்க. நான் அவளையே பாத்துட்டு தோசைய எடுத்து கைல வச்சுட்டு காத்திருந்தேன். வயிறு நிறைஞ்சுடுச்சு போல. அவ பாட்டுக்கு துள்ளி ஓட ஆரம்பிச்சுட்டா. இன்னிக்கி அந்த ரூப் கார்டன் வந்தவங்களுக்கு பிரகதி தான் பொழுது போக்கு. எல்லாரும் அவளையே தான் பாத்துட்டு இருந்தாங்க. போட்டோ எடுக்க கூட ட்ரை பண்ணினாங்க. ஆனா தம்பி ப்ளீஸ் வேணாம்னு சொல்லிட்டான். அப்புறம், அப்பாவும் தம்பியும் இட்லியும் வடையும் சாப்ட்டுட்டு, கிளம்பும் போதுஆளுக்கொரு ஐஸ்க்ரீம் ஆர்டர் பண்ணினாங்க. மொத்தம் நாலு ஐஸ்க்ரீம். ஆனா பிரகதி சாப்பிடல. ரொம்ப குளிரா இருந்துச்சுல... வாய வச்சுட்டு எடுத்துட்டா. ஆனா நல்லா சப்பு கொட்டிட்டே இருந்தா...

பிரகதியோட ஐஸ்க்ரீம் எடுத்துட்டு வீட்டுக்கு கிளம்பிட்டோம். வீடு வந்து சேர்ற வர பிரகதி ஐஸ்க்ரீம் சாப்பிடல. தம்பி அவளை அவ அம்மாகிட்ட கொண்டு போய் விட போய்ட்டான். நான், இந்தா இங்க வந்துட்டேன்.

அம்மா எது செய்தாலும் நல்லதுக்கு தான் செய்வா. பிரகதி அவளோட பிள்ளை. அவ பிள்ளைய என்ன பண்ணனும்ன்னு அவளுக்கு தெரியாதா? என்னோட இல்லல, நம்மோட பிரார்த்தனைகளும் அவளுக்கு உண்டு தானே... எல்லோரும் அவளை ஆசீர்வதிச்சுட்டு போங்க...

Sunday, 27 July 2014

புட்டு செய்வோமா?


ஞாயிற்று கிழமை....

ப்ரீயா தானே இருக்கோம்.... வாங்களேன், கிச்சனுகுள்ள புகுந்துடுவோம்...

மேல அந்த ஸ்லாப்ல ஒரு எவர்சில்வர் தூக்குவாளி இருக்கு பாருங்க, அத எடுங்க...

இதுக்குள்ள இருக்குறது தான் அரிசி மாவு. இது எப்படி ரெடி பண்ணனும்ன்னு இப்ப நான் சொல்லித் தரேன், சரியா...

பச்சரிசிய நல்லா தண்ணியில ஊறப் போட்டு, அப்புறம் தண்ணிய நல்லா வடிச்சி எடுத்துக்கங்க. அப்புறம் சுளவுல கொட்டி அப்படியே பரவலா விரிச்சி வச்சுட்டா தண்ணி எல்லாம் நல்லா வடிஞ்சுடும். அப்புறமா அத எடுத்து உரலுல போட்டு, உலக்கை எடுத்து இடிச்சிக்கங்க.

இப்போ இடிச்சி எடுத்த அரிசி மாவுல குருணை கிடக்கும். அதனால நல்லா பரும்கண்ணி வச்ச அரிப்புல வச்சு அரிச்சி மாவு தனியா, குருணை தனியா பிரிச்சி எடுத்துக்கணும் சரியா. குருணைய மறுபடியும் உரல்ல போட்டு இடிங்க... மாவு கிடைச்சிடும்.

இந்த மாவை அப்படியே சேர்த்து வைக்க முடியாது. ஈரப்பதம் அதிகமா இருக்குறதால ஈசியா பூஞ்சை புடிச்சுடும். அதனால இப்போ மாவு வறுப்போம் வாங்க...

அந்த வெங்கல உருளிய எடுத்துக்கோங்க. இப்போ மாவை அதுல கொட்டுவோம். அடுப்பை பத்த வச்சுப்போம். அய்யய்யோ கிண்டி குடுக்கணுமே, அந்த கண்ணாப்பைய எடுங்க. கை விடாம கிண்டி குடுத்துட்டே இருக்கணும் சரியா, இல்லனா அடி பிடிச்சுக்கும்.

இப்போ மாவு பொன்னிறமா வந்துடுச்சா, அவ்வளவு தான், வேலை முடிஞ்சுது. கொஞ்சம் ஆற வச்சுட்டு, தூக்கு வாளில போட்டு வச்சுடலாம்...

ஹலோ, ஹலோ, ஹலோ.... எங்க போறீங்க, இதல்லாம் ப்ளாஷ் பேக் தான். இனி மேல தான் வேலையே இருக்கு.

வாங்க, ஒரு கப் மாவு எடுத்து அந்த சருவத்துல எடுத்துக்கோங்க. அப்படியே ஒரு கப்புல உப்பு தண்ணி எடுத்து வச்சுக்கோங்க. முக்கியமா தேங்காய் துருவ மறந்துடாதீங்க. அத தனியா ஒரு தட்டுல துருவி வச்சுக்கோங்க...

சரி இப்போ, உப்பு தண்ணிய கொஞ்சம் கொஞ்சமா மாவுல விட்டு பிசைய ஆரம்பிங்க. கொஞ்சம் கூட தண்ணி விட்ட மாதிரி தெரிய கூடாது. மாவு கொஞ்சம் ஈரப்பதமா ஆகணும். அவ்வளவு தான். உப்பு டேஸ்ட் எப்படின்னு பாத்துக்கோங்க... ஓகே, இப்போ மாவு ரெடி...

இன்னிக்கி சிரட்டை புட்டு செய்வோமா? அந்த தேங்காய் துருவின சிரட்டை இருக்குல, அதுல ஒரு கண்ணை கத்தி வச்சி கொஞ்சம் பெருசாக்கிகோங்க... உள்ள இருக்குற கசட எல்லாம் நல்லா கத்தி வச்சி இளைச்சி எடுத்துடுங்க. வீட்ல சின்னதா இருக்குற குக்கர்ல தண்ணி மட்டும் விட்டு அடுப்புல வச்சிடுங்க. குக்கர் வெயிட்டர் மட்டும் போட வேண்டாம்.

இப்போ தண்ணி சூடாகி, ஆவி வரப்ப, சிரட்டையோட கண்ண அதுல சொறுகிடுங்க... ஒரு கை மாவு அள்ளி போட்டு, அது மேல தேங்காப்பூவ தூவி விட்டுருங்க...

என்ன, ஆவி இப்போ தேங்கா துருவல் மேல படர்ந்து வெளில வருதா, அப்போ புட்டு ரெடி. சுடாம இருக்க ஒரு துணி சுத்தி, சிரட்டைய எடுத்து, பாத்துரத்துல கவுத்துருங்க... அவ்வளவு தான், இனி அடுத்த புட்டு செய்ங்க...

சரி, சரி, நேரம் ஆகிட்டதால கொல்லாங்கொட்டைய நானே வறுத்து உடைச்சும் வச்சுட்டேன். பப்படமும் பொரிச்சி வச்சுட்டேன். மணக்க மணக்க கருப்பட்டி காப்பியோட இன்னொரு நாள் இந்த வேலைய நீங்க தான் செய்யணும் சரியா....

இப்போ வாங்க சாப்பிடலாம்...

புட்டு சாப்ட்டுட்டே ஒரு குட் மார்னிங்....

Tuesday, 1 July 2014

திருவிழா பாக்க போவோமா?


 
இன்னிக்கி எங்க போறது?

பேசாம ஒரு திருவிழா கூட்டத்துக்குள்ள புகுந்துடுவோமா?

 நம்ம ஊருல திருவிழானாலே அசத்தல் தானே... இப்போ திருவிழா நடக்குதான்னு எல்லாம் கேக்கக்கூடாது, நாம போகணும்ன்னு முடிவெடுத்தாலே கண்டிப்பா திருவிழா நடக்கும்.


சரி, சரி, தாத்தா, பெரியப்பா, சித்தப்பா, அண்ணா, தம்பி, மாமா, மச்சான் எல்லாரும் வெள்ளை வெளேர்ன்னு வேஷ்டி கட்டிக்கோங்க. உங்க கிட்ட இருந்தா பட்டு வேஷ்டி கூட கட்டிக்கலாம். கழுத்துல மைனர் செயினு, விரல்ல அதிரசம் சைசுக்கு மோதிரம், வலது கைல வாட்சு, இடது கைல பிரேஸ்லெட்... ப்பாஆஆ... அசத்துறீங்க...

அட, இங்க பாருங்க, பெரியம்மா, சித்தி, மாமி, அக்கா, தங்கச்சி பாட்டி எல்லாம் நான் சொல்லாமலே ரெடி ஆகிட்டாங்க. அட, பாட்டி கழுத்துல பாம்படம் அசத்தல். தோள் வரைக்கும் காத வழிச்சு நீட்டி உருட்டி உருட்டி பாம்படம் போட்ருக்காங்க. சைஸ்ச பாத்த உடனே ரொம்ப கனமா இருக்கும்னு நினச்சீங்கனா ஐயாம் சோ சாரி, உள்ள மெழுகு வச்சு அடைச்சி வச்சிருக்காங்க. அடேங்கப்பா, சித்தி கழுத்துல அட்டியல பாருங்களேன், என்னா பெருசு. தங்கச்சி, அது என்ன, நெத்திச்சுட்டி டாலடிக்குது? அதுவும் சிகப்பு கல்லுல... இங்க நம்ம அக்கா மூக்குல வைர மூக்குத்தி... ஆள் ஆளுக்கு அசத்துறீங்க... பட்டுப்புடவை சரசரக்க வேகமா வாங்க....

ஹலோ, அங்க யாரு வந்தவங்கள வேடிக்கை பாக்குறது? போங்க சார், போய் திருவிழாவ வேடிக்கை பாருங்க. ரோஸ் கலர்ல பஞ்சு முட்டாய் இருக்கு, மஞ்ச, சிகப்பு, கருப்புன்னு கலர் கலரா சவ்வு முட்டாய் இருக்கு, சுடச்சுட தேன்குழல் ரெடி. இந்த பக்கம் வாங்க, வலது பக்கம் காரச்சேவு அடுக்கி வச்சிருக்காங்க, இடது பக்கம் இனிப்பு சேவு. ஹைய்யய்யோ அதென்ன, மஞ்சயா, உருண்ட உருண்டையா? அது பூந்திங்க. அப்படியேவும் சாப்பிடலாம், கொஞ்சம் பக்குவப்படுத்தி லட்டு பிடிச்சும் சாப்பிடலாம்.

அந்த கார வகைகள் எல்லாம் எங்க இருக்கு? அதோ, அந்த வருசைல இருக்கு. மிக்சர், சிப்ஸ், கிழங்கு வத்தல், ஹே, அதென்ன, கருப்பட்டி முட்டாய். எல்லாமே அசத்தல்.

இந்தாங்க, அண்ணே, பொம்பள புள்ளைங்கள பாக்காதீங்கண்ணே அவங்க பாட்டுக்கு, வளையல், ஜிமிக்கி, தோடு, சாந்து பொட்டு, நெயில் பாலிஷ், லிப்ஸ்டிக்ன்னு வாங்கி குவிச்சுட்டு இருக்காங்க. நீங்க வேணும்னா உங்க வீட்டு புள்ளைங்களுக்கு வாட்ச்சு, ஸ்டோரி புக், துப்பாக்கி, பலூன், யானை பொம்மை, குதிரை பொம்மை, கார் இப்படி ஏதாவது ஒண்ணு வாங்கி குடுங்க.

 சரி எல்லாரும் வாங்க, கொஞ்ச நேரம் ரங்கராட்டினம் சுத்தலாம். மயிலாட்டம், ஒயிலாட்டம்ன்னு வேடிக்கை பாக்கலாம். அங்க என்ன கூட்டம், அட, கபடி விளையாட்டு நடக்குது. கபடி, கபடி, கபடி..... ஹஹா.... கொஞ்ச நேரம் இங்க நின்னுட்டு அடுத்து சறுக்கு மரம் ஏறுரத பாக்க போகலாம். இல்லனா சின்ன புள்ளைங்களுக்கு முறுக்கு கடித்தல் போட்டியும், பலூன் உடைத்தல் போட்டியும் நடக்குது, அங்க போகலாம். என்னது, பாம்பு படமெடுத்து ஆடுறத பாக்க போகணுமா, ஹையய்யோ நான் வரல, எனக்கு பயம். நீங்க போயிட்டு வாங்க...

 ஹோய்.... அங்க பாருங்க, வான வேடிக்கை.... ஹைய் செமையா இருக்குல. இந்த சரவடி போடும் போது மட்டும் கொஞ்சம் காத பொத்திக்கணும். டம், டமால், டுமீல்... வீட்டுக்கு ஒரு துப்பாக்கியும் ரோல் பட்டாசும் வாங்கிட்டு போகணும். எல்லாரையும் ஹான்ட்ஸ் அப் சொல்லி சுட்டு சுட்டு விளையாடணும்...

 சரி, சரி, சாமி பல்லக்குல ஏறியாச்சு. எல்லாரும் கன்னத்துல போட்டுட்டு பக்தி பரவசத்தோட கும்பிட்டுக்கோங்க... எனக்கு உங்களுக்கு எல்லாம் சுத்தி காட்டின டயர்ட்... ரெஸ்ட் எடுக்க போறேன், வரட்டா....