Friday 11 October 2013

வாழ்வோடு உறைந்த வீடு...!

உச்சந்தலையிலே குட்டையாய் கொண்டை,
அதிலே ஒற்றை ரோஜா,
கைகளில் கண்ணாடி வளையல்கள்,
கால்களில் இசையமைக்கும் வெள்ளிக்கொலுசுகள்,
மேனி அலங்கரித்த சிகப்பு பச்சை பட்டு பாவாடை...


ஒரு அந்நிய தேசத்துள் புகுந்து விட்ட
மிரட்சியோடு மலங்க மலங்க விழித்து,
அம்மா கழுத்தைக் கட்டிக்கொண்டு
இறங்க மறுத்து,
கண்கள் மூடிக் கொண்ட
அந்த நொடியோடு ஆரம்பித்தது,
எனக்கும் இந்த வீட்டுக்குமான சுவாச பந்தம்...

தத்தித் தத்தி நடந்த நாட்கள்
வருடங்களாய் ஓடி மறைய...

அணில் குஞ்சுகளை ரசிக்க வைத்த ஜன்னல்...
ஆட்டுக்குட்டிகள் துள்ளி விளையாடும் பின் முற்றம்...
கன்றுக்குட்டிகள் பால்குடிக்கும் மாட்டுத்தொழுவம்...
கோழிகள் ஓய்வெடுக்க கோழிக் கூடு...
புறாக்கள் தங்கிச் செல்ல மாடத்து தாழ்வாரம்...
உறவுகளோடு அரட்டை அடித்த வரவேற்பறை...

எதிர்பாரா தருணத்தில்
சுண்டு விரல் நசுக்கிய கதவிடுக்கு...

பாவாடை இடறி வீழ்ந்து
நெற்றிப்பொட்டை தாக்கிய நடை வழிப் படிகள்..

ஈரம் கசிய கசிய
வழுக்கி விழுந்த குளியலறை சுவடுகள்...

முதல் முதலாய் சமைக்கிறேன் என
சூடு பட காரணமான சமையலறை...

கண்ணாம்மூச்சி ஆடும் தருணங்களிலும்,
அம்மாவை பயமுறுத்தும் தருணங்களிலும்
புகலிடம் கொடுத்த படுக்கையறையும்...
அதன் கட்டில் அடிப்பாகமும்...

அம்புலி மாமா கதைகேட்டு,
கவளம் கவளமாய் விழுங்கிய நிலா சோறும்,
அவை சிதறிக் கிடக்கும் மொட்டை மாடியும்...

நான் அலட்சியமாய் தூக்கி எறியும் புத்தகங்களை
அழகாய் அடுக்கி வைக்கும் தம்பியால்
கம்பீரமாய் நிமிர்ந்து பின்
என் கைபட்ட அடுத்த கணம்
பரிதாபமாய் விழிக்கும் புத்தக அலமாரி...

தரை வழுக்கி வீழும்போது
ஓடி வந்து எடுத்தணைத்து,
உன்னை அழ வைத்தது இதுதானே,
இதற்கு ஒரு அடியென அப்பா அடித்த போது
வலி மறந்து சிரித்த தருணங்கள்...

வருடங்கள் சில கடந்து
தடுக்கி அழுத மாடி வீட்டுக் குழந்தையை
சிரிக்க வைக்க
மீண்டும் ஒருமுறை அடி கொடுத்து
பின் நிஜமாய் அதற்கு வலித்திருக்குமோ என
வாஞ்சையோடு தடவிப் பார்த்த நினைவுகள்...

சுவாசிக்கும் காற்றிலும்
சிரிக்கும் சிரிப்பிலும்
தேடும் கண்களிலும்
அழும் ஏக்கங்களிலும்
பொறுமையாய் தாங்கும் வலிகளிலும்
கட்டியணைக்கும் தலையணையிலும்
அப்பாவின் உருவத்திலும்
இந்த வீட்டோடும் சிரிக்கின்ற அம்மா...!

ஆம்... இது என் வீடு...
இது உயிரற்ற உறைவிடம் அல்ல...
என் நினைவோடும் உணர்வோடும்
உறைந்து விட்ட உயிர் கூடு...!

10 comments:

  1. "இது உயிரற்ற உறைவிடம் அல்ல...
    என் நினைவோடும் உணர்வோடும்
    உறைந்து விட்ட உயிர் கூடு...!"
    மிக அழகாக ரசிக்கும்படி சொல்லியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்

    ReplyDelete
    Replies
    1. ஆமா, ரசிச்சு சொல்லல, வாழ்ந்து சொன்னேன்

      Delete
  2. வணக்கம்
    வருடங்கள் சில கடந்து
    தடுக்கி அழுத மாடி வீட்டுக் குழந்தையை
    சிரிக்க வைக்க
    மீண்டும் ஒருமுறை அடி கொடுத்து
    பின் நிஜமாய் அதற்கு வலித்திருக்குமோ என
    வாஞ்சையோடு தடவிப் பார்த்த நினைவுகள்...

    கவிதையின் வரிகள் சுப்பர்........ வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. ஆமா, எனக்கு இந்த லைன்ஸ் ரொம்ப பிடிச்சது, ஏனா நானே அப்படி தடவி பாத்துருக்கேன்....

      Delete
  3. . இது என் வீடு...
    இது உயிரற்ற உறைவிடம் அல்ல...
    என் நினைவோடும் உணர்வோடும்
    உறைந்து விட்ட உயிர் கூடு...! // அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. அழகான ரசனையை ரசித்தேன்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  5. எல்லோருக்கும் பிறந்த வீடு தாய் மடி தான்... அழகா சொல்லியிருக்க

    ReplyDelete