Thursday 14 November 2013

பாலையாய் ஒரு வெற்றுக் கேவல்...


“கொலைப்பாதகர் கூட்டமது 
கள்வர்களின் உறைவிடமது...
மாண்டவன் மீள மாட்டான்...
நீ சென்றால் தாங்க மாட்டாய், திரும்பி வா அஞ்சுகமே..”

தொலைதூரம் போனவளொருத்தியின்
விட்டு விட்டொலித்த கேவல்
ஏக்கமாய் நெஞ்சை பிசைய,
குயிலொன்று இப்படி தான்
அதன் மொழியில் கூவிக்கொண்டிருந்தது...

கொலைக்களம் இதுவென அறிந்திடா மடந்தையல்ல...
பாதகர் கண்டு பதறியோடும் பரம்பரையில் பிறந்தவளுமில்லை...
தந்திரமாய் வஞ்சிக்கப்பட்டவனின் மாசுமருவில்லா மகிழம்பூ அவள்...

விதி தேடி வந்தாளோ?
வினை விதைக்க வந்தாளோ?
அங்கே கிழ நாயொன்று பலஹீனமாய்
ஊளையிட்டுக் கொண்டிருந்தது...
நரிகளின் நடமாட்டம் இருளினில் மின்ன,
கண்கள் விரித்து விளக்காக்கிக் கொண்டாள்...

“ஏன் சென்றாய்? விட்டகன்றாய்?
திரும்பிடவே கூடாதென வீம்பாய் ஒரு
பிடிவாதம் பிடித்தாற்போல் ஆயிரம் கேள்விகளை
விடைதெரியாமல் விட்டுச் சென்றாய்...
உன் கண்களில் நானதை படித்தறிய கண் விரிய காத்திரு”
இப்படி தான் அவள் மனம் அவனிடத்தில் யாசித்தது...

யாசித்தும் பயனில்லை,
நாளும் பொழுதும் பூஜித்தும் புண்ணியமில்லை...
விட்டு விட்டுப் போனவனின்
ஆழ்நிலை தூக்கமொன்றே அவளை ஆங்காரமாய் வரவேற்றது...

எரிமலையொன்றங்கே தீப்பிழம்பு கக்கியது...
வான் கிழித்து நட்சத்திரம் பாதாளம் பாய்ந்தது...
இதை காணத் தான் கண்களுக்கு மையிட்டுத் திரிந்தாளா?
வளையல்கள் சண்டையிட அவன் ரசிக்க நகைத்தாளா?
மணவாளன் மாய்ந்திடத் தான்
வெண்சங்கு கழுத்திலே மணமாலை ஏற்றாளா?

பற்றியிழுத்து சண்டையிட்ட மார்தனில்
இனி மயிர்கால்கள் சிலிர்க்கப் போவதுமில்லை...
பூப்போல் வாரி அணைத்திடும் கரங்களும்
இனி அவளுக்கு சொந்தமாய் இருக்கப்போவதுமில்லை...

இனி அவன் கழுத்து அவளுக்காய் சாய்வதுமில்லை
அவனின்றி இனியாரும் அவளுக்கு தேவையாய் இருப்பதற்கில்லை..

அவன் வளைத்த மெல்லிடை தீயாய் தகிக்க,
அவன் சுமந்த நெஞ்சமோ இரண்டாய் கிழிகிறது...
பீறிட்டு வரும் குருதி கண்டு
ஆக்ரோஷ மனம் அடங்கல் கொள்ளுமோ?
ஏதோ ஓர் பரமானந்தம் அந்தரத்தில் ஆர்ப்பரிக்கிறது..
மெல்லிய ஆடைகளின் பாரங்கள் கூடிப்போக
வாய்ப்பிளந்து உயிரிழக்க துணிகிறாளவள்..

அமைதியாய் உறைந்திருக்கிறான்...
அவள் கைகள் துவள தாங்காதிருக்கிறான்...
தட்டாமாலை சுற்றிடும் அவள்
தலைக்கு மேலே இன்னொரு உலகம் ஸ்ரிஸ்டித்து
அங்கிருந்து அவளை ஏந்தாதிருக்கிறான்...

அவள் உயிர் துடித்தடங்குவதை
அவன் கண்கள் காணப்போவதேயில்லையென
இமை சொருகி மண்ணோக்கி அவள்
வீழப் போகையில் வயிற்றைப் பிரட்டி
உள்ளிருந்து எட்டி உதைத்தாற்போல்,
அடிக்கள்ளி நான் இங்கிருக்கிறேனென்கிறான்...

பேதையினியென் செய்வாள்?
உயிரிழக்கவும் உரிமையில்லை...
துவண்டிட்ட கால்களினி உரம்பெற்றுமா? தெரியாது...
மாறாய், செலுத்தப்பட்டே தீர வேண்டும்...
உளிப்பட்டு பிளந்திட்ட பாறையின் உள்ளின்று
குதித்தோடிய தேரையாய்
புவிதனில் அவளுக்கும் ஓரிடம் நிச்சயமாச்சு...

கண்ணீரும் வறண்டுப் போக
அவன் வெற்றுடலை ஒரு உறைந்தப்பார்வை பார்க்கிறாள்...
மணிவயிரை தடவுகையில்
விரக்தியொன்று உதட்டில் உறைந்தது...
ஊமையாய் போன இவள் இனி,
ஊர் போய் சேர வேண்டும்...

கூவைகளின் கூப்பாடுகளுக்கிடையில் அவள்
திரும்பி நடக்கையில் அவளுமாய் இருக்கவுமில்லை..
அவளை தொலைத்துவிட்டு அவனை அணிந்துக் கொண்டே
கால்கள் பின்ன ஊர்ந்துக் கொண்டிருக்கிறாள்...

இனி அவன்... அவளின் வாழ்நாள் விசையாகிறான்...

17 comments:

  1. வணக்கம்

    அமைதியாய் உறைந்திருக்கிறான்...
    அவள் கைகள் துவள தாங்காதிருக்கிறான்...
    தட்டாமாலை சுற்றிடும் அவள்
    தலைக்கு மேலே இன்னொரு உலகம் ஸ்ரிஸ்டித்து
    அங்கிருந்து அவளை ஏந்தாதிருக்கிறான்...

    அழகான கவிதை வரிகள் ரசித்தேன் அருமை மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. ஹ்ம்ம்ம் ரசித்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ். பொறுமைய ரொம்ப சோதிச்சுட்டேன்னு நினைக்குறேன் :)

      Delete
  2. இதை படிக்க ஆரம்பிக்கும் போதே, கீழிருந்து மேலாய் ஒருமுறை புரட்டிக்கொண்டேன். காரணம், கவிதையின் நீளம் அப்படி. ஒருமுறை படித்து விட்டு மீண்டும் மீண்டுமாய் நான்கு முறை படிக்க ஆரம்பித்தேன். எனக்குள்ளே அந்த பெண் ஆதிக்கம் செலுத்த துவங்கினாள்.

    நான் புரிந்து கொண்டது சரியாவென தெரியாது, ஆனால் புரிந்த வரையில் இங்கொரு பெண், மனதில் ஏமாற்றம், எதிர்பார்ப்பு, ஆக்ரோசம், ஆழ்ந்த காதலென தன் உணர்சிகளை கொட்டிவிட்டு, இறுதியில் இயலாமையால் துவண்டு திரும்புகிறாள். அவளை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. இங்கு ஆயிரம் காதல் சொல்லப்படாமல் புதையுண்டு கிடக்கிறது.

    தான் நேசித்த தன் கணவன் வஞ்சனையாலும் சூழ்ச்சியாலும் மரணித்தான் என்ற செய்தி கேட்ட தலைவி, அதனை நம்பாமல் அவனை தேடி இருட்டினிலே ஓடுகிறாள். அந்த செய்தி பொய்யாய் இருக்குமென அங்கயே காத்திரு, நான் வந்து கேட்க வேண்டிய கேள்விகள் நிறைய இருக்கிறது என பைத்தியம் பிடித்தது போல் புலம்பியபடி ஓடுகிறாள். ஆனால் அங்கு அவள் கண்டதோ ஒரு வெற்றுடலை தான். தன்னை கொஞ்சி விளையாடிய தலைவன் இனி இல்லையென்றானப்பின் தான் மட்டும் ஏன் இனி உயிரோடிருக்க வேண்டும்? சுயநலமாய் தான் முடிவெடுக்கிறாள், ஆனாலும் ஆக்ரோசம் அவள் காதலை தானே சொல்கிறது. ஆம், அவள் செத்தாலும் அவளை தாங்கிப்பிடிக்க அவன் வர மாட்டான் என்பது உண்மைதானே. அங்கு அவளின் எந்த கையறு நிலையும் அவனை அசைத்துப் பார்க்கவே போறதில்லை. இங்கோ அவன், அவள் வயிற்றில் குழந்தையாய் எட்டிஉதைத்தாற்போல் உன் வயிற்றில் வாரிசாய் இருக்கிறேன் என்கிறான். பேதை பெண், இனி எப்படி மரணிப்பாள்? இனி அவள் உலகம் அவனால் தானே இயக்கப்பட போகிறது. இங்கு ஒரு காதலி மரணிக்கிறாள். ஒரு தாய் ஜனனமாகிறாள்.

    கொஞ்ச நேரம் அழ வைத்து விட்டாய்

    ReplyDelete
    Replies
    1. இது போதும் எனக்கு.... சொல்ல வந்தத புரிஞ்சிகிட்டதுக்கு தேங்க்ஸ்

      Delete
  3. கவிதைக்கான கருவில் வாழ்தலுக்கான உணர்வுப் பூர்வமான நியாயத்தை பதியம் போட்டிருக்கிறாய். தலைவனில்லாத தலைவி தன்னை மாய்த்துக் கொள்ளத்துனிந்த நியாயமும் பதியம் பட்டிருக்கிறது இந்த கவிதையில்.

    //இனி அவன் கழுத்து அவளுக்காய் சாய்வதுமில்லை
    அவனின்றி இனியாரும் அவளுக்கு தேவையாய் இருப்பதற்கில்லை...//

    //வீழப் போகையில் வயிற்றைப் பிரட்டி
    உள்ளிருந்து எட்டி உதைத்தாற்போல்,
    அடிக்கள்ளி நான் இங்கிருக்கிறேனென்கிறான்...//

    இந்த கவிதையின் முடிவிற்கு இந்த வரிகளே சான்று.
    உணர்வுகள் தோட்டத்திற்குள் கவிதை சிறகடித்து பறக்கும் பட்டம் பூச்சியல்ல நீ...
    ஃபீனிக்ஸ் பறவை.

    அதெப்புடி இப்புடி சங்க இலக்கிய வார்த்தைகளெல்லாம் போட்டு எழுதுற நீ... (கையால் தான் அண்ணா... என்றோ எழுதலையே... டைப் ல பண்ணினேன் என்றோ பல்பு குடுத்துடாத... இடி தாங்கும் உள்ளம் இது ஆனா பல்பு தாங்காது

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்ம் அண்ணா... ஆனா இன்னும் கொஞ்சம் தெளிவா சொல்லியிருக்கலாமோ ன்னு அப்புறமா தோணிச்சு... படத்துல மட்டும் தான் ரெண்டு கிளைமாக்ஸ் இருக்கனுமா என்ன? கவிதைக்கு இருக்க கூடாதா? இத மறுப்பதிவு பண்ணும்போது ரெண்டாவது கிளைமாக்ஸ் வைக்கணும்

      Delete
  4. unamaya sollanumna ithu kamal patam maathiri !!...sathiyamaa puriyala !

    sivakumar annaa sonna maathiri thaan ..eppi thaan sanga ilakkiya vaarthaiyellam eluthuringaloo.....

    remma arumaya irunthathu fellings...

    purinchukka konjam thaamathamaachu (enga mantayil awlothaan masala irukku)...!

    kavithai pottiyil muthalitam vara 100% vaaipirukku

    wow !

    ReplyDelete
    Replies
    1. அச்சோ, புரியாமலே வாவ்...வா? ஆண்டவா...... வேணும்னா இன்னும் நாலு வாட்டி படிச்சு புரிய ட்ரை பண்ணுங்களேன்

      Delete
    2. ithu mattum paticha utane puriyala....patikka patikka thaan purinchathu..... (kovapatathinga) :)

      Delete
    3. ஹஹா சரி சரி, இப்போ புரிஞ்சுடுச்சுல, ரொம்ப சந்தோசம் :)

      Delete
  5. அவன் வளைத்த மெல்லிடை தீயாய் தகிக்க,
    அவன் சுமந்த நெஞ்சமோ இரண்டாய் கிழிகிறது...
    பீறிட்டு வரும் குருதி கண்டு
    ஆக்ரோஷ மனம் அடங்கல் கொள்ளுமோ?
    ஏதோ ஓர் பரமானந்தம் அந்தரத்தில் ஆர்ப்பரிக்கிறது..
    மெல்லிய ஆடைகளின் பாரங்கள் கூடிப்போக
    வாய்ப்பிளந்து உயிரிழக்க துணிகிறாளவள்...


    மனதை கனக்க வைக்கிறது இவள் வைராக்கியம்.வாழ்த்துக்கள் சொந்தமே!

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப தேங்க்ஸ் உங்க வாழ்த்துக்கு. தொடர்ந்து தளத்துக்கு வாங்க

      Delete
  6. மிக அருமை, மிகத் தெளிவு, சொல்லவந்ததை அழகாக சொல்லி இருக்கிறீர்கள். அவளுள் மீண்டும் அவன்....!
    "இனி அவன்... அவளின் வாழ்நாள் விசையாகிறான்..."
    இந்த ஒரு வரியினிலேயே கவிதையின் எல்லாமும் அடங்கிவிட்டது.
    மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப தேங்க்ஸ்ங்க... உங்களோட வாழ்த்துக்கு நன்றி

      Delete
  7. பாலைக்கும் நீர்வார்த்த பைங்கிளி என்றுனை பார்போற்றும்... பாலையையும் சோலையாக்கும் முயற்சியாக முழங்கியுள்ளது இந்த ஆத்ம ராகம்... மொழி வளம் மொத்தமாய் மோகனம் பாடியுள்ளது காயு... காட்சியின் கடவு சொல்லாய் களம் கண்டுள்ளது இந்த கேவல்...

    பன்முகமாய் படர்ந்துள்ள இந்த பாலையும் சோலையாவதற்கே என்பதை சுட்சும தீபமாய் சுடரேற்றி வச்சிருக்கீங்க..

    அன்பு வாழ்த்துக்கள் காயு...

    ReplyDelete
  8. நிச்சயமா இன்னும் கொஞ்சம் எளிமைப் படுத்தி இருக்கலாம்னு தோணுது.....

    //மண்ணோக்கி அவள்
    வீழப் போகையில் வயிற்றைப் பிரட்டி
    உள்ளிருந்து எட்டி உதைத்தாற்போல்,
    அடிக்கள்ளி நான் இங்கிருக்கிறேனென்கிறான்...//

    அழகு.... அழகு.... அம்புட்டு அழகு இந்த வரிகள்.....

    //கூவைகளின் கூப்பாடுகளுக்கிடையில்//
    கூவை ங்கிற வார்த்தை நெருடுது.... ஒருவேளை ''கூகை'' என்பதைத்தான் அப்படி குறிப்பிட்டு இருக்கிறீர்களா....?

    மொத்தத்துல மனச வலிக்க வச்ச படைப்பு இது.... ஆனா 4 தடவை படிச்சதுக்கு அப்புறம்தான் நல்லா புரிஞ்சுச்சு.... #ஏன்னா நான் கொஞ்சம் ட்யூப்லைட்டுங்க......

    வாழ்த்துகள்....

    ReplyDelete