Friday 1 June 2012

மறுபாதியாய் நீ...!


இன்று தான் நீ
என்னில் உணர்த்திய
மாற்றம் அறிந்தேன்...!

வயிற்றை புரட்டி
வெளிவந்தது உன்
வருகைக்கான முதல் செய்தி...!

லேசாய் சுற்றிய தலையின்
நினைவுக்குள் நீ வந்து
என்னை கிறுகிறுக்க வைக்கிறாய்...!

என் உதிரத்தின் உயிராய்
நீ துளிர்த்து விட்ட செய்தியால்
நானும் இன்று புதிதாய் பிறந்தேன்...!

உன் உருவம் எதுவென அறியேன்...!
உன் நிறமும் யாதென நினையேன்...!
உன் பாலினம் பற்றிய நினைவு
எழும்போதெல்லாம் நீ என்னுள்
அன்றலர்ந்த பூவாய் சிரிக்கிறாய்...!

உன் தாத்தன் ரசிக்கும்
ஜான்சி ராணியில்
நீயே கதாநாயகியாய்
வீற்றிருந்து வீரம் காட்டுகிறாய்...!

உன் பாட்டி விட்டுச்சென்ற
அன்பு ஊற்றிலே நீ ஒரு
அன்னை தெரசாவாய்
உருவமேற்கிறாய்...!

உன்னை பதியமிட்டவன்
ரசிக்கும் வலைத்தளத்திலோ
கல்பனா சாவ்லாவாய்
கையசைக்கிறாய்...!

ஒரு மாமன் கற்பனையிலோ
நீ சாகசம் புரியும் டோராவாய்...!

தாய்மாமன் நேசிக்கும் பெண்மையிலோ
நீ நானாகவே அவர் மடியில்
சுட்டித்தனமும் குறும்புமாய்
பொக்கை வாய் மலர்கிறாய்...!

எனக்கோ நீ...
திருநெல்வேலியில் கண்டெடுத்த
வைரமுத்துவாய்...
என் கன்னம் ஈரப்படுத்தும்
மெல்லிய பனித்துளியாய்...

எப்படி சொல்வேனடி என் கண்ணே...!
நீ போதுமெனக்கு...!
என்னை ஒரு நிலை
உயர்த்தியவள் நீ...!
என்னின் மறுபாதியும் நீ...!
நான் ரசிக்கும் தேவதையும் நீ...!
இறைவன் அளித்த கொடையிலே
அவனுக்கே கிட்டாத நல்முத்தும் நீ...!






No comments:

Post a Comment