Saturday 24 March 2012

சிட்டுக்குருவியின் இறுதியாத்திரை


ஒடித்து வைக்கப்பட்ட குச்சியில்
ஓட்ட வைக்கப்பட்ட எனக்கோர்
வரமொன்று கிடைத்தது...
ஒரு நாள் உலகை சுற்றி வர.....

விரைத்து போன இறகுகளோடு
ஆவலோடு விரைகின்றேன்
என் சந்ததி தேடி.....
பச்சை மரம் தேடி அலைந்தேன்
என் விருப்பமின்றி மின் அலைக்கரங்கள் 
என்னை அணைக்கத் துடித்தன ....

கொஞ்சி குலாவிய கொல்லைபுறம்
நினைவில் வர வேகம் அதிகரித்தேன்....
அதிசய உலகமாய் கட்டிடங்கள் கண்சிமிட்ட
மாடங்களிலாவது என் சொந்தம் காண்பேனோ?
தேடி தேடி அலைந்தது தான் மிச்சம்....

என்னை கண்டு விட்ட மழலை ஒன்று
ஆர்வத்தோடு பொக்கை வாய் திறக்க
அட! சிட்டுக்குருவி....
அப்பொழுதும் கல்லெறிகிறான் மனிதன்...

இறைவன் தவறிழைத்தானா? இல்லை
அவன் படைத்தவன் தவறிழைத்தானா?
அழித்து விட்டான், கூடவே
விரைந்தும் வருகிறான் அழிதல் தேடி...

மிரட்சியோடு திரும்பி பார்க்கிறேன்
வெற்றுடல் பாதுகாத்த பெட்டகத்தை
ஆசையும் ஏக்கமும் நெஞ்சில் தாக்க
மனம் வெறுமையாய் கூறியது
“இனி மீண்டும் பிறக்க மாட்டேன்” .........

நீண்ட அலைச்சலூடே
ஒன்றை மட்டும் அறிந்து கொண்டேன்...
என்னை துரத்தும் வல்லூறு இன்றில்லை
கண்ணுக்கு புலப்படாத எமன்
கதிர்வீச்சில் ஏறி வருகிறான்...
என் சந்ததி மட்டுமில்லை
என் எதிரியை கூட காணோம்...

No comments:

Post a Comment