Saturday 2 June 2012

ஏட்டுச் சுரைக்காயும் மரித்து விட்ட தளிரும்...


அன்று, உன்னை நான்
பார்த்த போது மலராத மொட்டாய்
பெரிய நந்தவனத்தில் தனித்த
தளிராய் நீ இருந்தாய்...!

கை நீட்டி என்னை நீ
அணைத்தப் போதுதான்
ஓர் உண்மை உரைக்கக் கண்டேன்...!
ஆம், மலரினும் மென்மையானவள் நீ...!

உன் தொடு உணர்வின் சிலுசிலுப்பில்
என் உள்ளம்தனை மைக்ரோ நொடியில்
கவர்ந்தே விட்டாய்...!
அன்றே என் வாழ்வின் வசந்தம் உணர்ந்தேன்...!

உன்னோடு பயணிக்கவும் சயனிக்கவும்
விருப்பம் கொண்டே
உன் வாசம் சுவாசித்தே
வாசல் புகுந்தேன்...!

உன் அறை நுழைந்த நான்
சற்று கலங்கியே போனேன்...
என்னை விட நீ அதிகம்
அணைத்ததும் விசுவாசித்ததும்
எழுத்துக்களும் கருத்துக்களும்
திணிக்கப் பட்டிருந்த
உன் புத்தகங்களை தான்...!

எதிர்கால வாழ்க்கைக்கு
அவசியம் தான்
அதற்காக நிகழ்கால நிஜங்களை
புறக்கணித்தல் எவ்விதம் நியாயம்?
இதோ உனக்காக காத்திருக்கிறேன்
நீ படித்து முடித்து எறிய போகும்
ஏட்டு சுரைக்காய் நூல்களை 
கண்டு எள்ளி நகையாட...!

திடீரென மார் பிடித்து கதறி
அடுத்த அரை நிமிடத்தில்
நீ மண்ணுலகம் பிரிந்த போதுதான்
அறிந்துக் கொண்டேன்
வாழ்க்கை நிச்சயமற்றது
என் ஆசைகளும் நிராசையானதென...!

மலரே, நீ சிந்த மறந்த
சிரிப்புக்களை கவர்ந்து
கொண்ட உன் மென் இதயம்
பாரம் தாங்கா காரணம்
நானறியேன்...!

மரண தாகம் கொண்டு
உன் உயிர் பருகிய எருமை வாகனன்
மரண ஓலத்தை மட்டும்
எங்களிடையில் விட்டுக் சென்றான்...!

வாய் விட்டு கதறும்
மக்கள் மத்தியில்
உயிரற்ற பொருளாய்
உன் வாசம் தேடி கதறுகிறேன்...!

இப்படிக்கு....
ஒரே ஒரு முறை
உன்னால் தீண்டப்பட்டு
மறுத்தீண்டலுக்காய்
இலவு காத்துக் கிளியாய்
உன் நேசம் கிட்டா
பொம்மைக் குட்டி...!


No comments:

Post a Comment