கடந்த இருபத்தி ஆறாம் தேதி, அம்மாவ பாக்கப் போயிட்டு ஹோம்ல பசங்களோட படமும் பாக்கப்போயிட்டு மனசு நிறைய சந்தோசத்தோட வீட்டுக்கு வந்தா கீயா கீயா-ன்னு ஒரு மெல்லிய சத்தம்.
என்னடா இது, எங்க இருந்து இந்த சத்தம் வருதுன்னு யோசிச்சவ பக்கத்து பானைல பாக்குறேன், யுவா எதையோ கொத்திகிட்டு இருக்கான்... மனசுல டக்குன்னு ஒரு திகில். ஒரு வேளை அதுவா இருக்குமோன்னு...
நளன் தமயந்தி ஜோடி முட்டைப் போடுறது ரொம்ப ரேர். வாங்கிட்டு வந்த புதுசுல ஒரு முட்டைப் போட்டு அஞ்சு நாள்லயே கீழ தள்ளி உடச்சிடுச்சு. அப்புறமா ரொம்ப மாசங்கள் கழிச்சு ஒரு முட்டை போட்டுச்சு. அதுவும் குஞ்சு பத்து நாள் வளர்ச்சியடைஞ்ச நிலைல முட்டைக்குள்ளயே செத்துடுச்சு. அடுத்து ஒரு மாசம் கழிச்சு ரெண்டு முட்டைப் போட்டுச்சு...
அந்த நேரம் தான் யுவா-மந்தாகினி ஜோடிக்கு பாரதி பிறந்த நேரம். பாரதி கொஞ்சம் பெருசானதுமே மந்தாகினி வேற முட்டைப் போட ட்ரை பண்ணிட்டு இருந்துச்சு. உடம்பு ரொம்ப வீக்கா இருந்ததால நளன்-தமயந்தி கூட்டுல போய் உக்காந்த அது, அங்கயே ஒரு முட்டைப் போட்டுடுச்சு.
அப்புறமா, நளன்-தமயந்தி கூட்டுல இருந்து குஞ்சு சத்தம் கேக்க ஆரம்பிச்சுது. நானும் எத்தனைகுஞ்சுன்னு கூட எட்டிப்பாக்கல. சரி, எத்தனை பிறந்தாலும் சந்தோசம்தான், அத டிஸ்டர்ப் பண்ண வேணாம்னு விட்டுட்டேன்.
அஞ்சு நாள் முன்னாடி தான் தமயந்தி போட்ட முட்டைங்க ரெண்டும் கூமுட்டைங்கன்னும், மந்தாகினி போட்ட முட்டை பொரிச்சு ஒரு அழகான கருப்பு குஞ்சு இருக்குன்னும் தெரிஞ்சுகிட்டேன். அது மெல்ல பறந்து வந்து கூடு மேல உக்காந்துட்டு இருந்துச்சு. சரி, ராத்திரி நேரம் ஆகிடுச்சு, கூட்டுக்குள்ள விட்ருவோம்னு நான் தான் அத பிடிச்சு கூட்டுக்குள்ள விட்டுட்டு தூங்கினேன்.
மறுநாள் காலைல எல்லாருக்கும் இரையும் தண்ணியும் வச்சுட்டு கூட்டை எட்டிப்பாத்தேன். குஞ்சு உள்ள இருந்து அழகா எட்டிப்பாத்துட்டு இருந்துச்சு. சந்தோசமா சிரிச்சுட்டு அம்மாவ பாக்கப் போயிட்டேன்.
திரும்பி வந்து பாத்தப்ப யுவா எதையோ கொத்திகிட்டு இருந்துச்சா, சட்டுன்னு அய்யய்யோ ஒருவேளை குஞ்சா இருக்குமோன்னு பயம். ஓடிப் போய் பானைக்குள்ள எட்டிப் பாத்தேன். அதே தான். பயந்து அழக் கூட முடியாம பாவமா பாத்துட்டு இருக்கு. எப்படியோ கூட்டை விட்டு வெளில வந்தத இந்த யுவா கொத்தியிருக்கு. அது தவறி பானைக்குள்ள விழுந்திருக்கு. அப்படியும் விடாம யுவா அத கொத்தி கொதறிடுச்சு.
பதறிப்போய் பானைக்குள்ள இருந்து குஞ்சை வெளில எடுத்துப் பாத்தா ஒரே ரெத்த சகதி. முடி எல்லாம் யுவா கொத்தி பிச்சு எடுத்துடிச்சு. என்னப்பண்ணனே தெரியாம கண்ணுல கண்ணீர் முட்டிடுச்சு. மெதுவா அது உடம்புல இன்பெக்சன் வராம இருக்க ஆயில்மென்ட் தடவி ஒரு பானை எடுத்து, அதுக்குள்ள தேங்கா நார் எல்லாம் வச்சு கூடு மாதிரி பண்ணி அதுக்குள்ள அத வச்சேன்.
இனி திரும்ப கூட்டுக்குள்ள அத விட முடியாது. யுவா கொத்தியே கொன்னுடும். என்னப்பண்ணன்னு தெரியல. நந்துவ கூட்டிகிட்டு கடைக்கு போய் ஒரு செர்லாக் கவர் வாங்கிட்டு வந்து சிரிஞ்ச் மூலமா அதுக்கு கரைச்சு குடுத்தேன். அவசர அவசரமா வாங்கி தின்னுச்சு.
அடுத்தநாள் கொஞ்சம் ஆக்டிவ்வா இருந்துச்சு. இறகே இல்லாத சிறக ஸ்டைலா விரிச்சு சோம்பல் எல்லாம் முறிச்சு பானை மேலஉக்காந்து எல்லாத்தையும் பாத்துட்டு இருந்துச்சு. அத பாத்துக்குறதுக்காகவே காலேஜ் கட் அடிச்சுட்டு வீட்ல இருந்தேன். ஆனா சாயங்காலமே கொஞ்சம் சோர்வாகிடுச்சு.
அப்பப்ப எடுத்து கூட்டுக்குள்ள விட்டேன், நளனும் தமயந்தியும் இரை குடுத்துச்சு. ஆனா யுவா கொத்த பாய்ஞ்சு பாய்ஞ்சு வருது... இப்போதைக்கு எதையும் வேற கூட்டுல மாத்திப் போடமுடியாத நிலை. மந்தாகினி முட்டைப் போட்ருக்கா. அதனால பிடிச்சு மாத்தவும் வழி இல்ல. அதனால குஞ்சை மறுபடியும் நானே வச்சுகிட்டேன்.
எப்பவுமே ரெண்டுமூணு நாள் போனா தான் அதோட ஹெல்த் உண்மையான நிலவரம் தெரியும். அதுக்கு வாழ விதி இருந்தா வாழும், இல்லனா இயற்கைய உன்னால எதுவும் செய்ய முடியாதுன்னு மனசு சமாதானப்பட்டுக்கோன்னு சொன்னார்.
நேத்து, அதான்புதன் காலேஜ் போயே ஆக வேண்டிய நிலைமை. அத தனியாவிடவும் மனசு இல்ல. தம்பி வேற தோப்புக்கு போய்ட்டான். என்னப் பண்ணலாம்னு யோசிச்சு என் கூடவே அத காலேஜ் எடுத்துட்டுப் போயிட்டேன். அங்கப் போய் அழகா பானை மேல உக்காந்துட்டுப் பாத்துட்டு இருந்துச்சு. பிள்ளைங்க எல்லாம் ஹை குருவி ஹை குருவின்னு பாத்துட்டு இருந்தாங்க. சாயங்காலம் வந்ததும் நளன்- தமயந்திகிட்ட விட்டேன், அதுங்க சாப்பாடு குடுத்துச்சு.
அதோட நிலமைய பாத்தா முதல் நாள் விட ரொம்ப சோர்ந்து போயிட்டது நல்லாவே தெரிஞ்சுது. காயம் எல்லாம் வேலை செய்துன்னு புரிஞ்சுது. சரி, என் கூட இருக்குற வரைக்கும் இருக்கட்டும், அப்புறம் கடவுள் விட்ட வழின்னு முடிவு பண்ணி அதுக்கு திக்சான்னு பேரு வச்சாச்சு. திக்சானா சக்திய திருப்பி வாசிச்சா என்னவோ அதான். சக்தி இப்படித்தான என் கூடவே இருந்தான்.
இன்னிக்கி காலேஜ்ல வச்சு பானைய விட்டு வெளில வந்து என் கைக்குள்ள கைக்குள்ள வந்து பதுங்கிச்சு. சாயங்காலமா வீட்டுக்கு வந்தாலும் ஓடி வந்து டைப் பண்ண விடாம கைக்குள்ள வந்து தூங்குது.
முதல் நாள் அதோட காலுல இருந்த வலு இப்ப இல்ல. சரியா எழுந்து நிக்க முடியல. திக்சாவுக்கு என்ன வேணா ஆகலாம், ஆனா ஒரு அன்பான உயிர் என் நாட்களை கொஞ்சம் பொறுப்போட வச்சிருக்குன்னு நினைக்குறப்ப.....
பொதுவா நான் என் வீடு சம்மந்தப் பட்ட போட்டோக்கள் வெளில போடுறது இல்ல. ஆனா திக்சாவுக்கு எல்லாருடைய பிரார்த்தனையும் வேணும். திக்சா நம்ம வீட்டுப் பிள்ளையா திரும்பி வரணும். அதுக்கு நான் ஒரு ஜோடி வேற செட் பண்ணிக் குடுக்கணும்... அதனால மட்டுமே அதோட போட்டோவ நான் இங்க போட்ருக்கேன். ப்ரார்த்திச்சிக்கோங்க...
லவ் யூ திக்சா..... நீ சீக்கிரம் சரியாகி, என் கூட சண்டை எல்லாம் போடணும். என்னை ரெஸ்ட் எடுக்க விடாம பறந்து பறந்து கொத்தணும்... சக்திக்கு அடுத்து என் சண்டைக்காரி நீதாண்டி... சீக்கிரமே சரியாக எங்க எல்லோரோட பிரார்த்தனைகள் திக்சா....
.