Thursday 14 June 2012

நட்பின் தவிப்பு...!


தென்றலின் தீண்டல் கூட
வெம்மையின் தன்மை
பேசிச் செல்கிறது இன்று...!

கேட்டு விட்ட வார்த்தையொன்றின்
வெப்பத் தாக்கம் புறஊதா
கதிர் தாண்டி
நெஞ்சடைத்து நின்றது...!

நரம்புகளின் துடிப்பில்
சப்த ஸ்வரங்களும் நடனமாடி
பின் அமைதி காத்து மிரட்டியது...!

நட்பின் மென் கோட்டின் மேல்
காதலென பாய்ந்து விட்ட
கத்தியொன்று கூர்த்தீட்டப் படாமல்
அறுந்து கொள்ள அனுமதி வேண்டுகிறது...!

ஒற்றை புள்ளி வைத்து
முற்றும் போட இதென்ன
பத்திரிகை தொடர் கதையா?

உணர்வும் கண்ணீரும்
புரிதலும் புன்னகையுமாய்
உருவம் கொடுத்த உன்னதமிது...!

நூல் அறுந்து படபடக்கும்
பட்டத்தின் தவிப்பை
என்னுள் தந்து விட்டு
எரியும் தணலின் கூர்நாக்குகளில்
உன் மென்பாதம் பதிக்கிறாயே...!

சிதைந்து விட்ட வலையென
விட்டு சென்று துவளாமல்
மீண்டும் முயல்கிறேன்
இன்னுமொரு வலை பின்ன...!

கரங்கள் பற்றி வலிமை கொடுப்பாயா?
நம் உறவின் பலமாய் பாலமுமாய்
எல்லாமுமாய் நிறைந்திருப்பவனே
எனக்கு உன் பதிலுமெங்கே?


1 comment: